இந்திய நாட்டு விடுதலைப் போராட்டத்தின் தனிப்பெரும் தாரகையாக ஒளிவீசும் தலைவராக
வ.உ.சிதம்பரம் பிள்ளை விளங்கினார்.திருநெல்வேலி மாவட்டம் ஒட்டப்பிடாரம்என்ற ஊரில் உலகநாதம் பிள்ளை
பரமாயி அம்மையார் என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். இந்தத் தம்பதி செய்த தவப்பயனாய் 1872-ம் ஆண்டு செப்டம்பர்
திங்கள் 5-ம் நாள் இவர்களுக்கு சிதம்பரம் பிள்ளை மகனாக அவதரித்தார். இதே ஓட்டப்பிடாரத்தில் தான் "மன்னவன்
காணிக்கு ஏது கிஸ்தி" என்று கேட்டு வெள்ளையரை நடுநடுங்க வைத்த வீரபாண்டிய கட்டபொம்மனும் பிறந்தான்.
இந்திய மண்ணுக்குப் பரணி பாடிய பாரதியார் பிறந்த ஊரும் இந்த ஊருக்கு அருகே இருக்கும் எட்டயபுரத்தில்தான்.
ஒட்டப்பிடாரம் வாழையடி வாழையாக வீரர்களைப் பெற்றெடுத்த திருநாடு.
சிதம்பரத்தின் உடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள் இரண்டு சகோதரியர். இளம் வயதிலேயே தமிழ் மீது ஆழ்ந்த
பற்றுக் கொண்டிருந்தார். பல நன்னெறி நூல்களைப் பழுதறக் கற்றார். இவர் பள்ளிப் படிப்பும் பின் கல்லூரியில்
மெட்டி ரிகுலேஷனும் படித்து முடித்தார்.
இளமையில் மற்போர் சிலம்பு கத்திவீசுதல் போன்ற வீர விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார்.சட்டக் கல்வி
பெற விரும்பியவர் தந்தையின் ஆதரவுடன் 1895-ம் ஆண்டு வழக்கறிஞரானார். இத்துறையில் புகழ் பெற்றவர்
வருவாய் மட்டுமே பெரிது என என்ணாது ஒழுக்கம் நேர்மை பிறர் நலம் பேணல் இவற்றையே குறிக்கோளாகக்
கொண்டிருந்தார்.
ஏழைகளுக்கு இறங்கும் ஏழை பங்காளராக இருந்தார். ஆயிரக்கணக்கில் பணம் வருவதாக இருந்தாலும் அநீதியின்
பக்கம் இவர் நா அசையாது. ஆங்கிலேயர்களே இவரது தொழில் திறமை கண்டு அஞ்சினர்.
இளம் வயதில் மணம் முடித்த இவர் விரைவிலேயே மனைவியை இழந்தார். பெற்றோர் இவருக்கு மீனாட்சி என்ற மங்கையை
மறுமணம் செய்து வைத்தனர். அம்மாதரசி இவர் காரியம் யாவினும் கை கொடுத்து வாழ்ந்தார்.
வெள்ளையர் ஆதிக்கம் கண்டு மிகுந்த துயர் கொண்டார். நாட்டுரிமை வேண்டி வீரர்கள் தாக்குதல்
தொடங்கியபோது வடக்கே திலகரும் தெற்கே சிதம்பரனாரும் தளபதிகளாக இருந்து போராட்டங்களைத்
தலைமை தாங்கி நடத்தினர். சிதம்பரம் வியாபாரத்தால் ஆங்கிலேயரை அடக்க எண்ணினார். அதற்குப்
பொருத்தமாகக் கப்பல் விடுவது என்று முடிவு செய்தார். பலசெல்வந்தர்களின் உதவியுடனும் திலகர் பெருமானின்
பேருதவியுடனும் சுதேசிக்கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். கப்பல் புறப்பட்டபோது சுதந்திரமே
கிடைத்துவிட்டது போல் மக்கள் மகிழ்ந்தனர். வெள்ளையர்கள் பேரிடி தாக்கியதுபோல் திகைத்தனர்.
ஏழைகளுக்காகப் பாடுபட்டவர் மில் முதலாளிகளின் ஆதிக்கத்தை எதிர்க்க வீரக்கனல் தெறிக்கும்
சொற்பொழிவாற்றினார். சுப்பிரமானியா சிவா என்ற துறவியாரும் இவருடன் இணைந்து சொற்பொழிவாற்றி
உறங்கிக்கிடந்த நெஞ்சங்களைத் தட்டி எழுப்பினார். இரண்டு ஆண்டுகளில் சிதம்பரம் நடத்திய கூட்டங்களும் போராட்டங்களும் ஏராளம்.
பாரதத்தின் பெருமையெல்லாம் அழிந்து கொடுமையும் அவமதிப்பும் தலைதூக்கி நின்றதைக் கண்டு பிள்ளையவர்களின்
மனம் பதை பதைத்தது. அடிமைப்பட்ட தாய் நாட்டைக் காப்பதே இனி தனது கடமை என எண்ணினார். காங்கிரசிலிருந்த தீவிரவாதம் என்னும்
பகுதியில் இணைந்தார். திலகர் பெருமானின் தலைமையில் முற்போக்குக் கொள்கை கொண்டவர்கள் ஒன்று திரண்டனர். தென்னாட்டில் ஆதரவு
தேடும் பொறுப்பினை திலகர் சிதம்பரத்திடம் ஒப்படைத்தார். சுதேசிப்பற்று அந்நியப்பொருள் புறக்கணிப்பு தேசியக் கல்வி ஆகியவற்றை மக்களுக்கு
விளக்கினார் பிள்ளையவர்கள்.
இவரது ஆவேசப்பேச்சுக்களினால் எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சாயிற்று. நெல்லை மாவட்டம் மற்றொரு வங்காளமாயிற்று. ஆங்கிலேயருக்குத்
துணைபுரிபவர்களுக்கு எந்த வேலையும் செய்வதில்லை என மக்கள் கூறிவிட்டனர். மாவட்டம் முழுவதும் சிதம்பரம்பிள்ளை இட்டதே
சட்டமாயிற்று. அவரது ஆணைக்காக மக்கள் காத்திருந்தனர். இந்நிலையை அடக்க ஆங்கில அரசு முடிவு செய்தது.
தூத்துக்குடி மில் தொழிலாளருக்காக வேலை நிறுத்தம் செய்து கொண்டிருந்த வ.உ.சி யை கலெக்டர் "விஞ்ச்" துரை
தூத்துக்குடி மில் தொழிலாளருக்காக வேலை நிறுத்தம் செய்து கொண்டிருந்த வ.உ.சி யை கலெக்டர் "விஞ்ச்" துரை
திருநெல்வேலிக்கு வந்து தன்னைக் காணுமாறு உத்தரவு பிறப்பித்தார். கைதாவோம் என அறிந்திருந்தும் அஞ்சாநெஞ்சம் படைத்த பிள்ளையவர்கள்
தன் நண்பர் சுப்பிரமணிய சிவாவுடன் சென்று கலெக்டரைச் சந்தித்தார். அங்கே அடுக்கடுக்காகக் குற்றங்களை அள்ளி வீசினார் விஞ்ச். அதில்
முக்கியமான பெருங்குற்றம் வந்தேமாதரம் எனக் கூறியது.
"தாய் நாடு வாழ்க எனக்கூறியது பெருங்குற்றமானால் அக்குற்றத்தை உயிர் உள்ளவரை செய்து கொண்டே இருப்போம் உங்கள்
அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டோம் எங்கள் உயிர் பிரிந்தாலும் உள்ளத்தின் சுதந்திரப் பற்று மாயாது." என்று வீர முழக்கமிட்டார் சிதம்பரனார்.
ஆத்திரமடைந்த விஞ்ச் துரை இவர்களை மாவட்டத்தை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட அதை ஏற்காத பிள்ளையவர்களும் சிவாவும்
சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கினார் நீதிபதி. இதை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து நாற்பது
ஆண்டுகள் அனுபவிக்கவேண்டும் என்று கூறினார். சிவாவுக்குப் பத்தாண்டுகள் சிறைவாசம் என்றும் தீர்ப்பாயிற்று.
முப்பத்தைந்தே வயதான சிதம்பரம் தன் வயதான பெற்றோரையும் பச்சிளம் குழந்தைகளையும் அன்பு மனைவியையும் பிரிந்து
சிறையில் வாடும் நிலையை எண்ணி நாட்டு மக்கள் துயருற்றனர். நாட்டுக்கு உழைத்த நல்லவருக்கு ஏற்பட்ட நிலை கண்டு தமிழ்நாடு மட்டுமின்றி
இந்தியா முழுவதும் அதிர்ச்சி வெளியிட்டது. நண்பர்கள் பெருமுயற்சியால் இரண்டு ஆயுள்தண்டனை ஆறு ஆண்டு சிறைவாசமாக மாற்றப்பட்டது.
"கப்பலோட்டிய தமிழன்" எனப் பாராட்டப் பட்ட வ.உ.சி.யை கோவைச் சிறையிலும் கண்ணனூர் சிறையிலும் செக்கிழுக்க வைத்தனர். கல்லுடைக்கச்
செய்தனர். அறுசுவை உண்டு அரசர்போல் வாழ்ந்த செல்வச் சிதம்பரனாரை கூழ் குடிக்க வைத்து கொடுமைப் படுத்தினர்.
ஆறு ஆண்டுகளுக்குப் பின் விடுதலையானார் வ.உ.சி.அவர்கள். அரசு அவரைப் பழிவாங்கியது. அரசநிந்தனைக் குற்றத்திற்காக
தண்டனை பெற்றதால் வ.உ.சி.யின் வழக்கறிஞர் சான்றிதழ் பறிமுதலாயிற்று. வருவாய் இன்றி வறுமையில் வாடினார் வ.உ.சி. அப்போதும்
பொதுநலப் பணிகளை அவர் விட்டுவிடவில்லை. புகைவண்டித் தொழிலாளர் சங்கத் தலைவராக இருந்து பல நன்மைகளைச் செய்தார். நல்லமனம்
படைத்த நீதிபதி "வாலஸ் " என்பவரின் உதவியால் பறிக்கப்பட்ட சான்றிதழ் மீண்டும் கிடைத்தது. அப்போது காந்தியடிகள் ஒத்துழையாமை
இயக்கத்திற்கு ஆதரவு தரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். வ.உ.சி. இதற்கு உடன்படவில்லை. திலகர் பெருமானின் தேசியப் பாதையை
விட்டு இவர் விலகவில்லை.
வீரர் சிதம்பரனார் சிறந்த இலக்கியவாதியுமாவார். சிறையில் கல்லுடைத்தபோது இவர் கவிதையும் வடித்தார். இவர் எழுதிய
கடிதங்கள் அனைத்தும் கவிதை வடிவில் கற்போர் நெஞ்சை உருக்கும் தன்மை வாய்ந்தன.சமயப் பாடல்கள், தனிப்பாடல்கள் இயற்றினார்.
"மெய்யறிவு" மெய்யறம்" போன்ற அறநூல்களை இயற்றினார். "மனம்போல் வாழ்வு", வலிமைக்கு மார்க்கம், அகமே புறம்" என்ற மொழிபெயர்ப்பு
நூல்களையும் திருக்குறள், தொல்காப்பியம் போன்ற சிறந்த நூல்களுக்கு உரைகளையும் எழுதினார். தமிழ் மீது பற்று காரணமாக
தமிழ்மருத்துவமான சித்த மருத்துவத்தை வலியுறுத்திவந்தார்.
சிதம்பரம்பிள்ளை ஒழுக்கசீலர். தன்னலம் பாராது பிறர் நலம் பேணும் பெருந்தகையாளர். பாரதியாரின் உயிர் நண்பராய்த் திகழ்ந்தார். உயர் பண்புகள்
அனைத்தும் பெற்றவர். நாட்டுவிடுதலை ஒன்றே மூச்சாகக் கொண்டு வாழ்ந்திருந்தவர். தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்டதால் இவர் பெற்ற பையன்
வறுமையும் பிணியுமே. நோய்வாய்ப்பட்ட போதும் தன் பிணிக்கு வருந்தாது அடிமைப் பிணிக்காகவே வருந்தினார். உயிர் நண்பர் மஹாகவி
பாரதியாரின் தேசியப் பாடல்களைக் கேட்டவண்ணம் 1936-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் நாள் சுதந்திரம் வாங்காமல் சாகிறேனே என்ற ஏக்கச்
சொற்களோடு அவர் ஆவி பிரிந்தது.
"கப்பலோட்டிய தமிழன்" என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற வ.உ.சிதம்பரனார் தமிழக வீரப் பெருமக்கள் வரிசையில் தனி இடம் பெற்றவர். நாட்டு
மக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பி விடுதலைப் புரட்சியை உண்டாக்கிய சிறந்த தேசபக்தர். சிதம்பரனாரின் வரலாறு இம்மண்ணில் ஒரு மங்காத
காவியமாகும்.
கப்பலோட்டிய தமிழரின் நினைவாக இந்த வாரம் அவரது தியாகத்தை நாமும் நினைவு கூறுவோம். அவரைப் போல நாட்டுப் பற்று மிக்கவராய்த் திகழ்வோம்.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com