செவ்வாய், 4 செப்டம்பர், 2012

95-மனவேளிச்சம்.

ஒரு ஊரில் ஒரு புடவை வியாபாரி இருந்தான்.அவன் ஊர் ஊராகச் சென்று புடவைகளை விற்று வந்தான்.புடவைகளுக்கு நியாயமான விலை சொல்லாமல் அதிக விலை சொல்லி மக்களை ஏமாற்றி வந்தான். அவனுக்கு தான் விரைவில் பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்ற பேராசை அதிகமாக இருந்தது.புடவை மூட்டையைத் தன் தலையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஊருக்கும் நடந்தே செல்வான்.அவ்வாறு ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும் போது இடையில் ஒரு காடு இருந்தது.அந்தக் காட்டைத் தாண்டி அடுத்த ஊருக்குச் சென்று விடலாம் என்று நடந்தான்.
வெகு தூரம் நடந்தும் ஊர் தென்படவில்லை. அவன் ஓய்வு எடுக்க ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தான்.அவன் அமர்ந்த இடம் சற்று மேடாக இருக்கவே அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தான் அங்கே ஒரு பானையைப் பார்த்தான் அந்தப் பானை நிறைய தங்க அவல் நிறைந்திருந்தது.
தங்கத்தால் ஆன அவல்உருவத்தில் புதையலைக் கண்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான்.
தன்னுடைய பணக்காரன் ஆகவேண்டும் என்னும் ஆசைக் கனவு பலித்தது கண்டு ஆனந்தக் கூத்தாடினான்.
தன் தலையிலிருந்த புடவை மூட்டையைக் கீழே வைத்தான்.அந்தப் புடவைகளை அந்த மரத்தின் அடியிலேயே போட்டுவிட்டு பானையில் இருந்த  தங்கத்தாலான  அவலைஎல்லாம் தன் மூட்டையில் கட்டி எடுத்துக் கொண்டான்.அப்போது மரத்தின் மேலிருந்து ஒரு குரல் கேட்டது.அச்சத்துடன் நிமிர்ந்து பார்த்தான் வியாபாரி.சல சலக்கும் மரத்தின் ஊடேயிருந்து அந்தக்  குரல் கேட்டது.
"ஏ வியாபாரியே ! இந்தப் பொன் உனக்குச் சொந்தமானதல்ல. ஒரு குருடனுக்குத்தான் இந்தப் புதையல் சேரவேண்டும்.உனக்கல்ல."
"நான்தானே பார்த்துத் தோண்டி எடுத்தேன். எனவே இது எனக்குத்தான் சொந்தம்.வேண்டுமானால் ஒரு பிடி அந்தக் குருடனுக்காகப்  போட்டு வைக்கிறேன்." என்றவன் ஒரு பிடியைவிடக் குறைவாக அந்தப் பானையில் போட்டு விட்டு நடந்தான்.அப்போது அந்தக் குரல் "ஏ வியாபாரியே, பாதிப் பொன்னையாவது போட்டுவிட்டுப் போ."என்று கெஞ்சியபடியே கேட்டது. "அதெல்லாம் முடியாது."என்றவன்  
யாரேனும் தான் வீசிய புடவைகளைப் பார்த்துவிட்டு நான்தான் புதையலை எடுத்திருக்கிறேன் எனத் தெரிந்து கொண்டுவிட்டால் என்ன செய்வது என எண்ணினான்.
அதனால் தான் வீசிய புடவைகளை அங்கேயே அருகில் ஓடும் ஆற்றில்  எறிந்தான்.மகிழ்ச்சியோடு வீடு நோக்கி நடந்தான்.
 அந்தக் காடு நீண்டு கொண்டே போனது.இருட்டும் நேரமும் வந்து விட்டது. ஊர் கண்ணுக்கே தென்படவில்லை.என்ன செய்வது என்று யோசித்தான்.தொடர்ந்து நடக்க அச்சமாக இருந்தது.கையிலோ பொன் மூட்டை நேரமோ இருட்டு. இருக்கும் இடமோ காடு. அவன் அச்சத்துக்குக் கேட்பானேன்.மனதில் தெய்வத்தை எல்லாம் வேண்டிக்கொண்டு பதுங்கிப் பதுங்கி நடந்தான்.
நல்ல வேளையாக தொலைவில் சிறிய வெளிச்சம் தெரியவே வேகமாக நடந்தான்.இரவு தானும் தன் செல்வமும் பத்திரமாக இருக்கலாம் என எண்ணியபடியே அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். 
"அம்மா," எனக் குரல் கொடுத்தான். ஒரு வயதான அம்மாள் வெளியே வந்தாள்.
"யாரப்பா அது? உள்ளே வாருங்கள் "என்று அழைத்து உபசரித்தாள்.வியாபாரி தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டவன் பொன் கிடைத்ததைப் பற்றி மூச்சு விடவில்லை.இரவு மட்டும் தங்கிப் போவதாகச் சொன்ன போது அந்த அம்மாள் "நான் இந்த மாதிரி வழிப்போக்கருக்காகவே இந்த இடத்தில் தங்கியிருக்கிறேன்.இதை நான் ஒரு தரும காரியமாகச் செய்கிறேன்."என்றவள் வியாபாரி சாப்பிட வயிறார உணவு பரிமாறினாள்.உண்ட களைப்புடன் தன் மூட்டையை அங்கேயே ஓரமாக வைத்துவிட்டுத் தூங்கப் போனான் அந்த வியாபாரி.அவனுக்கு முன்னாலேயே அங்கு வந்த வேறொரு வழிப்போக்கரும் அங்கு தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தான்.
மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து தன் மூட்டையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டான் அவன்.வெகு தொலைவு வந்தபின் பொன் மூட்டை லேசாக இருக்கிறதே நமது பொன் மூட்டை மிகவும்  கனமாக இருக்குமே என்று சந்தேகப் பட்டவன் மூட்டைக்குள் கையை விட்டு ஒரு பிடியை அள்ளிப் பார்த்தான்.ஐயோ, இதென்ன அத்தனையும் துவரம்பருப்பாக உள்ளதே கடவுளே, அந்தக் கிழவி என்னை ஏமாற்றி விட்டாளா என்று மீண்டும் அந்த மூதாட்டியின் வீட்டுக்குச் சென்றான்.
அவளிடம் தான் கொண்டு போன மூட்டை தன்னுடையது அல்லவென்றும் இன்னொரு மூட்டை இருக்கிறதா பாருங்கள் என்றபோது அந்த அம்மாள் "[இல்லையே அப்பா, உனக்கு அருகில் படுத்திருந்தவர்தான் அவருடைய மூட்டையைத் தூக்கிச் சென்றார்."என்றாள்.
"அவர்தான்  என் மூட்டையைப் பார்க்காமல் எடுத்துச் சென்றிருக்கிறார் அவர் எப்போது போனார்?" என்றான் வியாபாரி படபடப்புடன்.அதற்கு அந்த அம்மாள் சிரித்தாள். "ஐயோ பாவம், அவரால் எப்படிப் பார்க்க முடியும் அவர்தான் கண் தெரியாதவர் ஆயிற்றே."
"என்ன, கண்  தெரியாதவரா?அவர் எப்போது போனார்?"
"நீங்கள் தூங்கிய சற்று நேரத்துக்கெல்லாம் அவர் எழுந்து சென்று விட்டார்.நான்கூட நன்கு விடிந்தவுடன் செல்லலாமே என்று சொன்னேன்.குருடனுக்கு இருட்டானால் என்ன வெளிச்சமானால் என்ன.என் களைப்பு நீங்கிவிட்டது நான் சென்று வருகிறேன் என்று சொல்லிப் போய் விட்டார்.
புடவை வியாபாரிக்குக் கண்கள் இருண்டன.தள்ளாடியபடியே மீண்டும் அந்த புதையல் தந்த மரத்தடிக்கே வந்து அழுதான்.அப்போது அந்தக் குரல் கேட்டது."ஏ வியாபாரியே, நீ உனக்கென்று போட்டுவிட்டுப் போன தங்க அவல் இருக்கிறது. நீ அந்தக் குருடனிடம் புதையலைச் சேர்த்ததற்காக உனக்குக் கூலி.நீ நியாயமாக குருடனுக்கென்று பாதிப் பொன்னைப் போட்டிருந்தால் இப்போது அது உனக்குக் கிடைத்திருக்கும்.உன் பேராசையால், மற்றவர் சொத்துக்கு நீ ஆசைப் பட்டதால் மற்றவருக்கு அவரின் நியாயமான பங்கைக் கூடக் கொடுக்காததால் உனக்கேற்பட்ட நஷ்டத்தை இனியாவது தெரிந்து கொள்.இனி மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாதே.என் பணி முடிந்தது நான் போகிறேன்."என்று கூறிவிட்டு பெரும் காற்றாகி மறைந்தது அந்தக் குரலுக்குரிய பூதம்.
தன் தீய எண்ணங்களால் தனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை இழந்ததற்காக அழுதுகொண்டே அந்த ஒரு பிடி பொன்னை எடுத்து மடியில் கட்டிக்கொண்டான்.தான் இழந்த தன் புடவைகளின் மதிப்புதான் தனக்குக் கிடைத்துள்ளது என்று மனதைத் தேற்றிக் கொண்டு நடந்தான் அந்த வியாபாரி. இருள் மறைந்து வெளிச்சம் பரவியது.அவன் உள்ளத்திலும்தான்.

.ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com