"இதற்காகவா இத்தனை கோபம்?வேண்டுமானால் இந்த அலங்காரங்களைக் கலைத்து விடுகிறேன். நீ எனக்கு அலங்காரம் பண்ணி விடு."
பாமாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு கெஞ்சினான் கண்ணன்.
ஒரு வழியாக சமாதானமானாள் பாமா. அன்று முழுவதும் கிருஷ்ணன் பாமாவின் இல்லத்திலேயே கழித்தான்.
சிலநாட்கள் கழிந்தன. அன்றும் பாமாவிற்குக் கோபம். என்ன என்று புரியாமலேயே தவிப்பது போல நடித்தான் கண்ணன்.
வெகுநேரம் கண்ணன் கெஞ்சவே சற்றே கோபம் தணிந்தாள் பாமா.
"நீங்கள் என்னிடம் இருப்பதை விட அந்த கோபிகையரிடமே அதிக நேரம் தங்கிவிடுகிறீர்களே. அதுதான் எனக்குப் பிடிக்கவேயில்லை."
"இனி அந்த கோபியருடன் சேருவதில்லை. உனக்கு மகிழ்ச்சிதானே பாமா?" பாமா சற்றே புன்னகையை உதிர்த்தாள். சினம் தணிந்த பின் தன் கிருஷ்ணனின் மீது அன்பைப் பொழிந்தாள். கண்ணனும் அவள் அன்பில் திளைத்தான்.
இரண்டு நாட்கள் கழிந்தன.அன்றும் பாமா கண்ணனை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தாள். கண்ணன் வரவில்லை. ஆனால் கண்ணனைத் தேடி அவன் அன்பிற்குரியவளான ராதை பாமாவின் வீட்டிற்குள் நுழைந்தாள்.அவளைப் பார்த்ததும் அவள் மீது பொறாமையும் கோபமும் கொண்டாள் பாமா. தனக்கே உரிய கண்ணன் மீது அவள் அன்பு செலுத்துவது பாமாவிற்குப் பிடிக்கவில்லை.இருப்பினும் இல்லம் வந்தவளை
கல்கண்டு கலந்த பால் கொடுத்து உபசரித்தாள்.
அதை மகிழ்ச்சியுடன் வாங்கிய ராதை" கிருஷ்ணார்ப்பணம்" என்று சொல்லிப் பருகினாள். மீண்டும் கண்ணனைத் தேடி வெளியே ஓடிவிட்டாள் ராதை.
வழக்கம்போல் மாலைவேளையில் கண்ணன் பாமாவைத் தேடி அவளது இல்லத்திற்கு வந்தான்.வரும்போதே மிகுந்த வேதனையை முகத்தில் தாங்கி வந்தான். நேராக ஊஞ்சலில் போய்ப் படுத்துக் கொண்டான். ஒருநாளும் இல்லாத் திருநாளாக கண்ணன் இப்படிச் செய்தது பாமாவுக்குப பேரதிர்ச்சியாக இருந்தது.கண்ணனின் அருகே ஓடி வந்தாள்.அவன் முகத்தை வருடினாள்."சுவாமி! என்னவாயிற்று தங்களுக்கு?ஏன் இந்தச் சோர்வு? "
"பாமா! என் கால் மிகவும் வலிக்கிறது. ஏனென்று தெரியவில்லை." என்றபடியே கால்களைக் காட்டினான் அந்த மாயக் கள்ளன்.பாமாவும் அவன் காலடியில் அமர்ந்து கால்களைத் தன் மடிமீது வைத்துக் கொண்டு வருடினாள்.
திடுக்கிட்டாள். கண்ணனின் பாதங்கள் இரண்டிலும் பெரிய பெரிய கொப்புளங்கள் இருந்தன.துடித்து விட்டாள் பாமா. "தங்களுக்கு ஏனிந்த நிலை சுவாமி?"
"பாமா! நான் என்ன செய்வேன்? யாரோ என் பக்தைக்கு சூடான பானம் அருந்தக் கொடுத்துள்ளார். அவள் அதை எனக்கு அர்ப்பணித்துவிட்டுப் பின் பருகினாள். அந்தப் பானத்தில் இருந்த சூட்டை நான் ஏற்றுக் கொண்டேன். அந்த பக்தை தன் உள்ளத்தில் எப்போதும் என் பாதங்களை வைத்துப் பூஜிக்கிறாள்.அத்தகைய பக்தையைக் காக்க வேண்டியது இந்தப் பரந்தாமனின் கடமையல்லவா பாமா?"
பாமா வெட்கித் தலை குனிந்தாள். ராதைக்குத் தான் கொடுத்த சூடான பால்தான் இந்த நிலைக்குக் காரணம் என்பதைத் தெரிந்து கொண்டாள்.அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.
"பரந்தாமா! என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்த தவறுதான் உங்களின் இந்த நிலைக்குக் காரணம்.தங்கள் மீது அளவு கடந்த அன்பைப் பொழியும் ராதையின் மீது நான் பொறாமைப் பட்டேன். அதன் காரணமாக மிகவும் சூடான பாலை அவள் பருகக் கொடுத்தேன்.அவள் துன்பப் படுவாள் என நினைத்தேன். நான் செய்த இந்தத் தவறை மன்னித்து விடுங்கள்.உண்மையான பக்தி கொண்ட ராதாவை நான் சோதித்து விட்டேன். என் தவறைப் பொறுத்தருளுங்கள்." கண்ணனின் கால்களைப் பற்றிக் கொண்டு பாமா கதறினாள்.
அவளது கண்ணீர் பட்ட மறுகணமே கொப்புளங்கள் மறைந்தன. அதனுடன் சேர்ந்து பாமாவின் பொறாமையும் மறைந்தது.
______________________________ ______________________________ ______________________________ ________________--