திங்கள், 27 ஜூலை, 2015

குறள்  வழிக் கதைகள்--2 தக்கதும் தகாததும்

                    கோபாலன் ஒரு விவசாயி. அவருக்குவிஜயன், ரகு என  இரண்டு மகன்கள் இருந்தனர்.இருவரும் பள்ளியில் படித்துக் கொண்டே தந்தைக்கும் உதவியாக இருந்தனர்.அவர்களின் தந்தையாரும் தன பிள்ளைகளுக்கு பல நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொண்டே வேலையில் ஈடுபடுவார். பிள்ளைகள் இரண்டு பெரும் அதைக்  கேட்டுக் கொண்டே அப்பா சொல்லும் வேலையைச் செய்வார்கள்.

                  அவர்கள் வேலை முடித்து வீடு திரும்பும் வழியில் ஒரு சிறு குளம் இருந்தது. அந்தக் குளத்தில் கோபாலன் குளித்து விட்டு வீடு திரும்புவார்.ஒருநாள்  கோபாலனும் அவரின் மகன்கள் விஜயனும் ரகுவும் அப்பாவுடன் குளிப்பதாகச் சொல்லி உடன் குளிக்கக் குளத்தில் இறங்கினர்.வேகமாக உள்ளே இறங்கியவர்கள் கோபாலனின் அங்கே போகாதீர்கள் இப்படி வாருங்கள் என்ற குரலைக் கவனிக்கவே இல்லை.நல்ல வேளையாக  ரகு நீரில் இறங்கவில்லை ஆனால் விஜய் அந்தக் குளத்தில் ஆழமான இடத்தில் மூழ்கினான்.கோபாலன் வேகமாக அவன் அருகே சென்று அவனைக் காப்பாற்றி கரைக்கு இழுத்து வந்தார்.
                 
                   பயத்தில் நடுங்கிக்கொண்டே அழுது கொண்டு நின்றான் விஜயன். நீரில் இறங்காமல் கரையில் நின்றிருந்த ரகு கைகொட்டிச் சிரித்தான்.பயத்தை விட அவமானப் பட்டதால் மிக்க கோபத்தை அடைந்தான் விஜய். "சும்மா இருடா ரகு அவனே பயந்து போயிருக்கிறான் நீயேன் கிண்டலடிக்கிறாய்."  என்று அதட்டினார் கோபாலன்.
விஜயின் உடம்பைத் துடைத்துவிட்ட தந்தை அவனை சமாதானப் படுத்தியவாறே வீட்டுக்கு வந்தார்.
சாப்பிட உட்கார்ந்தனர்  மூவரும் அப்போது கோபாலன் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறினார்.
"இதோ பாருங்கடா. நீச்சல் கத்துக்கறது ஒரு பாதுகாப்புக் கலை. நல்ல தேகப் பயிற்சி கூட.அதனால நாளையிலேருந்து ரெண்டு பெரும் நீச்சல் கத்துக்க ஆரம்பிக்கணும்.என்ன ரகு, கிண்டல் பண்ணாம நல்ல விஷயம் கத்துக்கப் பாரு." விஜய் 
சற்றே அச்சப்பட்டாலும் ரகு செய்த கேலியை மனதில் கொண்டு எப்படியாவது அவன் முன் நன்கு நீந்திக் காட்டவேண்டும் என முடிவு செய்து அப்பாவிடம் பலமாகத் தலையை ஆட்டினான்.கோபாலும் "நாளைக் காலையில் வயலுக்குப் போயிட்டு வரும்போதே நீச்சல் ஆரம்பிக்கலாம்."என்று கூறிவிட்டு கைகழுவ எழுந்தார்.

                 மறுநாள் காலையில் வழக்கம்போல கோபாலன் வயலுக்குக் கிளம்பினார். அதற்குமுன் தன மகன்களை அழைத்தார்."டே பசங்களா, பள்ளிக்கூடம் விட்டு சீக்கிரமா வயலுக்கு வந்திடுங்க.இன்னிக்கே நீச்சல் பழகத் தொடங்கலாம்." மகிழச்சியுடன்  விஜய் சரியப்பா எனக் குரல் கொடுத்தான். ரகுவோ முண முண த்தபடி பையைத் தோளில் மாட்டிக்  கொண்டு பள்ளிக்கு ஓடினான். 
 மாலை பள்ளி விட்டவுடன் தன தம்பி ரகுவுக்காக வெகுநேரம் காத்திருந்தான். ஆனால் அவனைக் காணாததால் விஜய் மட்டும் வயலுக்குச் சென்றான். அவன் மட்டும் அப்பாவிடம் சற்றுநேரம் நீச்சல் பழகிவிட்டு வீடு திரும்பினர். 

வீட்டில் அமர்ந்து வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்த ரகு சிரித்தபடி தன அண்ணனைப் பார்த்தாலும் அப்பாவைப் பார்த்து அச்சப் படவே செய்தான். ஆனால் கோபால் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை.

              இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன.விஜய் நன்றாக நீச்சல் பழகிவிட்டான். தினமும் குளத்தில் ஒருமணி நேரம் நீந்தி  நன்றாகப் பயிற்சி எடுத்தான். தினமும் அவனை வேடிக்கை பார்த்தான் ரகு.ஆனால் அருகே இருந்த மரத்தில் ஏறி ஏறி குதித்து விளையாடி மகிழ்ந்தான்.மரத்திலே ஏறாதேடா என்று எச்சரித்த "அப்பாஅப்பா,  ஒரே ஒரு தடவை ஏறிடுறேன் அப்பா"என்று சொன்னவாறே இரண்டு மூன்று முறை ஏறிக் குதித்தான்   
             
"டேய் செய்யினு சொன்னதை செய்யாதே. செய்யாதேன்னு சொல்றதைச்  செய்.உனக்கு எப்போ புத்தி வரப்போகுதோ."
 என்றவரின் கையைப் பிடித்துச் சிரித்து மயக்கிவிடுவான்.
மழைக்காலம் தொடங்கியது ஏறி குளம் எல்லாம் நீர் நிறைந்திருந்தது. வயல் வெளியெல்லாம் பசுமைப் போர்வை போர்த்தி ரம்யமாகக் காட்சியளித்தது.

         அன்று கோபாலன் வயலில் விதைக்க விதை நெல் வாங்க அருகே இருந்த நகரத்துக்குச் சென்று விட்டார்.அவர் வரும் வரை காத்திருக்க மனமில்லை விஜய் ரகுவுக்கு. அதனால் அம்மாவிடம் விளையாடப்போவதாகச்சொல்லி விட்டு வழக்கம்போல குளக்கரைக்கு வந்தனர். ரகு கரையில் இருந்த மரத்தின் மீது சர சரவென ஏறிக் கீழே குதித்து மகிழ்ந்தான்.
விஜய் போல இன்னும் சில சிறுவர்கள் குளத்தில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.அவர்கள் முன் தன்  வீர சாகசத்தைக் காட்ட எண்ணிய ரகு மரத்தின் உயரத்துக்கு ஏறினான்.
"டே, ரகு, வேணாண்டா, போகாதே.எறங்கிடு." என்று விஜய் கத்தி அழைத்ததைக் காதிக் போட்டுக் கொள்ளாமல் சிரித்தபடியே மேலே ஏறினான் ரகு.
மழையில் நனைந்த வலுவிழந்திருந்த கிளை மளமளவென ஒடிந்து சரிந்தது.உச்சியில் அமர்ந்திருந்த ரகுவும் ஐயோ அம்மா என்று அலறியபடியே நீரின் ஆழமான இடத்தில் வீழ்ந்தான்.விஜய் பதறினான். அவன் விழுந்த இடமோ மிக ஆழமான பகுதி.
அங்கு சென்று அவனை மீட்க சிறுவர்கள் யாரும் துணியவில்லை.அத்துடன் ரகுவும் கண்ணுக்கே தெரியவில்லை.
ஆனால் விஜய் சற்றும் யோசிக்கவில்லை.ஒடிந்து விழுந்த மரக்கிளையை நீருக்குள் தள்ளி அதைப் பிடித்துக் கொண்டே நீரின் ஆழமான பகுதிக்குச் சென்றான்.காலால் நீந்திக்கொண்டு ஒரு கையில் மரக்கிளையைப் பற்றிக்கொண்டு துழாவினான்.கையைக் காலை அடித்துக் கொண்டிருந்த ரகுவை அவன் சட்டையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மரக் கிளையின் உதவியுடன் கரைக்கு வந்து சேர்ந்தான்.
          சிறுவர்கள் அனைவரும் விஜயின் சமயோசித புத்தியையும் வீரத்தையும் புகழ்ந்துகொண்டே வீடு திரும்பினர்.ஈரம் சொட்ட வீடு திரும்பிய இருவரையும் பார்த்த கோபாலனும் அவர்மனைவியும் பதறினர்.செய்தியறிந்து அச்சத்துடன் நடுங்கிக் கொண்டிருந்த ரகுவை அணைத்துக் கொண்டார். எங்கே அப்பா திட்டுவாரோ அடிப்பாரோ என்று எண்ணிய ரகு அவரது அன்பைக் கண்டு கோவென அழுது விட்டான்.

       அவனது உடலைத் துவட்டி சூடான தேநீர் குடித்தபின் நிதானமாகப் பேசினார் கோபாலன்.
"ரகு நேத்து நீ ஒரு திருக்குறள் படிச்சியே நினைவிருக்கா? என்ன என்பது போல அவரைப் பார்த்தான் ரகு.
 "ஒ..நான் மனப்பாடமே செய்துட்டேன் அப்பா "என்று முந்திக் கொண்டான் விஜய்.
"எங்கே, சொல்லு பார்ப்போம்"

                "செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க 
                  செய்யாமையானும் கெடும்" 
சரிதானே அப்பா.

ரொம்பசரி. இப்போ நீ செய்யவேண்டிய காரியத்தை அதாவது நீச்சல் பயிற்சி  செய்யாததனாலே தண்ணீரில் தவித்தாய். இல்லையா.?"
ஆமாம் என்பதைப்போல தலையசைத்தான் ரகு.அதோட செய்யக்கூடாததைச் செய்ததனாலும் மரத்திலிருந்து விழுந்தாய்.
இல்லையா?அதைத்தான் இந்தக் குறள்   நமக்குச் சொல்லுது 

செய்யக்கூடாததைச் செய்தாலும்    செய்யவேண்டியதைச்  செய்யாமல் போனாலும் வாழ்க்கையில் நமக்குத் துன்பம்தான் வரும் 
அப்படிங்கறதைத்தான் இந்தக் குறள்  சொல்லுது.
அதோட உன் அண்ணன் நீச்சல் கத்துக்கிட்டதாலேதான் உன்னைக் காப்பாத்த முடிஞ்சுது. இல்லையா.அதாலே நல்ல விஷயத்தை நாம செய்யப் பழகணும்". என்ற அப்பாவின் அறிவுரையை இருவரும் மனதில் பதியவைத்துக் கொண்டதற்கு அடையாளமாக அப்பாவைப் பார்த்துப் புன்னகைத்தனர். ரகு நன்றியுடன் தன அண்ணனைப் பார்த்து அவன் அருகேநெருங்கி  நின்று கொண்டான் அவனைப் பாசத்துடன்அணை த்துக் கொண்டான் அந்த அருமை அண்ணன்.


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com