திங்கள், 6 செப்டம்பர், 2010

46th story. உயர்வுக்கு வழி

                                                         உயர்வுக்கு வழி. 
ஒரு கிராமத்தில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு நான்குமகன்களஇருந்தனர்.நால்வரும்சோம்பேறிகள்.ஒற்றுமையில்லாதவர்கள்.எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டும் அப்பாவின் உழைப்பில் உட்கார்ந்து உண்டு வாழ்ந்தும்  வந்தனர். முதியவர் கடும் உழைப்பாளி. தன் பிள்ளைகள் யாரும் தன்னைப்போல் உழைக்கவில்லை என்பதோடு தனக்கு யாரும் உதவவில்லையே எனவும் மிகவும் வருந்தினார்.ஒரு நாள் முதியவருக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. அவரால் எழுந்திருக்கவும் இயலவில்லை.
எனவே தன் பிள்ளைகளை அழைத்தார். அவர் முன்னே நால்வரும் வந்து நின்றனர்.முதியவர் அவர்களுக்கு அறிவுரை கூறினார்.
"என் மக்களே, எனக்கு வயதாகிவிட்டது. இன்னும் நெடுநாள் நான் வாழமாட்டேன்.என் காலம் முடிந்து விட்டால் நீங்கள் எப்படி வாழப் போகிறீர்கள் என்பதே எனக்குக் கவலையாக உள்ளது. தயவு செய்து ஒற்றுமையாக இருந்து நமது நிலத்தில் பயிரிட்டு வாழப் பழகுங்கள்."என்றார்.
நால்வரும் வெவ்வேறு பக்கம் திரும்பி நின்றிருந்தனர். அவர்கள் மனநிலையை அறிந்து கொண்டார்.
"பிள்ளைகளா,உங்களுக்கு நான்கு எருதுகளின்  கதை தெரியுமா? நான்கும் ஒற்றுமையாக மேய்ந்தபோது சிங்கத்தால் அவைகளைக் கொல்ல முடியவில்லை. நான்கும் சண்டையிட்டுக் கொண்டு தனித்தனியே நின்றபோது சிங்கம் ஒவ்வொன்றாகக் கொன்று தின்றது. இதைப் புரிந்து கொள்ளுங்கள்" என்றபடியே  தன் அருகே இருந்த மரக் குச்சிகள் இருந்த ஒரு கட்டினை எடுத்துக் கொடுத்தார்.
"இதை அப்படியே  ஒடிக்க முடியுமா பாருங்கள். யாராலாவது முடியுமா முயற்சித்துப் பாருங்கள்." என்றார். ஒவ்வொருவரும் அந்த குச்சிகள் நிறைந்த கட்டினை ஒடிக்க முயற்சித்துத்  தோற்றனர். அனைவரும் தங்களால் முடியவில்லை என ஒப்புக் கொண்டு தலை குனிந்து நின்றனர்.
முதியவர் இப்போது அந்தக் குச்சிகளை ஒவ்வொன்றாக பிரித்து ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு குச்சியைக் கொடுத்து ஒடிக்கச் சொன்னார். நால்வரும் குச்சிகளை விரைவில் ஒடித்துப் போட்டனர். 
"இதுதான் உங்களின் பலமாகும். நீங்கள் நால்வரும் ஒன்றாக இருந்தால் உங்களை யாராலும் அழிக்க முடியாது.சண்டையிட்டுக் கொண்டிருந்தால் விரைவில் மற்றவர் உங்களை அழித்து விடுவார்கள்.எனவே முதலில் ஒற்றுமையாக இருங்கள்"
தங்களின் தந்தையாரின் அறிவுரையைக் கேட்ட பிள்ளைகள் தங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்தி ஒற்றுமையாக இருக்கத் தொடங்கினர்.
சில மாதங்களுக்குப் பின் ஒருநாள் முதியவர் தன் பிள்ளைகளை அழைத்து தன் வயலில் புதையல் இருப்பதாகவும்  அதைக் கண்டுபிடித்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றும்  கூறிவிட்டு இறந்து விட்டார்.
பிள்ளைகள் நால்வரும் புதையலைத் தேடி வயலுக்குச் சென்றனர்.நால்வரும் சேர்ந்து நிலத்தை நன்கு கொத்தியும் உழுதும் தேடினர்.எந்தப் புதையலும் கிட்டவில்லை. சோர்ந்து போய் அமர்ந்திருந்தபோது பக்கத்து நிலத்துக்குச்  சொந்தக்காரர்  தன்னைப் போல் நிலத்தில் விதைக்கச் சொன்னார்..அவரது 
சொற்படியே நிலத்தில் விதைத்தனர். நான்கு மாதங்களில் நல்ல விளைச்சலைக் கொண்டுவந்து வீடு சேர்ந்தனர். அப்போதுதான் தங்கள் தந்தையார் கூறிய புதையல் அதுதான் எனப் புரிந்து கொண்டனர்.அத்துடன் நல்ல உழைப்பினால் உடலும் மனமும் உற்சாகமாக இருப்பதை எண்ணிப் பார்த்து இத்தனை நாள் வீணாகக் கழித்தோமே என வருந்தினர். ஒற்றுமையின் சிறப்பையும் உழைப்பின் பெருமையையும் அறிந்து கொண்டனர்.இனி அவர்கள் வாழ்வின் உயர்வைத் தவிர தாழ்வை அடையமாட்டார்கள். நாமும் ஒற்றுமையின்  பெருமையையும் உழைப்பின் சிறப்பையும் அறிந்து அதன்படியே நடப்போம் என உறுதி கொள்வோம்.