வெள்ளி, 14 மார்ச், 2014

118.ஸ்ரீ சேனா நாவிதர்.

ஸ்ரீ சேனா நாவிதர்.
 
         இறை பக்தி செய்வதற்கு குலம் ஒரு தடையல்ல என்பதற்கு சேனா என்பவரது வாழ்க்கையே ஒரு எடுத்துக் காட்டு. தாழ்ந்த குலத்தில் பிறந்தவராக இருந்தபோதும் பாண்டுரங்கன் மீது கொண்ட மிகுந்த அன்பினால் உயர்ந்த நிலையை அடைந்த சேனாவின்  வரலாறு நமக்கெல்லாம் ஒரு பாடமாகவே அமைந்துள்ளது.
             வடநாட்டில் அவந்தி என்று ஒரு நகரம் இருந்தது.அந்த நகரத்தில் சேனா என்ற பெயருடைய நாவிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.இவர் தெய்வ பக்தியும் ஒழுக்கமும் நிறைந்தவர். குலத்தொழிலை நேர்மையாகச் செய்து வந்ததால் அரண்மனையில் பணிபுரியும் வாய்ப்பினைப்  பெற்றார்.
            ஒரு நாள் அதிகாலை நேரம் காலைக்கடன் முடித்த சேனா இறைவழிபாட்டில் தன்னை மறந்து லயித்திருந்தார்.தியானத்திலிருந்த சேனா இவ்வுலகையே மறந்து பாண்டுரங்கனோடு  இணைந்திருந்தார். அதேசமயம் அரண்மனையிலிருந்து  அவசரமாய் மன்னர் அழைப்பதாக காவலர் வந்து அழைத்தனர்.சேனாவை  எழுப்புவது கடினம் என அறிந்திருந்த அவர் மனைவி அவர் வீட்டிலில்லை வெளியே சென்றுள்ளார் எனத் தெரிவித்தாள்.
              ஆனால் அவர்மீது பொறாமை கொண்ட சிலர் அவன் வேண்டுமென்றே மன்னரை அலட்சியப் படுத்துகிறான். வீட்டில் இருந்துகொண்டே இல்லையென்று பொய் சொல்கிறான் என்று சொல்லவே மன்னர் கடுங்கோபம் கொண்டார்.
"அவன் வீட்டிலிருந்தால் அவன் கைகாலைக் கட்டிக் கடலிலே போடுங்கள்"
என்று உத்தரவிட்டான். அதே சமயம் சேனா தன்  கையில் அடைப்பையோடு வந்து நின்றான். அவனது பணிவையும் அமைதியான முகத்தையும் பார்த்த மன்னர் கோபம் குறைந்து தனக்கு முடிதிருத்தம்   செய்யுமாறு கட்டளையிட்டார்.
                 சேனாவும் அவர் முன் பணிவுடன் அமர்ந்து தன முன் வைக்கப்பட்ட தங்கக் கிண்ணத்திலிருந்த தைலத்தைத் தொட்டு மன்னரின் தலையில் தடவினான்.சேனாவின் கை தன்தலையில் பட்ட மாத்திரத்தில் ஏதோ சுகம் தன்னை மறந்த சுகானுபவம் ஏற்பட்டது மன்னனுக்கு.
 சேனாவின் முன்னே குனிந்து அமர்ந்திருந்த மன்னன் தன்  முன் வைக்கப் பட்டிருந்த பொற்கிண்ணத்தினுள் பார்த்தான். 
என்னே அதிசயம். ஆச்சரிய ஆனந்தம் உள்ளமெங்கும் பரவியது மன்னனுக்கு. பேச நா  எழவில்லை. தன்னை மறந்தான் தன்னிலையும் மறந்தான்.
கிண்ணத்திலிருந்த தைலத்தில்  அந்த பாண்டுரங்கன் திவ்யமங்கள ஸ்வரூபனாக சர்வாபரண  பூஷிதனாக  தரிசனம் தந்தான். தன்னிலை மறந்த 
மன்னன் மயக்கத்துடனேயே எழுந்து கைநிறைய பொற்காசுகளை அள்ளி சேனாவின் கையில் கொடுத்துவிட்டு உள்ளே சென்றான்.
"இங்கேயே இரு இதோ வருகிறேன் "என்று கூறிச் சென்ற மன்னன்ஸ்நானம் செய்தபின்  வந்து பார்த்தபோது அங்கே சேனாவைக் காணவில்லை.ஆனால்  மீண்டும் சேனாவைப் பார்க்கவேண்டும் தைலத்தில் பார்த்த உருவத்தைக் காணவேண்டும் என்னும் ஆவல் அதிகரித்தது.
சேவகரை அழைத்து "சேனாவை அழைத்து வாருங்கள்."என்று கட்டளையிட்டான்.என்றுமில்லாமல் இன்று ஒரு நாவிதனுக்காக மன்னன் தவிப்பது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. 
       போலிச் சேனா நாவிதராக வந்த பாண்டுரங்கன் பொற்காசுகளை சேனாவின் இல்லத்தில் போட்டுவிட்டு மறைந்தான்.               
மூன்றாம் முறையாக சேவகர் தன்னைத் தேடிவந்ததை அறிந்து சேனா மிகவும் அச்சத்துடன் தன அடைப்பையை எடுத்துக் கொண்டு அரண்மனையை அடைந்தான்.
அவரைக் கண்டவுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த மன்னன் ஓடிவந்து  
அவன் திருவடிகளில் விழுந்தான்."மகாப்பிரபுவே தங்களைக் கேவலம் நாவிதராக மதித்து  அபசாரம் செய்து விட்டேன்.தயவு செய்து இன்று காலை பொற்கிண்ணத்தில் எனக்கு  அளித்த காட்சியை மீண்டும் காட்டி அருள் செய்யுங்கள்."என்று வேண்டி நின்றான்.
விஷயம் என்னவென்று அறியாத சேனா தவித்தான். பின்னர் மன்னன் காலையில் நிகழ்ந்தவற்றைக் கூறவே சேனாவுக்கு விஷயம் விளங்கிவிட்டது.
துக்கத்தால் அவர் உள்ளம் துடித்தது."என்மேலுள்ள அன்பினால் நீயே அடைப்பத்தைத் தூக்கிவந்து முடிதிருத்தும் இழிதொழிலைச் செய்தாயா?பாண்டுரங்கா ,"எனக்கூறி மூர்ச்சித்து விழுந்தான்.அவனது புலம்பலைக் கேட்டு காலையில் வந்தவன் பாண்டுரங்கனே என்று அறிந்து மன்னன் புளகாங்கிதமடைந்தான்.
 சேனாவின் மூர்ச்சையைத் தெளிவித்து அவனை அமரவைத்து அவனிடம்,
"சுவாமி,தங்களின் கிருபா கடாக்ஷத்தினால்தான் பகவானுடைய திவ்யதரிசனம் இந்த எளியேனுக்குக் கிடைத்தது.அவர் திருக்கரங்களால் தீண்டப் பெரும் பாக்யமும் கிடைத்தது.இனி தாங்களே என் குரு."
என்று சேனாவை வணங்கினான் மன்னன்.
அதுவரை அரசனையும் சேனாவையும் ஏளனமாகப் பார்த்திருந்த மக்களும் மந்திரி பிரதானிகளும் சேனாவின் பெருமையை உணர்ந்தனர்.
மன்னரோடு மற்றையோரும்சேனாவின் சீடர்களாயினர்.அனைவரும்  இறைப்பணி செய்து இறைபக்தியில் மூழ்கினர்.
எளியேனாயினும் அன்புக்குக் கட்டுப் பட்டு இறைவனே இறங்கிவருமளவு சேனா இறைவனது பக்தியில் மூழ்கியுள்ளதை அறியும்போது இறைவனுக்கு அன்புதான் முக்கியமே தவிர உயர்ந்தவன்  தாழ்ந்தவன்  என்பது பக்திக்கு  இல்லை என்பதைப் புரிந்து கொள்வோம்.
இறைவன் என்ற சொல்லுக்கு  அன்பு பக்தி என்பதுதான் பொருள்.