சனி, 15 ஆகஸ்ட், 2009

சுபாஷ் சந்திர போஸ்

இந்திய துணைக் கண்டத்தின் சுதந்திர வரலாறு உலக வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த வரலாற்றின் நாயகர்களாக விளங்கியவர் பலராவர். அவர்களுள் படை நடத்தி வீரத்தின் வேகத்தை ஆங்கிலேயருக்குக் காட்டியவர் நேதாஜி எனப்பெயர் பெற்ற சுபாஷ் சந்திர போஸ் ஆவார்.பாரத நாட்டின் சுதந்திர வீரராகவும் வீரத்தின் விளைநிலமாகவும் திகழ்ந்தவர், பாரதத்தின் மணியாகவும் விளங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆவார்.1897 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 28 ஆம் நாள் கல்கத்தாவில் ஜானகி நாதிர் போஸுக்கும் பிரபாவதி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தனது கல்லுரிப் படிப்பை கல்கத்தாவில் படிக்கும்போதே வெள்ளையர்களை அவர்களின் அதிகாரத்தை எதிர்க்கும் உணர்வைத் தன் உள்ளத்தில் வளர்த்து வந்தார்.இவரது நாட்டுப் பற்றை ஒரு சிறு நிகழ்ச்சி மூலம் அறிந்து கொள்ளலாம். இவரது வகுப்பில் பாடம் நடத்தும் பேராசிரியர் ஓர் ஆங்கிலேயர். அவர் ஒரு நாள் வகுப்பறையில் இந்தியர்களையும் இந்தியக் கலாச்சாரத்தையும் இழிவாகப் பேசினார். தேசீய உணர்வு மிகுந்த சுபாஷ் அவரை ஆசிரியர் என்றும் பாராமல் நன்கு அடித்து விட்டார். அவர் உள்ளத்தில் ஆங்கில ஆட்சியை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்ற எண்ணம் வேரோடி இருந்தது. அவர்களை விரட்ட இந்தியர்களுக்குப் படைப் பயிற்சி தேவை என முடிவு செய்தார். அதனால் இவர் கடற்படைப் பயிற்சியும் பெற்றார். தன் மேல்படிப்புக்காக இவர் லண்டன் சென்றிருந்த போது கவிக்குயில் சரோஜினி தேவி, சித்தரஞ்சன்தாஸ் போன்றோரின் பேச்சுக்களைக் கேட்டார். அதனால் இவரது விடுதலை வேட்கை மேலும் வளர்ந்தது. இந்தியாவில் இந்தியரின் நிலையை நன்கு உணர்ந்து கொண்டார். நாட்டு மக்களின் உள்ளத்தில் மேல்படிப்பான i சுதந்திர உணர்வை ஊட்ட வேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கொண்டார். மேல் படிப்பான ஐ.சி.எஸ். தேர்வு எழுதாமலேயே பாரதநாட்டுக்குத் திரும்பினார்.கல்கத்தா திரும்பியவுடன் 1921 -ல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுவதன் மூலம் அரசியலில் பிரவேசம் செய்தார். மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் ஆகியோரின் சுயராஜ்யக் கட்சிக்காக இவர் உழைத்தார். விவசாயிகளின் நலனுக்காகவும் இவர் பாடுபட்டார். நாட்டின் இளைஞர்களின் நலனே இவர் கருத்தாக இருந்தது. இளைஞர்களின் எழுச்சி மிக்க தலைவராக விளங்கினார் சுபாஷ் சந்திர போஸ். இவரது பேச்சுக்களும் செயல்களும் ஆங்கில அரசின் கவனத்தை ஈர்த்தன. இவர் ஏற்படுத்திய இளைஞர் கட்சியின் வளர்ச்சியும் இவர் தனது பத்திரிகையான ' பார்வர்ட்' ல் எழுதிய கட்டுரைகளும் ஆங்கில அரசாங்கத்தின் ஆத்திரத்திற்கு வித்திட்டன. இதைக் காரணம் காட்டி இவரைச் சிறை பிடித்தது ஆங்கில அரசு. அக்காலத்திய அரசியல் கைதிகளுக்குக் கொடுக்கப்படும் கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. அலிபூர் சிறையிலும் பின்னர் பர்மாவில் உள்ள மாண்டலே சிறையிலும் அடைக்கப்பட்டார். இங்குதான் திலகர் பெருமானும் அடைக்கப் பட்டிருந்தார். - இச்சிறை மிகவும் கொடுமை வாய்ந்தது. விஷ ஜந்துக்களும் சுகாதாரமின்மையும் சரியான உணவின்மையும் இவரது உடல்நிலையை மிகவும் மோசமாக்கியது .சிறையில் பல இன்னல்களை அனுபவித்தபின் விடுதலையானார்.இவர் காந்தி இர்வின் ஒப்பந்தத்தையும் ஒத்துழையாமை இயக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. வன்முறைக்கு வன்முறையாலேயே தீர்வு காண விழைந்தார். துப்பாக்கி ஏந்தி போராடித்தான் வெள்ளையரை விரட்ட முடியும் என்பதில் தளரா நம்பிக்கை கொண்டிருந்தார். கல்கத்தா நகரில் இவரது செயல்களைக் கண்காணித்து வந்த வெள்ளையர் அரசு இவரை மீண்டும் கைது செய்தது. இவர் எழுதிய கட்டுரைகளும் நடத்திய ஊர்வலங்களும் அரசுக்கு எதிரானவை என்று காரணம் சொல்லப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து பாரத விடுதலைக்கு படை திரட்ட முற்பட்டார் சுபாஷ். டோக்கியோவில் ராம்பிகாரி கோஷ் உதவியுடன் இந்திய விடுதலை லீக் அமைக்கப்பட்டது. சுபாஷ் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள டோக்கியோ சென்றார். ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிலிருந்து வானொலி மூலம் இந்திய மக்களின் உள்ளங்களில் எல்லாம் சுதந்திரக் கனல் மூளும்படி வீர உரை ஆற்றினார். மக்களைப் படை திரட்டிப் போருக்கு எழுமாறு குரல் எழுப்பினார். இந்தியப் படைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றார். மக்கள் இவர் மீது கொண்ட அன்பும் மதிப்பும் காரணமாக இவரை ' நேதாஜி' என்று அழைத்தனர்.சிங்கப்பூர் வந்தடைந்த நேதாஜி பெரும் அணிவகுப்பினை நடத்தியதோடு பெரும் படையும் திரட்டினார்.1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் இடைக்கால அரசினை அமைத்தார். கொரில்லாப்படை என்று புதிய போர்ப்படையை நிறுவி அதற்கு காந்திஜி, அசாத், நேருஜி என்று பெயரிட்டார். பர்மாவிலிருந்து அஸ்ஸாம் வழியாக இப்படை இந்தியாவுக்குள் நுழைந்தது. ஆங்கிலப்படையை எதிர்த்து பெரும்படை கொண்டு தாக்கியது. உள்ளத்தில் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் ஆங்கில ஆட்சியை எதிர்த்துப் போராடினார் நேதாஜி. பெரும்படை திரட்டி உறுதியுடன் போராடியபோதும் எதிர்பாராவகையில் இவ்வுலக வாழ்வை நீத்தவர் நேதாஜி அவர்கள். பகைவரான ஆங்கிலேயருக்கு எதிராகப் படை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது பாங்காக்கிலிருந்து பார்மோசாவிற்குச் சென்றார். அவர் சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது. இந்தியாவின் வீரத்திலகமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்ற உயர்ந்த மனிதர் இந்திய புரட்சித் தலைவராக விளங்கிய மாபெரும் வீரத்தியாகி தன் இன்னுயிரை இம்மண்ணுக்காக அர்ப்பணித்தார். வீரம் என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். அவர்தம் நினைவு பாரத மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

கூனனை ஏமாற்றிய கதை - தெனாலி ராமன் கதைகள்

ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக இல்லை. இராமனுக்குத் தண்டனையை அளித்து விட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுருவும் மன்னனைத் தூண்டி விட்டார்.

ராஜகுருவை அவமதித்தது மன்னனையே அவமதித்ததாகும். எனவே இக்குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாதுஎன்று சொல்லி ராஜகுருவையே தண்டனையளிக்கும்படி கேட்டுக் கொண்டார் மன்னர் .ராஜகுரு தண்டனையைக் கூறினார்.

" கழுத்து வரை தெனாலிராமனை மண்ணில் புதைத்து விட்டு யானையின் காலால் தலையை இடறச் செய்து கொல்ல வேண்டும்" என்று தண்டனையளித்தார். மன்னரும் " அப்படியே செய்யுங்கள்" என்று ஆணை பிறப்பித்தார். ஆணையை சிரமேற்கொண்ட காவலர்கள் தெனாலிராமனை இழுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். வழியில் இராமன் அவர்களோடு என்னெனவோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். ஆனால் ராஜகுரு காவலர்களை எச்சரித்து தெனாலிராமன் ஏதேனும் பேசித் தப்பிவிடுவான். அதனால் எதுவும் பேசாதீர்கள் என்று கூறியிருந்தார். இந்த எச்சரிக்கை காரணமாக காவலர்கள் எதுவும் பேசாமல் நடந்தனர்.

ஊருக்கு எல்லையில் காடு இருந்தது. அங்கே ஒற்றையடிப்பாதை வழியே தெனாலிராமனை அழைத்துச் சென்றனர். மக்கள் நடமாட்டமில்லாத அமைதியாக இருந்த இடத்தில் நின்றார்கள். அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் தோண்டினார்கள். தெனாலிராமனை அந்தப் பள்ளத்தில் இறக்கி கழுத்தளவு மண்ணால் மூடி விட்டு யானையைக் கொண்டுவர அரண்மனைக்குச் சென்று விட்டார்கள்.

தெனாலிராமன் தப்பிச் செல்ல வழியறியாது திகைத்து மண்ணுக்குள் தவித்துக் கொண்டிருந்தான். சற்று தூரத்தில் ஒற்றையடிப் பாதை வழியாக யாரோ வருவது தெரிந்தது.
"அய்யா!" தெனாலிராமன் பெருங் குரலெடுத்துக் கூவி அழைத்தான். அந்த மனிதன் ராமனின் குரல் கேட்டு மெதுவாக அச்சத்துடன் அருகே வந்தான். அவனைப் பார்த்த ராமன் "பயப்படாதீர்கள். அருகில் வாருங்கள்."என அழைத்தான். வந்தவன் தன் முதுகில் இருந்த துணி மூட்டையைக் கீழே இறக்கி வைத்து விட்டு ராமனின் முகத்தருகே அமர்ந்தான்.
"யாரையா உம்மை மண்ணுக்குள் புதைத்தது?" என்றான்.

இராமன் வந்தவனின் முதுகைப் பார்த்தான். அவன் ஒரு வண்ணான் மூட்டை சுமந்து சுமந்து அவன் முதுகு வளைந்து கூனனாகியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டான். சட்டென சமயோசிதமாய்ப் பேசினான் இராமன்.

"அய்யா! நானும் உம்மைப் போல கூனனாக இருந்தேன். ஒரு பெரியவர் என்னிடம் ஒரு நாள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்திருந்தால் கூன் நிமிர்ந்து விடும் என்று சொன்னார். நான் காலை முதல் மண்ணுக்குள்ளேயே இருக்கிறேன். என்னைத் தூக்கி விடும் என் கூன் நிமிர்ந்து விட்டதா பார்க்க ஆசையாக இருக்கிறது" என்றான்.

கூனனும் இராமனை வெளியே எடுத்தான். இராமன் தன் கூனல் நிமிர்ந்து விட்டதாக மகிழ்ச்சி கொள்வது போல நடித்தான். அதை உண்மையென நம்பிய கூனனாகிய வண்ணான் தன்னையும் மண்ணில் புதைத்து , தன் கூனல் நிமிர வழி செய்யும்படி வேண்டிக் கொண்டான். தெனாலிராமனும் வண்ணானைக் குழிக்குள் இறக்கி கழுத்து வரை மண்ணால் மூடிவிட்டுத் தன் வீடு நோக்கிச் சென்றான்.

யானையுடன் வந்த காவலர்கள் தாங்கள் விட்டுச் சென்ற இடத்தில் இராமனுக்குப் பதிலாக வேறொருவன் இருப்பதைப் பார்த்துத் திகைத்தனர். அந்த வண்ணானை அழைத்துக் கொண்டு மன்னரிடம் சென்று ராமனின் தந்திரத்தைக் கூறினர். ராமனின் திறமையைக் கண்டு அவனை மன்னித்து விடுதலை செய்தார் மன்னர்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை - thenaali raaman kadhai

தெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான்.அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான். ஒருநாள் அரசர் தன் விலை உயர்ந்த குதிரை மேல் ஏறிக் கொண்டு இராமனையும் உடன் வருமாறு அழைத்தார்.

தெனாலிராமனும் தன் குதிரை மீது ஏறிக் கொண்டு மன்னருடன் உலாவப் புறப் பட்டான். அரசரின் குதிரை அழகாக நடை போட இராமனின் குதிரையோ தளர்ந்த நடை போட்டது. கிருஷ்ணதேவராயர் இந்தக் குதிரையைப் பார்த்து கடகடவெனச் சிரித்தார். இராமனையும் கேலி செய்தார். " இராமா! போயும் போயும் இந்த வற்றிப் போன தொத்தல் குதிரைதானா உனக்குக் கிடைத்தது. இதனை வைத்துக் கொண்டு நீ எப்படி சவாரி செய்யப் போகிறாய்? என் குதிரையைப் பார். எப்படி ஓடுகிறது?" இராமனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விட்டது." அரசே! இந்தக் குதிரை பயன்படுவது போல உங்கள் குதிரை கூடப் பயன் படாது." என்று தன் குதிரையைப் பற்றி மிக உயர்வாகப் பேசினான். மன்னருக்குக் கோபம் வந்தது." என்ன இப்படிச் சொல்கிறாய்? இதை உன்னால் நிரூபிக்க முடியுமா?" "


வேண்டுமானால் பாருங்கள். உங்கள் குதிரையால் செய்ய முடியாததை என் குதிரையைச் செய்ய வைக்கிறேன்.""அப்படியா சொல்கிறாய்? நூறு பொன் பந்தயம் கட்டுகிறேன். செய் பார்க்கலாம்."என்று பேசியவாறு மெதுவாக வந்து கொண்டிருந்தனர் இருவரும் . அப்போது குதிரைகள் இரண்டும் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தன. கீழே பார்த்தால் பயங்கர சுழல். ராமன் சட்டென்று குதிரையை விட்டுக் கீழே இறங்கினான். பாலத்தின் ஓரத்திற்குக் குதிரையைக் கொண்டு போனான். அரசர் திகைத்தார். ராமன் தன் குதிரையை "தொபுகடீர்" என்று நீருக்குள் தள்ளி விட்டு விட்டான். அரசர் பதறினார்."இராமா!, என்ன இது, ஏன் இப்படிச் செய்தாய்? "" அரசே! என் குதிரை செய்தது போல உங்கள் குதிரை செய்ய முடியுமா? உங்கள் ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரையால் செய்ய முடியாததை என் குதிரை செய்து விட்டது பாருங்கள்."

ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரை மட்டுமல்ல, அரசரின் நண்பனாகவும் பழகிய அறிவுள்ள குதிரை அது. அதை இழக்க அரசர் விரும்புவாரா? பந்தயத்தில் சொன்னபடி நூறு பொன் நாணயங்களைக் கொடுத்தார் அரசர்."இருந்தாலும் ஒரு உயிரைக் கொல்வது தவறில்லையா இராமா?" என்றார் அரசர் வருத்தத்தோடு. "அரசே!, நோய்வாய்ப்பட்டு வயோதிக நிலையில் இருக்கும் இந்தக் குதிரையை யாரும் இனி வாங்க மாட்டார்கள்.


இது இறந்தால் எனக்கு ஐம்பது நாணயங்கள் நஷ்டம். இப்போது எனக்கு நூறு பொன் கிடைத்து விட்டது. அத்துடன் அந்தக் குதிரையைப் பராமரிக்கும் பராமரிக்கும் செலவும் குறைவு. குதிரைக்கும் துன்பம் நீங்கி விட்டது.எனவேதான் இப்படிச் செய்தேன்.என் குதிரையின் உயிர் நஷ்டம் எனக்கு இரு மடங்கு லாபமாயிற்று. " என்றான். மன்னரும் அதை ஒப்புக்கொண்டு தெனாலிராமனின் சாமர்த்தியத்தைக் கண்டு வியந்தார்.