பாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் மீது அன்பு கொண்டு அவனைப் பற்றிய பாடல்களைப் பாடியுள்ளார்.சோழனைக் காணவேண்டும் என்னும் பேரவா கொண்டிருந்தார். ஆனால் பாண்டிய நாட்டிலுள்ள பிசிர் வெகு தொலைவு உள்ளதால் இவரால் சோழ நாட்டுக்குச் செல்ல இயலவில்லை.
இவரது புகழையும் தமிழையும் கேள்விப்பட்ட சோழனும் இவரைக் காணவேண்டும் என்னும் அவா கொண்டிருந்தான். எனவே இருவரும் உயிர் ஒன்றாகவும் உடல் வேறாகவும் வாழ்ந்து வந்தனர். இருவரும் தாம் ஒருவருக் கொருவர் சந்திக்கும் திருநாளை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கோப்பெருஞ்சோழனின் தலைநகர் உறையூர். இம்மன்னன் பிசிராந்தையாரை நேரில் காணாமலேயே அவருடன் நட்புக் கொண்டவன். இவனது ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போதே இவனது இரண்டு புதல்வர்களும் சோழ ஆட்சிக் கட்டில் ஏறுவதற்காக தந்தையுடன் போரிடத் துணிந்தனர்.
இதை அறிந்த கோப்பெருஞ்சோழன் ஆட்சியை விட்டு வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான். அப்போது தன் மந்திரியிடமும் மற்றையோரிடமும் பிசிராந்தையார் என்னைக் காண வருவார். என்னுடன் வடக்கிருப்பார். அவருக்கும் ஓர் இடத்தைத் தயார் செய்யுங்கள் எனக் கூறினார். அதேபோல் பிசிராந்தையாருக்கும் ஒரு இடம் அமைக்கப்பட்டது. நாட்கள் கடந்தன. சோழன் பிசிரந்தையாரைக் காணாமலேயே வடக்கிருக்கத் துணிந்தான். எப்படியும் ஆந்தையார் வந்து விடுவார் எனக் கூறித் தன் தவத்தை மேற்கொண்டான்.
இவ்வுலக வாழ்வைத் துறக்க விரும்பும் மன்னவர் வடக்கிருந்து உயிர் விடுதல் அக்கால மரபு. வடக்கிருத்தல் என்பது தன்நாட்டில் உள்ள ஆறு குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அதன் இடையே மணல் திட்டு ஒன்றை அமைத்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ணாநோன்பிருந்து உயிர் விடுதல்.
தன் மக்கள் மீது இருந்த மனக் கசப்பின் காரணமாக கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்தான்.
இதனைக் கேள்விப்பட்டார் பிசிராந்தையார். உடனே சோழ நாட்டை நோக்கி ஓடி வந்தார்.
வழியில் எதிர்ப் பட்டவர் இவரைப் பார்த்து மிகவும் ஆச்சரியப் பட்டனர்."புலவரே! நான் என் சிறுவயது முதலே தங்களைப் பற்றி என் தந்தையார் கூறக் கேட்டிருக்கிறேன். தங்கள் மிகவும் வயதானவராக இருப்பீர்கள் என்று எண்ணியிருந்தோம். தங்களோ மிகவும் இளமையாக இருக்கின்றீர்களே, அது எப்படி?"என்று வியந்து கேட்டனர். அதற்கு மறுமொழியாக ஆந்தையார் ஒரு பாடல் பாடினார். புறநானூற்றில் உள்ள இப்பாடல் நமது வாழ்வியலுக்கு மிகவும் தேவையான ஒன்று.
" யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்,
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே."
என்று பாடிய பாடல் மூலம் " வயோதிகரானாலும் இளமையோடிருக்கும் காரணத்தைக் கேட்பீரானால் சிறந்த பண்புள்ள மனைவி, மக்கள் குறிப்பறிந்து பணி செய்யும் பணியாளர்கள் அறத்தையே நாடிச் செய்யும் மன்னன் இத்துணை பேருடன் நன்கு கற்று நல்ல பண்புகளுடன் விளங்கும் சான்றோர் பலரும் எம்மைச் சூழ்ந்து இருக்க நான் வாழ்வதால் எனக்கு நரை தோன்றவில்லை. மூப்பும் எம்மை அணுகவில்லை." என்று விளக்கினார்.
சோழனின் இறுதி நேரம் வந்துற்றபோது பிசிராந்தையார் ஓடிவந்தார். நண்பனைக் கண்டார் தனக்காக த் தயாராக அமைக்கப்பட்ட இடத்தில் வடக்கிருந்து சோழனுடன் தானும் தன் இன்னுயிர் விடுத்தார்.
இச்செய்தியை இக்காட்சியைக் கண்ட பொத்தியார் என்னும் புலவர் தன் பாடலில் இதனைக் கூறுகிறார்.
"இசைமரபு ஆக நட்பு கந்தாக
இனியதோர் காலை ஈங்கு வருதல்
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே."
பிசிராந்தையார் என்ற புலவரும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனும் தம்முள் காணாமலேயே நட்புக் கொண்டு ஒன்றாக உயிர் நீத்த இச்சிறப்பினை இலக்கியங்கள் நமக்கு எடுத்து இயம்புகின்றன. இத்தகு நண்பர்களை நம்மால் மறக்க இயலுமா?