செவ்வாய், 11 ஜூன், 2013

சிற்றுளியும் மலை பிளக்கும்.--- திருக்குறள் கதைகள்.


                    மகேந்திரன் மச்ச நாட்டு மன்னன். அவனது நாட்டுக்கு அருகாமையில் உள்ள நாடு மருத நாடு
மருதநாட்டு மன்னன் சுரோசனன். மருத நாடு படைபலம் கொண்டது. ஆனால் மச்சநாடு அந்த அளவுக்கு படை பலம் கொண்டதல்ல.இருப்பினும் மகேந்திரன் மிகவும் பேராசை கொண்டவனாக இருந்தபடியால் மருத நாட்டை வெல்லவேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தான். அதனால் அடிக்கடி சுரோசனன் மீது படையெடுத்து வந்தான்.. தோல்வியடைந்தபோதும் மீண்டும் மீண்டும் மருத நாட்டின் மீது படைஎடுத்தவண்ணம் இருந்தான்.
                     சுரோசனனின் நாடும் பெரிது படையும் பெரிது. அதனால் மகேந்திரன் தோல்வியடைந்த வண்ணமே இருந்தான்.
ஒருமுறை ஒற்றர் மூலம் மகேந்திரன் மீண்டும் படையெடுக்கப் போவதை அறிந்த சுரோசனனின் மதியூக மந்திரி மகிபாலர் மன்னனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
"மன்னா, மகேந்திரன் மீண்டும் படையெடுக்கப் போகிறானாம். நமது படைகளைச் சற்று சீரமைக்கவேண்டும். கட்டளையிடுங்கள்" என்றார். சுரோசனன் சிரித்தான்."மந்திரியாரே, எத்தனை முறை அவன் படையெடுத்தாலும் அவனால் நம்மை வெல்ல இயலாது.நமது படைக்குமுன் அவன் படை எம்மாத்திரம்?"
"அப்படி அலட்சியமாக இருக்கக் கூடாது மன்னா,நமது வீரர்கள் போரிட்டுக் களைத்திருப்பர் என்றுதான் மீண்டும் உடனே  படையெடுத்து வருகிறான். நமது குதிரைப் படைதான் நமது வெற்றிக்குக் காரணம்.குதிரைகளும்  நமது படையில் அதிகம்.அவை பலமுறை போரிட்டதால்  கால்களிலுள்ள குளம்புகளில் ஆணிகள் தேய்ந்து போய் விட்டன.அவற்றிற்கு லாடம் அடிக்கவேண்டும்.அப்போதுதான் நம்மால் படை நடத்த முடியும்."என்றார் பணிவோடு.

ஆனால் சுரோசனன்,"இப்போது அதற்கு அவசரமில்லை. மகேந்திரனின் படையை வெற்றிகொண்டு  துரத்திய பிறகு பார்த்துக் கொள்ளலாம்." என்று அலட்சியமாகக் கூறிவிட்டு அந்தப்புரம் சென்று விட்டான்.
சில நாட்களில் மகேந்திரன் மீண்டும் படையெடுத்தான் இரு மன்னர்களும் தங்கள் படைகளுடன் புறப்பட்டனர்.சுரோசனன் புன்னகையுடன் தன குதிரைப்படையை நடத்திச் சென்றான்.திடீரென்று படையிலிருந்த குதிரைகள் கீழே விழுந்தன சில சரியாக ஓட முடியாமல் தடுமாறின மகேந்திரனின் படை சிறிதானாலும் எல்லா வகையான பராமரிப்பும் செய்யப்பட்டிருந்தன குதிரைகள் லாடம் அடிக்கப்பட்டு நன்கு ஓய்வெடுத்து போருக்குத் தயாராக சிலிர்த்துக் கொண்டு நின்றிருந்தன.ஆனால் சுரோசனன் படையோபெரியதாக இருந்தாலும்  போதிய பராமரிப்பு இன்மையால் பாதிக்குமேல் படுத்து விட்டன. மன்னன் சுரோசணனும் அச்சமும் சோர்வும் அடைந்துவிட்டான். தக்கதருணம் பார்த்து மகேந்திரன் சுரோசனனையும் மந்திரி மகிபாலரையும் கைது செய்து சிறையில் அடைத்தான்.
இப்போது இருவரும் மச்சனாட்டுச் சிறையில் இருந்தனர் 

மந்திரியின் சொல்லைக் கேளாததால்தான் தனக்கு இந்த நிலை வந்ததென்று வருந்திப் பேசினான் சுரோசனன். அப்போது மகிபாலர்"மன்னா, சிறிய உளிஎன்று நினைப்பது தவறு, அதுதான் பெரிய மலையைப் பிளக்கிறது. மேலும் ஆணிதானே அடிக்கவேண்டும் பிறகு செய்யலாம் என்று நினைத்ததால்தான் போரில் தோற்கும் நிலை வந்தது.படை பெரிதாயிருந்தும் தக்க தருணத்தில் தேவையான பராமரிப்பைச் செய்யாததால்தான் தங்களுக்கு இந்த நிலை."என்றபோது மன்னனுக்குப் புத்தி வந்தது. வள்ளுவப் பெருந்தகையின குறளும்   நினைவுக்கு வந்தது.
                                          

                                          "வருமுன்னர்  காவாதான்   வாழ்க்கை எரிமுன்னர்
                                            வைத்தூறு    போலக்   கெடும்." 

துன்பம் வருவதற்கு முன்பாகவே அதைத் தடுப்பதற்கேற்ற  முன்னேற்பாடுகளை செய்யத் தவறி யவன்வாழ்க்கை நெருப்பின் முன் வைக்கப்பட்ட வைக்கோல் போரின் நிலையை அடையும்.

எந்த சிறு விஷயமாக இருந்தாலும்  தக்க தருணத்தில்  சரியானபடி கவனிக்கவேண்டும் என்ற உண்மையை சுரோசனன் மட்டுமல்ல் நாமும் புரிந்து கொண்டோம் அல்லவா?


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com