செவ்வாய், 8 டிசம்பர், 2015

மந்த்ராலய மகான்--6

மனைவியின் நிலை; கணவர் சந்நியாசம் மேற்கொண்டார் என்ற செய்தி காதில் விழுந்ததும் துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்ந்தாள். இனி அவரைக் காண இயலாது  என்ற உண்மையை அறிந்த சரஸ்வதி பாய் துடித்தாள். அவர் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.அவரைப்பிரிந்து வாழும் நிலையை விரும்பாத சரஸ்வதிபாய் ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து  தன்வாழ்வை முடித்துக்  கொண்டாள்.அதனால் பிசாசு ஜென்மமாக ராகவேந்திரரையே சுற்றிச் சுற்றி வந்தாள் .அந்த பிசாசு உருவத்தின் மீது தன்  கமண்டல நீரைப் புரோக்ஷிக்க அவள் விமோசனம்  பெற்றாள். 
அவள் நினைவாக அந்த வம்சத்தார் தத்தம் இல்லங்களில் நடக்கும் எல்லாசுபகாரியங்களுக்கும் முன்னர் சரஸ்வதியின் நினைவாக சுமங்கலிகளுக்கு வஸ்திரதானம் அன்னதானம் செய்யவேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தினார்.
இப்போதும் அவர் வம்சத்தாரிடையே சுமங்கலிப் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதங்கள்;
நாளடைவில் ஸ்ரீ ராகவேந்திரர் மூலராமர் பூஜையை மிகுந்த ஈடுபாட்டோடும் பக்தியோடும் செய்வதையும் ஸ்ரீமடத்தின் காரியங்களைக் கவனிப்பதையும் பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்ப்பதையும் கண்டு உள்ளம் பூரித்தார் குரு சுதீந்திரர்.இனி ஸ்ரீமடத்தைப் பற்றி கவலையின்றி தேச சஞ்சாரம் செல்லத் திட்டமிட்டார்.அதன்படி கும்பகோணம் விட்டுப் புறப்பட்டார்.
                            குருவின் ஆக்ஞைப் படியே ஸ்ரீமடத்தைப் பராமரிப்பதும் சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்வதுமாய் மூலராமரைப் பூஜித்து வந்தார் ஸ்ரீ ராகவேந்திரர். இவர் வேங்கடநாதனாக இருந்தபோதே செய்த அற்புதங்கள் சில என்றால் ராகவேந்திரராக மாறியபின் நிகழ்த்திய அற்புதங்கள் அநேகம்.செல்லுமிடமெல்லாம் அற்புதங்களை நிகழ்த்திய வண்ணம் இருந்தார்.
 ஒருமுறை இவரது சிஷ்யர்களில் ஒருவன் திருமணத்திற்காக இவரிடம் ஆசீர்வாதம் பெற வந்து நமஸ்கரித்தான்  "சிரஞ்சீவியாக வாழ்வாயாக" என்று ஆசீர்வதித்துசிறிது செல்வமும் கொடுத்து  அனுப்பினார் .அந்தசிஷ்யன் திருமணம் முடிந்து மகிழ்ச்சியுடன் சென்றவன் வீட்டின் நிலைப் படியில் மோதி மயக்கமடைந்து கீழே விழுந்தவன் எழுந்திருக்கவே இல்லை.
                    அவன் இறந்துவிட்டான் என அனைவரும் அழுதனர்.இந்தச் செய்தி ஸ்ரீராகவேந்திரரின் செவிகளுக்குப் போயிற்று. அவர் சிஷ்யனை அழைத்துவரச் சொல்லி அனுப்பினார்.அந்தச் சீடனின் பெற்றோர் அழுத படியே மாப்பிள்ளையான அவனைக் கொணர்ந்து ராகவேந்திரர்முன் படுக்க வைத்தனர். ராகவேந்திரர் தன கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தை அவன்மீது ப்ரோக்ஷிக்க தூக்கத்திலிருந்து விழிப்பவன்போல் விழித்து குருவை வணங்கினான்.
                                     (தொடரும்)



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com