சனி, 1 நவம்பர், 2014

தியாகச்சுடர்---------வரலாற்றுத் தொடர்.

                                        ஏழு 


    வேதனை மிகுந்த உடலைச் சற்றே அசைத்தாள்  அனார். அவள் சரியாகப் படுக்க உதவிய நூர்ஜஹான் இன்னும் சற்று அருகே வந்து அமர்ந்து கொண்டாள்.
"சொல் அனார்.உன் விருப்பத்தைக் கட்டாயம் நிறைவேற்றுவேன்.தயங்காமல் சொல்வறண்ட தன உதடுகளை நாவால் தடவிக் கொண்ட அனார் தன அருகே வருமாறு செய்கை செய்தாள் 

அவளுக்கு இன்னுமருகே நெருங்கி அமர்ந்தாள்  நூர்ஜஹான்.

"நூர்ஜஹான் இனி எக்காலத்திலும் என் சலீமுக்கு துரோகம் நினைக்கக் கூடாது.இரண்டாவது நான் தான் அனார்க்கலி என்பது அவருக்குத் தெரியக்கூடாது.இந்த ரகசியம் நம்முடனேயே மறைந்து விட வேண்டும்."

நூர்  அனாரின் கரங்களை இன்னும   அழுத்தமாகப் பற்றினாள்.


"அப்படியானால்......அவருக்கு நீதான் அனார் என்பது தெரியாதா...?"

"தெரியாது   நூர். தெரிந்திருந்தால் என்னை சகோதரி என்று அழைப்பாரா? நான் அவ்வளவு உருமாறி விட்டேன்."  விரக்திப்  புன்னகையுடன் கண்ணீரும் வெளிவந்தது.

"அனார்க்கலி, சகோதரி,! சரித்திரத்தில் தீராப் பழிகாரியாக நான் ஆகிவிடாமல் என்னைக் காப்பாற்றி விட்டாய்.உனக்கு என்ன கைம்மாறு செய்வேன்?"

"எனக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்று அது போதும் எனக்கு."

"இனி ஜஹாங்கீர் எனக்கு தெய்வத்துக்கும்  மேலானவர்.அவர் இன்பமாக வாழ்வதையே என் லட்சியமாகக் கொள்வேன் அனார்."

"மிக்க மகிழ்ச்சி நூர்.மிக்க நன்றி. அந்தப் பழரசம் கொடு. என் நா வரள்கிறது."

"அது வேண்டாம் சகோதரி. புதிதாகக் கொண்டு வரச் சொல்கிறேன்."என்றவள் பணிப்பெண்ணை கண்ணால் ஜாடை காட்டி பழரசம் கொண்டுவரப் பணித்தாள்.

"ஏன்? அது அவ்வளவு உயர்ந்ததா? நான் சாப்பிடத் தகுதியில்லாதவளா?"

"ஐயோ அப்படியில்லை அனார்.உன் உடமைகளைத்தான் நான் அனுபவித்து வருகிறேன்....அது...நஞ்சு கலந்தது."

"என்ன?"

"ஆமாம்"  வெறுப்பு நூர்ஜஹானின் அழகிய முகத்தைக் கூட கோரமாக்கியது.
"அது... என்னை வஞ்சிக்க எண்ணியவருக்காகத்   தயாராக உள்ளது.அனார், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகத் திட்டமிட்டுக் காரியங்கள் செய்கின்றனர்.ஆனால் அது சில சமயங்களில் வேறு விதமாக முடிந்து விடுவதும் உண்டு.போரில் ஷேர்கான் வெற்றிபெற்று விட்டால் சாம்ராஜ்ய ஆசையில் எதுவும் செய்வார்.அதைத் தடுக்க அவரை இவ்வுலகினின்றும் விடுதலை செய்துவிட எண்ணியே பழரசத்தில் நஞ்சு கலந்துவைத்துள்ளேன்.ஆனால் உன் தியாகத்தால் அதற்கு இடமில்லாமல் செய்துவிட்டாய்.வெற்றி நிச்சயமாக ஜஹாங் கீருடையதுதான். 

"சொல்... நூர் வெற்றி என் சலீமுடையதுதான்."

"பேகம் சாஹிபா,! ஜகாம்பனாஹ் வெற்றி பெற்றுவிட்டார். இங்குதான் வந்துகொண்டிருக்கிறார்."
பணிப்பெண் தன கடமையை முடித்துச் சென்றாள்.
.
நூர்ஜஹான், நான் இருந்தாலும் இறந்தாலும் நான் தான் அனர்க்கலி  என்று ஜஹாங்கீருக்குத் தெரிவிக்கவே கூடாது."

"கவலைப்படாதே அனார்."என்றபடியே ஜஹாங்கீரை வரவேற்கச் 
சித்தமானாள்  நூர்ஜஹான்.

                                           (அடுத்த பகுதி  தொடரும் )













--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

3 கருத்துகள்: