செவ்வாய், 31 மே, 2011

முக்திநாத் யாத்திரை

அன்பு நெஞ்சங்களே, கடந்த பதினைந்து நாட்களாகத் தங்களைச் சந்திக்கவில்லை.  நான் முக்திநாத் (நேபாளம்) என்ற வடதேச யாத்திரை சென்றிருந்ததுதான் காரணம். என் இனிய அனுபவங்களை இந்தக் கட்டுரையின் மூலம் தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நாங்கள் நாற்பது பேர் இரவு பதினொரு மணிக்கு ரயிலில் சென்னையிலிருந்து புறப்பட்டோம். ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தோம். மறுநாள் சுமார் நாற்பது மணி நேரத்திற்குப் பின் கோரக்பூர் என்ற நகரத்தை அடைந்தோம்.
அங்கிருந்து பேருந்தில் புறப்பட்டு சுமார் ஐந்து மணி நேரம் கழித்து நேபாளத்திலுள்ள பைரவா என்ற நகரை அடைந்தோம். நகருள் நுழையும் முன் இந்திய நேபாள எல்லையில் உள்ள  ஒரு வளைவுத் தூணைக் கடந்தோம்.
    வழியெங்கும் மலைத் தொடர்கள் பசுமை போர்த்தவண்ணம் அழகுறக் காட்சியளித்தன.விரைவிலேயே இருட்டிவிட்டதால் தொடர்ந்து காட்சிகளைக் காண இயலவில்லை. இரவு பத்து மணிக்குமேல் ஆகிவிட்டது.அவ்வூரில் ஹோட்டல் அசோகாவில் தங்கினோம்.மறுநாள் காலை ஆறரை மணிக்குப் புறப்பட்டு சுமார் பதினொரு மணிக்கு திரிகூட மலைக்கு வந்தோம்.இங்கு மூன்று மலைகள் இணைந்திருப்பதால் இதற்குத் திரிகூடமலை என்று பெயர்.

இங்கு கண்டகி நதி ஓடுகிறது. இந்த நதியில் தான் கஜேந்திரன் என்ற யானையை முதலை பிடித்துக் கொண்டது. கஜேந்திரன் ஆதிமூலமே என்று அலற ஸ்ரீமன் நாராயணன் ஓடி வந்து முதலையை தன் சக்கரத்தால் வீழ்த்தி யானையைக் காப்பாற்றிய இடம் உள்ளது.இந்த நதிக்கரையில் ஒரு ஆலயம் உள்ளது.நாராயணர் கோயில்.இங்கு யானை, முதலை இவற்றின் சிலைகளும் உள்ளன.
                                                                      இங்கு கண்டகியில் ஸ்நானம் செய்து கோயிலைப் பார்த்து வணங்கி இங்கேயே மதியச் சாப்பாட்டை முடித்துக் கொண்டோம். பிற்பகல் மூன்று மணிக்குப் பேருந்தில் புறப்பட்டு இரவு சுமார் பனிரெண்டு மணிக்கு மலைகளின் நடுவே இருக்கும் போக்ரா என்ற நகரை அடைந்தோம். ஒரு பெரிய பள்ளத்தாக்குக்குள் ஒரு பெரிய நகரமே உள்ளது.இந்த நகருக்கு வருமுன்னர் பல மலை வளைவுகளைக் கடந்தோம்.இங்கு ஹோட்டல் திபெத்தில் தங்கினோம்.
காலையில் புறப்பட்டு ஏரியின் நடுவே ஒரு சிறிய தீவில் குடிகொண்டுள்ள வாராஹி தேவியைப் படகில் சென்று தரிசித்தோம்.பின்னர் அங்கிருந்து விந்தியாவாகினி, ராதாக்ருஷ்ணா,ஐந்து லிங்க மூர்த்தி,சப்த சிரஞ்சீவி,தரிசனம் முடித்து, எதிரே உள்ள தேவி பால்ஸ் என்ற நீர்வீழ்ச்சியைப் பார்த்தோம்.இங்கு கண்டகி நதி வெண்மையாகப் பாய்வதால் இதற்கு ஸ்வேத கண்டகி என்று பெயர்.


பின்னர் சுமார் ஒரு மணிக்கு குப்தேஷ்வர் என்ற சிவன் கோயிலை அடைந்தோம். இங்கே சிவலிங்கம் பெரிய ஐந்து தலை நாகத்துடன் இருப்பதுபோல் உள்ளது சுமார் நூறு படிகளில் கீழே இறங்கிப் பாதாளத்துள் லிங்கத்தைத் தரிசித்தோம்.இதன் பின்னரும் இன்னும் சிவலிங்கம் படிகளின் கீழே இருப்பதாகச் சொன்னார்கள்.சிலர் இறங்கிப் பார்த்தனர். என்னால் முடியாததால் மேலே ஏறிவிட்டேன்.

குகைக்குள் நீர் சொட்டிக் கொண்டே இருந்ததால் எங்கும் ஈரமாக இருந்தது.இரண்டு மணிக்கு இருப்பிடம் திரும்பி சாப்பிட்டு ஓய்வு. மாலையில் சிலர் ஷாப்பிங் சென்றனர்.

மறுநாள் காலை எட்டுமணிக்கு போக்ரா விமான நிலையத்தை அடைந்தோம்.பத்து மணிக்கு விமானம் ஏறினோம். பனி மலைகளின் நடுவே பறந்து சென்ற விமானம் பத்தரை மணிக்கு ஜோம்சொம் என்ற ஊரை அடைந்தது.அங்கு ஒம்ஹோம் என்ற ஹோட்டலை  அடைந்தோம்.அங்கிருந்து பனிரெண்டு மணிக்குப் புறப்பட்டு பேருந்தில் ஏறி ஜீப் உள்ள இடத்திற்கு வந்தோம்.அங்கே ஜீப்பில் ஏறி சுமார் இரண்டு மணி நேரம் கடும் மலைப் பாதையில் பயணித்தோம்.சுமார் பதினான்காயிரம் அடி உயரத்தில் ஜீப்பில் பயணிக்கும் போது சற்றே அச்சமாகத்தான் இருந்தது.அந்த வழியிலேயே கண்டகி நதி கருப்புநிறமாக ஓடுகிறது.இங்கு இதற்கு காலாகண்டகி என்று பெயர்என்று சொன்னார்கள்.ஒருவழியாக முகதிநாத்தின்  அடிவாரம் வந்து அடைந்தோம். அங்கிருந்து ஐந்து நிமிட நடைப் பயணம் மேற்கொண்டோம்.கடும் குளிர். பனிமழைவேறு. அந்த உயரத்தில் பிராணவாயு குறைவாக இருந்ததால் சற்றே மூச்சுத் திணறல் வேறு இருந்தது. வாய்விட்டு முக்திநாதா  என்று அழைத்துக் கொண்டே நடந்தோம்.அங்கிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மோட்டார் பைக்கில் பயணம் செய்து முக்தி நாத் கோவிலின் அடிவாரம்  வந்து சேர்ந்தோம்.
மோட்டார் பைக்கில் பயணம் செய்யும் போது நான்கடி அகலப் பாதையில் கற்களின் மேல் பயணிக்கும் போது முக்தி அடைந்து விடுவோம் என்றே தோன்றியது.அங்கே திபெத்தியர்கள் ஒவ்வொரு பைக்கிலும் ஒரு பயணியை ஏற்றிக்கொண்டு வெகு சுலபமாக ஓட்டுகிறார்கள்.நம்மிடம் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போதே நமக்கு அச்சமாக இருக்கிறது.


இறங்கிய இடத்திலிருந்து சுமார் நூறு மீட்டர் தூரம் படிகளாகச் சற்றுத் தொலைவு நடந்து கோவில் வளாகத்தில் நுழைந்தோம். கோவில்  சிறியதாக இருந்தது  பனிப்பொழிவு அதிகரித்துவிடவே குளிரிலும் ஈரத்தாலும் நடுங்கினோம்.அந்தக் கோவிலில் சற்றும் ஒதுங்க இடம் இல்லை. அனைவரும் அந்தப் பனிப் பொழிவிலேயே நின்றிருந்தனர்.கர்ப்பக்கிரகம் இருக்கும் இடம் மட்டுமே பத்துக்குப் பத்து என்ற அளவில் ஒரு அறையாக இருந்தது.பின்னால் ஹோமம் செய்யும் இடம் அதேபோல சிறிய இடமாக இருந்தது.கோவிலைச் சுற்றி கண்டகிநதி நூற்றிஎட்டு நீர் வீழ்ச்சியாக விழுகிறது.
ஆண்கள் அந்த  குளிரிலும்  எல்லாநீரிலும்  குளித்துவிட்டு  இறைவனை  தரிசனம்  செய்தனர். .பெண்கள்  நீரைத்தலையில்  தெளித்துக்  கொண்டோம். ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக நின்ற அந்த நாராயணரின் அழகில் நாங்கள் பட்ட துன்பம் அதிகமாகத்  தோன்றவில்லை.  

கொண்டுபோயிருந்த திராக்ஷை கல்கண்டு பிரசாதங்களையும் பட்டுத் துணியையும் இறைவனின் பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டோம்.அங்கு இரண்டு பெண்கள் மட்டுமே பூஜை செய்கிறார்கள். இது அவர்களுக்குப் பரம்பரை உரிமை என்று கூறினார்கள். .

தரிசனம் முடித்து நாங்கள் கீழே இறங்கினோம். இடது பக்கம் படிகள் போலப் பாதை சென்றது.அங்கிருந்து ஒரு கிலோமீட்டர்  தூரத்தில் ஜ்வாலா நரசிம்மர் குடிகொண்டுள்ளதாகக் கூறினார்கள்.அங்குதான் ஜடபரத ரிஷி தவம் செய்த இடம் என்று கூறினார்கள்.ஆனால் அங்குசெல்ல இயலாதபடி பனி கொட்ட ஆரம்பித்தது. 


விரைவில் கீழே இறங்குங்கள் இல்லையேல் உங்களால் இறங்க இயலாது என்றதால் விரைவாகக் கீழே இறங்கி பைக்கிலும் ஜீப்பிலும் பயணித்து பேருந்தை அடைந்தோம்.ஓம் ஹோமை அடைந்து சூடாகத் தேநீர் குடித்தபோதும் குளிர் விடவில்லை சுமார் இரண்டு மணிநேரத்திற்குப் பிறகே உடல் ஒரு நிலையை அடைந்தது.

மறுநாள் விமானம் செல்லுமோ செல்லாதோ என்று சந்தேகமாகவே இருந்தது.பனிப் பொழிவும் மேகக் கூட்டமும் அதிகமானால் விமான சேவை நிறுத்தப் படும். நல்லவேளையாக முதல் விமானத்திலேயே  புறப்பட்டு போக்ரா வந்து சேர்ந்தோம்.  விமானத்திலிருந்து   கீழே  பார்த்த பொழுது   போக்ரா  ஒரு  பெரிய  நகரம்  என்று  தெரிந்தது .


பத்து   மணிக்கு  போக்ராவில்  ஹோட்டல் திபெத் ஹோமில் ஓய்வு.மாலையில் கடைவீதிக்குச் சென்றோம்.மறுநாள் போக்ராவிலிருந்து காட்மண்டுவிற்குப் புறப்பட்டோம். சுமார் நாலேகால் மணிக்கு மனகாம்னா தேவி என்ற கோவிலைப் பார்க்க பேருந்து நின்றது.அங்கிருந்து நூறு படிகளில் இறங்கி விஞ்ச் புறப்படும் இடம் வந்தோம்.வரிசையில் நின்று ஆறு ஆறு பேராக விஞ்சில் ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்குப் பறந்தோம்.

போக்ரா நகரைச் சுற்றியுள்ள மலைகளில் ஒரு மலை மீதுதான் இந்தக் கோவில் உள்ளது.
மனகாமனாதேவி  கோவில் கொண்டுள்ள இடம் சுமார் நான்காயிரம் அடி உயரே உள்ள ஒரு மலைப் பகுதி. இந்த மலையைச் சுற்றிக் கொண்டு திரிசூலி என்ற நதி ஓடுகிறது.கோவிலிலும் நல்ல கூட்டம் வரிசையில் நின்று தரிசித்தோம்.அங்கே இன்னும் ஆடு கோழி பலி நடக்கிறது.எங்கள் கண் எதிரேயே பல ஆடுகள் பலியாயின.சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின் மீண்டும்வின்ச்சில்  ஏறிமலையைக் கடந்து வந்தோம்.பின்  எங்கள் பேருந்தில் பயணத்தைத் தொடர்ந்தோம். 


இரவு பனிரெண்டரை மணிக்குக் காத்மாண்டுவை அடைந்தோம். மகாராஜா ஹோட்டலில் இரவு ஓய்வெடுத்தோம். மறுநாள் காலை காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலுக்குச் சென்றோம்.இது பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று.இந்த இடத்தில்தான் அர்ஜுனன் தவம் செய்து பாசுபதாஸ்த்திரத்தை அடைந்ததாக வரலாறு.ஒரு பசு லிங்கம் ஒன்றின் மீது பால சொரிய அந்த லிங்கத்தை எடுத்து எரிய அடிப்பாகம் கேதார்நாத்திலும் மேல்பகுதி பசுபதினாத்திலும் விழுந்ததாகக் கூறினார்கள். அகோரம் வாமதேவம் முதலான பஞ்ச முகங்களைக் கொண்ட சிவனைத் தரிசித்தோம்.கோவிலின் பின் பகுதியில் காலபைரவர் பெரிய உருவமாகக் காட்சியளித்ததைத் தரிசித்தோம்.நாகர், விநாயகர் என்ற பல சந்நிதிகள் உள்ளன கோவிலின் முன்னால் பாக்மதி என்ற நதி ஓடுகிறத

சற்றுத் தொலைவில் குப்தேச்வரிஎன்ற தேவியை பத்து படிகளுக்குக் கீழே நீருள் படுத்த நிலையில் உள்ள தேவியை தரிசித்தோம்.இது தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த இடம். இந்த வயிற்றுப்  பகுதியில் தீர்த்தம் வந்துகொண்டே இருக்கிறது.இது ஒரு சக்தி  பீடம் எனக் கூறினர்.
உணவு நேரத்திற்குப் பின் மாலை நான்கு மணிக்கு நீருள் படுத்திருக்கும் ஜல நாராயணர்  தரிசித்தோம்.இவருக்கு புடா நீலகண்டன் என்று பெயர். ஒரு விவசாயி நீலகண்டன் என்ற பெயருடையவன் தன் நிலத்திலிருந்து இச் சிலையை எடுத்ததால் அவன் பெயரால் இவர் பெரிய நீலகண்டன் என்று அழைக்கப் படுகிறார்.

மாலை ஐந்து மணிக்குப் புறப்பட்டு இரவு ஒரு மணிக்கு நாராயணா  காட்   
அடைந்தோம்.


இந்த இடம் சாளிக்ராமக்ஷேத்ரம் என்று அழைக்கப் படுகிறது.இங்கு கண்டகி,நாராயணி, அந்தர்வாகினி என்னும் மூன்று நதிகள் இணைந்து ஓடுகின்றன. இங்கு தீர்த்த ஸ்ரார்த்தம் செய்கிறார்கள்.காசியில் செய்வதுபோல் இங்கும் நடத்தப் படுகிறது.இங்கு உள்ள கண்டகி நதி ஸ்நானம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.ஏராளமான சாலிக்ராம கற்களைப் போலவே தோற்றம் கொண்ட கற்கள் நதிக் கரையில் பரவிக் கிடந்தன.சிலவற்றைப் பொறுக்கிக் கொண்டோம்.அங்கிருந்து புறப்பட்டு ஜனகபுரியை இரவு ஒரு மணிக்கு வந்து சேர்ந்தோம்.இங்கு "மானக்கி"என்ற ஹோட்டலில் தங்கினோம்.அதிகாலையில் புறப்பட்டு ஜனகரின் அரண்மனை, கனகபவன் என்று அழைக்கப்படும் ஜானகியின் அந்தப்புரம்,சீதாகல்யாண மண்டபம், சீதை கிடைத்த இடம், வில் விழுந்த இடம் முதலிய இடங்களைப் பார்த்தோம்.ராமர் வில் ஒடித்த இடம்,இங்குதான் ஐயாயிரம் ரிஷிகள் ஒரு காலத்தில் யாகம் செய்தனர். அந்த ஊரில் எல்லாதைவங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரிய சிவன் கோவிலையும் பார்த்தோம்.அந்த கோவில் வளாகத்திலேயே எங்கள் உணவை முடித்துக் கொண்டு புறப்பட்டோம்.இரவு பதினொரு மணிக்கு பைரவா என்ற நேப்பால எல்லையிலுள்ள ஊரில் அதே ஹோட்டலில் தங்கினோம்.அதிகாலை ஏழு மணிக்கு சோனாலி என்ற இந்திய எல்லைக்குள் நுழைந்தோம். ஏனோ மனம் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெற்றது.

இரவு ஏழு மணிக்கு உ.பி.டூரிஸ்ட் பங்களா வந்து சேர்ந்தோம்.காலையில் வாரணாசியில் படகில் ஏறி பஞ்சகாட் சென்றோம்.அங்கு கங்கையில் ஸ்நானம் தர்ப்பணம் முடிந்ததும் சுமார் நூறு படிகளில் ஏறி பிந்து மாதவனைத் தரிசித்தோம்.

பின்னர் காசி விஸ்வநாதர், அன்னபூரணி,  விசாலாக்ஷி தரிசனம் செய்தோம்.இரவு எட்டு மணிக்குப் புறப்பட்டு மொகல்சராய் என்ற இடத்தில் ரயிலில் ஏறினோம். பத்தாம் தேதி இரவு முதல் பனிரெண்டாம் தேதி பிற்பகல் இரண்டு மணிவரை ரயில் பயணம் முடித்து சென்னை வந்து சேர்ந்தோம்.

பதினான்கு நாட்கள் நாங்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தோம். இந்த நல்ல யாத்திரையை செய்யும் சக்தியையும் சந்தர்ப்பத்தையும் அளித்த முக்தி நாதனுக்கும் மற்றுமுள்ள புண்ணிய தலங்களில் கோவில் கொண்டிருக்கும்  எல்லா தெய்வங்களுக்கும்  ஆயிரம் நமஸ்காரங்களைக் கூறிக்கொள்கிறேன்.

                                             ஸ்ரீதேவி பூதேவி சஹித ஸ்ரீ முக்தி நாதர்.
ருக்மணி சேஷசாயி