வெள்ளி, 22 ஜனவரி, 2016

மந்த்ராலய மகான் -10

             சென்ற   யாத்திரையின்போது ஆதோனி சமஸ்தானத்தின் ஒரு கிராமத்தின் அருகே  இவர் பயணித்துக் கொண்டிருக்கையில் மாடு மேய்க்கும் ஒரு சிறுவன் இவரைப் பணிந்து நின்றான்.வெங்கண்ணா என்ற சிறுவன் தாய் தந்தையற்றவன் தன தாய்மாமனால் மாடு மேய்த்துக் கொண்டிருப்பவன் எனவும் கூறி அழுதான்.பிராமணனாக இருந்தும் கல்வி அறிவற்றவனாக இருப்பதாகச் சொல்லி அப்படி இருப்பது தனக்கு மிகவும் துக்கமாக இருப்பதாகவும் சொன்னபோது ராகவேந்திரர் புன்முறுவலுடன் "கலங்காதே, உனக்குத் துன்பம் வரும்போது என்னை ஸ்மரித்துக் கொள் "என்று சொல்லி மந்த்ராக்ஷதை கொடுத்துச் சென்றார்.
              இப்போது அந்த வெங்கண்ணா வாலிபனாக வளர்ந்து தாய்மாமன் மறைவுக்குப் பின் நிலபுலன்களை வைத்து விவசாயம் செய்துவந்தான்.

             ஒருநாள் சுல்தான் பாதுஷாவின் சிற்றரசர்களில் ஒருவனான 'சித்தி மசூத்கான் 'வரிவசூல் செய்யும் பொருட்டு குதிரைமீது ஏறிக்  கொண்டு வெங்கண்ணாவின் கிராமத்துக்குள் வந்தான். வெங்கண்ணாவும் மற்றவர்களும் மரியாதை செலுத்தியபடி ஓரமாக நின்றனர்.அப்போது அவசரமாக நவாபிடம் இருந்து சேவகன் ஒருவன் ஒரு கடிதம் கொண்டு வந்து கொடுத்தான்.அதை யாரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வது என்று சுற்று முற்றும் பார்த்தான்.அவன் கண்களில் வெங்கண்ணா பளிச்செனத் தெரிந்தான்.அவனை  அருகே அழைத்தான். வெங்கண்ணா கைகளைக் குவித்தபடி அருகே வந்தான்.அவனிடம் கடிதத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னான் சித்தி மசூத்கான்.
              
             கடிதத்தைக் கையில் வாங்காமலேயே மறுத்தான் வெங்கண்ணா.
"'ஐயா  எனக்குப் படிக்கத்தெரியாது.நான் பள்ளிக்கே சென்றதில்லை."

"பொய் சொல்லாதே உன் தலையை இப்படியே துண்டாக்கி விடுவேன்."
"அரசே, என்னை நம்புங்கள்.நான் பிரம்மணன்தான்.ஆனாலும் படிபறிவற்றவன்"
"யாரை நம்பச் சொல்கிறாய். சுத்தப் பிராமணனாக இருந்துகொண்டு படிப்பறிவு இல்லையென்று பொய் வேறு சொல்கிறாயா?உன்னை......"என்று பற்களைக் கடித்தபடி  வாளை  உறுவினான். 
 
"ஐயா ,பொறுங்கள் என்ற வெங்கண்ணாவுக்கு ராகவேந்திரர் சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன.

"வெங்கண்ணா, உனக்குத் துன்பம் வரும்போது என்னை நினைத்துக் கொள்."
வெங்கண்ணா அந்தக் கடிதத்தைக் கையில் வாங்கி கைகளைக் குவித்துக் கொண்டு ஸ்ரீ ராகவேந்திரரை    
 ஸ்மரித்தான். .
"ஸ்ரீ ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா " என மனதிற்குள் ஜபித்தான்.
என்ன ஆச்சரியம். திடீரென அந்தக் கடிதத்திலுள்ள எழுத்துக்களெல்லாம் பரிச்சயமானவை போல் தோன்றின.செய்தியை மெதுவாகப் படித்து முடித்தான்.

"சித்தி மசூத்கானின் ராஜ்ஜியம் விரிவு படுத்தப் பட்டுள்ளது.மந்த்ராலயம் உள்ளிட்ட பல கிராமங்களை அத்துடன் இணைத்திருக்கிறோம். ஆதோனி சமஸ்தானத்திற்கு யாரையேனும் திவானாக நியமித்துக் கொள்ளலாம்" எனவும் வெங்கண்ணா படிக்கக் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தான் சித்தி மசூத்கான்.

அத்துடன் நில்லாமல்  அவன் "இந்த ஆதோனி சமஸ்தானத்துக்கு எனக்குப் பிடித்தமானவனான வெங்கண்ணா வையே திவானாக நியமிக்கிறேன் " என்று அறிவித்து வெங்கண்ணா வைத் தன்னுடன்அரண்மனைக்கு  அழைத்துச் சென்று அங்கு  ஆசனத்திலும் அமர்த்தினான்.

வெங்கண்ணா வினால் எதையும் நம்ப முடியவில்லை.குரு ஸ்ரீ ராகவேந்திரரின் நாமத்துக்கு இத்தனை சக்தியா என எண்ணி எண்ணி வியந்ததோடு இதை சித்தி மசூத்கானி டமும்  கூறினான்.
அவரது பெருமையை அறிந்த மசூத்கான் தாமும் அவரைத் தரிசிக்க விரும்புவதாகக் கூறினான்.ஆனால் மனதுக்குள் 'அவரை நான் பார்க்க நேர்ந்தால் நிச்சயம் அவரை பரீட்சை செய்து பார்த்து விடுவேன்'என்று முடிவு செய்து கொண்டான். 
இதிலும் ஒரு மகிமையை எடுத்துக் காட்டினார் ஸ்ரீ ராகவேந்திரர். அதையும் அடுத்து  பார்ப்போம்.


































--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com