புதன், 27 ஏப்ரல், 2016

குறள் வழிக் கதைகள் ; தெய்வமே துணை

                 (தொடர்ச்சி)
சில நாட்கள் கழிந்தன. ஆற்றங்கரையில் குளித்துவிட்டு துணியைப் பிழிந்து உலர்த்திக் கொண்டிருந்தார் மணிவண்ணர்  அப்போது அங்கே வந்த கோவிந்தனுக்கு அவரைப் பார்த்ததும் அவரிடம் ஏதேனும் வம்பிழுக்க வேண்டும் என்று தோன்றியது.மெதுவே அவர் அருகே வந்து ஒரு கல்லின் மீது அமர்ந்து கொண்டான்.அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தவாறே தன வேலையில் கவனமாக இருந்தார் மணிவண்ணர்.
"அய்யா, எப்போதும் கடவுளை நினைத்துக் கொண்டே இருக்கிறீர்களே உங்களுக்கு ஏதேனும் துன்பம் வந்தால் அவர் வந்து காப்பாற்றுவாரா?
ஒரு மனிதன் என்னைப்போல் ஒருவன்தானே காப்பாற்ற வருவான்? அப்படியிருக்க நீங்கள் எப்போதும் இறைவன் என்றே சொல்கிறீர்களே?"

அவனை அன்போடு பார்த்த மணிவண்ணர் "கோவிந்தா, தெய்வம் மனுஷ்ய ரூபேண என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.அதனால் எந்த ரூபத்திலும் இறைவன் உதவிக்கு வருவான்.அவனை நம்பு.அவன் ஒருபோதும் கைவிடமாட்டான்."என்றார் கனிவோடு.

அப்போது திடீரென அவரது பிழிந்து வைத்த வேஷ்டியை நீருக்குள் தள்ளிவிட்டான் கோவிந்தன்.ஆற்றுவெள்ளத்தில் அது அடித்துச் செல்வதைப் பார்த்தபோது முருகா என்றவாறே அமைதியாக கரையேறினார்.
அப்போது ,"அய்யா தங்கள் வேட்டியை வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டதே. நான் போய் மூழ்கி எடுத்துவரவா?"என்றான் பொய்யான கனிவோடு.
"வேண்டாம் அப்பா.எனக்கென்று விதித்திருந்தால் என் கைக்கு வரும் இல்லையேல் யாரோ ஒருவருக்குப் பயன்படும்."என்றவாறே இடையில் உடுத்திய துண்டுடன் நடக்கத் தொடங்கினார் மணிவண்ணர்

 அவரை அரை ஆடையுடன் தெருவில் நடக்க விட்ட மகிழ்ச்சியுடன் அவருடன் நடந்தான் கோவிந்தன்.இன்னும் நண்பர்களோ மற்ற ஊரார் யாரும் வரக் காணோமே இவரது இந்த நிலையைக் காண என்று எண்ணிக் கொண்டே வந்தான்
"ஐயா "
பின்னால் கேட்ட குரலால் திரும்பிப் பார்த்தனர் இருவரும்.
கையில் பாதி உலர்ந்த வேட்டியுடன் கந்தன் நின்றிருந்தான்.கோவிந்தன் வீட்டில் மாடு மேய்க்கும் சிறுவன் `அவன்.மணிவண்ண ரிடம் மிகுந்த மரியாதை வைத்திருப்பவன்.

"உங்க வேட்டி தண்ணீல மெதந்து வந்துதுங்க.அதை எடுத்து பிழிஞ்சி உலர்த்திகிட்டே வந்தேனுங்க. இந்தாங்கய்யா."என்றவாறே நீட்டினான்.அதை எடுத்து உடுத்துக் கொண்ட மணிவண்ணர் மகிழ்ச்சியுடன்
"கந்தா, என் மானம் காக்க அந்தக் கந்தனே வந்ததுபோல் வந்தாயப்பா.அப்புறமா வீட்டுக்கு வந்து புது வேட்டி ஒன்று பெற்றுக் கொள்.உனக்கு ரொம்ப நன்றி கந்தா."இவரை அரை ஆடையில் நடக்க வைத்து அவமானப் படுத்த எண்ணினால் முடியாமல் இந்த கந்தன் வந்து கெடுத்து விட்டானே அத்தோடு
ஒரு ஏழைச் சிறுவனிடமும் இவர் இந்த பிரியமும் நன்றியும் பாராட்டுகிறாரே.என்ன வேஷம்?

என்று எண்ணிக் கொண்டே அங்கிருந்து வேகமாக அகன்றான் கோவிந்தன்.
தோல்வியடைந்து விட்ட அவமானத்தில் அவன் முகம் சிவக்க நடந்தான்.

சிறிது நாட்கள் கழிந்தன.அறுவடை முடிந்து எல்லோரும் சற்று ஓய்வாக ஊர்க்கதை பேசுவதும் கோயில் திருவிழா எடுப்பது பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் கோவிந்தனோ இந்த ஊர் மக்களுக்கு இந்த மணிவண்ணன் ஒரு வேஷதாரி என்று காட்ட என்ன வழி என்றே தன நண்பர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருந்தான்.அவரது தெய்வபக்தியை அறிந்திருந்த அந்த ஊர்மக்கள் அவருக்கு தனி மதிப்புக் கொடுத்துப் பேசுவதும் அவர் வார்த்தைக்கு எதிர்பேசாமல் ஏற்றுக் கொள்வதும் பொறாமை உள்ளம் கொண்ட கோவிந்தனுக்குப் பொறுக்கவில்லை.எப்படியாவது இவரும் மிகச் சாதாரணமானவரே. பெரிய பக்திமான் ஒன்றும் அல்ல என காட்டிவிடத் துடித்துக் கொண்டிருந்தான்.
அவ்வூரில்  திருவிழாவுக்காக ஊர்த்தலைவர் பணம் வசூல் செய்திருந்தார். அதைப் பொதுவான மனிதரான மணிவண்ணனிடம் கொடுத்து வைப்பது என்று எல்லோருமாகச் சேர்ந்து முடிவு செய்தனர்.அதன்படி ஒரு பெரிய பெட்டியில் அந்தப் பணத்தைப் போட்டு மணிவண்ணனிடம் கொடுத்தனர். ஒவ்வொரு ஆண்டும் இப்படியே நடப்பதால் மணிவண்ணனும் மறுப்புக் கூறாமல் பெற்றுக் கொண்டார்.கோவிந்தனின் உள்ளத்திலும் ஒரு திட்டம் உருவாயிற்று.
ஒரு வாரம் சென்றது.மீண்டும் ஊர்ப்பெரியவர்கள் ஒன்று கூடி யார் யாருக்கு என்ன பொறுப்பு என்ன செலவு செய்யவேண்டும் என்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.கோவிந்தன் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் நினைத்தது போலவே மணிவண்ணனிடம் பணப்பெட்டியைக் கொண்டுவருமாறு கூறினார் தலைவர்.வீடு சென்று திரும்பியவரைப் பார்த்துத் திடுக்கிட்டான் கோவிந்தன்.ஆம். அவர் கையில் பணப்பெட்டி இருந்தது.
கோவிந்தன் தான் இரு தினங்களுக்கு முன் திருடிக் கொண்டு வந்து மறைத்து வைத்த பணம் எப்படி மீண்டும் இவரிடம் வந்திருக்கும் எனத் திகைத்து நின்றிருந்தான்.இவர் ஒரு திருடன் என்று ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட எண்ணியிருந்த கோவிந்தன் இப்போது வாயடைத்து நின்றிருந்தான்.
அவனால் மர்மத்தைத் தாங்க முடியவில்லை. மெதுவாக தன வீட்டுக்குச் சென்றான் தான் மறைத்து வைத்திருந்த இடத்தில் மணிவண்ணரிடம் ஊரார் கொடுத்த பணம் அப்படியே இருந்தது.
பின் எப்படி?மீண்டும் கூட்டத்தோடு வந்து நின்று கொண்டான் கோவிந்தன்.பணப்பட்டுவாடா முடிந்ததும் அவரவர் தம் பணியைச் செய்யப் புறப்பட்டனர்.கூட்டம் கலைந்தது.
அன்று இரவு .கோவிந்தன் தூங்காமல் புரண்டு கொண்டிருந்தான்.திடீரென்று அவன் வீட்டு வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்தது. ஓடிவந்த கோவிந்தன் போர் பாதி எரிந்துவிட்டதைக் கண்டு அலறினான்.சில இளைஞர்கள் தீயை அணைக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தனர்.அவர்களில் மணிவண்ண ரும்  ஒருவர்.ஆனால் அந்த எரிந்து கொண்டிருக்கும் போருக்குள் எதையோ எடுக்கப் போனான் கோவிந்தன்.அங்குதான்  மணிவண்ணனின் பணத்தை ஒளித்து வைத்திருந்தான் கோவிந்தன்.ஆனால் அந்தப் பணம் எரிந்து சாம்பலாகிவிட்டது.மனம் உடைந்த கோவிந்தன் மணிவண்ணனின் அருகே தேம்பியவாறு நின்றான்.
அவனை அணைத்தவாறே உள்ளே அழைத்து வந்து தண்ணீர் குடிக்கக் கொடுத்து சமாதானப் படுத்தினார்.
"கோவிந்தா, வருந்தாதே.தெய்வத்தின் துணை இருந்தால் உன் பணம் மீண்டும் கிடைக்கும் நம்பு.'

கோவிந்தனுக்கோ திருடனுக்குத் தேள் கொட்டியது போல இருந்தது ஒளித்து வைத்து இப்போது எரிந்து போனது ஊரார் மணிவண்ணனிடம் கொடுத்து வைத்திருந்த பணம் அல்லவா?இதை எப்படி வெளியே சொல்வான்?
முருகா, எனக்கேன் இந்த சோதனை. உன் பக்தனை சோதித்ததற்கு எனக்குத் தண்டனையா முருகா. மணிவண்ணன் மிகவும் நல்லவர் பக்திமான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இந்தப் புதிரை விடுவித்து என் மனம் அமைதியுறச் செய். என மனமுருக கண்களை மூடி வேண்டிக்கொண்டான்.புன்னகையுடன் மணிவண்ணன் கூறினார்.
"கோவிந்தா, என் கையில் பணப்பெட்டியைப் பார்த்தவுடன் நீ திகைத்து உன் வீட்டுக்கு வந்ததைப் பார்த்தேன்.என் கையில் நான் வைத்திருந்தது ஊராரின் பணமல்ல என் சொந்தப் பணம்.அந்த முருகன் எனக்குப் படியளந்த பணம் அதை அவனுக்கே செலவு செய்வதில் எனக்கு மிக மகிழ்ச்சி.அதனால்தான் பணம் திருடு போனதையோ உன்மீதுதான் சந்தேகம் என்பதையோ நான் யாரிடமும் சொல்லவில்லை.இப்போது பார். அந்தப் பணம் அந்தக் கந்தனின் பணமாக இருந்தால் அது எப்படியும் உன்னை வந்து சேரும்.அப்போது அதை கோயிலை ப் புதுப்பிக்கப் பயன்படுத்த வேண்டும்.மக்களும் உன்னைப் பாராட்டுவார்கள். என்றபோது அங்கே வந்தான் கந்தன் "ஐயா,என்னை மன்னிச்சுடுங்க. இவரு வைக்கோல் போரிலேயிருந்து பொட்டிய எடுத்துப் பார்க்கறத நான் பார்த்தேனுங்க. அவரு போன பெறகு அந்தப்
பொ ட்டியில இருந்த பணத்த எடுத்துக்கிட்டு வைக்கோல் போருக்குத் தீ வச்சிட்டனுங்க.ஐயா, பணத்தோட  வீட்டுக்குப் போனவுடனே என் வீடு இடிஞ்சு விழுந்துடுச்சுங்கோ.நான் பாவி. ஊர்பணம் அதுவும் அந்த முருகனோட பணம் அதை எடுத்ததுக்கு நல்ல பலன அந்த முருகன் குடுத்திட்டாங்க."என்று அழுதபடியே மடியிலிருந்த பணத்தை மணிவண்ணனின் முன் கொட்டினான் கந்தன்.

உணர்ச்சி வசப்பட்ட கோவிந்தன் மணிவண்ணனின் காலில்விழுந்தான். ஐயா, நீங்க பக்திமான் ஒழுக்கசீலர். உங்க நல்ல மனசு தெரியாம நான் தவறா இத்தனை நாள் நடந்திட்டேன் இந்தப் பாவியையும் மன்னிச்ச நீங்க ஒரு மகான்."
"அப்படியெல்லாம் சொல்லாதே. உன் மனம் திருந்திட்டதே எனக்குப் பெரிய மகிழ்ச்சி. தெய்வம் உண்டு. அதை நம்பினால் எப்போதும் கைவிடாது அப்படீங்கற  உண்மையை புரிஞ்சிகிட்டதே போதும்.நிம்மதியாப் போய்த் தூங்கு. நாளைக்கு ஊர்ப் பெரியவங்க முன்னால கோவிலைப் புதுப்பிக்கறதா சொல்லி இந்தப் பணத்தக் குடு. இந்த சங்கதி யாருக்கும் தெரியவேண்டாம். கந்தா, உனக்கும் புது வீடு கட்டித் தரச் சொல்றேன் இந்த சங்கதி யாருக்கும் தெரியக்கூடாது "என்றபோது மகிழ்ச்சியுடன் கண்களைத் துடைத்துக் கொண்டு சிரித்தான் கந்தன்.இதுநாள் வரை தீமையே செய்துவந்த தனக்கு நற்பெயரையும் புகழையும் ஈட்டித்தர வழிசெய்த அந்தப் பெரியவர் மணிவண்ணனின் குணத்தை வியந்ததோடு இறைவன் எப்படியெல்லாம் திருவிளையாடல் நிகழ்த்திவிட்டான் என வியந்தான். எல்லாம் அந்தப் பெரியவரின் இறைநம்பிக்கையே காரணம் .தெய்வம் உண்டென்று தானறிதல் வேண்டும் அப்படீன்னும் தெய்வம் நமக்குத்துணை அப்படீன்னும் பாரதியார் சொல்லியிருக்கிறாரே. அத்துடன் வள்ளுவரின்
"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார் "என்ற
குறளையும் மறந்தோமே.அதன்படியே வாழ்ந்து வரும் பெரியவர் மணிவண்ணன் இனி அவர வழி நடப்பதே என் கடமை. என்று எண்ணியவாறே அமைதியாக உறங்கினான் கோவிந்தன்.
                                        
                                                      ( நிறைவடைந்தது.)