செவ்வாய், 24 நவம்பர், 2015

மந்த்ராலயமகான் -4.

திருமணம் ;

 
                                சகல சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்த வேங்கடநாதன் மீண்டும் புவனகிரிக்கு வந்தார். தம்பிக்கு தக்க பருவம் வந்ததென எண்ணிய அண்ணன் குருராஜர்  சரஸ்வதிபாய் என்ற மங்கை நல்லாளை இவருக்குத்  திருமணம் செய்து வைத்தார். வேங்கடநாதனும் சரஸ்வதிபாயும் மனமொத்த  தம்பதிகளாக இனிதே இல்லறம் நடத்தினர்.தக்க காலத்தில் புதல்வன் லக்ஷ்மி நாராயணன் பிறந்து இவர்கள் வாழ்வில் வசந்தமானான்.ஆனால் பூர்வ ஜன்ம பலன் யாரையும் விடுவதில்லை. அதனால் மிகுந்த வறுமையில் வாடினார் வேங்கடநாதன். வறுமையின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக பொருள் ஈட்டிவரப் புறப்பட்டார்.
                                 
                                                                            வழியில் ஒரு கிராமம். அங்கு தனவந்தர் ஒருவர் வீட்டில் சமாராதனை நடந்து  கொண்டிருந்தது.
அங்கு சென்றார் வேங்கடநாதன்.இவரைப் பார்த்ததும்  இவரிடம் ஏதேனும் வேலை வாங்கிக் கொண்டு சாப்பாடு போடவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே அங்கிருந்தவர்களில் ஒருவர் இவரிடம் சந்தனம் அரைக்கச் சொல்லி ஆணையிட்டார். வேங்கடநாதனும் தன்  பசித்துன்பம் நடந்துவந்த களைப்பு எதுவும் தெரியாதிருக்கும் பொருட்டு "அக்னி சூக்தம்" என்ற ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டே சந்தனத்தை அரைக்கத் தொடங்கினார்.அக்னிபகவான் அவர் அரைத்த சந்தனத்தில் ஆவிர்ப்பவித்தார்.அதனால் அக்னியின் நெருப்புச் சூடு அந்த சந்தனத்தில் நிறைந்தது.

                                                       சாப்பாடு முடிந்து அனைவரும் தாம்பூலம் தரித்து சந்தனம் பூசிக் கொண்டனர்.அடுத்த நொடி "ஆஹா எரிகிறதே..எரிகிறதே"  என அலறத் தொடங்கினர். சந்தனம் அரைத்த வேங்கடநாதனைப் பிடித்து என்ன செய்தாய் எனக் கேட்டனர்  அவர் அக்னிசுக்தம் சொல்லியபடி சந்தனம் அரைத்ததைக் கூறியவர்  மீண்டும் அந்த சந்தனத்தை வாங்கித் தன கையில் வைத்து வருண சூக்தம் சொல்ல அந்தசந்தனம் குளிர்ந்தது. அதைப் பூசிக்கொண்ட அனைவரும் எரிச்சலில் இருந்து விடுபட்டு பெருமூச்சு விட்டனர். வேங்கடநாதனை ஒரு மகாஞாநிஎன அறிந்து அவருக்குத் தக்க மரியாதை செய்தனர்.பொன்னையும் பொருளையும் தட்சிணையாகக் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இவரது புகழ் பல ஊர்களுக்கும் பரவலாயிற்று.

                                             கிடைத்த திரவியத்தைக் கொண்டு சில காலம் தான தருமங்கள் செய்து வாழ்ந்து வந்தார். மீண்டும் கும்பகோணம் சென்று குரு சுதீந்திரரைக் கண்டு மடத்திலேயே இருக்க விருப்பம் கொண்டார். மனைவி சரஸ்வதிபாயிடம்  இதுபற்றிக் கேட்க பாவம் நடக்கப்போவது இன்னதென்று அறியாமல் அவளும் மிக்க மகிழ்ச்சியுடன் புறப்பட்டாள். மூவரும் கும்பகோணம் ஸ்ரீமடம் வந்து சேர்ந்தனர்.வேங்கடநாதன் குரு சுதீந்திரரைப் பார்த்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து நின்றார். அவரைப் பார்த்த குரு மனம் மிக மகிழ்ந்தார்.வயதாகிவிட்டதனால் முன்போல் மடத்து விவகாரங்களையும் ஸ்ரீமூலராமரின் பூஜையையும் சரியாகக் கவனிக்க இயலாமல் தவித்தபடி இருந்தார். தமக்குப் பின் சரியானவர் இந்த பீடத்திற்கு யார் வருவார் என ஏங்கிக் காத்திருந்த  சுதீந்திரர் முன்  வேங்கடநாதன் வந்துநின்றது அவருக்குப் பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்தது.

                                                                (தொடரும்)
Rukmani Seshasayee