வியாழன், 2 டிசம்பர், 2010

53rd story. முள்ளங்கித் திருடன்

                                                     முள்ளங்கித் திருடன்.
                 ஓர் ஊரில் ஒரு முதியவரும் அவர் மனைவியும் வசித்து வந்தனர். கிழவி எப்போதும் சிடுசிடுப்புடன் தன் கணவரைத் திட்டிக் கொண்டே இருப்பாள்.அந்தக் கிழவரோ மிகவும் அமைதியுடனும் பொறுமையுடனும் எல்லாத் திட்டுகளையும் வாங்கிக் கொண்டே அவளுக்கும் பணிவிடை செய்து வந்தார்.
        

காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போவது வரை கிழவி அவரை ஏதேனும் வேலைகள் ஏவிக்கொண்டே இருப்பாள். கயிற்ருக் கட்டிலில் சாய்ந்துகொண்டு தண்ணீர் கொண்டுவா பாத்திரம் கழுவி வை கடைக்குப் போ என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பாள்.


எல்லா வேலைகளையும் கிழவர் முகம் சுளிக்காமல் செய்து முடிப்பார்.சில நாட்கள் அவர்களுக்குத் தேவையான உணவைக் கூட கிழவரே செய்து முடிப்பார். 

கிழவிக்கு ஆசை அதிகம்.

அவளது ஆசைக்குத் தக்கபடி தன் கணவர் சம்பாதிக்கவில்லை என்று கிழவிக்குக் கோபம். எனவே வேலையாவது செய்யட்டும் என்று கிழவரை உட்காரவிடாது விரட்டிக் கொண்டே இருப்பாள்.


கிழவர் தன் மனைவியைப் போல் சோம்பேறி இல்லை. மிகவும் உழைப்பாளி. மிகவும் அன்பும் பண்பும் உடையவர். தன் மனைவிக்கு அவர் உதவி செய்வதை மகிழ்ச்சியுடன் செய்தார்.

சற்று ஓய்வு நேரம் கிடைத்தாலும் அதைப் பயனுள்ள வகையில் கழிப்பார். தன் வீட்டருகே கிழவர் ஒரு சிறிய தோட்டம் போட்டிருந்தார். அதில் 
நிறைய காய்கறிகளைப் பயிரிட்டிருந்தார்.


அந்தத் தோட்டத்தில் வளரும் காய்கறி கீரைகளைக்  கொண்டுபோய் விற்று வந்த பணத்தில் அரிசி பருப்பு முதலியவற்றை வாங்கிவருவார்.கிழவிக்கோ தனக்கு நல்ல புடவை இல்லையே கழுத்துக்கு நகை இல்லையே என்ற குறை நிரம்ப இருந்தது. அதனால் நிறைய சம்பாதிக்காத தன் கணவரையும் அவர் வாங்கிவரும் பொருட்களையும் அலட்சியப் படுத்தி வந்தாள்.
 .
கிழவர் ஒருமுறை தோட்டத்தில் முள்ளங்கியைப் பயிரிட்டிருந்தார். அவை நன்கு செழித்து வளர்ந்து பறிப்பதற்குத் தயாராக இருந்தன. மறுநாள் அவற்றைப் பறித்து வியாபாரத்துக்குக் கொண்டு செல்ல கிழவர் நினைத்திருந்தார். 

அன்று அதிகாலையிலேயே எழுந்து தன் காலைக் கடன் முடித்து விட்டு முள்ளங்கிபறிக்கத் தோட்டத்திற்கு வ்ந்தார். பாத்தியைப் பார்த்தவருக்குத் திக்கென்றது. அங்கே பாதிக்குமேல் முள்ளங்கியைக் காணோம். கவலையுடன் கிழவர் வேறு வேலை பார்க்கக் கிளம்பிப் போய் விட்டார்.


அன்று இரவு கிழவருக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. தன்னுடைய சிறிய தோட்டத்திற்கு வரும் திருடன் யாராக இருக்கும்?என சிந்தித்தவாறு படுத்திருந்தார். ஏதோ சத்தம் தோட்டத்திலிருந்து கேட்கவே திடுக்கிட்டு எழுந்தார்.

விளக்கைக் கையிலே பிடித்துக் கொண்டு தோட்டத்துக்குச் சென்றார். சத்தம் முள்ளங்கிப் பாத்தியிலிருந்துதான் வருகிறது எனத் தெரிந்துகொண்டு மெதுவாக அருகே சென்று பார்த்தார். எதுவும் அவர் கண்ணுக்குப் படவில்லை. கீச்சு மூச்சென்று சத்தம் மட்டும் வந்துகொண்டு இருந்தது.

கிழவர் கூர்ந்து பார்த்தவர் ஆச்சரியப் பட்டுப் போனார். ஒரு முள்ளங்கி படுத்தவாக்கில் நகர்ந்து கொண்டிருந்தது. அது எங்கே நகர்கிறது எனக் கவனித்தபோது அருகே இருந்த ஒரு மரப் பொந்துக்குள் போவதைக் கவனித்தார். சட்டென்று அந்தப் பொந்தைத் தன் கையால் மூடிக் கொண்டார்.

நகர்ந்து கொண்டிருந்த முள்ளங்கியும் நின்று விட்டது. அதன் அடியிலிருந்து சுண்டைக்காய் அளவுக்குத் தலைகள் தெரிந்தன.கீசுகீசென்று கத்தியவாறு முள்ளங்கியைக் கீழே போட்டு விட்டு நின்றன அந்த விரலளவு உருவங்கள்.

அந்த சுண்டுவிரல் அளவு உருவங்களைப் பார்த்து கிழவர் ஆச்சரியப்பட்டாலும் தன் முள்ளங்கியைத் திருடியதால் கோபத்துடன் "ஏய்! யார் நீங்கள்?" என்று அதட்டலாகக் கேட்டார்.

சுண்டுவிரல் மனிதர்கள் கிழவரின் காலடியில் வந்து நின்று கொண்டு கை கூப்பினர. கீச்சு கீச்சென்று அவர்கள் கத்தியது முதலில் புரியாவிட்டாலும் பழகிய பிறகு புரிந்தது.

"நாங்கள் முள்ளங்கிப் பிரியர்கள். எங்களுக்கு முள்ளங்கிதான் ஆகாரம். உங்கள் தோட்டத்து முள்ளங்கியைக் கேளாது எடுத்தது தப்புதான். எங்களை மன்னித்து விடுங்கள். தாத்தா, எங்களை மன்னித்துவிட்டால் உங்களுக்கு ஒரு பரிசு கொடுப்போம்." என்று கூறியது ஒரு குள்ள உருவம்.


"ஏய்! முள்ளங்கித் திருடா! எனக்கு என்ன பரிசு நீ தரப் போகிறாய்?" என்றபடியே கையை விலக்கி வழிவிட்டார் கிழவர். பொந்துக்குள் ஓடிய குள்ள
மனிதன் ஒரு அலுமினிய கிண்ணத்தை இழுத்துக் கொண்டு வந்து கிழவர் முன் வைத்தான். கிழவர் அதைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினார்.

"பூ, இதுதானா! இதில் வைக்க என்ன சாமான் என்னிடம் இருக்கிறது? இதைக் கடையில் போட்டால் கூட என்ன காசு வரப் போகிறது?"

"தாத்தா!இது மந்திரக்கிண்ணம். இது எங்களுக்குப் பயன்படாது. இதில் நீசாப்பிட விரும்பும் உணவுப் பண்டங்கள் எல்லாம் வரும்.  உனக்கு என்ன வேண்டுமோ அதைச் சொல்லிக் கையை விடு." என்றான் முள்ளங்கித் திருடன்.

"அப்படியா!" என ஆச்சரியப் பட்டகிழவர் "எனக்கு லட்டு வேண்டும்" என்று சொன்னபடியே கிண்ணத்துக்குள் கையை விட்டார். பழைய காலத்துத் திருப்பதி லட்டு போன்ற பெரிய லட்டு அவர் கையில் வந்தது. கிழவர் சந்தோஷத்துடன் அதைச் சாப்பிட்டார்.

முள்ளங்கித் திருடர்களுக்கும் லட்டு தின்னக் கொடுத்தார். ஆனால் அதை மறுத்த குள்ளர்கள் "தாத்தா! இந்தக் கிண்ணம் எங்களுக்குப் பயன்படாது. இதை நீங்களே கொண்டுபோய் பயனடையுங்கள்." என்றுசொன்னபோது கிழவர் மகிழ்ச்சியில் மிதந்தார்.

"குள்ளர்களே! உங்களை நான் என்றும் மறவேன். உங்களுக்காக என் தோட்டம் முழுவதும் இனி முள்ளங்கிதான் பயிரிடப் போகிறேன். தாராளமாக இனி வேண்டும்போதெல்லாம் முள்ளங்கியைப் பறித்துச் செல்லுங்கள். நன்றி. நான் வருகிறேன்" என்றபடியே வீட்டுக்குள் சென்றார் கிழவர்.

வீட்டுக்குள் நுழைந்த கிழவர் அந்தக் கிண்ணத்தைத் தன் முன் வைத்துக் கொண்டு அமர்ந்தார். அப்போது அங்கே வந்த அவர் மனைவி கடுகடுத்த முகத்துடன் அவரைப் பார்த்தாள்.

"இப்படி உட்கார்ந்து விட்டால் வேளைக்கு சாப்பாடு போடுவது யார்?"என்றாள் கோபமாக.

"உனக்கு இப்போது என்ன டிபன் வேண்டும்?" என்றார் கர்வமாக.

"ம்... இட்லியும் வடையும் பாயாசமும் வேண்டும். தர முடியுமா உன்னால்?" கேட்டுவிட்டு நொடித்தாள் கிழவி.

"இதோ பார்." என்றபடியே அவள் கேட்ட பலகாரங்கள் ஒவ்வொன்றாக கிண்ணத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார் கிழவர்.
கிழவிக்கு ஒரே மகிழ்ச்சி. வயிறார உண்டாள். அந்தக்கிண்ணத்தை ஆச்சரியமாகப் பார்த்தாள். அவள் கண்களில் பேராசை தெரிந்தது.

நாட்கள் கடந்தன. ஒருநாள் காலை கிழவர் தன் கிண்ணத்தைத் தேடினார். அதைக் காணவில்லை. கிழவியும் சேர்ந்து தேடினாள். 
கிடைக்கவில்லை.

சற்று நேரம் கவலையோடு இருந்தவருக்கு முள்ளங்கித் திருடர்களின் நினைவு வந்தது. அவர்களைப் பார்க்க தோட்டத்திற்குச் சென்றார்.
கவலையோடு வந்து அமர்ந்த கிழவரைப் பார்த்த குள்ளர்கள் என்னவென்று விசாரித்தனர்.

"நீங்கள் அன்போடு கொடுத்த கிண்ணம் காணாமல் போய்விட்டது. யாரோ எடுத்துச் சென்று விட்டனர்." என்றார் கவலையோடு.

குள்ளர்கள் தங்களுக்குள் கூடிப் பேசினர். பின்னர் "கவலைப் படாதீர்கள் தாத்தா" என்றபடியே பொந்துக்குள் சென்று ஒரு தோல்பையைக் கொண்டுவந்து போட்டனர்.

"தாத்தா, இந்தப் பையில் கைவைத்தால் உங்களுக்கு வேண்டிய பணம் கிடைக்கும். எடுத்துக் கொள்ளுங்கள். 
வேண்டியதை வாங்கிக் கொள்ளுங்கள்."

கிழவர் மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்பி வ்ந்தார். ரகசியமாகவே அந்தப் பையை வைத்துக் கொண்டு வேண்டிய
பணத்தை மட்டும் எடுத்துச் செலவு செய்தார்.

சிலநாட்கள் கழிந்தன.கிழவர் வேலை ஏதும் செய்யாமலேயே எப்படிப் பணம் சம்பாதிக்கிறார் என்பதை அறிய விரும்பினாள் கிழவி.
கணவரிடம் கேட்டுப்பார்த்தாள். அவர் சொல்வதாக இல்லை. ஒருநாள் கிழவர்  அந்தப் பையிலிருந்து பணம் எடுப்பதைப் பார்த்து விட்டாள்
மீண்டும் அவள் கண்களில் பேராசை தெரிந்தது.

சில நாட்கள் கழித்து அந்தப் பையும் காணாமல் போயிற்று. கிழவர் வருத்தத்துடன் நண்பர்களான குள்ளர்களைத் தேடிச் சென்று அழுதார்.
குள்ளர்களும் அவரைச் சமாதானம் செய்து ஒரு பிரம்பைக் கொடுத்தனர். "இதைப் பேசாமல் ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.
உபயோகிக்கவேண்டாம்." என்று கூறினர்.

கிழவரும் சரிஎனச் சொல்லிவிட்டு வீடு திரும்பினார். அந்தப் பிரம்பைப் பார்த்த கிழவி "அது என்ன கொடுக்கும் சொல்லுங்கள்."என 
நச்சரித்தாள்.

அதுவரை பொறுமையாக இருந்த கிழவர்,"ம்.. இதைத் தொட்டால் அடி கிடைக்கும்." என்றார் எரிச்சலோடு. அதே சமயம் அதைக் கையில் எடுத்த 
கிழவி அலறினாள். அந்தப் பிரம்பு கிழவியை அடிக்கத் தொடங்கியது.

"ஐயோ, நிறுத்துங்கள். வலி உயிர் போகிறது. நான் எடுத்ததையெல்லாம் கொடுத்துவிடுகிறேன்."என்று அவள் கத்தியவுடன் பிரம்பு நின்றது.
அழுதுகொண்டே கிழவி தான் மறைத்து வைத்திருந்த கிண்ணத்தையும் தோல்பையையும் கொண்டுவந்து வைத்தாள்.

அதைப் பார்த்த கிழவர் "அடி பைத்தியமே இந்தப் பொருள்கள் நம் இருவருக்கும் தானே. இதை மறைத்து வைத்து நீ என்ன செய்யப் போகிறாய்.
உனக்கு என்ன வேண்டுமோ அதை நீ தைரியமாக இதிலிருந்து  எடுத்துக் கொள்ளலாமே. " என்றபோது கிழவி கண் கலங்கினாள்.

"உங்கள் நல்ல உள்ளத்தை நான் புரிந்துகொள்ளாமல் பேராசைப் பட்டுவிட்டேன். எனக்குப் புத்தி வந்தது. என்னை மன்னித்து விடுங்கள்"
என்று சொன்னவள் கண்ணீரைத் துடைத்தார் கிழவர். கிழவி மனநிறைவோடு சிரித்தாள்.

'நல்லஉள்ளம் நன்மை செய்யும் என்பதும் பேராசை துன்பத்தையே தரும்' என்பதையும் கிழவி  புரிந்து கொண்டாள்.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com