புதன், 16 பிப்ரவரி, 2011

60th story நான்கு கோடி.

நான்கு கோடி.

தமிழகத்தை ஆண்டுவந்த அரசர்களில் மூவேந்தரான சேர சோழ பாண்டிய மன்னர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அதிலும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் மிகச் சிறப்பானவர்கள். பாண்டியமன்னர்களுக்கு அடிக்கடி சில சந்தேகங்கள் ஏற்படுவதுண்டு.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே  மணமுண்டா இல்லையா என்று ஒரு மன்னனுக்கு சந்தேகம் ஏற்படவில்லையா அதுபோல.
ஏதேனும் ஒரு அதிசயமான செயலைச் செய்யச் சொல்வது அவர்களுக்கு வழக்கமான ஒன்று.

பாண்டிய மன்னன் ஒருநாள் சபையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிரே சங்கப் புலவர்கள் அமர்ந்திருந்தனர்.நானூறு புலவர்கள் அம்மன்னனின் சபையில் இருந்தனர். அவர்கள் தங்களின் புலமை பற்றி மிகவும் பெருமைப் பட்டுக் கொண்டிருந்தனர்.

இவர்களின் தற்பெருமையைக் கண்டு மன்னன் கோபம் கொண்டிருந்தான். இவர்களின் இந்த பண்பு தவறு என அவர்கள் அறிய வேண்டுமென 
முடிவு செய்தான்.அதனால் அன்று சபையில் ஒரு கேள்வி எழுப்பினான்.

ஒரே நாளில் எத்தனை பாடல்கள் பாட முடியும்? என்று கேட்டான். ஒவ்வொரு புலவரும் ஒவ்வொரு எண்ணைச் சொன்னார்கள். 
"மன்னனோ நீங்கள் நானூறு புலவர்கள் உள்ளீர்கள். எனவே நான்கு கோடி பாடல்களைப் பாடி வாருங்கள். நாளைக் காலைக்குள் நான்கு கோடிப் பாடல்களைப் பாடவேண்டும். இல்லையேல் உங்கள் தலை மண்ணில் உருளும்" என்று ஆணையிட்டான்.

நானூறு புலவர்களும் கைகளைப் பிசைந்தார்கள். மன்னனுக்கு என்ன ஆயிற்று. இப்படி புத்தி போகிறதே. நடக்க இயலாத ஒரு காரியத்தை செய்யச் 
சொல்கிறாரே. ஒரே இரவில் ஒவ்வொருவரும் நூறு பாடலைப் பாடினாலே அது நாற்பதாயிரம் பாடல்தானே ஆகும் நான்கு கோடிக்கு எங்கே போவது எனத் திகைத்தனர்.

மன்னனோ அவர்களை உடனே "அவையை விட்டுச் செல்லுங்கள். உங்கள் பணியை உடனே தொடங்குங்கள்" எனக் கூறி அனுப்பிவைத்தான்.
புலவர்கள் வழியறியாமல் குனிந்த தலையுடன் வெளியேறினர்.

ஊரைவிட்டு வெகு தூரத்தில் இருந்த காட்டில் ஒன்று திரண்டனர். என்ன செய்வது எப்படி மன்னனை திருப்திப் படுத்துவது என ஒவ்வொருவரும் ஆலோசனை செய்தனர்.கடைசியில் வயதில் மூத்தவர் எழுந்தார். நாம் அனைவரும் சேர  நாட்டுக்குச் சென்று விடுவோம். இங்கிருந்தால் நம் தலை தப்பாது. என்று ஆலோசனை சொல்ல அனைவரும் அதுவே சரியென முடிவு செய்தனர்.

நானூறு புலவர்களும் இரவோடு இரவாக பாண்டிய நாட்டை விட்டு சேர நாடு நோக்கி நடக்கலானார்கள்.

சேர மன்னனிடமிருந்து பரிசில் பெற்றுக்கொண்டு அதே வழியாக பாண்டிய நாடு நோக்கி வந்துகொண்டிருந்தார் ஔவையார். ஏதோ பெருங்கூட்டம் ஒன்று தன முன்னே வருவதைப் பார்த்துத் திகைத்து நின்றார். எதிரே வந்த புலவர் கூட்டமும் ஔவையாரைப்  பார்த்துத திகைத்தனர்.

"புலவர்களே! பாண்டிய நாட்டுக்கு என்ன நேர்ந்தது? ஏன் அனைவரும் வெளியேறிச் செல்கிறீர்கள்?" வினாக்களை அடுக்கினார் ஔவையார்.

தங்களுக்கு பாண்டிய மன்னனால் வந்த சோதனையைக் கூறினர் புலவர்கள். "புலவர்களே இதில் ஏதோ சூது உள்ளது வாருங்கள். மன்னனை 
அதே சூதினால் வெல்வோம்." என்று அவர்களுக்கு ஆறுதல் கூறிய ஔவையார் அனைவருடன் பாண்டியன் அரண்மனை நோக்கி நடந்தார். புலவர்களும் உடன் நடந்தனர்.

பாண்டியமன்னன் அவையில் அமர்ந்திருந்தான். மந்திரி பிரதானியர் சூழ்ந்திருந்தனர். பொது மக்களும் நிரம்பியிருந்தனர்.
அவைக்குள் ஔவையார் நானூறு புலவர்கள் புடைசூழ நுழைந்தார். மன்னன் தன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து வந்து அவரை வரவேற்றான்.ஔவையார் சற்றே கோபத்துடன் பேசினார்.

"பாண்டிய மன்னா!  இது என்ன அநீதி? ஒரே நாள் இரவுக்குள் நான்கு கோடி பாடல் பாடவேண்டுமென்றாயே. தமிழ் படித்த புலவர்களை அவமதிக்க வேண்டும் என எண்ணினாயா?"

"தாயே மன்னிக்க வேண்டும். தங்களால் ஆகாதது எதுவும் இல்லை என்கிற எண்ணம் இவர்களுக்கு வந்ததாலேயே இந்தக் கட்டளையை விதித்தேன்.  உயிருக்குப் பயந்து ஓடுவார்கள் என நான் எண்ணவில்லை.  அதனால் இவர்களுக்கு இட்ட தண்டனையை நிறைவேற்றுவதே என் எண்ணம்.

"பாண்டியமன்னனே, பொறு. நீ கேட்ட நான்கு கோடிப் பாடல்களை நான் பாடினால் இந்தப் புலவர்களை விடுவித்து மீண்டும் அவையில் சேர்ப்பாயல்லவா?"

"என்ன! நான்கு கோடிப் பாடல்களை தாங்கள் பாடுகிறீர்களா?" என்று திகைத்தான் மன்னன். அவையினர் அனைவரும் ஆவலுடன் பார்த்தனர்.

"ஆம்" என்றார்  ஔவையார். பாண்டியனும் சம்மதித்தான்.

ஔவையார் பாடிய பாட்டுதான் இது. 

"மதியாதார் தலைவாசல் மதித்தொருகால் சென்று மிதியாமை கோடி பெரும்.

உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை கோடி பெரும்.

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடியிருப்பது கோடி பெரும்.

கோடானு கோடி கொடுப்பினும் தன் நா கோடாமை கோடி பெரும்"
  
"மன்னா! இந்த உண்மைகளை நீ ஒப்புக் கொள்கிறாயல்லவா?  நீ கேட்டபடி நான்கு கோடிகளைப  பாடிவிட்டேன். இனி புலவர்களை பழைய படி அவையில் அமர இடம் கொடு.
தமிழ் கற்றவர்களை தண்டித்தால் அவர் கற்ற தமிழ் உன்னைத் தண்டிக்கும்."

மன்னன் ஒளவையின் சொல்லுக்குத் தலைவணங்கினான். புலவர்களும் தங்களின் கர்வம் நீங்கி ஒளவையை வணங்கினர்.








--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com