வியாழன், 31 ஜனவரி, 2019

பாட்டி சொன்ன கதை.10-சிங்கமும் மாடுகளும்.

               ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான்.அவனிடம் நான்கு மாடுகள் இருந்தன.அந்த விவசாயி வேலை ஏதும் இல்லாதபோது மாடுகளை வெளியே மேய்ச்சலுக்கு ஓட்டி விடுவான்.அந்த மாடுகளும் உல்லாசமாக நிலபுலன்களில் மேயும் அவை நமது எஜமான்  சந்தோஷமாக வைத்திருக்கிறார் என்று அவைகள் நான்கும் பேசிக்கொண்டு மிகவும் நட்புடன் வாழ்ந்து வந்தன.
              ஒரு நாள் நான்கு மாடுகளும் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன.அப்போது திடீரென்று ஒரு கர்ஜனை கேட்டது.மாடுகள் திடுக்கிட்டு.திகைத்து நின்றன.என்ன செய்வது என்று தெரியாமல் பயத்துடன் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு நின்றன.
            மாடுகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு புதரிலிருந்து பெரிய சிங்கம் ஒன்று வெளியே வந்தது.மெதுவாக மாடுகளைப்  பார்த்து நடந்து வந்தது சிங்கம்  அருகே வந்தவுடன் மாடுகள் பெரிய கொம்புகளால் மாற்றி மாற்றி சிங்கத்தை முட்டித் தள்ளின.இதை சற்றும் எதிர்பாராத சிங்கம் உடலில் காயத்துடன் ஓடியது மாடுகள் நான்கும் சீரிப் பாய்ந்து வரவே சிங்கம் ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தது  
          மாடுகள் நான்கும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பின.நமக்கென்ன பயம் சிங்கம்தான் நம்மைப் பார்த்து பயந்து ஓடிவிட்டதே இனி அது நம்மிடம் வராது. என்று பேசிக்கொண்டன.
சிங்கம் உடலில் கொம்பு முட்டிய காயத்துடன் களைப்புடன் குகை வாயிலில்  படுத்திருந்தது.அப்போது அங்கே நரி வரவே சிங்கம் அதை அழைத்தது.
நரி பயத்துடன் சிங்கத்தின் முன்னே சென்று நின்றது.அதன் உடலில் காயத்தைப் பார்த்து மிகவும் ஆச்சரிய பட்டது.சிங்கத்திற்கே  இந்த கதியா என்றும் நரி யோசித்தது.
அப்போதுதான் சிங்கம் நடந்தைச் சொல்லி எப்படியாவது அந்த மாடுகளை என் பற்களால் கடித்துக் குதறவேண்டும் என்னையே எல்லாமாகசேர்ந்து கொண்டு காயப்  படுத்திவிட்டன என்று கோபத்துடன் கர்ஜித்தது.
யோசித்த நரி தனக்கும் அந்த மாடுகளைத் தின்ன நல்ல சந்தர்ப்பம் என்று சந்தோஷமாக நினைத்ததுசிங்கத்திடம்,".நான் சொல்லும்போது நீங்கள் வந்து மாடுகளைக் கொல்லலாம்"
 என்று சொல்லிவிட்டு நகர்ந்தது.
    இரண்டு நாட்கள் சென்றன நரி மெதுவாக மாடுகள் மேயும் இடத்திற்கு வந்து அவற்றுடன் நட்புடன் பேசியது.
"நான் இப்போது காய் கனி இலைகளைத்தான் சாப்பிடுகிறேன்.எந்த உயிரையும் சாப்பிடுவதில்லை.உங்களில் ஒருவனாக நட்புடன் இருக்கவே விரும்புகிறேன்"கண்களில் நீருடன் 
நரி பேசியதை மாடுகள் நம்பிவிட்டன.
மேலும் இரண்டு நாட்கள் சென்றன.நரி இரண்டுமாடுகள்   தனியே மேயும்போது மெதுவாக அருகே சென்று "உங்கள்  இருவரையும் 
சுயநலம் மிக்கவர்கள் என்கின்றன. நிறைய புல் இருக்கும் இடத்தை நீங்கள் மட்டும் மேய்வதாகச்  சொல்கின்றன."என்றது.இதைக்  
 கேட்டவை இரண்டும் இனி தனியாகவே மேய்வோம் என்று பேசிக் கொண்டன.   
மேலும் இரண்டு நாட்கள் சென்றன.இதே தந்திரத்தை மற்ற இரு மாடுகளிடம் கையாண்டது நரி .அடுத்தடுத்த நாட்களில் நான்கு மாடுகளும் தனித்தனியே மேயத் தொடங்கின.
இதே நேரம் நரி சிங்கத்திடம் இப்போது  மாடுகளைக கொல்வது எளிது. என்று சொல்லிக் கொண்டிருந்தது.அப்போது அங்கே வந்த ஒரு முயல், நரி சொல்வதைக் கேட்டது.உடனே அந்த முயல் நான்கு கால் பாய்ச்சலில் ஓடி புல்லை  மேயும் வயல் வெளிக்கு வந்தது.காட்டின் எல்லையில் ஒரு மாடும் வயலின் நடுவே ஒரு மாடும் மேய்வதைப் பார்த்து அருகே சென்றது "நீங்கள் நான்கு பெரும் தனித்தனியாகி
மேய்வதால் உங்களைக் கொல்ல சிங்கத்தை அந்த நரி  
அழைத்து வருகிறது.எப்படியாவது தப்பித்துக் கொள்ளுங்கள் "
என்று சொல்லிவிட்டு புதருக்குள் ஓடி மறைந்தது.தனியே மேயும் இரண்டு மாடுகளும் சேர்ந்து வயலுக்குள் ஓடி மற்ற இரு மாடுகளுடன் சேர்ந்து கொண்டன.அவை நான்கும் இப்போது நரியின் தந்திரத்தை ஒன்றோடொன்று பேசிப் புரிந்து கொண்டன.
அந்த நரியோ சிங்கமோ வரட்டும் என்று காத்திருந்தன. 
          சற்று நேரத்த்தில் நரி பின்னால் தொடர்நது வர சிங்கம் கோபமாக உறு மியபடி வீர நடை போட்டு வந்தது.திடீரென்று சிங்கம் எதிர்பார்க்காத படி நான்கு மாடுகளும் ஒன்றாக இணைந்து முட்டித் தள்ளவே  தடுமாறிய சிங்கத்தால் ஒன்றும் செய்ய முடிய வில்லை. விட்டால் போதும் என்று பாய்ந்து காட்டுக்குள் ஓடியே போய்விட்டது. 
        சிங்கமே ஓடுகிறது நம் கதி என்னவாகும் என்று ஒளிந்திருந்த நரியும் ஓடி ஒளிந்தது.
"நாம் நால்வரும் இனி எக்காரணத்தைக் கொண்டும் பிரியக்  கூடாது. ஒன்றாக இருந்ததால்  தான் உயிர்பிழைத்தோம் இனி ஒற்றுமையாக இருப்போம் என்று பேசிக்கொண்டே மாலையாகிவிட்டதால் வீட்டுக்குப் புறப்பட்டன. "
"ஆமாம் நரியைப் போல யாரேனும் இடையில் வந்து  நண்பர்களை பற்றி என்ன சொன்னாலும் நம்பக கூடாது."
ஆமாம் ஆமாம் என்பது போல கழுத்துமணி அசைய நான்கு மாடுகளும் வீடு வந்து சேர்ந்தன .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com