புதன், 3 ஏப்ரல், 2013

thirukkural kadhigal -- முக்திக்கு வித்து


முக்திக்கு வித்து 

பாண்டவருக்கும் துரியோதனாதியர்க்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீரன் படைக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்தனர். கௌரவர்  படைக்கு அன்று கர்ணன் படையை நடத்தத் தயாரானான்.இந்தச் செய்தியைக் கண்ணன் அறிந்தான்.பாண்டவர் தாயான குந்திதேவியைத் தேடிச் சென்றான்.
அவளின் நலம் விசாரித்துப் பின் பேசினான்.
"அத்தை, உங்களின் மூத்த புதல்வனைப் பற்றிய செய்தி ஏதேனும் தெரிந்ததா?"
"அதை இப்போது ஏன் நினைவு படுத்துகிறாய் கண்ணா?"
"காரணம் இருக்கிறது. உங்கள் மூத்த மகன்தான் அந்தக் கர்ணன்.இதைத் தெரிந்து கொண்டுதான் தங்களிடம் சொல்ல வந்தேன்.நீங்களே இதை நேரில் சென்று பரீட்சித்துப் பாருங்கள்" என்றான் கபடமாக.
உடனே தன மூத்த மகனைக் காணப் புறப்பட்டு விட்டாள் குந்திதேவி.
"சற்று இருங்கள் அத்தை.அவன்தான் தங்களின் மூத்த மகன் என்று தெரிந்தபின் அவனை பாண்டவர் பக்கம் வந்து சேர்ந்து விடச் சொல்லுங்கள். அவன் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றால் இரண்டு வரங்களையாவது வாங்கி வாருங்கள்."
"வரமா? நான் கேட்பதா?"என்று தயங்கினாள்  குந்தி.

"ஆம் அத்தை.கர்ணன் சுத்த வீரன் அவனுக்கு இணையானவன் அர்ஜுனன் ஒருவன்தான்.எனவே அர்ஜுனன் தவிர வேறு யாருடனும் போரிடக் கூடாது.அத்துடன் அவனிடமுள்ள நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது  ஒருமுறைக்கு மேல் மறுமுறை  ஏவக் கூடாது. என்ற இரு வரங்களை மட்டும் பெற்று வாருங்கள்."என்றான் 

குந்தியும் சம்மதித்தாள்.மகனைக் காண ஆவலுடன் சென்றாள் 

கர்ணன் அவளை வணங்கி வரவேற்றான்.அவள் தன்னை மகனே என அழைத்தது கேட்டு மகிழ்ந்தான். தன்னிடமிருந்த பட்டுச் சேலையைக் காட்டி குந்தி அதைத் தன மீது போர்த்துக் கொண்டு அழுததைக் கண்டு அவளே தன தாய் எனக் கண்டு கொண்டான்.மனம் மிக மகிழ்ந்தான்.வெகுநேரம் கடந்தபின் குந்தி,
"மகனே நீ பாண்டவருக்கு மூத்தவன்.குருட்சேத்திரப் போரில் பாண்டவர் வெற்றி பெற்றபின் நீயே இந்த நாட்டுக்கு மன்னனாக முடிசூடவேண்டியவன்.கௌரவரை விட்டு பாண்டவர் பக்கம் வந்து விடு.உன் தம்பிமாரான தருமன் முதலானோர் மிகவும் மகிழ்வார்கள்."என்று மெதுவாக கேட்டுக் கொண்டாள்.

அவள் மடியில் படுத்திருந்த கர்ணன் விருட்டென எழுந்தான்."தாயே, என்ன வார்த்தையம்மா கூறினீர்கள்., துரியோதனன் என் உயிரினும் மேலானவன்.மானம் காத்த மாமனிதன்.இன்னுயிரினும் மானம் மேலானதன்றோ மன்னனுக்கு?நானோ நேற்றுவரை அனாதையாக இருந்தவன்.தேரோட்டிமகன் நான்.மன்னர் சபையில் என் மானம் 
கா த்து என்னை அங்கதேசத்தின் மன்னன் என்று அனைவரிடமும் கூறி என்னைத் தலை நிமிர வைத்தவன் அல்லவா அம்மா அவன்?அவனை எப்படிப் பிரிவேன். என் உயிர் கூட அவனுக்குத் தானே சொந்தம்?"

"கர்ணா, உன் உடன் பிறந்தவருடன் சேர்ந்து இருக்க உனக்கு விருப்பமில்லையா?"

"அம்மா, இதைவிடுத்து வேறு என்ன வேண்டுமானாலும் தருகிறேன் கேளுங்கள் ஆனால் நன்றி மறக்கும் செயலை மட்டும் செய்யச் சொல்லாதீர்கள். என்னை மன்னித்து விடுங்கள் அம்மா.துரியோதனனின் அன்பை நான் மறந்தால் எனக்குப் பெரும் பாவம் மட்டுமல்ல பழியும் வந்து சேரும்."

"அப்படியானால் நீ அர்ஜுனனைத் தவிர வேறு யாரையும் கொல்லக்  கூடாது. நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருமுறைக்கு மேல் பிரயோகிக்கக் கூடாது.இந்த இரண்டு வரங்களைத் தருவாயா?"

"நிச்சயமாகத் தருகிறேன். தாங்களும் எனக்கொரு வரம் தரவேண்டும்."

"கேள் மகனே"

 "போர்க்களத்தில் நான் இறந்து விட்டால் தாங்கள் என்னை மடியில் வைத்து மகனே என்று கூவி அழவேண்டும் இந்த உலகுக்கெல்லாம் நான் தங்கள் மகன் என்ற உண்மையைப் பறைசாற்றவேண்டும் நான் இறக்கும் வரை இந்த  உண்மையை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. இந்த வரத்தை எனக்குத் தாங்கள் தரவேண்டும் அம்மா."

கண்களில் கண்ணீருடன் குந்தி"அப்படியே செய்கிறேன் கர்ணா,"என்றபடியே திரும்பி இருப்பிடம் வந்து சேர்ந்தாள் 

தம்பியரானாலும் தாயானாலும் கர்ணனுக்கு  துரியோதனனின் நன்றிக்கடனுக்கு முன் எதுவும் முக்கியமல்ல.

இவனது இரண்டு முக்கியமான செயல்களாலேயே இறைவனின் அன்புக்குப் பாத்திரமானான்.
இவனது நன்றி மறவாமை.மற்றொன்று அள்ளிக் கொடுக்கும் வள்ளல்தன்மை.

இந்தப் பண்புகளாலேயே இதிகாசத்தில் இவன் போற்றப் படுகிறான்.வள்ளுவரின் குறளுக்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறான்.

                                        "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
                                          
                                          செய்நன்றி கொன்ற மகற்கு."


 கர்ணனின் முக்திக்கு அவனது நன்றி மறவாத் தன்மையே வித்தாக இருந்தது என்பதை நாமும் ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்.




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

4 கருத்துகள்:

  1. சிறப்பான குறளுக்கு கர்ணனின் சிறப்பான குணத்தை எடுத்துக்காட்டாக சொன்னது மிகவும் அருமை அம்மா... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் பல...

    பதிலளிநீக்கு
  2. நன்றி மறவாமை பற்றிய சிறப்பான குறளுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு கர்ணன்.

    மிக அருமையான பகிர்வு. நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  3. வள்ளுவப் பெருந்தகை கூட நினைத்திராத விளக்கத்தை, தித்திக்கும் தேனாக, இந்த பாட்டி இக் குறளுக்கு சொன்ன விளக்கம் நச்சென்று குழந்தைகள் மனதில் பதிந்து விடுமே... நன்றி பாராட்ட வார்த்தைகள் இல்லை..

    பதிலளிநீக்கு
  4. // "போர்க்களத்தில் நான் இறந்து விட்டால் தாங்கள் என்னை மடியில் வைத்து மகனே என்று கூவி அழவேண்டும் இந்த உலகுக்கெல்லாம் நான் தங்கள் மகன் என்ற உண்மையைப் பறைசாற்றவேண்டும் நான் இறக்கும் வரை இந்த உண்மையை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. இந்த வரத்தை எனக்குத் தாங்கள் தரவேண்டும் அம்மா."//

    கர்ணன் சினிமா படத்திலேயே இந்தக்காட்சி மிகவும் உருக்கமாக இருக்கும்.

    நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு