வியாழன், 5 டிசம்பர், 2019

குறள் வழிக்கதைகள்

குறள் --"எனைத்தானும்  நல்லவை கேட்க அனைத்தானும் 
                ஆன்ற பெருமை தரும் "
                            ராசாத்தி சமையல்செய்துகொண்டிருந்தாள்.அப்போது அவள்மகன்     அகிலன்  வேகம் வேகமாக குளித்துவிட்டு உடைமாற்றிக் கொண்டிருந்தான்.அப்போது அவன் தந்தை ராஜவேலு  உரக்க அழைத்தார்.
"அகிலா, குளித்தாயிற்றா?வா அம்மாவைக் கூப்பிடு.நேரமாகுது பார்"
   அகிலன் வெறுப்புடன் முணுமுணுத்தான்.
ராஜாத்தியும், 'வாடா, உங்கப்பாவுக்குக் கோவம் வரப்போகுது "
என்றபடியே அடுப்பை  அணைத்துவிட்டு ராஜவேலு முன்னால்  வந்து அமர்ந்தாள் .
     அகிலனும் உம்மென்ற முகத்துடன் வந்து அவர்முன் அமர்ந்தான்.
புன்னகை மாறாத முகத்துடன் "அகிலா, நேத்து படிச்ச திருவாசகத்தை ச் சொல்லு"என்றபடியே திருவாசகம் நூலைப் பிரித்தார்.
தட்டுத் தடுமாறி யபடி "அம்மையே  அப்பா "என்று தொடங்கி இசையுடன் சொல்வதைக் கேட்டுத தலையசைத்தார்.
 ராசாத்தியையும் உடன் பாடச்  சொன்னார்.
அவர்கள் பாடிமுடித்தவுடன் அடுத்தபாடலைக் கூறலானார்.
அதைத் தொடர்ந்து ராசாத்தியும் அகிலனும் பாடினர்.அரைமணிநேரம் ஆனதும் கற்பூரம் காட்ட ராசாத்தியும் அகிலனும் அதைக் கண்களில் ஒற்றிக் கொண்டனர் 
அவர் கொடுத்த ஒரு வாழைப் பழத்தைப் பெற்றுக் கொண்டவன் வேகமாக வெளியே சென்றான் அவனைத் தொடர்ந்து ராசாத்தியும் சமையலறைக்குள் நுழைந்தாள் 
அவளை பின்பற்றிய அகிலன் "ஏம்மா, அப்பா இப்படி தினமும் போரடிக்கிறாரு .இந்தப் பாட்டுகளைப் படிக்காட்டி என்ன?"
என்று அம்மாவின் காதைக் கடித்தான்.
அதைக் கேட்டபடி வந்த ராஜவேலு,"இந்த வயசிலே நல்ல விஷயங்களைக்  கத்துக்கணும் கடவுளை பற்றிய அறிவும் நமக்கு வேணும் அகிலா.இதுதான் காலத்துக்கும் நமக்குத் துணை நிக்கும்."
என்றார்.
ராசத்தியும் "சரி சரி இந்தா சாப்பிட்டுப்புட்டு ஸ்கூலுக்குப்புறப்படு " என்றபடி இட்டிலிகளைத் தட்டில் வைத்தாள் 
                  ராஜவேலுவுக்கு இறைபக்தி அதிகம்.தினமும் பூஜை செய்வதையும் தேவாரம் திருவாசகம் பாடல்களை இசையோடு பாடுவதையும் வழக்கமாகக்  கொண்டிருந்தார்.தன்னுடன் தன மனைவியையும் மகனையும் சேர்ந்து பாடச்  சொல்வார்.
ராசாத்திக்கு என்ன வேலை இருந்தாலும் அதை  நிறுத்தி விட்டு     பூஜை நேரம் வந்து அமர்ந்து விட வேண்டும்.  
தினமும் பதிகங்களைக் கேட்டுக் கேட்டு ராசாத்திக்கும் அகிலனுக்கும் மனப்பாடமாகி விட்டது.
                  அன்று பள்ளிக்கூடத்தில திடீரென அதிகாரி வந்து விட்டார்.பள்ளிக்கூடமே அமர்க்களமாக இருந்தது.ஆசிரியர்கள் அங்குமிங்குமாக சென்று மாணவர்களை சீர்ப்படுத்திக் கொண்டிருந்தனர்.தலைமை ஆசிரியர் பிற்பகலில் மாணவர்களை கூட்டி 
  அமரச்சொன்னார்.அந்தக் கூட்டத்தில் அதிகாரியும் தலைமை ஆசிரியரும்வந்து அமர்ந்தனர்.சலசலவென்று பேசிக் கொண்டிருந்த மாணவர்கள் .அமைதியாயினர்.அதிகாரி தலைமை ஆசிரியரிடம் ஏதோ கூறினார்.அவரும் தமிழ் ஆசிரியரிடம் காதில் கூறினார். தமிழாசிரியர் கையைப் பிசைந்து கொண்டார்.ஒரு நிமிடம் இரண்டு மூன்று ஆசிரியர்கள் கூடிப்பேசினர்.
அவர்கள் பேசியது அங்கே அமர்ந்திருந்த அகிலனின் காதில் விழுந்தது.சற்றே தயங்கியவன்  எழுந்து .நின்றான்.என்ன என்பது போல் ஆசிரியர் பார்த்தார்.
"அய்யா,  நான் பாடுகிறேன் ஐயா "என்றான் மெதுவாக."
மிக்க மகிழ்ச்சியுடன் அவனைப் பற்றி இழுத்துக் கொண்டு மேடைக்குப் போனார் அவன் வகுப்புத் தமிழாசிரியர்.
ஒலிபெருக்கி முன் சென்று நின்று "அம்மையே அப்பா" என்று தொடங்கி இசையோடு பாடி முடித்தான்.வந்திருந்த அதிகாரி மகிழ்ச்சியுடன் தலையை அசைத்து ரசித்தார்.தனக்குப் போர்த்திய பொன்னாடையை அகிலனுக்குப் போர்த்தி அவன் முதுகில் சபாஷ் என்று தட்டிக் கொடுத்தார்.மேடையை வீட்டுக் கீழே இறங்கியபோது  அனைவரும் கைதட்டி பாராட்டினர்.
           தமிழாசிரியரும் இன்னும் இரண்டு மூன்று ஆசிரியர்களும் அவனைத் தட்டிக் கொடுத்தபோது பெருமையில் பூரித்துப் போனான் அகிலன்.
  வீட்டுக்கு ஓடிவந்தவன் அம்மா என்று கூவியபடியே உள்ளே வந்தான்.அம்மாவைப் பார்த்து இன்னைக்கு ...என்றவனை இடைமறித்தாள் ராசாத்தி."நீ வருமுன்னயே செய்தி எனக்கு வந்துடிச்சி ..நல்லா பாடுனியாமே ரொம்ப .சந்தோஷமா இருக்குப்பா."
தன பையிலிருந்த பொன்னாடையை எடுத்த அம்மாவின் மீது போர்த்தினான் அகிலன்.
           அப்போது உள்ளே நுழைந்த ராஜவேலு,"என்ன அகிலா, பள்ளிக்கூடத்துல திருவாசகம் பாடினியாமே.உங்க வாத்தியாரைப் பார்த்தேன்.அதிகாரி ரொம்ப பக்திமானாம் அவரு பிள்ளைகளை திருவாசகம் பாடச்  சொல்லிக் கேட்டாராம். அப்பதான் நீயாவே பாடறேன்னு சொன்னியாமே.ரொம்ப சந்தோஷப பட்டாரு."
"ஆமாப்ப்பா, எனக்கு பொன்னாடையே போர்த்தி அதிகாரி தட்டிக் கொடுத்தாருப்பா.வாத்தியாக்குங்க கூட  பாராட்டினாங்கப்பா."
"பார்த்தியா நல்ல விஷயம் அப்படீன்னு நான் சொன்னேனில்லையா  அதுதான் உனக்கு இவ்வளவு பெருமையைத் தேடிக் கொடுத்திருக்கு.இதைத்தான் வள்ளுவரும் சொல்லியிருக்காரு.'
"அது என்னங்க வள்ளுவர் சொன்னது?"
                  "எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
                  ஆன்ற பெருமை தரும்"

"அப்படீன்னா?"
"அதாவது எவ்வளவு நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோமோ அவ்வளவு  
பெருமையும் கவுரவமும் கிடைக்கும்.இப்போ எவ்வளவு பெருமை கிடைச்சிருக்கு.பார்த்தியா?"
"ஆமாம்ப்பா, எனக்கு இப்போதான் புரியுதுப்பா."
  மறுநாள் காலையில் மகிழ்ச்சியுடன் பூஜைக்கு வந்து அமர்ந்தான் அகிலன்.










ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com