ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தாள். அவள் தினமும் ஊரின் ஓரமாக ஒரு மரத்தடியில் அடுப்பு வைத்து தினமும் வடை சுட்டு விற்று வந்தாள் .அவள் வியாபாரம் செய்யும் இடத்திலிருந்த மரத்தின் மேல் அக்காவும் தங்கையுமாக இரண்டு காகங்கள் தினமும் வந்து உட்காரும். பாட்டியின் கையில் நீண்ட கொம்பு இருந்தது. அதைவைத்து காகங்களை அடித்து விரட்டிக் கொண்டிருந்தாள்
ஒருநாள் இரண்டு காகங்களும் பேசிக்கொண்டன.
"அக்கா, நீ அந்தக் கொம்பைப் பிடித்துக் கொள். நான் இரண்டு வடைகளைத் தூக்கிக் கொண்டு பறந்து விடுகிறேன்.பிறகு நீயும் பறந்து வந்து விடு. இருவரும் வடையைத் தின்போம்"
தங்கை சொன்னதைக் கேட்டு அக்கா காக்கை சரி சரியென்று தலையை அசைத்தது.
சொன்னபடியே சற்று நேரத்தில் அக்கா காக்கை கொம்பைப் பிடித்துக் கொள்ள தங்கை காக்கை இரண்டு வடைகளை மூக்கில் கொத்திக் கொண்டு பறந்தது.
--
பாட்டி வாயில் வந்தபடி திட்டிக் கொண்டே கொம்பை விடுவிக்கப் படாத பாடு பட்டாள்
சட்டென கொம்பை விட்டு விட்டு அக்கா காக்கை பறந்தது.இரண்டும் சற்றுத் தொலைவிலுள்ள மரத்தின் மீது அமர்ந்து மூக்கில் வடையைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியோடு
தலையை அசைத்துக் கொண்டிருந்தன.
அப்போது அந்த வழியே ஒரு பூனை வந்தது.இரண்டு காக்கைகளும் மகிழ்ச்சியோடு இருப்பதைப் பார்த்தது.அவற்றின் வாயில் இருக்கும் வடைதான் காரணம் என்று புரிந்து கொண்டது.
மெதுவாக மரத்தின் அடியில் வந்து நின்று காக்கைகளைப் பார்த்துப் புன்னகை புரிந்தது.
"அக்காவும் தங்கையும் மிக அழகாக இருக்கிறீர்களே ஒரு பாட்டுப் பாடுங்களேன் கேட்கிறேன்"என்றது பூனை.
அக்காள் காக்கை தங்கையைப் பார்த்தது.தங்கைக் காக்கை புரிந்து கொண்டது பூனையின் சூழ்ச்சியை.உடனே இரண்டும் தங்கள் கால்களில் வடையை வைத்துக் கொண்டு கா,கா...என்று கரைந்தன.பிறகு மீண்டும் வடையைத் தங்களின் வாயில் வைத்துக் கொண்டன.ஏமாந்துபோன பூனை சற்றும் சளைக்கவில்லை.
"ஆஹா, மிக அழகாகப் பாடினீர்கள்.கொஞ்சம் நடனமாடிக் காட்டமுடியுமா?"
இரண்டு காகங்களும் தங்கள் வாயில் வடையை வைத்துக் கொண்டு கால்களை மாற்றிப் போட்டு நடனம் ஆடின.
அதையும் ஆஹா என்று ரசித்த பூனை "இப்போது பாடிக் கொண்டே நடனம் ஆடினால் நான் ரொம்ப மகிழ்ச்சியடைவேன்"என்றது.
அப்போது காகங்களின் காகா என்ற சத்தத்தைக் கேட்ட பாட்டி மறுபடியும் வடையைத் திருட வந்துவிட்டன காகங்கள் என்று கோபமாகத் தன கையிலிருந்த கொம்பைத் தூக்கிப் போட்டாள் அது சரியாக அங்கு அமர்ந்து காகங்களை ஏமாற்றிக் கொண்டிருந்த பூனையின் கால்களில் படவே பூனை வலி தாங்காமல் கத்திக் கொண்டே ஓடியது. காகங்களும் தங்கள் வாயில் வடையுடன் வெகு தொலைவு பறந்து சென்று வேறொரு மரத்தின் மேல் அமர்ந்து மகிழ்ச்சியோடு வடையைத் தின்றன.
------------------------------------------------------------------------------------------------------------------------
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com