வெள்ளி, 2 ஏப்ரல், 2010

முற்பகல் செய்யின்

முற்பகல் செய்யின்

பல ஆண்டுகளுக்கு முன் பத்ராசலம் என்ற ஊரில் கோபன்னா என்ற ஒரு அதிகாரி இருந்தார். அவர் சிறந்த ராமபக்தராக இருந்தார். அவர் ஹைதராபாத் நவாபான தானேஷா விடம் பணிபுரிந்து வந்தார். நவாப் தானேஷா இவருக்கு பத்ராஜலத்தின் தாசில்தார் பதவி கொடுத்து அனுப்பியிருந்தார். இவரும் வரி வசூலிக்கும் பணியைச் செய்து வந்தார். ஒரு முறை ஆறு லக்ஷம் பொன் வரியாகச் சேர்ந்திருந்தது. மிகவும் சிதிலமடைந்திருந்த அந்த ஊரிலுள்ள ராமர் கோயிலை செப்பனிட்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று விரும்பினார் கோபன்னா. ராமரின் மீது பக்தி அதிகமான காரணத்தால் எல்லாச் செலவையும் நவாபின் வரிப்பணத்தை வைத்தே செய்து முடித்தார். சீதா லக்ஷ்மண ஹனுமத் சமேதரான ஸ்ரீ ராமபிரான் கோவில் அழகுடன் கம்பீரமாகத் திகழ்ந்தது. அத்துடன் அழகிய வைர வைடூர்ய ஆபரணங்கள் கொண்டு சீதா ராமரை அழகு படுத்திமகிழ்ச்சி கொண்டார். அடியார்கள் வருவதும் வழிபடுவதுமாக இருப்பதைக் கண்டு கோபன்னாவின் மனம் அளவற்ற ஆனந்தம் கொண்டது.

கடந்த ஒரு வருடமாக கோபன்னா வரிப்பணம் தராது கோவிலைச் சீரமைத்த செய்தியைக் கேள்விப்பட்டநவாப் தானேஷா மிகுந்த கோபம் கொண்டார். உடனே ராமதாசரை அழைத்து விசாரித்தார். அவர் வரிப்பணத்தை எடுத்துச் செலவு செய்தது உண்மை என்று அறிந்து கொண்டார். அந்தப்பணம் முழுவதையும் கஜானாவில் கட்டும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ராமதாசர் சிறையில் அடைக்கப்பட்டுச் சித்ரவதை செய்யப்பட்டார்.

இந்தத் தண்டனை ஒருமாதம் ஒரு வருடம் அல்ல. பன்னிரண்டு ஆண்டுகள் இப்படிச் சிறையில் துன்பப்பட்டார். முச்சந்தியில் நிறுத்திக் கசையடி கொடுப்பதும் தலையில் பாறாங்கல்லை வைத்துச் சுமக்கவைப்பதும் சுடுமணலில் கை கால்களைக் கட்டி உருட்டுவதுமாக சித்ரவதை தொடர்ந்தது.
மக்கள் ராமனின் பக்தனுக்கா இந்தக் கதி என்று வருந்தினர். கோபன்னாவும் ராமனைப் பலவாறு துதித்து சோர்ந்து போனார்.ராமரை நிந்திக்கத் தொடங்கினார்.
"ஹே ராமா! உன்னை என் தெய்வமாக நினைத்தேனே.எல்லாவற்றையும் உனக்குத் தானே செலவிட்டேன்.கோவிலைக் கட்டினேன். நகைகளும் பொன்னாடைகளும் எவ்வளவு வாங்கினேன்.உன் மாமனா வாங்கினான்?எல்லாம் தானேஷாவின் பணமஅன்றோ? எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு வேடிக்கை பார்க்கிறாயே?இன்னும் இந்த கோபன்னா எத்தனை சித்ரவதைப் படுவான்? இனி தாங்க முடியாதய்யா."

என்று கதறினார் கோபன்னா. ராமரின் மனம் இளகுவதாக இல்லை.சீதையின் கனிந்த முகத்தை எண்ணிப் பார்த்தார். தாயின் கருணை தன்னைக் காக்கும் என்று நம்பினார்.
"அம்மா!சீதம்மா! என் துயரம் போக்க நீயாவது ராமனிடம் சொல்லக்கூடாதா? தாயே, நீ கருணையின் வடிவம். உன் மகனின் துயர் தீர்க்க வழி காட்டம்மா."என்று கதறிய கோபன்னா மயக்கமானார்.
அப்போது வைகுண்டத்தில் சீதாதேவி "சுவாமி, கோபன்னா படும் துயரம் உங்கள் கண்களில் படவில்லையா?"என்று நினைவு படுத்தினாள்.

"சீதே! அவன் முன் பிறவியில் ஒரு கிளியைப் பிடித்துக் கூண்டில் அடைத்துத் துன்புறுத்தினான். பன்னிரண்டு நாட்கள் அடைத்து வைத்ததால் இந்தப் பிறவியில் பன்னிரண்டு ஆண்டுகள் இந்தச் சிறைவாசம். இன்றோடு அவனது தண்டனை முடிகிறது. இன்று இரவே தானேஷாவின் கடனைத் தீர்த்துவிட்டு வருவோம்."

"சுவாமி, ஆயுள் முழுவதும் உங்களையே பூஜித்த கோபன்னாவுக்குக் காட்சி தராமல் தானேஷாவிற்குக் காட்சியளிப்பது ஏன்?"
"அதுவும் முன்வினைப் பயனே. முன் பிறவியில் தானேஷா காசியில் ஒரு அந்தணனாக இருந்தான். இறைவனுக்கு ஆயிரம் குடங்கள் அபிஷேகம் செய்தால் இறைவன் தரிசனம் கிட்டும் என்று தொடங்கினான்.ஆனால் 999 குடங்கள் முடிந்தும் இறைவன் காட்சி தெரியவில்லையே என்று குடத்தைப் போட்டு
உடைத்து விட்டான்.அதன் பயனாகவே அவன் இவ்வாறு பிறக்க நேரிட்டது.அதுவும் அரசனாகப் பிறந்துள்ளான். அவனுக்கு சிவபெருமான் இப்பிறவியில் ராமதரிசனம் பெறுவாய் என்று வரமளித்துள்ளார்.ஆகவே அவனுக்குக் காட்சி தரவேண்டும்."
புன்னகையுடன் கூறிய ராமபிரான் இலக்குவன் பின்தொடர தானேஷாவின் அரண்மனைக்குப் புறப்பட்டார்.

நடுநிசி.தானேஷாவின் அந்தப்புரம். கனவு கண்டு கண் விழித்த தானேஷாவின் முன்னால் பேரழகுடன் சேவகன் வேடத்தில் ராம லக்ஷ்மணர் நின்றனர்.அவர்களின் பேரழகு தானேஷாவின் கண்களைக் கூசச் செய்தது."யார் நீங்கள்?எங்கிருந்து வருகிறீர்கள்?"
"நவாப்ஜி! நாங்கள் பத்ராஜலத்திலிருந்து வருகிறோம். நாங்கள் கோபன்னாவின் பணியாட்கள்.நான் ராம்ஜி இவன் லக்ஷ்மண்ஜி."
"நீங்கள் எத்தனை வருடங்களாக கோபன்னாவிடம் பணி புரிகிறீர்கள்?அவர் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்?"
"நாங்கள் பல தலைமுறைகளாக அவர்களுக்குப் பணிவிடை செய்கிறோம்.கோவில் பிரசாதத்துக்கு ஆசைப் பட்டுத்தான் நாங்கள் பணி செய்கிறோம்."
"சரி,இப்போது இங்கு வந்த காரணம் என்ன?"
"என் கடனைத் தீர்த்து வா என கோபன்னா கூறினார். பணத்தைக் கொண்டு வந்தோம்.என்று கூறி கை யிலிருந்த பையை அவிழ்த்துக் கொட்டினான். தங்க நாணயங்களின் ஒளியினால் அந்த அறையே மின்னியது.
"உமக்குச் சேரவேண்டிய ஆறு லக்ஷம் வராகன் இருக்கிறதா பார்த்து ரசீது கொடுங்கள்."

தானேஷா அந்த அழகு உருவங்களையே பார்த்து பிரமித்து நின்றிருந்தான்.
சீக்கிரம் கொடுங்கள். என்ற ராம்ஜியின் குரல் கேட்டு உடனே ரசீதைக் கொடுத்தான் நவாப். மறுகணம் அந்த சேவகர் இருவரும் மறைந்தனர்.
அடுத்த கணம் இருண்ட சிறை வாயிலில் நின்றனர்.கோபன்னாவின் அருகே அந்த ரசீதை வைத்தனர். சிறையின்
அவல நிலையைப் பார்த்த லக்ஷ்மணன் ராமனிடம் "அண்ணா! சுவை மிக்க உணவை நமக்குப் பிரசாதமாக்கிப் பின் ஊருக்கெல்லாம் வழங்கிய பக்தனுக்கு முன்பே கருணை காட்டியிருக்கலாமே?"என்றான்.
"லக்ஷ்மணா!ஊழ்வினை. வாயில்லாப் பட்சியைக் கூண்டிலே அடைத்து வைத்த பாவம்தான் இந்தச சிறைவாசம்."
இருவரும் கோபன்னாவிற்கு ஆசி வழங்கி விட்டு மறைந்தனர்.

கோபன்னாவின் சேவகர் கொடுத்தமுஹராக்களைக்கண்டுஅதிசயித்தார்தானேஷா.பத்ராஜலத்திலிருந்து வந்தவர் ராம லக்ஷ்மணர் தான் என அறிந்து கொண்டார்.உடனே ஓடினார் சிறைச் சாலைக்கு. அவரது அகக்கண் திறந்தது. கோபன்னாவை விடுவித்து அவர் கால்களில் பணிந்தார்.

"கோபன்னா! உமது பெருமையை அறிந்து கொண்டேன்.பக்தனுக்காக பகவானே வந்தார் என அறிந்து கொண்டேன்.உமது அந்த பணியாட்களைப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் போல உள்ளதே! உமது கருணையினால் அந்த ராம லக்ஷ்மணர் இருவரையும் தரிசிக்கும் பெரும் பேறு கிடைத்தது. கோபன்னா இனி நீர் கோபன்னா அல்ல. ராமதாசர்."என்று கோபன்னாவின் பாதங்களில் வீழ்ந்தான் நவாப்.

நடந்த நிகழ்ச்சிகளைக் கேட்டறிந்த கோபன்னா தானேஷாவை அணைத்துக் கொண்டார்.
"நீர் பாக்யசாலி. பல ஆண்டுகள் அவரின் பக்தனான எனக்குக் காட்சி கிட்டவில்லை. நீர் அந்தப் பேறு பெற்றீர்.
ராமா!எனக்கும் காட்சி தர மாட்டாயா?"என ஏங்கினார்.

ராமதாசர் தானேஷாவினால் பூஜிக்கப்பட்டார்.பெரும் பொருளோடு மிகுந்த மரியாதையுடன் அவரை பத்ராஜலத்திற்கே வழியனுப்பிவைத்தார் தானேஷா.
அதன்பின்ராமதாசர் நெடுநாள் ராமசேவை செய்து வந்தார். ராமன்மீது பலபாடல்களைப் பாடினார். ஒருநாள் ராமனைப் பாடியவாறு இருந்த இவரது முன்னால் ஒரு பொன்மயமான தேர் வந்து நின்றது.அந்தத் தேரின் மீது அமர்ந்த ராமதாசர் ராமநாம உபதேசம் செய்தவாறே வானவெளியில் பறந்து மறைந்தார்.
நாம் எந்த உயிருக்கும் தீங்கு இழைத்தல் ஆகாது என்பதை இவரது கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.


ஞாயிறு, 28 மார்ச், 2010

சோதிடனைக் கொன்ற கதை

ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும் அறிந்து கொண்டான்.இதை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டான்.
அதனால் ஒரு சூழ்ச்சி செய்தான்.அரசர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டான். ரகசியமாக அரண்மனை ஜோதிடரை சந்தித்தான் சுல்தான்.நிறைய பொன்னைக் கொடுத்து ராயரின் படையெடுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான்.
 
                                   பொன்னுக்கு ஆசைப்பட்ட அந்த வஞ்சக ஜோதிடன் நேராக விஜயநகர அரண்மனைக்கு வந்தான்.கிருஷ்ணதேவ ராயர் படையெடுக்கத் தயாராக உள்ளதை அறிந்துகொண்டான். அவன் உள்ளம் வேகமாக வேலை செய்தது. மன்னர் முன் சென்று நின்றான்.மிகவும் தயங்குவது போல் பாசாங்கு செய்தவன் "அரசே! தற்போது தாங்கள் படையெடுப்பது சரியல்ல.ஏனெனில் தங்களின் கிரகநிலை தற்போது சரியில்லை.எனவே படையெடுப்பில் தற்போது இறங்க வேண்டாம்." என்று கூறினான். மந்திரி பிரதானிகளும் அதையே கூறினர். அவர்களும் மன்னரின் உயிரைப் பெரிதென மதித்தனர்.அரசியரும் மன்னரையுத்தத்திற்குப்  போகவேண்டாம் எனத் தடுத்தனர். அரசரும் யோசித்தார்.தெனாலிராமன் இவற்றையெல்லாம் கவனித்தவண்ணம் இருந்தான்.அவனுக்கு ஜோதிடன் மேல் சந்தேகம் ஏற்பட்டது.எனவே மன்னனிடம்"அரசே! நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? சோதிடன் சொன்ன பலன்கள் எல்லாம் நடந்து விடுகின்றனவா என்ன?" என்று தைரியம் சொன்னான்.
 
ராயரும் அதை ஆமோதித்தார்."ராமா! நீ சொல்வதும் சரிதான். ஆனால் இதை எப்படி மற்றவர்களுக்கு நிரூபிப்பது?சோதிடம் பொய் என்று நிரூபிப்பவருக்குபத்தாயிரம்  பொன் பரிசு என்று அறிவியுங்கள்" என்றும் ஆணையிட்டார்.
 
தெனாலிராமனுக்கு மிக்க மகிழ்ச்சி.
"அரசே! நானே இதை நிரூபிக்கிறேன். ஆனால் அந்த சோதிடனுக்குத் தண்டனை தருகின்ற உரிமையையும் எனக்குத் தரவேண்டும் " என்று கேட்டுக்கொண்டான். மன்னரும் இதை ஒப்புக்கொண்டார். 
 
     மறுநாள் சபா மண்டபத்தில் சோதிடனும் தெனாலிராமனும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ராமன் சோதிடரைக் கூர்ந்து கவனித்தான்.அவர் மேல் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று.
அவன், "சோதிடரே! நீர் கூறும் சோதிடம் தவறாமல் பலிக்குமல்லவா?" என்றான் மெதுவாக.
 
 "அதிலென்ன சந்தேகம்? நான் சொன்னால் அது கண்டிப்பாக நடந்தேறும்."
தன் கரங்களைக் குவித்தபடியே "நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பலன்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்" என்றான் ராமன்  பணிவாக.
சோதிடனும் கர்வத்துடன் தலையை அசைத்துக் கொண்டான். 
"அப்படியானால் தங்களின் ஆயுள் காலத்தையும் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?"
 
"ஓ! நான் இன்னும் நாற்பது ஆண்டுகள் உயிர் வாழ்வேன். இது சத்தியம்." சோதிடன் பெருமையுடன் கூறினான்.
 "உமது வாக்கு இப்போதே பொய்த்து விட்டதே! " என்றவாறே அருகே நின்ற சேனாதிபதியின் வாளை உருவி அந்த வஞ்சக சோதிடனின் தலையை வெட்டினான் ராமன்.
 
அனைவரின் திகைப்பையும் நீக்கிய ராமன் அந்த சோதிடனின் சுவடிக்கட்டை பிரித்துக் காட்டினான். அதனுள் பிஜாபூர் சுல்தான் சோதிடனுக்கு அனுப்பிய கடிதங்கள் இருக்கக் கண்டான். அந்த சோதிடன் பீஜப்பூர் சுல்தானின் கைக்கூலி என்று அறிந்து அவனுக்குத் தண்டனை அளித்ததற்காக ராமனைப் பாராட்டினார்.தன் வாக்குப் படியே பத்தாயிரம் பொற்காசுகளையும் அளித்து மகிழ்ந்தார். அதன்பின் தன் எண்ணப்படியே பீஜபூரையும் குர்ப்பாகானையும் வெற்றி கொண்டார் கிருஷ்ணதேவராயர்.