சனி, 31 டிசம்பர், 2011

புத்தாண்டு வாழ்த்து.

பாட்டி சொல்லும் கதைகளின் வாசகர்களுக்கும் விமரிசித்தவர்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.எல்லா நலன்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்தும் உங்களின் அன்புச் சகோதரி
ருக்மணி சேஷசாயி.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

வியாழன், 15 டிசம்பர், 2011

78- புண்ணியத்தின் பலன்-

ஒரு கிராமத்தில் சாம்பசிவம் என்ற ஒரு அந்தணர் வசித்து வ்ந்தார். சிறு வயது முதலே வேதம் புராணம் முதலிய சாஸ்திரங்கள் பலவும் கற்று சிறந்த மனிதராய் திகழ்ந்தார்.அவர் எவ்வளவுதான் கற்றவராகவும் மற்றவருக்கு உபதேசிப்பவராகவும் இருந்தாலும் அந்த ஊரில் அவருக்கு மரியாதை இருந்ததே ஒழிய செல்வத்தைக் கொடுப்பவர் யாருமில்லை.
அவர் செய்யும் தொழிலுக்கு ஏற்றபடி செல்வத்தைக் கிள்ளிக் கொடுத்தார்களே அன்றி அள்ளிக் கொடுக்கவில்லை.அதனால் நிறைந்த செல்வத்தை அவரால் சேர்க்க இயலவில்லை.
அவரது மனைவியும் இவரை கையாலாகாதவர் என ஏளனமாகப் பேசி வந்தாள்.
அதே ஊரில் தனபாலன் என்ற ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் பெயருக்கு ஏற்றசெல்வ வளம் மிக்கவராகத் திகழ்ந்தார்.அவரது நிலையைச் சொல்லிக் காட்டி சாம்பசிவத்தின் மனைவி செல்வத்தைச் சேர்க்கும் வழியைப் பின்பற்றும்படி கூறிவந்தாள்.
அதனால் சாம்பசிவம் அடுத்த ஊருக்குச் சென்று பணம் சம்பாதித்து வருவதாகக் கூறிப்  புறப்பட்டார்.
அதேநாளில் தனபாலனும் தன் வியாபாரத்தின் நிமித்தமாகத் தன் வண்டியில் ஏறிக்கொண்டு அடுத்த ஊருக்குப் புறப்பட்டார்.இருவரும் ஒரே பாதையில் போய்க்கொண்டு இருந்தனர்.

தனபாலனின் வில் வண்டி ஜல்ஜல் என்று ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் சாம்பசிவமோ வேர்க்கவிறு விறுக்க நடந்து போய்க்கொண்டு இருந்தார்.
இந்த இருவரின் நிலையையும் வைகுண்டத்திலிருந்த மகாலட்சுமி  தாயார் பார்த்தாள். பின்அருகே சயனத்திலிருந்த வைகுண்ட நாயகனான நாராயணனைப் பார்த்தாள்.
கண்களை மூடிப் படுத்திருந்த அந்த மாயக் கண்ணன் புன்னகை புரிந்தார்.
அவரது புன்னகையைக் கண்டு பொறுக்காத லக்ஷ்மி "சுவாமி, இது என்ன அநீதி. சதா வேதம் ஓதிக்கொண்டு உங்களையே ஸ்மரித்துக் கொண்டு இருக்கும் இந்த அந்தணருக்கு ஏன் இந்த நிலை?அவருக்கு செல்வ வளத்தைத் தரக்கூடாதா?"என்றாள் சற்றே கோபத்துடன்.
அதே புன்னகையுடன் நாராயணர்"என்ன லக்ஷ்மி நீதானே தனத்துக்கு அதிபதி?செல்வத்தை அள்ளிக் கொடுக்கவேண்டியதுதானே?" என்றார் கள்ளச் சிரிப்போடு.
"நானே கொடுக்கிறேன் சுவாமி" என்றவளைத் தடுத்தார் நாராயணர்.
"லக்ஷ்மி, அவனுக்கு இந்த ஜன்மாவில் செல்வத்தை அனுபவிக்கும் பேறு இல்லை.நீ கொடுத்தாலும் அதை அவன் அனுபவிக்க மாட்டான்."
"கொடுப்பவள் தனலட்சுமி சுவாமி.அவனுக்கு செல்வம் எப்படி சேருகிறது என்று பாருங்கள்."என்றவளைப் பார்த்துப் புன்னகைத்த நாராயணர்,
"சரி. உன் விருப்பப் படியே அவனுக்கு செல்வம் கொடு. ஆனால்  இரண்டு முறைதான் கொடுக்கவேண்டும்." என்று அனுமதியளித்தார்.
மகாலக்ஷ்மியும் மிகவும் மகிழ்ச்சியுடன் தன் கையிலிருந்து ஒரு பொன் மூட்டையை அந்த அந்தணர் சாம்பசிவம் நடக்கும் வழியில் போட்டாள். எப்படிப்பணம் சம்பாதிப்பது என்ற எண்ணத்துடன் போய்க் கொண்டிருந்த சாம்பசிவத்துக்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.நமது ஐம்புலன்களும் நன்றாக இருக்கும் போதே நம்மால் விரைவாக நடக்க இயலவில்லையே கண்ணில்லாதவர்கள் எப்படி நடப்பார்கள்? நாமும் கண்ணில்லாமல் நடந்து பார்ப்போம் என்ற எண்ணத்துடன் தன் இரு கண்களையும் மூடிக்கொண்டு நடந்தான் சாம்பசிவம்.
 
அதே சமயம் தன் கையிலிருந்த பொன் மூட்டையை அவன் முன் போட்டாள் மகாலட்சுமி.கண்களை மூடிக்கொண்டு நடந்த சாம்பசிவம் அந்த மூட்டையைத் தாண்டிச் சென்று தன் கண்களைத் திறந்தான். "அப்பாடா, கண்ணில்லாமல்நடப்பது  ரொம்ப கஷ்டம்தான். ஆண்டவா எனக்கு நல்லபடியாகக் கண் கொடுத்திருக்கும் உனக்கு கோடானு கோடி நன்றிப்பா" என்று இரு கை கூப்பி வணங்கிவிட்டு நடந்தான்.
வைகுண்ட நாராயணன் சிரித்தார்."என்ன தேவி, உன் பக்தன் நீ கொடுத்த தனத்தை ஏற்கவில்லை போலிருக்கிறதே."
"சுவாமி, இன்னொருமுறை முயற்சித்துப் பார்க்கிறேன்."
"சரி.உன் விருப்பம்."என்று அனுமதி அளித்தார் இறைவன்.
இம்முறை அவன் கண்களில் படும்படி அந்த திரவிய மூட்டையை அவன் நடக்கும் பாதையில் போட்டாள் தேவி.
தன் முன் கிடக்கும் அந்த மூட்டையைக் கையில் எடுத்தான் அந்த ஏழை பிராம்மணன்.மகாலட்சுமி மனம் மகிழ்ந்தாள்.
நாராயணனை சற்றே கர்வத்துடன் பார்த்தாள்.இப்போதும் இறைவன் புன்னகைத்தார்.
"லக்ஷ்மி என்ன நடக்கிறது என்று பார்.உன் விருப்பம் நிறைவேறினால் எனக்கும் மகிழ்ச்சியே.என்ன செய்வது.அவன் கர்மபலனை அவன்தான் அனுபவிக்க வேண்டும்."என்றார் பெருமூச்சுடன்.அதேசமயம் கையில் எடுத்த செல்வத்தைப் 
பிரித்துப் பார்த்த சாம்பசிவம் அச்சமும் ஆச்சரியமும் கொண்டான். மக்கள் அதிகம் நடமாடாதஅந்தப்  பாதையில் யார் இந்த மூட்டையைப் போட்டிருப்பார்?யாரேனும் தேடிவருவார்களா என்று அங்கேயே காத்திருந்தான்.

அப்போது சாம்பசிவத்துக்கு முன்னாலேயே அடுத்த ஊர் சென்று  அடைந்த தனபாலன்  தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டு இருந்தான்.அங்கே அமர்ந்திருந்த சாம்பசிவனைப் பார்த்துஏன் இங்கேயே தங்கிவிட்டாய்? என்று  விசாரிப்பதற்காக வண்டியை மெதுவாக விடச் சொன்னான்.தான் தவறவிட்ட திரவியத்தைப் பற்றிக் கேட்கத்தான் வந்துள்ளான் என நினைத்த சாம்பசிவம் தன்னிடமிருந்த மூட்டையைக் கொடுத்து ஐயா, தாங்கள் தவறவிட்ட மூட்டை இதுதானா?நீங்கள் வருவீர்கள் என்றுதான் காத்திருந்தேன். இந்தாருங்கள் உங்கள் செல்வம்" என்று அந்த மூட்டையை தனபாலனிடம் கொடுத்தான். தனபாலனும் அதைப்  பெற்றுக் கொண்டு விரைந்து ஊர் வந்து சேர்ந்தான்.மிகுந்த நல்ல காரியம் செய்து விட்டது  போல் சாம்பசிவனும் மகிழ்ச்சியுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
நாராயணன் "பார்த்தாயா தேவி தனலக்ஷ்மியே கொடுத்தாலும் அந்தசெல்வம் அவனைச் சேரவில்லை பார்.இது அவனது பூர்வ ஜன்மவினை."என்றார் அதே புன்னகையோடு.
இப்போது மகாலட்சுமி நாராயணனைப் பார்த்து "நானே நினைத்தாலும் ஒருவனைச் செல்வந்தனாக ஆக்க முடியாது அவரவர் செய்த புண்ணியங்களும் பாவங்களுமே  அவர்களின் சுக துக்கங்களை முடிவு செய்கின்றன என்பதைப் புரிந்து கொண்டேன் சுவாமி."என்று கூறித  தலைவணங்கி நின்றாள்.
நாமும் எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனை பிறவிகளிலும் நன்மையே நினைப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு வாழவேண்டும்.






--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

வெள்ளி, 25 நவம்பர், 2011

77-- பாட்டி சொன்ன கதை- பகுதி- 2

பாட்டி சொன்ன கதை- பகுதி- 2
 தொலைவில்  தெரிந்த  ஒரு   வீட்டை  நோக்கிச்  சென்றனர் . சகோதரர்கள் இருவரும் அந்த வீட்டின் வாயிலில் சென்று நின்றனர். உள்ளிருந்து  பெரும் வெளிச்சம் தெரிந்தது.உள்ளே ஏதோ யாகம் நடப்பதைப் போல நெருப்பு எரிந்து  கொண்டிருந்தது. 
வாயிலில் நின்றபடியே சஞ்சயன் அழைத்தான்."ஐயா, யார் உள்ளே இருக்கிறீர்கள்?" இரண்டு மூன்று முறை அழைத்தபின்" உள்ளே வாருங்கள்" என்று ஒரு கட்டைக் குரல் கேட்டது.இருவரும் மெதுவாக உள்ளே நுழைந்தனர்.
அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களை ஆச்சரியப் படுத்திற்று.ஒரு மனிதன் ஜடாமுடியும் தாடியுமாக இருந்தவன் தன் கையில் ஒரு செடியை வைத்துக் கொண்டு அதை நெருப்பில் காட்டிக் கொண்டிருந்தான். அந்த செடியிலிருந்து சொட்டுச் சொட்டாக நீர் வடிந்து கீழே எரியும் நெருப்பில் விழுந்து கொண்டிருந்தது.
அவன் தன் வேலையை நிறுத்தாமல் "உங்களுக்கு என்ன வேண்டும்?"என்றான் கடுமையான குரலில்.
சஞ்சயன் "ஐயா, நாங்கள் ரத்தினபுரியைச் சேர்ந்தவர்கள்.அனாதைகள். தாங்கள் அடைக்கலம் தரவேண்டும்.யாரேனும் குருவை நாடிப் பிழைப்பதற்காக நாங்கள் அலைகிறோம்."என்றான் பணிவாக.
"அப்படியானால் எனக்குத் துணையாகப் பணி செய்யுங்கள். உங்களுக்கு நான் பிறகுதான் வித்தைகளைக் கற்றுத் தருவேன்."என்றுகூறி ஒரு கிண்ணத்திலிருந்து உணவு வகைகளை எடுத்துச் சாப்பிடக் கொடுத்தான்.
            இப்படியே சில நாட்கள் சென்றன.எப்போதும் அந்த மனிதன் நெருப்பின் முன் அமர்ந்து செடியை நெருப்பில் காட்டிக் கொண்டே இருப்பதைப் பார்த்த சஞ்சயன் எப்படியாவது இந்த ரகசியத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும் என நினைத்தான்.கொஞ்சம் கொஞ்சமாக அந்த மனிதனின் மனதில் தன் சேவையால் இடம் பிடித்தான்.
தம்பியை முரடனாகக் காட்டிக் கொள்ளச் சொன்னதால் அவனை விட சஞ்சயன் நல்லவன் என்று முடிவு செய்தான் அந்த மனிதன். ஒரு மந்திரவாதி என்பதைக் கண்ணாடி மூலமாகக் கண்டு பிடித்தான் சஞ்சயன்.
யாருமில்லாத அந்த காட்டுக்குள் தனக்கு பணிசெய்ய இருவர் வந்தது அந்த மந்திரவாதிக்கு மிகவும் வசதியாக இருந்தது.எனவே அவர்களைத் தனக்கு சீடர்களாக வைத்துக் கொண்டான்.துர்ஜயன் செய்யும் தவறுகளைக் கண்டிப்பதோடு நிறுத்திக் கொண்டான்.ஆனால் சஞ்சயனுக்குச் சில பொறுப்பான பணிகளைக் கொடுத்தான்.
ஒரு அமாவாசை தினம் வந்தது.மந்திரவாதி சஞ்சயனைப் பார்த்து "சஞ்சயா, என் பெற்றோருக்குத் தர்ப்பணம் கொடுத்து பல ஆண்டுகளாகின்றன.இப்போது நீங்கள் இருவரும் இருப்பதால் அந்த தர்ப்பணம்  கொடுத்து வர விரும்புகிறேன்."என்றான்.
சஞ்சயன் "அப்படியே குருவே. நான் தங்களுடன் துணை வருகிறேன். இங்கே தம்பி பார்த்துக் கொள்வான்" என்றான்.
துர்ஜயனை நம்பாத மந்திரவாதி துர்ஜயனை  உடன் வருமாறு சொல்லிவிட்டு  சஞ்சயனை அந்தச் செடியை விடாமல் நெருப்பின் முன் பிடித்துக் கொள்ளச் சொன்னான்.
பிறகு துர்ஜயனுடன் தொலைவில் உள்ள ஆற்றை நோக்கிச் சென்றான்.அவர்கள் கண் மறைந்ததும் சஞ்சயன் அந்தச் செடியைக் கீழே வைத்துவிட்டு அந்த இடத்தை சோதனை செய்யத் தொடங்கினான்.பலமூலிகை, எலும்பாலான உருவங்கள், மட்பாண்டங்கள் இவற்றோடு சிறு சிறு கல் பொம்மைகளும் இருந்தன.
திடீரென சஞ்சயனுக்கு மந்திரவாதி வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் தோன்றவே அவன் என்ன செய்கிறான் என்பதை அறிய விரும்பினான்.தன் கையிலிருந்த கண்ணாடியைப் பார்த்து அதில் தன் குரு என்ன செய்கிறார் எனக் கேட்டுப் பார்த்தான்.
பார்த்தவுடன் திடுக்கிட்டான்.அதில் தன் தம்பி துர்ஜயனை ஒரு கல் பொம்மையாக ஆக்கித்  தன் மடியில் கட்டிக்கொள்வதையும் அவனது உடல் நடுங்குவதையும்,அவன் வேகமாக அங்கிருந்து வருவதையும்  பார்த்தான்.உடனே பழையபடி செடியைத் தன் கையில் வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான் சஞ்சயன்.
கோபத்துடன் உள்ளே நுழைந்த மந்திரவாதி "அடேய், சஞ்சயா, ஏனடா செடியைக் கீழே வைத்தாய்? உன்னால் என் தவத்துக்கு குறை ஏற்பட்டுவிட்டதே.ஓடு இனியும் என்முன் நில்லாதே."என்று விரட்டி விட்டான்.
"ஐயா, என் தம்பி..."
"அவன் நீரோடு போய் விட்டான். அவனை இனி நீ பார்க்க இயலாது. போய்விடு இங்கிருந்து.இல்லையேல் சபித்துவிடுவேன்."என்றபோது இவனை என்ன உபாயத்தால் வெல்வது என்ற சிந்தனை வயப்பட்டவனாகத் தலைகுனிந்து வெளியேறினான் சஞ்சயன்.
அவன் மனம் மட்டும் தம்பியின் பிரிவால் மௌனமாக அழுது கொண்டிருந்தது.கால் போன போக்கில் நடந்து ரத்தினபுரியை அடைந்தான்.வருத்தத்துடன் இரத்தினபுரி ராஜவீதியில் நடந்துகொண்டிருந்தான்.ஊர் மக்கள் ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டிருப்பதைக் கண்டான்.என்னவென்று விசாரித்தபோது பல ஆண்டுகளாக அழுது கொண்டிருந்த ராஜகுமாரி சில நாட்களுக்கு முன் ஒரு நாழிகைப் பொழுது அழுகையை நிறுத்தி சிரித்தாள். மீண்டும் அழத் தொடங்கிவிட்டாள். மன்னர் இது எப்படி நடந்தது எனத் தெரியாமல் தவிக்கிறார்.ஊர் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தான்.
சஞ்சயன் சிந்தித்தான்.சடாரென அவனுக்கு நினைவுக்கு வந்தது.மந்திரவாதியின் கையிலிருந்த அந்தச் செடிக்கும் இளவரசி அழுவதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கவேண்டும் என நினைத்தான்.ஏனெனில் சஞ்சயன் ஒரு நாழிகைப் பொழுது அந்தச் செடியைக கீழே வைத்த அதே நேரம்தான் இளவரசி இங்கே அழுகையை நிறுத்தியிருக்கிறாள்.என்பதைப் புரிந்து கொண்டான்.உடனே மன்னனைச் சந்திக்க அரண்மனை சென்றான்.மன்னனைக் கண்டு தான் எப்படியும் ஒரு மாதத்திற்குள் இளவரசியின் அழுகையை நிறுத்துவதாகக் கூறிப் புறப்பட்டான்.
தன்னுடன் நான்கு வீரர்கள் மட்டும் போதும் என்று சொல்லி அவர்களுடன் ஒரு ரிஷி போல வேடமணிந்து புறப்பட்டான் சஞ்சயன்.அவர்கள் அனைவரும் மந்திரவாதி இருக்கும் இல்லத்தின் அருகே காட்டுக்குள் தங்கினர். சஞ்சயன் மட்டும் கமண்டலத்துடன் நதிக்குப் போவதுபோல் மந்திரவாதியின் வீட்டுக்குள் சென்றான்.இடத்தைவிட்டு எழாத மந்திரவாதி" யார்நீ இங்கு ஏன் வந்தாய்?" என்று இரைந்தான்.
"குழந்தாய் உனக்கு உன் ஆயுளைப் பற்றக் கூறவே நான் வந்தேன்." என்றான். மந்திரவாதி பெரிதாக நகைத்தான்.
"என்ன, ஏன் ஆயுளைப் பற்றியா?" 
"ஆம் மகனே, உனக்கு இன்னும் சிறிது நேரத்தில் ஆயுள் முடியப் போகிறது."
"இதோ பார் உன் தலை இப்போது உருளப் போகிறது." என்றபடியே இடது கையால் கத்தியை வீசினான்.ஆனால் காட்டில் அம்மை கொடுத்த வாளால் அதைத் தடுத்தான் சஞ்சயன்.மந்திரவாதி திடுக்கிட்டான். தன் மந்திரசக்திவாய்ந்த வாளைத் தடுத்த அந்த சன்னியாசியை எதிர்க்க எழுந்து நின்றான்.
தன்னை நோக்கிப் பாய்ந்து வந்த மந்திரவாதியிடமிருந்து குனிந்து தப்பிய சஞ்சயன் அந்தச் செடியைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினான்.ஒரு கையில் செடியும் மறுகையில் மந்திர வாளுமாக ஓடிய சஞ்சயனைப் பின் தொடர்ந்து ஓடினான் மந்திரவாதி.ஆனால் தங்களின் மறைவிடத்திற்கு சென்று தன் வீரர்களுடன் சேர்ந்து கொண்டான் சஞ்சயன். அந்தச் செடியைக் கீழேவைக்காமல் தன் மடியில் இருந்த கண்ணாடியை  எடுத்துப் பார்த்தான். "கண்ணாடியே இந்தச் செடியைப் பாதுகாப்பாக எங்கே வைப்பது என்பதைக் காட்டு" என்றபடி கண்ணாடியைப் பார்த்தான்.
கண்ணாடிக்குள் அருகே இருந்த ஆறு தெரிந்தது. சற்றும் தாமதிக்காத சஞ்சயன் இரண்டு வீரர்களுடன் ஆற்றை நோக்கி வேகமாகச் சென்றான்.தூரத்தில் வந்து கொண்டிருந்த மந்திரவாதி தன் கையைச் சுழற்றி ஏதோ முணு முணுத்தான்.ஆனால் அவன் அவசரத்தில் தன் மந்திரக் கொலைக் கொண்டு வர மறந்து விட்டான். அதனால் அவனது மந்திரம் எதுவும் பலிக்கவில்லை.சற்றும் தாமதிக்காத சஞ்சயன் அந்தச் செடியை ஆற்றில் தூக்கி எறிந்தான்.
அதைப் பார்த்த மந்திரவாதி" ஐயோ என் தவமெல்லாம் போயிற்றே. நூறு பேரைப் பலியிட்டு மகாசக்தியைப் பெற எண்ணினேனே.என் கனவும் தவமும் போச்சே.உன்னை என்ன செய்கிறேன் பார்" என்றபடி சஞ்சயன் மீது பாய்ந்தான். அதற்குள் உடன் வந்திருந்த வீரர்கள் அவனைப் பாய்ந்து பிடித்துவிலங்கிட்டனர்.
அவனையும் இழுத்துக் கொண்டு அவன் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தனர்.சஞ்சயன் அவனது வீட்டைச் சோதனை போட்டான் எல்லாவற்றையும் தூக்கி வீசினான். வேகம் வேகமாகத் தன் தம்பியைத் தேடினான்.மந்திரவாதியோ சிரித்தான்."உன் தம்பிதான் நீரோடு போய் விட்டானே அவனை இங்கு ஏன் தேடுகிறாய்" என்று திமிறுடன் பேசினான்..
மறைவாகச் சென்ற சஞ்சயன் கண்ணாடியை எடுத்து தம்பியைப் பற்றிக் கேட்க அது ஒரு பெட்டியைக் காட்டிற்று.மிகவும் கஷ்டப்பட்டுத் தேடி அந்தப் பெட்டியைக் கண்டு பிடித்தான் சஞ்சயன்.அதைத் திறந்தபோது தொண்ணூற்று ஒன்பது பொம்மைகள் அந்தப் பெட்டிக்குள் இருப்பதைக் கண்டான்.
 செடியும் முழுவதும் வாடியபின் சஞ்சயனைச் சேர்த்து நூறு பேராக பலி கொடுக்க எண்ணியருந்தான் அந்த மந்திரவாதி என்பதைப் புரிந்து கொண்டான்.அப்போதுதான் அவனுக்கு மேலும் பல சக்திகள் கைகூடும் என்ற செய்தியையும் அறிந்தான்.
இந்த தொண்ணூற்று ஒன்பது   பேரும் உயிர் பெற என்ன வழி என்று மந்திரக் கண்ணாடியைக்  கேட்க அது மந்திரவாதியின் மந்திரக்கோலைக் காட்டிற்று.அது எரியும் நெருப்புக்குக் கீழே இருப்பதைக் காட்டவே குடம் நீரைஎடுத்து நெருப்பை அணைத்தான்.அதே சமயம் மந்திரவாதி உயிரற்றுக் கீழே விழுந்தான்.அந்த மந்திரக் கொலை எடுத்துத் தன் தம்பிமீது தட்டவே அவன் உயிர் பெற்று எழுந்தான். தம்பியைக் கட்டிக் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்தான்.பின் தொண்ணூற்று ஒன்பது அரசகுமாரர்களும் உயிர் பெற்று எழுந்து சஞ்சயனை வணங்கினர். 
பின்னர் அனைவரும் ரத்தினபுரியை அடைந்தனர்.ரத்தினாங்கியும் தன் அழுகையை நிறுத்தி ஆனந்தமாக சிரிக்கத் தொடங்கி விட்டாள். 
வெற்றி பெற்று வரும் சஞ்சயனையும் பிற அரசகுமாரர்களையும் வரவேற்க மன்னன் ரத்தினவர்மன் காத்திருந்தான்.
இதற்குள் வெற்றிச் செய்தியை சஞ்சயனின் தந்தை சத்திய சீலருக்கு அறிவித்து சஞ்சயன் ரத்தினாங்கி இருவரின்  திருமணத்திற்கு வரும்படி தூதுவரை அனுப்பிவிட்டான் ரத்தினவர்மன்.
வெற்றிவிழாவும் பட்டமேற்பு விழாவும் ஒன்றாக நடந்தது.இரத்தினபுரிக்கு மன்னனாக சஞ்சயனும் சத்தியபுரி மன்னனாக துர்ஜயனும் பட்டமேற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அத்துடன் இவர்களின் நல்லாட்சியால் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.இந்த மகிழ்ச்சிக்குக் காரணமான சஞ்சயனின் நல்ல பண்பையும் வீரத்தையும் பாராட்டி மகிழ்ந்தனர்.
 







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

வெள்ளி, 11 நவம்பர், 2011

76 -பாட்டி சொன்ன கதை.பகுதி -- 1

பாட்டி சொன்ன கதை. பகுதி -- 1
இந்த முறை சற்று வித்யாசமாக இருக்கட்டும் என்று எனக்கு என் பாட்டி சொன்ன கதையை உங்களுக்குச் சொல்கிறேன் இது ரசிப்பதற்கு மட்டும் என்று நினைக்காமல் இதிலும் ஏதேனும் நல்ல விஷயம் இருக்கும் என்று தோன்றினால் அதைப் புரிந்து  கொள்ளவும்.
          இரத்தினபுரி என்ற நாட்டை ரத்தினவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு ரத்னாங்கி என்ற பெயருள்ள மகள் ஒருத்தி இருந்தாள்.அவள் பிறந்த நாள் முதல் அழுது கொண்டே இருந்தாள். அவள் பெரியவளான பின்பும் அழுகையை நிறுத்தவில்லை.
அவள் அழும் காரணத்தை மன்னன் எவ்வளவு கேட்டும் கூறாமல் அழுதுகொண்டே இருந்தாள். யாராலும் அவள் அழுகையை நிறுத்தவே இயலவில்லை.அதனால் அவளைத் தனியே ஒரு அரண்மனையில் விட்டு சில சேடிப் பெண்களையும் துணைக்கு வைத்து விட்டான் மன்னன் ரத்தினவர்மன்.தனக்குப் பின் நாடாள வேண்டிய  தன் மகள் இவ்வாறு எப்போதும் அழுது கொண்டிருக்கிறாளே என்று மன்னன் மிகவும் கவலைப் பட்டான்.தன் மந்திரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தான்.
            அவனது மந்திரிகளுள் ஒருவர் ஒரு ஆலோசனை சொன்னார்.அதன்படி தன் மகளின் அழுகையை யார் நிறுத்துகிறார்களோ அவருக்கே அவளை திருமணம் முடித்து தன் நாட்டையும் தருவதாக பறை அறைவித்தான்.
இச்செய்தி அக்கம்பக்கத்து நாடுகளுக்கும் எட்டவே பல நாட்டு அரசகுமாரர்களும் ரத்னாங்கியின் அழுகையை நிறுத்த எண்ணம் கொண்டு இரத்தினபுரிக்கு வந்தனர்.ஆனால் எவ்வளவு முயற்சித்தும் ரத்னாங்கியின் அழுகையை யாராலும் நிறுத்த இயலவில்லை.
           ரத்தினபுரிக்குப் பக்கத்து நாடான சத்தியபுரியின் மன்னன் சத்தியசீலன். அவனுக்கு இரண்டு பிள்ளைகள்.மூத்தமகன் சஞ்சயன்.இரண்டாவது மகன் துர்ஜயன்.இவர்கள் இருவரும் இரத்தினபுரியின் இளவரசியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளது அழுகையைத் தாங்கள் நிறுத்துவதாகக் கூறிவிட்டு சத்தியசீலனிடம் ஆசிபெற்றுப் புறப்பட்டனர்.
இருவரும் காட்டுவழியேகுதிரையில்பயணம் செய்து  களைத்துப் போய் ஒரு மரத்தடியில் இளைப்பாற அமர்ந்தனர்.அப்போது அருகே யாரோ முனகும் சத்தம் கேட்கவே சஞ்சயன் திரும்பிப் பார்த்தான். ஒரு வயதான அம்மா அங்கே படுத்திருந்தாள். அவளிடம் சென்று விசாரிக்க சஞ்சயன் எழுந்தபோது துர்ஜயன் அவனைத் தடுத்தான்.ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் சஞ்சயன் அந்த அம்மாளிடம் என்னவாயிற்று என்று கேட்டான்.
"அப்பா, நான் என் குடிசைக்குப் போகவேண்டும். நடக்கமுடியவில்லை.தண்ணீர் தாகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து தருகிறாயா?"
அப்போது அங்கே வந்த துர்ஜயன்,"வேறு வேலையில்லை? சஞ்சயா, நமக்கு நேரமாகிறது போகலாம் வா," என்று அவனை அழைத்தான்.அவனைத் தடுத்து நிறுத்திய சஞ்சயன் தன்னிடம்  இருந்த குடுவையிலிருந்து கொஞ்சம் நீரை அந்த அம்மைக்குக் கொடுத்தான். தாகம் தீர்ந்த அந்த அம்மாவும் அவனை வாழ்த்தினாள்.அத்துடன் தன் இடுப்பில்  இருந்த ஒரு வாளை எடுத்துக் கொடுத்தாள். "இந்த வாள் உன் கையில் இருக்கும் வரை நீ எல்லோரையும் ஜெயித்துக் கொண்டே இருப்பாய்."என்று ஆசி கூறி அனுப்பினாள்.
அவளை வணங்கி அந்த வாளைப் பெற்றுக் கொண்ட சஞ்சயன் தம்பியுடன்  இரத்தினபுரி நோக்கிப் புறப்பட்டான்.

              வெகு தொலைவு வந்தும் காட்டைவிட்டு வெளியே வர வழி தெரியவில்லை. வழி தவறி விட்டோம் என சஞ்சயன் அறிந்து கொண்டான்.தம்பியிடம் இது பற்றி சொன்னபோது அவன் இங்கேயே படுத்துக் கொள்வோம் என்று படுத்து விட்டான்.நிலவு வெளிச்சத்தில் சஞ்சயன் தண்ணீர் தேடிப் புறப்பட்டான்.அருகே ஒரு சுனை தெரிந்தது. அதை நெருங்கிய போது அருகே ஒரு முதியவர் முள் செடி மீது படுத்திருந்தார்.
அவர்" தம்பி தயவு செய்து என்னைத் தூக்கி அந்தப் பக்கமாகப் படுக்கவை. உனக்குப் புண்ணியமாய்ப் போகும்" என்றபோது சஞ்சயன் ஐயோ பாவம் என்றபடி அவரைத்தூக்க அவர் திடீரென்று மறைந்தார். அங்கே ஒரு கந்தர்வன் தோன்றினார்.
"சஞ்சயா, சாபத்தால் பல ஆண்டுகளாக இந்தக் காட்டில் தவித்தபடி கிடந்தேன்.ஒரு பௌர்ணமி நாளில் நல்ல மனம் படைத்த அரசகுமாரன் உன்னைதொட்டால்  நீ உன் சாபம் நீங்கப் பெறுவாய் என்று முனிவர் கூறினார். இன்று பௌர்ணமி. யாரேனும் வரமாட்டார்களா எனக் காத்துக் கிடந்தேன்.நீ வந்தாய். உன்னால் என் சாபம் நீங்கப் பெற்றேன்.
இதோ இந்தக் கண்ணாடியைப் பெற்றுக்கொள். நீ பார்க்கவிரும்பும் செய்தியை இது உனக்குக் காட்டும்."என்று கூறி ஒரு சிறு கண்ணாடியைக் கொடுத்தார்.
நன்றி சொல்லிய சஞ்சயன் வணங்கி அதைப் பெற்றுக் கொண்டான். கந்தர்வன் மறைந்தபின் சஞ்சயன் நீரை குடுவையில் நிரப்பிக் கொண்டு தம்பி இருக்கும் இடத்துக்கு வந்து படுத்துக் கொண்டான்.
மறுநாள் சூரியன் உதிக்கும் முன் இருவரும் எழுந்து புறப்பட்டனர்.நேரம்  ஆக ஆக இருவருக்கும் நல்ல பசி எடுத்தது. எங்காவது மனிதரோ வீடோ தென்படாதா எனத் தேடினர்.வெகு தொலைவில் ஏதோ புகை மூட்டம் தெரியவே அந்த இடத்தை நோக்கி இருவரும் வேகமாகத் தங்கள் குதிரையைச் செலுத்தினர்.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

புதன், 26 அக்டோபர், 2011

நல்வாழ்த்து

பாட்டி சொல்லும் கதைகளைப் படித்து ரசிப்பவர்களுக்கும் படித்ததை விமர்சிக்கிறவர்களுக்கும் மற்றுமுள்ள இனிய சகோதர சகோதரியருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அன்புடன், 
ருக்மணி சேஷசாயி


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

சனி, 15 அக்டோபர், 2011

75- கணக்கு நேரான கதை


ஒரு முறை தெனாலிராமன் அரசவைக்குள் செல்ல முயன்றான்.அப்போது காவலர் அவனை வழி மறித்தனர்.
"ஏன் என்னை வழி மறிக்கிறீர்கள்?" என்று கேட்டபோது," எங்களைக் கவனித்துவிட்டுச் செல்" என்றனர்  காவலர்.அப்போது ராமன் புரிந்து கொண்டான்.அவர்கள் கையூட்டுக் கேட்கின்றனர் என்பதை.அவர்களுக்கு அவர்கள் வழியிலேயே சென்று அறிவுறுத்தவேண்டும் என முடிவு செய்து கொண்டான்.
"ஐயா, நான் ஒரு புலவன் அரசரிடம் பாடிக் காட்டிப் பரிசில் பெற்றுப் போகவே வந்தேன்.உங்கள் விருப்பப் படியே அரசர் கொடுக்கும் பரிசிலை நான் அப்படியே உங்களிடம் தந்து விடுகிறேன். நீங்கள் பார்த்துக் கொடுப்பதை நான்பெற்றுச் செல்கிறேன்." என குழைந்து பேசினான்.
காவலரும் அவனை எச்சரித்து உள்ளே அனுப்பினர். 
அவைக்குள் நுழைந்த ராமன் மக்களுடன் கலந்து அமர்ந்து கொண்டான்.அந்த அவைக்கு பல வழக்குகள் வந்தன. அவற்றுக்கெல்லாம் அப்பாஜி யின் ஆலோசனையின் படி மன்னர் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்.அப்போது மூன்று சகோதரர்கள் வந்து ராயரை வணங்கி நின்றனர்.
அவர்களின் வழக்கு என்ன என்று மன்னர் கேட்டார். வந்த மூவரில் மூத்தவன் கூறினான்.
"மகாராஜா, எங்கள் தந்தையார் ஒரு யானைப் பாகன். அவரிடம் இருந்த சொத்துக்கள் மொத்தம் பதினேழு யானைகள்தான்.அவற்றை எங்களுக்குப் பாகம் பிரித்து எழுதி வைத்துள்ளார்."
"அப்புறமென்ன? அவரது சொல்படி பாகத்தைப் பிரித்துக் கொள்ள வேண்டியதுதானே? அதிலென்ன சிக்கல்?"
"அதில்தான் சிக்கல் மகாராஜா,"
அமைதியாக நின்றிருந்த அப்பாஜி கேட்டார்."உங்கள் வழக்கை விவரமாகக் கூறுங்கள்.அப்போதுதான் மன்னர் சரியான தீர்ப்பு வழங்க முடியும்."
இப்போது இரண்டாவது மகன் கூறினான்."பிரபு, எங்கள் தந்தையார் மூத்தவனுக்கு சரிபாதி யானையைத் தரச் சொல்லியுள்ளார்.பதினேழில் பாதி எட்டரை அல்லவா?எப்படிக் கொடுப்பது? முதலாவதுதான் சிக்கல் என்றால் அடுத்தது அதற்குமேல் இருக்கிறது."
"அதையும் சொல்லிவிடப்பா."என்றார் அப்பாஜி.
இரண்டாவது மகனான எனக்கு மீதியில் மூன்றில் ஒரு பங்கு.எட்டரையில் மூன்றில் ஒரு பங்கு எப்படிக் கணக்கிடுவது?"
"மூன்றாமவனுக்கு?"என்று  கேட்ட ராயரிடம் "மீதியில் மூன்றில் ஒரு பங்கு என்று எழுதிவிட்டு இறந்துவிட்டார். இந்த உயிலின் படி தாங்கள்தான் எங்களின் பாகத்தைச் சரியாகப் பிரித்துத் தரவேண்டும்."என்று வேண்டுகோள் வைத்தான் மூன்றாவது மகன்.
அப்பாஜியும் கிருஷ்ண தேவராயரும் சிந்தனை வசப்பட்டனர்.எவ்வளவு யோசித்தும் கணக்கைத் தீர்க்கும் வழி தோன்றவில்லை.ஆனால் இதில் ஏதோ ரகசியம் இருக்கும் என்று மட்டும் மன்னருக்குத் தெரிந்தது. ஆனால் என்னவென்று புரியவில்லை.
வெகு நேரம் சபை அமைதியாக இருந்தது.மக்களின் கூட்டத்திலிருந்து தெனாலிராமன் எழுந்து நின்றான்.
"மாமன்னர் என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் சம்மதித்தால் இந்த வழக்கை நான் தீர்த்து வைக்கிறேன்" என்றான் வணங்கியபடியே.
ராமகிருஷ்ணனைக் கண்டு மன்னர் புன்னகைத்தார். "வா ராமகிருஷ்ணா, உன் தீர்ப்பை நீ சொல்."
ராமன் உடனே ஓடிச் சென்று சபை நடுவே நின்றான்.
"மகாராஜா, இப்போது பதினேழு யானை பொம்மைகளைக் கொண்டு வரச் சொல்லுங்கள்." என்றான்.அதன்படியே பொம்மைகள் ராமனுக்கு முன்னால் வைக்கப் பட்டன.
"எல்லோரும் பாருங்கள்.இப்போது நானும் ஒரு யானையில் வருகிறேன்.எங்கே இன்னொரு யானைபொம்மை கொண்டு வாருங்கள்."
இன்னொரு யானை பொம்மை கொண்டு வரப்பட்டது.
ராயர் கேள்விக்குறியுடன் ராமனைப் பார்த்தார்.ராமன் "மகாராஜா மன்னிக்க வேண்டும்.நீதி சொல்லும் நான் யானையின் மேல் வரக்கூடாதா?"என்று சொல்லவே சிரித்தபடி அனுமதியளித்தார் ராயர்.
இப்போது ராமன் கணக்கை சீராக்கத் தொடங்கினான்."ஐயா,இப்போது மொத்தம் பதினெட்டு யானைகள் உள்ளன அல்லவா? முதல் மகனான உங்களுக்கு எவ்வளவு யானைகள்?"
"இவற்றில் சரி பாதி."
"அப்படியானால் ஒன்பது.சரிதானே?"
"சரிதான் ஐயா."தன்னிடம் கொடுக்கப்பட்ட ஒன்பது யானைகளுடன் அவன் விலகி நின்றான்.."அடுத்த மகன் வாருங்கள்" அடுத்தவன் வந்து நின்றான்.
"உங்களுக்கு எவ்வளவு யானைகள்?"
"மீதியில் மூன்றில் இரண்டு  பங்கு."
"மீதி எவ்வளவு?" 
"ஐயா,மீதி ஒன்பது அதில் மூன்றில் இரண்டு பங்கு ஆறு."
"இதோ உமக்கு ஆறு யானைகள்."கடைசியாக மீதி மூன்று யானை பொம்மைகள் இருந்தன.மூன்றாமவனை அழைத்த ராமன் "உமக்கு எவ்வளவு யானைகள் ?" என்று கேட்டான்.
அவனும் "எனக்கு மீதியில் மூன்றில் இரண்டு பங்கு" எனக கூற அவனுக்கு மீதியிருந்த மூன்று யானைகளில் இரண்டு யானையைக் கொடுத்தான் ராமன். 
"இப்போது மீதி இருப்பது ஒரு யானை. நான் ஏறி வந்த அந்த  யானையின் மீதே நான் ஏறிச் செல்லலாமா மகாராஜா"?என்று கேட்டுவிட்டு பணிவுடன் நின்றான் ராமன்.
உயிலின்படி முதல் மகனுக்கு ஒன்பது யானைகளும் இரண்டாவது மகனுக்கு ஆறு யானைகளும் மூன்றாவது மகனுக்கு  இரண்டு யானைகளும் உரியன   என தீர்ப்புக்கூறினார் மன்னர்.சிறப்பாக பாகப்பிரிவினை செய்த தெனாலிராமனைப் பாராட்டிய ராயர் அவனுக்கு என்ன பரிசு வேண்டும் எனக் கேட்டார்.
தெனாலி ராமனுக்கு உடனே வாயில்காப்போனின் நினைவு வந்தது.
 "மகாராஜா, நான் கேட்கும் பரிசைத் தாங்கள் தட்டாமல் தரவேண்டும்.மறுக்கக்கூடாது."
"மறுக்கமாட்டேன். கேள் ராமகிருஷ்ணா"
"எனக்குப் பரிசாக நூறு கசையடிகள் வேண்டும்.அதையும் இந்தச் சபையிலேயே தரவேண்டும்."
அனைவரும் திகைத்தனர்.ராமனுக்கு என்ன பைத்தியமா?
ஆனால் ராமன் மீண்டும் அதையே கூறவே வேறு வழியில்லாமல் மன்னரும் காவலனிடம் ராமனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கும்படி ஆணையிட்டார்.அவனும் கசையைத் தடவியபடி வந்து நின்றான்.அப்போது ராமன் "மகாராஜா, எனக்குக் கிடைக்கும் பரிசில் பாதியை ஒருவருக்கும் மீதியை மற்றொருவருக்கும் தருவதாக வாக்களித்துள்ளேன் அவர்களுக்கு இந்தப் பரிசுகளைத் தரவேண்டும்."என்றான்.
 ராயர் புரிந்து கொண்டார். அவர்  கண்கள் சிவந்தன.உடனே அவர்களை அழைத்து வருமாறு கட்டளையிட்டார்.இரண்டு வாயில் காப்போரும் நடுங்கியபடியே வந்து நின்றனர்.
மன்னர் "என் நாட்டிலே லஞ்சமா கேட்டாய்?அரண்மனையில் பணிபுரியும் நீ லஞ்சம் கேட்டதற்காக உன் தலையைக் கொய்தால் என்ன?"
எனக் கேட்டு அவர்களுக்கு ஐம்பது கசையடிகள் கொடுத்துச சிறையிலும் அடைக்கச் சொல்லி ஆணை பிறப்பித்தார்.
பின்னர் ராமகிருஷ்ணனுக்குப்  பெரும்பொருள் பரிசாகக் கொடுத்துப் பாராட்டினார்.
 சரியானபடி தீர்ப்புக் கூறியதுமல்லாமல் லஞ்சம் கேட்டவனுக்கும் அறிவு வரும்படி செய்த தெனாலிராமனைப் பாராட்டியபடி மக்கள்  கலைந்து சென்றனர்.








ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

திங்கள், 3 அக்டோபர், 2011

74- பேராசை பெருநஷ்டம்

பெருமாள் என்பவரும் நாகப்பன் என்பவரும் மிகவும் நண்பர்களாக இருந்தனர். எப்போதும் இருவரும் ஒன்றாகவே எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். ஒன்றாகவே அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள்.அவ்வூரில் அனைவருக்கும் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது தெரியும்.
இருவருக்கும் திருமணம் முடிந்து பலகாலம் ஆகியும் குழந்தைச் செல்வம் இல்லை.நாகப்பன் எல்லாத தெய்வங்களையும்  வேண்டிக்கொண்டார். சில ஆண்டுகளில் நாகப்பனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
மகன் பிறந்த மகிழ்ச்சியைத தன் சக்திக்கும் மீறி ஒரு விழாவாகக் கொண்டாடினார் நாகப்பன்.பின்னர் தன் மகனுக்காக மிகவும் பாடுபட்டு உழைத்து பணம் சேர்த்தார் நாகப்பன்.அவரது கடும் உழைப்போடு சரியாக சாப்பிடாமலும் தூங்காமலும் எப்போதும் செல்வம் சேர்ப்பதிலேயே கவனமாக இருந்ததால் விரைவிலேயே நோய்வாய்ப்பட்டார் நாகப்பன்.
நாகப்பனின் மகன் பிறந்த சில ஆண்டுகளிலேயே அவரது மனைவியும் இறந்து விட்டதால் தன் மகனை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டி வந்தது. இப்படி எல்லாப் பொறுப்புகளும் சேர்ந்ததால் நாகப்பன் விரைவிலேயே கடும் நோய்க்கு ஆளானார்.தன் மகனுக்கு  இப்போதுதான் பத்து வயதாகிறது. தனக்குப் பின் தன் மகனைப பார்த்துக் கொள்ள சரியான ஆள் தன் உயிர்நண்பன் பெருமாள்தான் என முடிவு செய்தார்.
நண்பனை அழைத்தார்.
"பெருமாள், நான் இனி வெகு நாட்கள் வாழ மாட்டேன். எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் நீதான் என் மகனைப பார்த்துக் கொள்ள வேண்டும்."
"என் உயிர் நண்பன் நீ. உன்னைப் பிரிந்து நான் எப்படி உயிர் வாழ்வேன்."
"அப்படிச் சொல்லாதே. நான் விட்டுச் செல்லும் கடமைகளை நிறைவேற்றுவதுதான் இந்த உன் உயிர் நண்பனுக்கு நீ செய்யும் கடமையும் கைம்மாறும் ஆகும். எனவே என் மகனை உன் மகனாகப் பார்த்துக் கொள்."எனக் கண்ணீருடன் கேட்டுக் கொண்டு பத்து வயதான தன் மகனின் கரங்களைப் பிடித்துத் தன் நண்பன் பெருமாளின் கரங்களில் வைத்தார் நாகப்பன்.
"மகனே, குமரா, இனி இவர்தான் உனக்கு தாயும் தந்தையும்.இவரது சொல் கேட்டு நடந்து பெரியவனாகி என்னைப் போல் நல்லவன் என்று பெயர் பெறவேண்டும்."
தந்தையின் சொல்லைக் கேட்ட குமரன் "அப்படியே செய்கிறேன் அப்பா."என்றான் அழுதுகொண்டே.
நாகப்பன் தன் நண்பனைப் பார்த்து "பெருமாள், என்னுடைய இத்தனை நாள் சேமிப்பாக பத்து லட்சம் ரூபாய்களை உன்னிடம் தருகிறேன் என் மகனுக்குத் தக்கவயது வந்ததும் நீவிரும்பும் பணத்தை அவனுக்குக் கொடுத்து அவனையும் வாழ வைக்கவேண்டுமென்று உன்னை வேண்டிக் கொள்கிறேன்."என்று தன் கரங்களைக் கூப்பிக் கேட்டுக் கொண்டார் நாகப்பன்.
"இது என் கடமை நாகப்பா.நீ கவலையே படாதே.உன் மகன் நல்லபடியாக வாழ்வான்."என்ற பெருமாளின் சொல்லைக் கேட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் நாகப்பன்.
சிலநாட்களில் நாகப்பன் இறந்துவிட குமாரனைத் தன்னுடன் அழைத்துச் சென்று வளர்த்து வ்ந்தார் பெருமாள். ஆண்டுகள் கடந்தன.
இப்போது குமரனுக்கு இருபது வயதாகிவிட்டது. அவனுக்குத் தன் தந்தையார் கூறியது நினைவுக்கு வந்தது. தந்தை விட்டுச் சென்ற பணியத் தான் தொடர்ந்து செய்ய விரும்பினான்.அத்துடன் இனியும் பெருமாளுக்குச் சுமையாக இருக்க விரும்பவில்லை.எனவே தனியே வாழ்வது என்று முடிவு செய்தான். 
ஒருநாள் பெருமாளிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.பெருமாளும் மகிழ்ச்சியுடன் "அதற்கென்ன, அப்படியே செய்.உன் விருப்பமே என் விருப்பம்."என்று மகிழ்ச்சியுடன் விடை கொடுத்தார்.அத்துடன் நாகப்பன் தன்னிடம் கொடுத்த பணத்தில் ஒரு லட்சம் ரூபாயையும் அவனிடம் கொடுத்தார்.அதைக் கண்டு திகைத்தான் குமரன்.
"ஐயா, என் தந்தையார் தங்களிடம் பத்துலட்சம் கொடுத்துள்ளார். தாங்கள் ஒரு லட்சம் திருப்பித் தருகிறீர்களே?இத்தனை ஆண்டுகள் நான் உழைத்ததற்கும் தாங்கள் எந்தப் பணமும் தரவில்லை. இன்றோ என் பணத்தையே தராமல் இப்படிச் செய்கிறீர்களே! தங்கள் நண்பருக்கு நீங்கள் தரும் மரியாதை இதுதானா?"
பெருமாள் கோபத்துடன் பேசினார்."இதோ பார் உன் தந்தையார் என்னிடம் கூறும்போது நான் விரும்பும் பணத்தை உனக்குத் தரச் சொன்னாரல்லவா?அதன்படிதான் செய்துள்ளேன்.போய்வா.இதை வைத்துப் பிழைத்துக் கொள்."
வாலிபனான குமரன் மனம் அழுதது.பெருமாளின் பேராசையைக் கண்டு மனம் வருந்தினான்.ஆனால் தன் தந்தை தனக்காகக் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தை விட்டுவிடவும் மனம் இல்லை.என்ன செய்வது என்று சிந்தித்தான்.
அந்த ஊரில் மரியாதை ராமன் என்று ஒரு திறமைசாலி அறிவாளி இருந்தார். அவர் பல வழக்குகளை நல்ல விதமாகத் தீர்த்துவைப்பதாகக்  கேள்விப்பட்டான்.அவரது துணையை நாடுவது என்று முடிவு செய்தான்.
நேராக மரியாதைராமன் இருந்த இல்லத்தை நோக்கிச் சென்றான்.அவரிடம் தன் வழக்கை எடுத்துச் சொன்னான்.மரியாதைராமன் வழக்கைக் கூர்ந்து கேட்டுக் கொண்டார்.மறுநாள் பெருமாளையும் தன் இல்லத்திற்கு வரச் சொன்னார்.இப்போது பெருமாளும் குமரனும் மரியாதைராமன் முன் நின்றனர்.
மரியாதைராமன் பெருமாளிடம் விசாரித்தார்.பெருமாள்"ஐயா, நாகப்பன் இறக்கும்போது என்னிடம் பத்து லட்சம் ரூபாய்கள் கொடுத்தது உண்மைதான்.குமரனைப் பாதுகாக்கும் பொறுப்பையும் என்னிடம் கொடுத்ததும் உண்மைதான்.நாகப்பன்  சாகும்போது நான் விரும்பும் பணத்தைத் தன் மகனுக்குக் கொடுக்கும்படி கூறிவிட்டுச் சென்றான்.அதனால் நான் ஒரு லட்சம் ரூபாயை குமரனுக்குக் கொடுத்தேன்.இது எப்படித் தவறாகும் ஐயா?" என்றார்.
மரியாதைராமன் சிரித்தார்."சரிதான்.நாகப்பன் கூறியது போல்தான் செய்திருக்கிறீர்கள்.ஆனால் நீ விரும்பும் பணத்தைத் தருமாறு கூறினாரல்லவா?அதில்தான் ஒரு சந்தேகம்.நீர் விரும்பும் பணத்தைத்தான் கொடுத்தீரா?"
பெருமாள் இடைமறித்துக் கூறினார்."அதிலென்ன சந்தேகம்?நான் விரும்பிய பணத்தைத்தான் கொடுத்திருக்கிறேன்."
"இல்லையே நீர் விரும்பிய பணத்தைத் தரவில்லையே. உமது நண்பர் என்ன சொல்லிச் சென்றார்?நீர் தர விரும்பிய பணம் என்று சொல்லவில்லையே. நீர் விரும்பும் பணம் என்றுதானே சொன்னார். அப்படியானால் நீர் தர விரும்பியது ஒரு லட்சம். நீர் விரும்பியது ஒன்பது லட்சம் அல்லவா?"
பெருமாள் திடுக்கிட்டார்."ஐயா, "தடுமாறினார்.
"உமது நண்பரின் வார்த்தையின்படி நீர் விரும்பும் பணம் ஒன்பது லட்சம் அல்லவா?அந்த ஒன்பது லட்சத்தை குமரனிடம் கொடுத்து விடவேண்டும்.அத்துடன் பத்து ஆண்டுகளாக அவனிடம் வேலை வாங்கிக் கொண்டு ஊதியம் ஏதும் தராததால் அவனுக்கு பத்தாண்டு ஊதியமாக ஒரு லட்சத்தையும் தந்து விட வேண்டும்.இதுவே என் தீர்ப்பு."
தனது பேராசையின் காரணமாக தனக்குக் கிடைக்கவேண்டிய ஒரு லட்சமும் கையை விட்டுப் போனதற்காக மனம் வருந்திய படியே சென்றார் பெருமாள்..
ஊர் மக்களும் பேராசை பெருநஷ்டமாகியது.பேராசைப்பட்ட பெருமாளுக்கு இது நல்ல தண்டனைதான் என்று பேசிக்கொண்டே கலைந்து சென்றனர்.








ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

73- திலகாஷ்ட மகிஷ பந்தனம்.

விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவ ராயருக்கு ஒரு சந்தேகம் வந்தது. நமது மந்திரிகள் மிகுந்த சாமர்த்திய சாலியாக உள்ளனரா என்று சோதித்து அறிந்துகொள்ள வேண்டுமென்று நினைத்தார்.அதனால் அன்று சபை கூடியதும் ஒரு வினா எழுப்பினார்.
"சபையோரே, நேற்று இரவு என் அறைக்குள் ஒரு திருடன் நுழைந்தான். அவன் என் மார்பின்மீது எட்டி உதைத்தான்.அத்துடன் அவனது இரண்டு கைகளாலும் என்னைக் கன்னத்தில் அடித்தான். அவனுக்கு என்ன தண்டனை தரலாம் என்று நீங்களே கூறுங்கள்."
"அவன் எங்கே இருக்கிறான் பிரபு?"
"அவனைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறேன்."
"அவனைக் கை கால்களை வெட்டி வீசவேண்டும்.  இல்லையில்லை.அவனுக்கு  மரண தண்டனைதான் தரவேண்டும்.அவனை நகரத்து வீதியில் நிற்கவைத்து கசையால் அடிக்கவேண்டும்."
ஒவ்வொருவரும் ஆத்திரத்துடன் பேச மன்னர் புன்னகை புரிந்தார்.
அமைதியாக இருந்த அப்பாஜியைப் பார்த்து "அப்பாஜி உங்களுக்கு ஒன்றும் தோன்ற வில்லையா?"என்று கேட்டார் மன்னர்.
புன்னகையுடன் எழுந்த அப்பாஜி"மன்னா,உங்களை உதைத்த கால்களுக்கு மாணிக்கப் பரல் வைத்த தங்கக் காப்புப் போடவேண்டும்.தங்களை அடித்த கைகளுக்கு வைர வளையல் செய்து போடவேண்டும்.தங்களின் அன்புப் பிடிக்குள் நீங்கள் கட்டி வைத்திருக்கும் இளவரசன் அல்லாது இந்தக் காரியத்தைச் செய்ய வல்லவர்கள் யார் பிரபு?" என்று கூறியபோது மன்னர் " பலே அப்பாஜி பலே!",என்று மகிழ்ச்சியுடன் பாராட்டினார்.
"நேற்றிரவு என் மகன்தான் என்னைக் காலால் உதைத்துத் தன் பிஞ்சுக் கரங்களால் என் கன்னத்தில் அடித்து விளையாடினான்.அவனைத்தான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டேன்.அப்பாஜி சரியான பதில் அளித்துவிட்டார்."
இந்த சொல்லைக் கேட்ட சபையோர் பலத்த ஆரவாரம் செய்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
அப்போது மன்னரின் சபைக்கு ஒரு புலவர் வந்திருப்பதாகக் காவல்காரன் வந்து அறிவிக்கவே,அவரை வரவேற்குமாறு அப்பாஜி கூறினார்.மிகுந்த ஆரவாரத்துடன் உள்ளே நுழைந்த அந்த புலவர்  தன்னை மிகவும் கற்றவர் எனவும் தன்னை வெல்ல யாராலும் முடியாது எனவும் அப்படி யாரேனும் தன்னை வென்று விட்டால் தான் பெற்ற பட்டங்களையும் தன் பரிசுப் பொருள்களையும் கொடுப்பதாகவும்  கூறினார்.
அவரது ஆரவாரத்தைப் பார்த்த அங்கிருந்த புலவர்கள் சற்றுப் பயந்தனர்.தாங்கள் தோற்று விட்டால் தங்களால் விஜயநகர அரசுக்குக் கெட்டபெயர் வந்து விடுமே எனத் தயங்கினர்.ராயரோ அவையில் உள்ள புலவர்களை நோக்கி 
" நம் நாட்டில் இந்தப் புலவரை வெல்ல யாரும் இல்லையா?" எனக் கேட்டார்.
 அப்போது தெனாலிராமன் எழுந்து நின்றான்."அரசே, தாங்கள் அனுமதித்தால் நான் இந்தப் புலவருடன் வாதிடுகிறேன்."
"செய் ராமகிருஷ்ணா, நம் நாட்டில் தோல்வியென்பதே வரக்கூடாது."
ராமன் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்."ஐயா புலவரே. இப்படி வாரும்.என்னிடம் இருக்கும் இந்த நூலில் இருந்துதான் தங்களிடம் வினாக்கள் கேட்கப் போகிறேன்.எல்லா வினாக்களுக்கும் தவறாமல் தாங்கள் பதில் கூறவேண்டும் அப்படிக்கூறிவிட்டால் நீர் வென்றவர் ஆவீர்".                                                
வந்த புலவர் "அது என்ன நூல் எனத் தெரிந்தால்தானே நான் பதில் கூறமுடியும்?"என்றார் தயங்கியபடியே.
ராமன் அலட்சியமாக"திலகாஷ்ட மகிஷ பந்தனம்தானய்யா"என்று கூறியதும் அந்தப் புலவர் திகைத்தார்.
"என்னது? திலகாஷ்ட மகிஷ பந்தனமா? அப்படி ஒரு நூலை நான் படித்ததே இல்லையே."
"என்ன, இந்த நூலை நீர் படிக்கவில்லையா?என்ன புலவரைய்யா நீர்? இந்த நூலைப் படிக்காமல் உம்மை நீர் புலவர் என்று வேறு கூறிக் கொள்கிறீர்! தெரியவில்லைஎன்றால் தோல்வியை ஒப்புக் கொண்டு ஊர் போய்ச் சேரும் முதலில் இந்த நூலைத் தேடிப் படியுங்கள்."
"பிரபு, நான் இந்த நூலைப் பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை. என் தோல்வியை நான் ஒப்புக் கொள்கிறேன் இன்றுடன் என் பட்டங்கள் அனைத்தையும் துறந்தேன் என் பரிசுப் பொருளை இந்தத் தெனாலி ராமனுக்கே கொடுத்துவிடுகிறேன்."
என்றார் தலை குனிந்தபடியே.
"உமது பரிசுப் பொருள் எதுவும் வேண்டாம் அதை நீரே எடுத்துக் கொண்டு போய்ச் சேரும்" என்று அவரைப் போக விட்டான் தெனாலி ராமன்.
அவர் செல்வதைப்  புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த ராமனிடம் ராயர் மதுவாகக் கேட்டார்."ராமகிருஷ்ணா, அது என்ன நூல்? நான் கூட கேள்விப்படாததாக உள்ளதே?"
ராமன் புன்னகையுடன் "இதுதான் அரசே,"என்றபடி தன்னிடம் இருந்த ஒரு மூட்டையை அவிழ்த்துக் காட்டினான்.அதில் ஒரு எள்ளுச் செடியும் அதைக் கட்டிய கயிறும் இருந்தது.மன்னர் ஒன்றும் புரியாமல் என்ன இது? என்றபோது ராமன் விளக்கினான்.
"அரசே, திலம் என்றால் எள். காஷ்டம் என்றால் காய்ந்த செடி.திலகாஷ்டம் என்றால் காய்ந்த எள்ளுச் செடி.மகிஷ பந்தனம் என்றால் எருமையைக் கட்டும் கயிறு. இதோ இந்த எள்ளுச் செடிகளை கயிற்றால் கட்டியிருக்கிறேன்.
இதைச் சேர்த்துச் சொன்னால் திலகாஷ்ட மகிஷ பந்தனம்.இதைத்தான் கூறினேன். அவர் இது ஏதோ புதிய நூல் என்று பயந்து ஓடிவிட்டார்."
"கர்வத்தோடு வந்தவரை அவரது கர்வம் அடங்கும்படி செய்து விட்டாய் பலே, ராமகிருஷ்ணா,உன் சமயோசித புத்தியால் நம் சாம்ராஜ்யத்தின் பெருமையைக் காப்பாற்றினாய்.அது சரி அவர் இந்தநூலைக் காட்டும்படி கூறியிருந்தால் என்ன செய்திருப்பாய்?" என்றுகேட்டபோது ராமன் சிரித்தான்.
"அவ்வப்போது தோன்றும் யோசனைகளுக்கேற்றபடி அப்போது என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லி சமாளிப்பேன் மகாராஜா.முதலில் அருகே வரும் பிரச்னையை சமாளிக்க வேண்டும்.அதுதான் என் குறிக்கோள்."
"பலே ராமகிருஷ்ணா, உன் துணிச்சலைப் பாராட்டுகிறேன்."என்று கூறிய மன்னர் ராமனுக்குப் பரிசளித்து மகிழ்ந்தார்.
ராமன் சமயோசிதம் நிறைந்தவன் என்றுமட்டுமே  நினைத்துக் கொண்டிருந்தனர்.இந்த செய்கையால் அவன் துணிச்சல் மிகுந்தவன் என்பதையும் அனைவரும்  புரிந்துகொண்டு அவனைப் பாராட்டினர்.










--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

72- தெய்வத்தின் குரல்.

ஒரு காட்டில் மரப் பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது.அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை.அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருக்கும்.ஒருநாள் திடீரென்று 
இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?என்று சந்தேகம் வந்தது.பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும்.என்று சமாதானம் செய்து கொண்டது.
ஒருநாள் அந்தக் கழுகுக்கு இன்று எனக்கு உணவு கிடைக்குமா? இறைவன்தான் எல்லாருக்கும் படியளப்பவன் ஆயிற்றே.
இன்று எனக்கு உணவு கிடைக்குமா?என்ற  சந்தேகம்  வந்ததும் அந்த கழுகு தான் அமர்ந்து தியானம் செய்யும் பாறைமீது நின்று
" இறைவா, இன்று எனக்கு உணவு கிடைக்குமா?"என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.
உடனே விண்ணிலிருந்து ஒரு குரல் "உனக்கு இன்று உணவு உண்டு."என்ற பதில் கிடைத்தது.
மிக்க மகிழ்ச்சியுடன் இன்று இரை தேடும் வேலை இல்லை எப்படியும் உணவு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறைமீது அமர்ந்து இருந்தது.
நேரம் செல்லச் செல்ல கழுகுக்குப் பசி வரத்தொடங்கியது.ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறைதியானத்திலேயே அமர்ந்திருந்தது.
மதியம் ஆயிற்று மாலையும் போயிற்று.இரவு வந்துவிட்டது."இனி நம்  இருப்பிடம் செல்ல வேண்டியதுதான்.நம்மை இறைவனே ஏமாற்றி விட்டாரே" என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.
அப்போது ஒரு குரல் கேட்டது
 "என்ன குழந்தாய், சாப்பிட்டாயா?"என்றதைக் கேட்டதும் கழுகுக்கு அழுகை வந்துவிட்டது.

"இறைவா, நீ எனக்கு  இன்றுஉணவு உண்டு என்று கூறிய பிறகுதானே நம்பிக்கையோடு நான் தியானத்தில் அமர்ந்தேன்.
ஆனால் இன்று என்னைப் பட்டினி போட்டு விட்டாயே! உன் கணக்கு தப்பா, என் நம்பிக்கை தப்பா?"
 என்று அழுது கொண்டே கேட்டது.
இறைவன் சிரித்தார். 
"குழந்தாய், சற்று திரும்பிப் பார். உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது."
கழுகு பின்னால் சென்று பார்த்தது.அங்கே ஒரு பெரிய எலி இறந்து கிடந்தது. கழுகு புன்னகை புரிந்தது. 
இறைவனிடம் "இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?"என்றபோது இறைவன் பதிலளித்தார். 
"குழந்தாய், உனக்குரிய நேரத்தில் உணவு வந்து விட்டது நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய்.திரும்பிப் பார்க்கும் முயற்சி கூடச் செய்யாமல் உணவு எப்படிக்கிட்டும்?.
அவரவர் உணவுக்குத் தகக உழைப்பை அவரவரே செய்ய வேண்டும் அப்போதுதான் உணவு இருப்பதும் தெரியும் கிடைப்பதும் நடக்கும். கடுகளவேனும் முயற்சி வேண்டும்.ஒருவேளை உணவு கூட உழைக்காமல் உண்ணக் கூடாது.
இதை நீமட்டுமல்ல அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்.
இனியாவது புரிந்து கொள்." என்று கூறிய இறைவன் கழுகுக்கு ஆசி வழங்கி மறைந்தார்.
அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கிற்று.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

திங்கள், 5 செப்டம்பர், 2011

71..யானையின் எடை.

வெகு நாட்களாக வெளியூர் சென்றிருந்த தெனாலிராமன் தலைநகர் ஹம்பிக்குத் திரும்பினான்.அவன் ஊருக்குள் நுழையும்போதே மக்கள் ஆங்காங்கே கூடிக் கூடிப் பேசுவதைக் கண்டான்.காரணம் அறியாமல் திகைத்தபடியே தன் இல்லத்துக்குள் நுழைந்தான்.தெனாலிராமன் வீட்டு வேலைக்காரர்கள் இருவரும் அடிக்கடிக் கூடி நின்று எதைப் பற்றியோ ஆலோசனை செய்தபடி இருந்தனர்.
தெனாலி ராமனுக்கு பெரும் ஆச்சரியம். ஊருக்குள் வரும்பொழுதுதான் மக்கள் கூடிநின்று பேசினார்கள் என்றால் நம் வீட்டு வேலைக்காரர்களும் அதேபோல் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களே என்று யோசித்தான்.அவனால் காரணம் கண்டு பிடிக்க முடியாததால் தன் வேலைக்காரர்களுள் ஒருவனை அழைத்தான்.
"டேய், உண்மையைச்சொல். என்னகாரணமாகக் கூடிக் கூடிப் பேசுகின்றீர்கள். ஏதேனும்  திட்டம் தீட்டுகிறீர்களா?"
வேலைக்காரன் பயந்தான்."ஐயா, சாமி நாங்க நம்ம ஊருக்கு வந்திருக்குற வடநாட்டு வியாபாரியைப் பற்றிப்  பேசுறோமுங்க"
"அவரைப் பற்றி அப்படி என்ன பேச்சு?"
"அதுங்களா? அவரு ஒரு பொருள் வச்சிருக்கிறாராம் அதன் எடை என்னன்னு கண்டு பிடிச்சிட்டா எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்லியிருக்கிறாராம்.அப்படி கண்டு பிடிக்க முடியலைனா காலம் பூராவும் அவருக்கு அடிமையா அவருக்குப் பணிவிடை செய்து வாழணுமாம்."
தெனாலிராமன் சிந்தித்தான்.அரசபைக்குச் சென்று அந்த வியாபாரியைச் சந்தித்தான்.
மன்னர் கிருஷ்ணதேவ ராயரும் வியாபாரியின் இந்த சவாலை ஏற்கவும் முடியாமல் 
விடவும் முடியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தார்.
தெனாலிராமன் சபைக்கு வந்ததும் மன்னர் அவரிடம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு கூறினார்.
ராமகிருஷ்ணனும் அதை ஏற்றுக் கொண்டு வியாபாரியிடம் கேட்டான்.
"ஐயா, தாங்கள் எடை காணவேண்டும் என்று கூறும் பொருள் என்னவோ?"
வியாபாரி மிகுந்த கர்வத்துடன் பேசினான்."அதற்கு முன் என் நிபந்தனை தெரியுமா உமக்கு? நான் ஜெயித்தால் நீர் எமக்கு அடிமை.ஆனால் நீர் ஜெயித்தால் எடைக்கு எடை பொன் தருவேன்."
"உங்கள் நிபந்தனையை நான் ஒப்புக் கொள்கிறேன்.நான் ஜெயித்தால் எடைக்கு எடை பொன் தருவது என்பது உண்மைதானே?"
"ஒப்புக் கொள்கிறேன்."
"அப்படியானால் நானும் ஒப்புக் கொள்கிறேன்.எந்தப் பொருளுக்கு எடை சொல்ல வேண்டும்?சொல்லுங்கள்."
வியாபாரி புன்னகைத்தான்.கள்ளச் சிரிப்புடன் தெனாலிராமனைப் பார்த்துச் சொன்னான்.
"வீதியில் நிற்கும் என் யானையின் எடை என்ன என்று சொல்லவேண்டும்"
சபையே அதிர்ந்தது.யானையை எப்படி எடை போடுவது?எந்தத் தராசில் நிற்க வைப்பது என்று அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர்.மன்னரும் சிந்தனை வயப்பட்டார்.
தெனாலிராமன் இதற்கு மறுநாள் பதில் கூறுவதாகச் சொல்லி இல்லம் திரும்பினான்.
இரவு தன் மனைவியிடம் இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுக்குத் திடீரென்று யோசனை தோன்றியது.
மறுநாள் பொழுது விடிந்ததும் வியாபாரியிடம் அவனது யானையின் எடையைக் கூறுவதாகக் கூறி அழைத்தான். மக்களும் ராமன் எப்படி யானையை எடை போடுகிறான் என்பதைப் பார்க்கக் கூடிவிட்டனர்.
மன்னரும் மக்களுடன் சேர்ந்து ஆவலுடன் பார்த்து நின்றார்.
ராமன் வடநாட்டு வியாபாரியை நதிக்கரைக்கு அழைத்துச் சென்றான்.அவனும் தன் யானையை நடத்திக்கொண்டு ராமனுடன் சென்றான்.நதிக்கரையை அடைந்தவுடன் அங்கிருந்த ஒரு பெரிய படகில் யானையை ஏற்றச் சொன்னான் ராமன்.அந்தப்படகில் யானையை ஏற்றியவுடன் அதைத் தண்ணீரில் மிதக்கவிடச் சொன்னான்.படகு மிதந்தது.படகு நீருக்குள் அமிழ  நீர்படகில்  எந்த அளவு உயர்ந்துள்ளது என்பதைக் குறித்துக் கொண்டான்.பின்னர் மரக்கட்டைகளை அந்தப் படகில் வைத்து நீருக்குள் விட்டான். படகு அமிழ வெளிப்புறம் நீர் உயர்ந்தது. 
யானையை வைத்து எடை பார்த்தபோது உயர்ந்த அதே அளவு நீர் உயர்ந்ததும் கட்டைகளை நிறுத்திவிட்டான்.இப்போது படகில் வைக்கப்பட்ட கட்டைகளின்  எடைதான் யானையின் எடை. இந்தக் கட்டைகளைத் தனித் தனியே எடை போட்டுப் பார்த்தால் யானையின் எடை தெரிந்துவிடும். 
"அரசே, கட்டைகளைத் தனித் தனியே எடை போட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்."

மன்னர் கிருஷ்ண தேவராயர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.வியாபாரியைப் பார்த்து "அய்யா, நீங்கள் கேட்ட கேள்விக்கு எங்கள் ராமன் சரியான விடை தந்து விட்டான்.அவனிடம் சொன்னது போல் பரிசைத் தருவதுதான் நியாயம்."என்று கூறியவுடன் வியாபாரி தலை குனிந்து ஒப்புக் கொண்டான்.
ஆனால் இடைமறித்த ராமன் "மகாராஜா, பொறுங்கள்."என்றவன் வியாபாரியைப் பார்த்துக் கூறினான்.
"ஐயா வியாபாரியே! நான் வெற்றி பெற்றால் தாங்கள் என்ன தருவதாகக் கூறினீர்கள்?"
"எடைக்கு எடை பொன் தருவதாகக் கூறினேன்."
"அது சரி யாருடைய எடைக்கு எடை என்று நீங்கள் சரியாகச் சொல்லவில்லையே.எடையைப் பார்த்துச் சொன்னவரின் எடைக்கா அல்லது யானையின் எடைக்கா?என்பதைத் தெளிவாகச் சொல்லாததால் நான் யானையின் எடைக்கு எடை பொன் கேட்கிறேன்."
ராமனின் வார்த்தைகளைக் கேட்ட வியாபாரி மயங்கிச் சரிந்தான்.யானையின் எடைக்கு எடை பொன்னுக்கு அவன் எங்கே போவான்.எனவே அவனைச் சிறையில் அடைக்குமாறு மன்னர் கட்டளையிட்டார்.
பல நாடுகளில் மக்களை அடிமைப் படுத்திச் சிறுமைப் படுத்திய வியாபாரிக்குச் சரியான தண்டனைதான் அது.என்று மன்னர் தீர்ப்பளித்தார். 
ராமனுக்குப் பெரும் பொன்னைப் பரிசாகக் கொடுத்து அவனை வாழ்த்தினார். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில்  உண்டு என்பதை நிரூபித்த  தெனாலிராமனை மக்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
எனவே யாரையும் துன்புறுத்தி மகிழ்தல் தவறு என்பதையும் வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு என்பதையும் நாம் புரிந்து கொண்டால் நலமடைவோம்.







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

70-சோதிடம் தந்த பரிசு

முற்காலச் சேரர்களில் புகழ் பெற்றவன் சேரலாதன். முதலாம்  நூற்றாண்டின் கடைசியில் சேர நாட்டை ஆண்டவன். நாட்டை விரிவாக்கி வளமிக்கதாகஆக்குவதற்கு அரும்பாடு பட்டவன்.அது  தமிழகத்தில் சேர சோழ பாண்டியர்களின் ஆட்சி நடைபெற்று வந்த காலம்.
அப்போது திருமணப் பருவத்தில் இருந்த சேரலாதன் சோழ மன்னன் மகள் நற்சோணை என்பவளை மணந்து இல்லறத்தையும் இனிதே நடத்தி வந்தான். இவனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.மன்னர் பரம்பரைக்கே உரிய கல்வி கேள்வி கலைகளில் சிறந்து வீரமும் பண்பும் உடையவராய்த் திகழ்ந்தனர்.மன்னன் சேரலாதன் தன் மக்கள் இருவரையும் கண்ணின் மணிகள் எனப்  போற்றி வந்தான். ஆண்டுகள் உருண்டன.

ஒரு நாள் அரியணையில் மன்னன் சேரலாதன் அமர்ந்திருந்தான்.அவனருகே இளவல்கள் மூத்தவன் செங்குட்டுவன் இளையவன் இளங்கோ இருவரும் அமர்ந்திருந்தனர். வீரமும் வலிமையையும் கொண்டவனாக முதல் மகனும் அறிவு ஒளிரும் கண்களுடன் இரண்டாவது மகனும் அமர்ந்திருந்ததைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான் சேரலாதன். நாட்டு மக்களும் தங்களின் இளவரசர்களைப் பார்த்துப் பூரித்திருந்தனர்.
அப்போது காவலன் ஒருவன் வந்து மன்னனை வணங்கி நின்றான்.என்ன என்பது போலப் பார்த்தான் மன்னன்.
"அரசே! சோதிடர் ஒருவர் தங்களைக் காண வந்துள்ளார்."
"வரச்சொல்"
உள்ளே நுழைந்த சோதிடர் மன்னனை மிகவும் பணிவோடு வணங்கினார்.
"வாருங்கள் சோதிடரே. அமருங்கள்" மந்திரியார் அவரை அவரது ஊர் பெயர் சோதிடத்தில் அவருக்குள்ள அனுபவம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சேரர் அரண்மனையை அவர்  நாடிவரக் காரணம் யாது எனவும் வினவினார்.
"மன்னர் பெருமானே. தங்கள் பிள்ளைகள் பிறந்த நேரத்தை அறிய நேர்ந்தது.அது பற்றி இளவரசர்களின் எதிரகாலம் பற்றிக் கூறிச் செல்லவே நான் வந்தேன்."
மன்னன் மகிழ்ச்சியுடன் அவரை "கூறுங்கள்" என்று  சொன்னான்.
"அரசே தங்களின் மக்களில் மிகவும் புகழ் பெறப் போகிறவர் தங்களின் இளைய மகனே. அவரே இந்த மண்ணை ஆளப் போகிறார்."
மன்னன் திகைத்தான். மக்கள் பதறினர். மூத்தவன்  செங்குட்டுவன் நிலைகுலைந்தான். இளங்கோ சோதிடரை வெறுப்புடன் பார்த்தான். 
மந்திரியாரோ மூத்தவன் இருக்க இளையவன் மன்னனாவதா அது எப்படி நடக்கும்? என்ற வினாவைக் கண்களில் ஏற்றிமன்னனைப் பார்த்தார்.
சேரலாதன் செங்குட்டுவனின் முகத்தைப் பார்த்தான்..அதில் தோன்றிய ஏமாற்ற உணர்ச்சியையும் அவன் தன் தம்பியை வெறுப்புடன் பார்த்த பார்வையையும் கவனித்தான்..
அந்த இடத்தின் அமைதியைக் குலைத்தபடி எழுந்தான் இளங்கோ.
"சோதிடரே, உமது சோதிடம் பொய்யாகும்படி இப்போதே நான் என் முடிவைக் கூறுகிறேன். இந்த அரியணை மீது எனக்கு சற்றும் உரிமையில்லை என்பதை இந்தச் சபை அறியக் கூறுகிறேன்."
சேரலாதன் முகத்தில் சற்றே நிம்மதி தோன்றியது.ஆனால் அதைக் குலைக்கும் வண்ணமாக  செங்குட்டுவன் பேசினான்.
"நீ வேண்டாமென்றாலும் நாளை உன் மக்கள் உரிமை கோரலாமல்லவா?"
சபையோர் பேச்சு மூச்சற்று அமர்ந்திருந்தனர். அப்போது யாரும் எதிர் பாரா வண்ணம் 
இளங்கோ ஆசனத்தை விட்டு எழுந்தான்."அண்ணா! என்மீது சந்தேகமா? இருங்கள் இதோ வருகிறேன்" என்றவன் உள்ளே சென்றான். சற்று நேரத்தில் அங்கு ஒரு துறவி தோன்றினார். ஆம்.இளங்கோதான் தலையை மழித்து காவி உடுத்தி துறவியாக சபையின் முன் தோன்றினான்.
அனைவரும் திடுக்கிட்டனர். ஆனால் அமைதியாகப்  பேசினான் இளங்கோ.
"தந்தையே, என்னை மன்னியுங்கள். இவ்வுலக வாழ்வில் எனக்குப் பற்றில்லை. இந்த சோதிடர் மீதும் சினம் கொள்ள வேண்டாம்.நான் துறவறம் ஏற்க இவர் ஒரு கருவி அவ்வளவே. என்னை வாழ்த்தி எனக்கு விடை கொடுங்கள்." 
இப்போதுதான் செங்குட்டுவனின் சகோதரபாசம் தலை தூக்கியது.
"தம்பி, என்னை விட்டு எங்கே போகிறாய்? என்னை மன்னித்து விடடா"
"கலங்கவேண்டாம் அண்ணா, நீங்கள் நினைக்கும்போது நான் அரண்மனைக்கு வருவேன்"
மகிழ்ச்சியுடன் தொடங்கிய சபை துயரத்துடன் முடிந்தது.
இப்போது செங்குட்டுவன் மன்னனாக பட்டமேற்றுள்ளான். மதுரை சென்று திரும்பியுள்ள புலவர் பெருமான் சீத்தலைச் சாத்தனாருடனும் பட்டமகிஷியுடனும் சில மெய்க்காப்பாளர் சூழ மலைவளம் காணப் புறப்பட்டான் செங்குட்டுவன். புலவருக்கு ஒரு துணை இருந்தால்தான் அங்கு பேச்சும் சுவையாக இருக்கும் என எண்ணிய செங்குட்டுவன் மறவாமல் தம்பி இளங்கோவையும் உடன் அழைத்துச் சென்றிருந்தான்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையும் செழிப்பும் கண்களைக் கவர்ந்தன.இளைப்பாற ஓரிடத்தில் அமர்ந்தான் மன்னன்.மூலிகைகளின் வாசமும் வாசனைப் பொருள்களின் மணமும் மனதை மயக்கக் கூடியவையாக இருந்தன.
அந்த ரம்யமான சூழலில் சில  காட்டுவாசிகள் மன்னனைப் பணிந்தனர்.தேன், மான், புலித்தோல், வாசனைத் திரவியங்கள் எனப் பலவகைப் பொருள்களைக் காணிக்கையாக மன்னன் முன் இட்டு வணங்கி எழுந்தனர்.
அவர்கள் முகங்களில் ஏதோ கலவ ரம் தெரிந்தது.காரணம் கேட்ட மன்னனுக்கு அவர்களின்  தலைவன் பதிலளித்தான்.
"சாமி, மகாராசா, நேத்து ஒரு பொண்ணு மலப்பக்கமா நின்னுச்சுங்க. அப்ப ஒரு பெரிய தேரு ஆகாயத்திலேருந்து அதும் பக்கத்தில நின்னுச்சுங்க. தேருல இருந்து ஒரு அழகான பையன் வந்து அந்தம்மாளைக் கைபிடிச்சு உக்காத்தி வச்சுகிட்டு ஆகாயத்தில பறந்து போயிட்டான்."
செங்குட்டுவன் ஆச்சரியத்துடன் பார்த்தான்.அருகே இருந்த சீத்தலைச் சாத்தனார் புன்னகை புரிந்தார்.
"மன்னா, இவர்கள் கண்டது உண்மையே. கற்புக்கரசி கண்ணகியை இவர்கள் பார்த்திருக்கிறார்கள். அவளை அவள் கணவன் கோவலன் கையைப் பற்றி விண்ணுலகுக்கு அழைத்துச் சென்ற காட்சி தான் இவர்கள் கண்முன் நிகழ்ந்துள்ளது."
இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னனும் மற்றையோரும் ஆவலுடன் கண்ணகியின் கதையைக் கூறுங்கள் என்றனர். 
கூத்தனாரும் கண்ணகி கதையைச் சுருக்கமாகக்  கூறினார்.
 கதையைக் கேட்ட மன்னன் செங்குட்டுவன் "சாத்தனாரே, அருமையான இந்தக் கற்பரசியின் கதையை வருங்காலம் அறியும்படி ஒரு காப்பியமாகப் படைத்துவிடுங்கள். " என்று வேண்டிக்கொண்டான்.
கூத்தனாரோ அதை மறுத்து"மன்னா, என்னினும் தமிழறிவும் புலமையும் மிக்கவரான இளங்கோ அடிகளே அதைச் செய்ய ஏற்றவர். அவரே இந்த காப்பியத்தை இயற்றட்டும்." என்று காப்பியம் எழுதும் பணியை இளங்கோவிடம் ஒப்படைத்தார்.  
தம்பியைத் திரும்பிப் பார்த்தான்  மன்னன் .
"மன்னவன் பணியென்றால் மறுப்பேதுமில்லை" என்று கூறி அப்பணியைத் தானே ஏற்றுக் கொள்வதாக இசைந்தார் அடிகள். 
அப்போது மாடலன் என்ற மறையோன் தென்னாட்டு மன்னர்களின் வீரத்தைப் பற்றி வடநாட்டு மன்னர்களான கனகரும் விஜயரும் இகழ்ந்து பேசியதைக்  கேட்டதாகக் கூறினார். 
இதைக் கேட்ட செங்குட்டுவன் கண்கள் சிவந்தன உதடுகள் துடித்தன.
"அடிகளாரே, நமது வீரத்தை இகழ்ந்த அந்த வீணர்களின் தலையில் இமயத்தின் கல்லேற்றி கங்கையில் நீராட்டி அக்கல்லில் கண்ணகிக்குச் சிலை வடித்துக் கோவில் எழுப்புவோம்.இப்போதே படை வடக்கு நோக்கிப் புறப்படும் 
நான் வீரப் போரைக் கவனிக்கிறேன் அடிகளே, நீர் சொற்போரைக் கவனியுங்கள். "
இரண்டு நிகழ்ச்சிகளும் விரைவிலேயே நடந்து முடிந்தன.
ஆனால் காலப் போக்கில் கண்ணகியின் கற்கோவில் மறைந்து விட்டது.இளங்கோ இயற்றிய சொற்கோவில் ஆன சிலப்பதிகாரம் என்ற நூல் தமிழன்னையின் கால் சிலம்பு எனும் அணிகலனாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அது ஒலிக்கும் குரல் தமிழின் பெருமை மட்டுமல்ல இளங்கோவின் பெருமையையும்தான். ஒரு சோதிடம் நமக்கு சிலப்பதிகாரம் என்னும் அழியாச் செல்வத்தைப் பரிசாகக் கொடுத்துள்ளது என்று நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம் அல்லவா?




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

வியாழன், 14 ஜூலை, 2011

69- சோதிடம் பலித்தது


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பரத கண்டத்தில் ஆட்சி புரிந்த மன்னர்களுள் விக்கிரமாதித்யன் என்ற மன்னன் மிகவும் பெருமை வாய்ந்தவன்.இவனது  சபையில்  மிகவும்  திறமை  வாய்ந்தஅறிஞர்கள்  இருந்தனர். வானசாஸ்திரம் கணிதம் மருத்துவம் சோதிடம் போன்ற பலதுறைகளில் இவர்கள் திறமை வாய்ந்தவர்களாக விளங்கினர்.
 மன்னன் விக்கிரமாதித்யனும் இவர்களை மிகவும் பெருமையுடன் போற்றி வந்தான்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னனுக்கும் மக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. நாடே கோலாகலமாகக் கொண்டாடியது.குழந்தையின்  பெயர்  சூட்டு  விழாவன்று குழந்தையின் ஜாதகத்தையும் கணித்துத் தருமாறு மன்னன் சோதிட திலகமான மிஹிரர் என்பவரிடம் வேண்டுகோள் விடுத்தான்.மிஹிரர் அந்தக் குழந்தையின் பிறந்த நேரம் சரியில்லை என்பதை அறிந்துகொண்டதால் ஜாதகம் கணிப்பதில் தாமதம் காட்டினார்.

மன்னன் அவரிடம் பலமுறை  வற்புறுத்திக் கேட்டபின்னர் மிஹிரர் மன்னனிடம் கூறினார்."மன்னா, உன் மகனுக்கு ஆயுள் பலம் கிடையாது.ஏழாவது வயதில் இவனுக்கு மரணம் ஏற்படும்."

மன்னன் திகைத்தான். "இதை மாற்ற வழியே இல்லையா? ஏதேனும் பரிஹாரம் அல்லது பிராயச்சித்தம் செய்தால் என் மகனது உயிர் நிலைக்குமா? சொல்லுங்கள்" என்று தவித்தான்.

எந்த பரிஹாரத்தாலும் இவனது உயிரைக் காப்பாற்ற இயலாது" என்றபோது விக்ரமாதித்யன் உள்ளத்தில் ஒரு பிடிவாதம் தோன்றியது. எப்படியும் தன் மகனைக் காப்பாற்றியே தீருவது என்று தீர்மானம் செய்தான்.

மிஹிரரோ அவன் விதியை மாற்ற இயலாது. அவன் ஒரு மிருகத்தால் உயிர் இழப்பது உறுதி என்றார்.

விக்கிரமாதித்யன் என் மகனை எந்த மிருகமும் நெருங்காது பாதுகாப்பேன் என்று முடிவு செய்தான்.

அதற்காக எழுநிலை மாடம் ஒன்று கட்டினான். ஏழாவது மாடத்தில் சகல வசதிகளுடன் தன் மகனைத் தங்க வைத்தான்.கீழ்ப் பகுதியில் மன்னன் தன் இருப்பிடத்தை வைத்துக் கொண்டு கண்ணும் கருத்துமாகத் தன் மகனைப் பாது காத்தான். 

கடைசியில் இளவரசனின் ஏழாவது வயதும் பிறந்தது. ஒவ்வொரு நாளும் மன்னன் தன் மகனை மேல் மாடியில் சென்று பார்த்து வந்தான். ஒரு நாள் மன்னன் தன் மகனைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியோடு வந்தான். அப்போது மிஹிரரும் மன்னனுடன் இருந்தார்.
"என்ன மிஹிரரே! என் மகன் உயிருக்கு இனி ஒன்றும் பயமில்லையே? அவன் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறானல்லவா? "
"ஆம் மன்னா. இன்னும் ஒரு நாழிகைப் பொழுதில் அவன் உயிர் பிரிந்து விடும்."
"என்ன! எந்த மிருகமும் இங்கு வராதபோது எப்படி அவனுக்கு மரணம் சம்பவிக்கும்.?"
"மன்னா, என் சோதிடம் பொய்க்காது.ஒரு மிருகத்தால் அவன் உயிர் பிரிவது என்னும் அரைநாழிகை பொழுதில் நடக்கும்."
மன்னன் ஒரு சேவகனை அழைத்தான்." நீ உடனே மேல் மாடிக்குச் சென்று இளவரசனைப் பார்த்து விட்டு வா."
எனக் கூறி அனுப்பினான்.
அந்த சேவகனும் சென்று பார்த்துவிட்டு "மகாராஜா, நமது இளவரசர் பந்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்."என்று பணிவுடன் கூறினான்.
மன்னன் மிஹிரரைப் பார்த்துப் புன்னகைத்தான்.
"மன்னா,இந்த சேவகன் பாதிவழியில் இறங்கிக் கொண்டிருக்கும் போதே இளவரசர் உயிர் பிரிந்து விட்டது."
அமைதியாக மிஹிரர் கூற மன்னன் மேல் மாடத்திற்கு ஓடினான். அங்கே ரத்த வெள்ளத்தில் மகன் இறந்து கிடப்பதைக் கண்டு அலறினான்.அள்ளி எடுத்து  அணைத்துக் கொண்டான்.

"இத்தனை பாதுகாப்பிருந்தும் இது எப்படி நடந்தது?"

"மன்னா, கலங்காதே.நீ கட்டிய இந்த ஏழாவது மாடியில் அழகான தூண்களில் யாளியின் உருவம் செதுக்கப் பட்டுள்ளது. அந்த யாளிகள் வாயைத் திறந்து கொண்டு இருப்பதைப் பார். அதன்  வாய்க்குள் உன் மகன் போட்ட பந்து விழ அதனை எடுக்கச் சென்றபோது யாளியின் கூர்மையான பற்கள் இளவரசனின் பிடரியில் குத்தி அவன் உயிர் பிரிந்துள்ளது." 

"மிஹிரரே உமது சோதிடத்தை நான்எளிதாக  நினைத்துவிட்டேன். தாங்கள் சாதாரண மிஹிரர் அல்ல. வராகமிஹிரர். வராகத்தினால் என் மகன் உயிர் பிரியும் என்று சோதிடம் சொன்ன தங்களின் அறிவை நான் பாராட்டுகிறேன். இனி வருங்கால சரித்திரம் தங்களை வராஹமிஹிரர் என்று பாராட்டும்."

விக்கிரமாதித்யன் சபையிலிருந்த நவரத்தினங்கள் எனப்பட்ட ஒன்பது அறிஞர்களுள் வராஹமிஹிரரும் ஒருவராக இடம்  பெற்றார்.






-- ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

வியாழன், 23 ஜூன், 2011

68-பக்தி கொடுத்த பரிசு


.        அக்பர் பாதுஷா டில்லியில் அரசாண்டிருந்த காலம்.அவரது சபையிலே சூர்தாஸ் என்ற மகான் ஒருவர் இருந்தார்.மிகச் சிறந்த அறிவாளியான இவர் கல்வி கேள்வியிலும் அரசியல் அறிவிலும் சிறந்து விளங்கினார்.  அக்பர் பாதுஷா இவர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.இவருடன் அடிக்கடி வேதாந்த விசாரணையும் செய்து வ்ந்தார்.
ஒரு முறை கோகுலம் பிருந்தாவனம் அடங்கிய பகுதிக்கு ஒரு அதிகாரியை நியமிக்க  வேண்டி வந்தது. பக்திமானாகிய சூர்தாசரே அதற்குத் தகுதியானவர் என்றுமுடிவு செய்த அக்பர்பாதுஷா  அவரையே  அதிகாரியாக நியமித்தார். கண்ணன் பிறந்து வளர்ந்த பகுதிக்குத் தாம் அதிகாரியாக நியமிக்கப் பட்டதற்காக  மிகவும் மகிழ்ந்தார் சூர்தாசர்.

மிக்க மகிழ்வுடன் தமது பதவியை ஏற்கப் புறப்பட்டார். வழியெங்கும் கண்ணன் லீலைகள் புரிந்ததை நினைவு கூர்ந்தவாறு சென்றார்.அந்த எண்ணத்துடனே வந்து பதவி ஏற்றுக்கொண்டார்.ஒரு மெய்யன்பர் தமக்கு அதிகாரியாக வந்துள்ளதை அறிந்து மக்களும் பேருவகை எய்தினர்.

 இப்படியே சில ஆண்டுகள் கழிந்தன.சூர்தாசர் அரசாங்கப் பணி தவிரஆண்டவன் பணியும்  செய்து வரலானார்.தமக்கென உள்ள செல்வம் அனைத்தையும் அடியார்களுக்காகச் செலவழித்தார்.தமது செல்வத்தைப் பயனுள்ள வழியில் செலவிட முடிந்ததே என்று மக்களுக்கு வாரி வாரி வழங்கினார்.
காலப் போக்கில் செல்வம் செல்வோம் எனச் சென்றுவிட சூர்தாசர் வறியவரானார். இறைவன் பணி செய்ய இவரிடம் இப்போது செல்வம் இல்லை.

இந்த சமயத்தில் திருவிழாவும் வந்தது. அடியார்களின் திருக் கூட்டமும் வந்தது. செலவு செய்யக் கையிலே பணமில்லாத போது பாதுஷாவுக்குச் சேரவேண்டிய வரிப்பணமும் வந்து சேர்ந்தது.அந்தப் பொருளை எடுத்து கைங்கர்யம் செய்தால் என்ன என்று எண்ணிய சூர்தாசர் மன்னனின் வரிப் பணத்தை எடுத்துச் செலவு செய்து விட்டார்."இது பகவத் கைங்கர்யம். மன்னனே செய்ய வேண்டியது. நான் செய்ததால் மன்னனுக்கும் இறைவன் அருள் கிட்டும்" என தன்னைச் சமாதானம் செய்து கொண்டார்.

இப்படியே சில நாட்கள் சென்றன.ஊரிலுள்ள பொறாமைக்காரன் ஒருவன் நேரில் டில்லி மாநகருக்கே சென்று பாதுஷாவிடம் கோள் மூட்டினான்.
சூர்தாசர் சிறந்த மனிதராயினும் மன்னனின் ஆணை  இன்றி வரிப்பணத்தைச் செலவு செய்தது பெருங்குற்றம்  மதுரா, பிருந்தாவனம், துவாரகா, ஆகிய மாவட்டங்களிலிருந்து வரவேண்டிய  வரிப்பணம் நிலுவையில் உள்ளது. அதை உடனடியாக வசூலித்து வரவேண்டும்.என உத்தரவிட்டான்.

இந்தப் பணத்தைக் கட்டத் தவறினால் சூர்தாசரைக் கைது செய்யவும் அதிகாரம் அளித்துத் தன் முத்திரையையும் 
கொடுத்தனுப்பினான்.
வீரர்கள்  மதுராவை அடைந்து அரசரின் மடலைக் காட்டுமுன்பாகவே சூர்தாசர் செய்தியை யூகித்துத்  தெரிந்து கொண்டார்.வந்த வீரர்களை வரவேற்று உபசரித்து மிகுந்த மரியாதையுடன் அவர்களுடன் பேசினார்.
"அன்பர்களே, நான் அரசரின் வரிப் பணத்தை வீணாகச் செலவு செய்து விட்டேன் என்று தானே உங்களை மன்னர் இங்கு அனுப்பியுள்ளார்.அது வீண் புரளி. நான் மன்னரின் பணத்தை வராகனாக வைக்காமல் சிறந்த நவரத்தினங்களாக வாங்கி வைத்துள்ளேன். அவற்றைக் கொண்டு போக உங்களுக்கு சிரமம் ஏதும் இருக்காதல்லவா? "
சூர்தாஸின் இந்த மொழிகளைக் கேட்ட வீரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.சூர்தாசர் உள்ளே சென்று ஒரு பெட்டி நிறைய கூழாங்கற்களைப் போட்டு மூடி அதன் மேல் ஒரு கடிதமும் வைத்து அனுப்பினார். 

அந்தக் கடிதத்தின் செய்தி இதுதான்.
"மன்னர் பெருமானே! அரசாங்கப் பணத்தை எடுத்துச் செலவு செய்தது உண்மையே.அது அடியார்களுக்காக செலவிடப் பட்டது.புனித நகரங்களுக்கு வரும் அடியார்களின் நலனுக்காக தங்களின் செல்வம்  செலவிடப் பட்டது.
இந்த மிகச் சிறந்த பணியால் இறைவனின் திருவுள்ளம் குளிரும். அதனால் தங்களின் நாட்டுக்கும் ஆட்சிக்கும் இது பெருமையையும் புண்ணியத்தையும் தரும்.இதனால் நாடும் செழிக்கும் நாமும் தூயராவோம் என்றே இப்படிச் செய்தேன். இது தவறு எனில் என்னை மன்னித்து விடுங்கள்."
.பெட்டியையும் கடிதத்தையும் அனுப்பிவிட்டு சூர்தாசர் அருகே இருந்த காட்டுக்குள் சென்று தியானத்தில் அமர்ந்தார்.
அவரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட எண்ணித் தேடிய வீரர்கள் சூர்தாசரைப் பாராமலேயே கடிதத்தையும் பெட்டியையும் எடுத்துக் கொண்டு அரண்மனை அடைந்தனர்.

கொண்டு வந்த பெட்டியை அக்பர் பாதுஷாவின் முன் வைத்து வணங்கி நின்றனர் வீரர்கள்.ஒருவன் சூர்தாஸ் அளித்த கடிதத்தை மன்னனிடம் கொடுத்தான்.கடிதத்தைப் படித்த அக்பர் திகைத்தார்.வீரர்களைப் பார்த்துக் கேட்டார்.
"இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது?"
"மகாராஜ், இதில் நவரத்தினங்கள் இருப்பதாக சூர்தாஸ் மகாராஜ் கூறினார்."
அந்தப் பெட்டியைத் திறக்கச் சொல்லிப் பார்த்தார் பாதுஷா. உள்ளே கண்களைப் பறிக்கும் பிரகாசத்துடன் நவரத்தினங்கள் ஒளி வீசின.
பாதுஷா குழப்பத்தில் ஆழ்ந்தார்.கடிதத்தில் வரிப்பணத்தை செலவு செய்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்தப் பணத்தின் மதிப்புக்கு மேலேயே மதிப்புள்ள நவ ரத்தினங்கள் பெட்டியிலுள்ளன.இதில் எது உண்மை? எது பொய்? ஒன்றும் புரியவில்லை பாதுஷாவுக்கு.
உடனே சூர்தாசரை அழைத்து வர ஆணையிட்டார்.
மதுராவுக்கு விரைந்த வீரர்கள் அவரைக் காட்டில் தியானத்தில் இருக்கும் போது கண்டு வணங்கினர். மன்னரின் 
ஆணையை அறிந்து உடனே புறப்பட்டார். சூர்தாசரின் பெருமையையும் மகிமையையும் அறிந்து கொண்ட அக்பர் அவரை வாயிலிலேயே நின்று வரவேற்று அழைத்துச்  சென்றார்.உண்மையை அனைவரும் அறிந்தனர்.

சூர்தாசரின் பஜனைக்கும் பக்திப் பாடல்களுக்கும் மயங்கிய கண்ணன் அவரது விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறான். தன் பக்தனின் வாக்குப்பொய்க்கக் கூடாது என்று பெட்டியில்  நவரத்தினங்களை நிரப்பிக் கொடுத்துள்ளான். ஆண்டவனே கட்டுப் படும் அளவு பக்தியுடைய சூர்தாசரிடம் மேலும் அன்பு பெருகியது அக்பருக்கு.
தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அக்பர் மீண்டும் அதே பகுதிக்கு அதிகாரியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ஆனால் இறைபக்தி செய்வதை விட்டு அரசாங்க சேவகம் செய்வதை விரும்பவில்லை என்பதை சூர்தாசர்  விளக்கியும் மன்னர் ஒப்புக் கொள்ளவில்லை.
"தாங்கள் பதவியில்  இருந்துகொண்டே இறைவன் பணியும் செய்யலாமே."
"அரசே, ஒருமுறை சிக்கல் தோன்றிவிட்டால் தொடர்ந்து உமது கட்டளையை நான் கேட்டே எந்தப் பணியும் செய்ய நேரும். அதனால் எனக்கு இந்தப் பதவி வேண்டாம் என்னைச் சுதந்திரமாக இருக்கவிடுங்கள்."
அரசர் சிந்தித்தார்.
"தாசரே! நீர் எனக்கு திறை செலுத்த வேண்டாம்.எனக்கு உட்படவும் வேண்டாம் இந்த மூன்று மாவட்டங்களையும் உமக்கே உரிமையாகக் கொடுத்தேன். இனி நீர் சுதந்திரமாக தொண்டு  செய்யலாம்"

இதக் கேட்ட சூர்தாசர் சற்றே அமைதியாக நின்றார். அக்பர் அவரின் கரங்களைப் பற்றிக் கொண்டு "தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என வேண்டினார்.

அரசரின் மனம் பக்தியில் நிரைந்துள்ளது இதனால் மக்கள் நல்வாழ்வு பெறவும் வழி ஏற்படும் என எண்ணிய சூர்தாசர் 
"அரசே, தாங்கள் இவ்வளவு கூறியபின் மறுக்க இயலவில்லை.தாங்கள் இன்று முதல் சாதுக்களின் சேவையும் ஹரிபக்தியும் செய்து வாருங்கள் என ஆசி கூறிவிட்டு மதுராவிற்குப் புறப்பட்டார்.

பெட்டியிலிருந்த நவரத்தினங்களையும் திருப்பணிக்கே கொடுத்து அவரை மிகுந்த மரியாதையுடன் அனுப்பிவைத்தார் அக்பர்பாதுஷா.
சூர்தாசர் எம்பெருமான் கண்ணனின் திருவருளையும் அவனது திருவிளையாடல்களையும் எண்ணிப் பாடல் இசைத்தவாறே மதுரா வந்து சேர்ந்தார்.ஒரு பக்தனின் வேண்டுகோளுக்காக அவன் சொல்லைக் காக்க கல்லை நவரத்தினமாக்கிய கண்ணனின் பேரன்பை எண்ணி எண்ணி உருகினார். அவரதுஉள்ளத்தில்  பக்திக்காக ஆண்டவன் அளித்த பரிசை எண்ணும்போதெல்லாம் கண்ணன் மீது அன்பு மேலும் பெருகியது. அவனைப் பாடுவதே தன் கடன் என எண்ணி பாடல்களைப் பாடிப் பரவசத்துடன் வாழ்ந்தார். அவரது பாடல்கள் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருப்பதையும் அவரது வாழ்க்கை அவரது பக்திச் சிறப்பையும் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

வெள்ளி, 17 ஜூன், 2011

அறிமுகம்

 
அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள். பாட்டிசொல்லும் கதைகளை கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் படித்து எனக்கு ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.இந்தக் கதைகள் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பயன்பட்டிருக்குமேயானால் அதுவே எனக்கு மிக்க மகிழ்ச்சி. குழந்தைகளுக்காக எழுதிவந்த நான்இப்போது என்னையொத்த அன்புச் சகோதரர்களுடன் பேசுவதற்காகவும் என் மன எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் மணி மணியாய் சிந்தனை என்ற புதிய தளத்தைத் தொடங்கியுள்ளேன். இதில் நான் அடைந்த அனுபவங்கள், நான் ரசித்த காட்சி, நான்படித்த புத்தகம் என்ற என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விழைந்துள்ளேன்.
பாட்டி சொல்லும் கதைகளுக்கு அளித்த ஆதரவைப் போலவேஇந்த  மணி மணியாய் சிந்தனை என்ற தளத்துக்கும் ஆதரவு அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் அனைவரின் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன் சகோதரி 
ருக்மணி சேஷசாயி.
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

ஞாயிறு, 12 ஜூன், 2011

67 சத்தியம் தவறாத மன்னன்.

                                      
        ஒரு முறை தேவலோகத்தில் வசிஷ்டருக்கும் விச்வாமித்திரருக்கும் பெரும் வாக்குவாதம் நடந்தது.பொய் சொல்லாத மானிடரும் உண்டு என்று வசிஷ்டர் கூற "பொய் பேசாத மனிதர்களே இருக்கமாட்டார்கள். மனிதனாய்ப் பிறந்த அனைவரும் பொய் பேசியே தீருவார்கள்" என வாதிட்டார் விசுவாமித்திரர்.

"அப்படியானால் பூவுலகில் அயோத்தியில்மன்னனாக உள்ள ஹரிச்சந்திரனை  ஒரு பொய் சொல்ல வைத்து விடுங்கள். உங்களிடம் நான் தோற்றதாக ஒப்புக் கொள்கிறேன்." என்று கூறினார் வசிஷ்டர்.

"அப்படியே. ஹரிச்சந்திரனைப் பொய் சொல்ல வைக்கிறேன். வருகிறேன் ." என்று கூறிய விசுவாமித்திரர் கோபமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
பூலோகம் வந்தவர் நேராக அயோத்தி மன்னனை நாடிச் சென்றார். அவரது அறிவு சிந்திக்கத் தொடங்கியது.ஏதாவது சிக்கலில் இந்த அரசனை சிக்கவைத்துப் பின்னர்தான் பொய் சொல்ல வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

அரண்மனையில் நுழைந்த மகரிஷியை மரியாதையுடன் வரவேற்றான் மன்னன் ஹரிச்சந்திரன்.அவனை வாழ்த்திய விசுவாமித்திரர்
 "ஹரிச்சந்திரா! நான் செய்யும் யாகத்திற்கு சிறிது பொருள் தேவைப் படுகிறது அதனால் உன்னை நாடி வந்துள்ளேன்."என்றார்.

மிகவும் மகிழ்ந்த ஹரிச்சந்திரன் ஆயிரம் பொற்காசுகளை அளித்தான். அதைப் பெற்றுக்கொண்ட விசுவாமித்திரர் ஹரிச்சந்திரனை நோக்கி,"மன்னா, இந்தப் பொற்காசுகள் உன்னிடமே இருக்கட்டும். தேவையானபோது வந்து பெற்றுக் கொள்கிறேன்." என்று கூறிவிட்டு அரண்மனையை விட்டு வெளியேறினார்.

நாட்கள் கடந்தன. விசுவாமித்திரர் மீண்டும்  ஹரிச்சந்திரனை நாடிச் சென்றார்.வழக்கம்போல மன்னன் அவருக்கு வரவேற்பு அளித்து அமரச் செய்தான்.பின் அன்புடன் கேட்டான்.
"சுவாமி, நான் செய்யும் காரியம் ஏதேனும் உள்ளதா சுவாமி?"

"ஹரிச்சந்திரா, நீ சொன்ன சொல் தவறாதவன் என்றும்சத்தியமே பேசுபவன் என்றும் அறிந்தேன்.நேற்று என் கனவில் உன் நாட்டை எனக்குத் தானமாகக் கொடுப்பது போல் கனவு கண்டேன்.அப்படி நடக்குமா என்ன!"
கள்ளச் சிரிப்பைத் தன் இதழ்களில் நெளிய விட்டபடி கேட்டார் விசுவாமித்திரர்.

"முனி சிரேஷ்டரே, கனவிலே சொன்னால் என்ன நனவிலே சொன்னால்தான் என்ன? சொன்னது சொன்னதுதான்.
என் நாட்டைத் தங்களுக்குத் தானமாக இப்போதே தருகிறேன்."

மகிழ்ச்சியுடன் கூறிய ஹரிச்சந்திரன் உடனே தன் நாட்டை முனிவருக்குத் தானமாக தாரை வார்த்துக் கொடுத்தான்.
அடுத்த சில நிமிடங்களில் தன் மனைவி மகன் லோகிதாசன் சகிதம் அரண்மனையை விட்டுப் புறப்பட்டான்.

அதைக் கண்ட விசுவாமித்திரர், "நில் ஹரிச்சந்திரா, என் ஆயிரம் பொற்காசுகளைத் தந்துவிட்டுப் போ."

"சுவாமி அந்தப் பணமும் அரண்மனை கருவூலத்தில் தான் உள்ளது."

"அதுநீ மன்னனாக இருக்கும் போது. இப்போது அனைத்துச் செல்வங்களையும் தானமாகத் தந்து விட்டாய். இப்போது அவை எனக்குச் சொந்தம்.எனவே நீ தரவேண்டிய ஆயிரம் பொற்காசுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்?"

ஹரிச்சந்திரன் என்ன பதில் கூறுவான்! தலை குனிந்து நின்றான். அப்போது முனிவர்  மெதுவாக அவன் அருகில் வ்ந்தார்."ஹரிச்சந்திரா, நான் ஆயிரம் பொற்காசுகளை உன்னிடம் தரவே இல்லை என ஒரு பொய் சொல்லிவிடு உன் நாட்டையே நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" `

 ஹரிச்சந்திரன் திடுக்கிட்டான். பொய் சொல்வதா! அது என்னால் இயலாது என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு நடந்தான்.

விசுவாமித்திரர் விடவில்லை."என் ஆயிரம் பொற் காசுகளுக்குப் பதில் சொல்லிவிட்டுப் போ" என்றார்.தான் சம்பாதித்துத் தருவதாகக் கூறிய மன்னன் ஒரு சீடனைத் தன்னுடன் அனுப்பும்படி கூறி அவனையும் அழைத்துக் கொண்டு அரண்மனையை விட்டுப் புறப்பட்டான். 
 காட்டில் அலைந்து திரிந்த அரச குடும்பத்தினர் தங்கள் பசியைத் தாங்கிக் கொண்டு தங்களுடன் வந்த சீடனின் பசியைப் போக்கப் பாடுபட்டனர்.அந்த சீடனோ விசுவாமித்திரரின் கட்டளைப் படி வேண்டுமென்றே பசி பசி என்று மன்னனைப் பாடாய்ப் படுத்தினான்.

எப்படியாவது ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து அந்தச் சீடனை அனுப்பிவிடத் துடித்தான் மன்னன்.என்ன செய்வது என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை.

சில நாட்கள் கழிந்ததும் அரச தம்பதியர் காட்டை விட்டு ஒரு ஊருக்குள் புகுந்தனர் அந்த ஊரில் காலகண்டன் என்னும் ஒரு செல்வந்தர்வாழ்ந்து வ்ந்தார். அவர்  வீட்டில்பணிப  பெண்ணாகத தன் மனைவி சந்திரமதியை விற்றான்.அந்தத் தொகை கடன் தீர்க்கப் போதாமையால் ஹரிச்சந்திரன் இடுகாட்டில் பிணம் சுடும் வேலைக்குப் போனான். அதில் கிடைக்கும் வருமானத்தை கடனுக்குக் கொடுத்து வந்தான்.கிடைக்கும் அரிசியை உணவாக உண்டு வந்தான்.

நாட்கள் நகர்ந்தன.அடிமையாக வேலை செய்துவந்த சந்திரமதியை மட்டுமல்லாது அவள் மகன் லோகிதாசனையும் கடுமையாக வேலை வாங்கினாள் காலகண்டன் மனைவி.

ஒருநாள் காலகண்டன் லோகிதாசனை தர்ப்பைப் புல் பறித்துவர காட்டுக்கு அனுப்பினான்.அங்கு நாகப் பாம்பு லோகிதாசனைக் கடிக்க அவன் மரணமடைந்தான்.உடன் சென்ற சிறுவர்கள் வந்து சொன்ன இச் செய்தியைக் கேட்ட சந்திரமதி துடித்தாள்.

மகனை அடக்கம் செய்து சீக்கிரமே திரும்பவேண்டும் என்ற தன் எஜமானனின் கட்டளையைத் தலைமேல் தாங்கிய சந்திரமதி காட்டுக்கு ஓடினாள்.அங்கே தன் மகனின் உயிரற்ற உடலைக் கண்டு கதறினாள். கடமை நினைவுக்கு வரவே தன் மகனின் உடலைத் தூக்கிக் கொண்டு இடுகாடு நோக்கிச் சென்றாள்.

அங்கே தன் மகனைக் கிடத்தி அழுதுகொண்டே சிதை மூட்டினாள்.அப்போது அங்கே வந்த ஹரிச்சந்திரன் ,
"பெண்ணே! கால்படி அரிசியும் முழத் துண்டும் கால்பணமும் கொடுக்காமல் நீ இந்தப் பிணத்தை எரிக்க முடியாது."
என்றான்.
"ஐயா! நான் பரம ஏழை. அடிமையாகப் பணி புரிகிறேன்.என்னிடம் ஏது பணமும் அரிசியும்?தயவு செய்யுங்கள்"என்று மன்றாடினாள்.
"உன் கணவனிடம் கேட்டு வா"
"என் கணவர் இங்கு இல்லை ஐயா. என்னிடமும் எந்த பணமும் இல்லை."
"அப்படியானால் உன் கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தை விற்று எனக்குச் சேர வேண்டியதைக் கொடு." திடுக்கிட்டாள் சந்திரமதி.தன் கணவன் ஒருவனைத் தவிர அன்னியர் யார் கண்ணுக்கும் தென்படாதது அந்த மாங்கல்யம். எனவே தன் முன்னே நிற்பது தன் கணவனே எனத் தெரிந்து கொண்டாள்.
அதனால் அவனது  சொற்களைக் கேட்டதும்  சந்திரமதி "ஐயோ சுவாமி! தாங்களா? தங்களுக்கா இந்த நிலை? நான்தான் உங்கள் சந்திரமதி.இறந்து கிடப்பவன் நம் மகன்." என்று கதறினாள்.
சந்திரமதியின் இந்த சொற்களைக்  கேட்ட ஹரிச்சந்திரன் மகனது உடலைக் கட்டிக் கொண்டு அழுதான்.பிறகு ஒருவாறு மனம் தேறி மனைவியைப் பார்த்துக் கூறினான்.
" சந்திரமதி நீ உன் எஜமானனிடம் சென்று நான் கேட்ட பொருட்களைக் கொண்டு வா. அதுவரை இந்த உடலை நான் பார்த்துக் கொள்கிறேன்"
சந்திரமதி அழுதாள்."உங்கள் மகனுக்குக் கூடவா நீங்கள் பணம் கேட்கிறீர்கள்?"
"என் எஜமானனுக்கு நான் உண்மையானவனாக இருக்கவே விரும்புகிறேன்.நீ சென்று வா."
இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த விசுவாமித்திரருக்கு பெரும் வியப்பு ஏற்பட்டது. தன் வாதத்தில் வசிஷ்டரிடம் தோற்று விடுவோமோ என்ற அச்சமும் ஏற்பட்டது.
ஹரிச்சந்திரனுக்கு மேலும் துன்பம் கொடுக்க எண்ணினார்.
சந்திரமதி நடந்து செல்லும் பாதையில் அந்நாட்டு மன்னனின் மகனது இறந்த உடல் விழும்படி செய்தார்.காசிராஜாவின் மகனைக் கொன்றவள் எனப் பழி சுமததப் பட்டாள் சந்திரமதி. 
அதனால் அவளே குற்றவாளி எனத் தீர்ப்பளித்த காசி மன்னன் அவளைச் சிரச்சேதம் செய்ய ஆணையிட்டான்.கொலைக் களத்துக்குக் கொண்டு வரப்பட்ட சந்திரமதியைக் கொல்லவேண்டிய கடமையை ஹரிச்சந்திரனே ஏற்க வேண்டியதாயிற்று.
அந்த நிலையிலும் மனம் கலங்காது நின்றான் ஹரிச்சந்திரன்.அப்போது அங்கு வந்த விசுவாமித்திரர் "ஹரிச்சந்திரா! இப்போதேனும் நான் சொல்வதைக் கேள். எனக்கு வாக்குக் கொடுக்கவில்லை என ஒரு பொய் சொல்லிவிடு. மீண்டும் அரசபதவி, அமோகமான வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்."எனக் கூறியதைப் புன்னகையுடன் மறுத்தான் ஹரிச்சந்திரன்.
அவன் எஜமான் கட்டளையிட்டவுடன் கத்தியை ஓங்கி சந்திரமதியின் கழுத்தில் வீசினான். என்ன ஆச்சரியம் கத்தி மாயமானது கழுத்தில் மாலையுடன் நின்றாள் சந்திரமதி.
சிவனும் பார்வதியும் வசிஷ்டரும் தோன்றிஆசி கூறினர்.காசிமன்னன் மகனும் லோகிதாசனும் எழுந்து ஓடிவந்து இறைவனை வணங்கி நின்றனர்.
விசுவாமித்திரர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.
இறைவன் திருவாய் மலர்ந்தருளினார்."ஹரிச்சந்திரா, உலகில் உண்மை, சத்தியம் என்ற பண்புகள் உள்ளவரை உன் பெயரும் நின்று நிலைக்கும். உன்நாட்டை அடைந்து பல்லாண்டுகள் வாழ்வாயாக."என்று ஆசி வழங்கி மறைந்தார்.
வசிஷ்டரும் விசுவாமித்திரரும் ஆசி வழங்க நாட்டை அடைந்தான் ஹரிச்சந்திரன்.
வசிஷ்டர் புன்னகை புரிந்தார். "மகரிஷி! ஒரு மனிதனின் பெருமையை உலகுக்குக் காட்டவேண்டுமெனில் அவன் புடம் போடப் படவேண்டும் அதனால்தான் ஹரிச்சந்திரனுக்கு இத்தனை துன்பங்களைக் கொடுத்தீரோ?"
"ஆம் இம்மன்னனது பெருமையை உலகில் நிலை நாட்ட வேறு வழியில்லையே"என்று புன்னகைத்தார் விசுவாமித்திரர்.

எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும் தன் கொள்கையில் சற்றும் வழுவாத ஹரிச்சந்திரனின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு பாடமல்லவா?



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

செவ்வாய், 31 மே, 2011

முக்திநாத் யாத்திரை

அன்பு நெஞ்சங்களே, கடந்த பதினைந்து நாட்களாகத் தங்களைச் சந்திக்கவில்லை.  நான் முக்திநாத் (நேபாளம்) என்ற வடதேச யாத்திரை சென்றிருந்ததுதான் காரணம். என் இனிய அனுபவங்களை இந்தக் கட்டுரையின் மூலம் தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நாங்கள் நாற்பது பேர் இரவு பதினொரு மணிக்கு ரயிலில் சென்னையிலிருந்து புறப்பட்டோம். ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தோம். மறுநாள் சுமார் நாற்பது மணி நேரத்திற்குப் பின் கோரக்பூர் என்ற நகரத்தை அடைந்தோம்.
அங்கிருந்து பேருந்தில் புறப்பட்டு சுமார் ஐந்து மணி நேரம் கழித்து நேபாளத்திலுள்ள பைரவா என்ற நகரை அடைந்தோம். நகருள் நுழையும் முன் இந்திய நேபாள எல்லையில் உள்ள  ஒரு வளைவுத் தூணைக் கடந்தோம்.
    



வழியெங்கும் மலைத் தொடர்கள் பசுமை போர்த்தவண்ணம் அழகுறக் காட்சியளித்தன.விரைவிலேயே இருட்டிவிட்டதால் தொடர்ந்து காட்சிகளைக் காண இயலவில்லை. இரவு பத்து மணிக்குமேல் ஆகிவிட்டது.அவ்வூரில் ஹோட்டல் அசோகாவில் தங்கினோம்.மறுநாள் காலை ஆறரை மணிக்குப் புறப்பட்டு சுமார் பதினொரு மணிக்கு திரிகூட மலைக்கு வந்தோம்.இங்கு மூன்று மலைகள் இணைந்திருப்பதால் இதற்குத் திரிகூடமலை என்று பெயர்.

இங்கு கண்டகி நதி ஓடுகிறது. இந்த நதியில் தான் கஜேந்திரன் என்ற யானையை முதலை பிடித்துக் கொண்டது. கஜேந்திரன் ஆதிமூலமே என்று அலற ஸ்ரீமன் நாராயணன் ஓடி வந்து முதலையை தன் சக்கரத்தால் வீழ்த்தி யானையைக் காப்பாற்றிய இடம் உள்ளது.இந்த நதிக்கரையில் ஒரு ஆலயம் உள்ளது.நாராயணர் கோயில்.இங்கு யானை, முதலை இவற்றின் சிலைகளும் உள்ளன.
                                                                      



இங்கு கண்டகியில் ஸ்நானம் செய்து கோயிலைப் பார்த்து வணங்கி இங்கேயே மதியச் சாப்பாட்டை முடித்துக் கொண்டோம். பிற்பகல் மூன்று மணிக்குப் பேருந்தில் புறப்பட்டு இரவு சுமார் பனிரெண்டு மணிக்கு மலைகளின் நடுவே இருக்கும் போக்ரா என்ற நகரை அடைந்தோம். ஒரு பெரிய பள்ளத்தாக்குக்குள் ஒரு பெரிய நகரமே உள்ளது.இந்த நகருக்கு வருமுன்னர் பல மலை வளைவுகளைக் கடந்தோம்.இங்கு ஹோட்டல் திபெத்தில் தங்கினோம்.




காலையில் புறப்பட்டு ஏரியின் நடுவே ஒரு சிறிய தீவில் குடிகொண்டுள்ள வாராஹி தேவியைப் படகில் சென்று தரிசித்தோம்.பின்னர் அங்கிருந்து விந்தியாவாகினி, ராதாக்ருஷ்ணா,ஐந்து லிங்க மூர்த்தி,சப்த சிரஞ்சீவி,தரிசனம் முடித்து, எதிரே உள்ள தேவி பால்ஸ் என்ற நீர்வீழ்ச்சியைப் பார்த்தோம்.இங்கு கண்டகி நதி வெண்மையாகப் பாய்வதால் இதற்கு ஸ்வேத கண்டகி என்று பெயர்.










பின்னர் சுமார் ஒரு மணிக்கு குப்தேஷ்வர் என்ற சிவன் கோயிலை அடைந்தோம். இங்கே சிவலிங்கம் பெரிய ஐந்து தலை நாகத்துடன் இருப்பதுபோல் உள்ளது சுமார் நூறு படிகளில் கீழே இறங்கிப் பாதாளத்துள் லிங்கத்தைத் தரிசித்தோம்.இதன் பின்னரும் இன்னும் சிவலிங்கம் படிகளின் கீழே இருப்பதாகச் சொன்னார்கள்.சிலர் இறங்கிப் பார்த்தனர். என்னால் முடியாததால் மேலே ஏறிவிட்டேன்.

குகைக்குள் நீர் சொட்டிக் கொண்டே இருந்ததால் எங்கும் ஈரமாக இருந்தது.இரண்டு மணிக்கு இருப்பிடம் திரும்பி சாப்பிட்டு ஓய்வு. மாலையில் சிலர் ஷாப்பிங் சென்றனர்.

மறுநாள் காலை எட்டுமணிக்கு போக்ரா விமான நிலையத்தை அடைந்தோம்.பத்து மணிக்கு விமானம் ஏறினோம். பனி மலைகளின் நடுவே பறந்து சென்ற விமானம் பத்தரை மணிக்கு ஜோம்சொம் என்ற ஊரை அடைந்தது.அங்கு ஒம்ஹோம் என்ற ஹோட்டலை  அடைந்தோம்.அங்கிருந்து பனிரெண்டு மணிக்குப் புறப்பட்டு பேருந்தில் ஏறி ஜீப் உள்ள இடத்திற்கு வந்தோம்.அங்கே ஜீப்பில் ஏறி சுமார் இரண்டு மணி நேரம் கடும் மலைப் பாதையில் பயணித்தோம்.சுமார் பதினான்காயிரம் அடி உயரத்தில் ஜீப்பில் பயணிக்கும் போது சற்றே அச்சமாகத்தான் இருந்தது.அந்த வழியிலேயே கண்டகி நதி கருப்புநிறமாக ஓடுகிறது.இங்கு இதற்கு காலாகண்டகி என்று பெயர்என்று சொன்னார்கள்.



ஒருவழியாக முகதிநாத்தின்  அடிவாரம் வந்து அடைந்தோம். அங்கிருந்து ஐந்து நிமிட நடைப் பயணம் மேற்கொண்டோம்.கடும் குளிர். பனிமழைவேறு. அந்த உயரத்தில் பிராணவாயு குறைவாக இருந்ததால் சற்றே மூச்சுத் திணறல் வேறு இருந்தது. வாய்விட்டு முக்திநாதா  என்று அழைத்துக் கொண்டே நடந்தோம்.அங்கிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மோட்டார் பைக்கில் பயணம் செய்து முக்தி நாத் கோவிலின் அடிவாரம்  வந்து சேர்ந்தோம்.
மோட்டார் பைக்கில் பயணம் செய்யும் போது நான்கடி அகலப் பாதையில் கற்களின் மேல் பயணிக்கும் போது முக்தி அடைந்து விடுவோம் என்றே தோன்றியது.அங்கே திபெத்தியர்கள் ஒவ்வொரு பைக்கிலும் ஒரு பயணியை ஏற்றிக்கொண்டு வெகு சுலபமாக ஓட்டுகிறார்கள்.நம்மிடம் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போதே நமக்கு அச்சமாக இருக்கிறது.










இறங்கிய இடத்திலிருந்து சுமார் நூறு மீட்டர் தூரம் படிகளாகச் சற்றுத் தொலைவு நடந்து கோவில் வளாகத்தில் நுழைந்தோம். கோவில்  சிறியதாக இருந்தது  பனிப்பொழிவு அதிகரித்துவிடவே குளிரிலும் ஈரத்தாலும் நடுங்கினோம்.அந்தக் கோவிலில் சற்றும் ஒதுங்க இடம் இல்லை. அனைவரும் அந்தப் பனிப் பொழிவிலேயே நின்றிருந்தனர்.கர்ப்பக்கிரகம் இருக்கும் இடம் மட்டுமே பத்துக்குப் பத்து என்ற அளவில் ஒரு அறையாக இருந்தது.பின்னால் ஹோமம் செய்யும் இடம் அதேபோல சிறிய இடமாக இருந்தது.கோவிலைச் சுற்றி கண்டகிநதி நூற்றிஎட்டு நீர் வீழ்ச்சியாக விழுகிறது.








ஆண்கள் அந்த  குளிரிலும்  எல்லாநீரிலும்  குளித்துவிட்டு  இறைவனை  தரிசனம்  செய்தனர். .பெண்கள்  நீரைத்தலையில்  தெளித்துக்  கொண்டோம். ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக நின்ற அந்த நாராயணரின் அழகில் நாங்கள் பட்ட துன்பம் அதிகமாகத்  தோன்றவில்லை.  

கொண்டுபோயிருந்த திராக்ஷை கல்கண்டு பிரசாதங்களையும் பட்டுத் துணியையும் இறைவனின் பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டோம்.அங்கு இரண்டு பெண்கள் மட்டுமே பூஜை செய்கிறார்கள். இது அவர்களுக்குப் பரம்பரை உரிமை என்று கூறினார்கள். .

தரிசனம் முடித்து நாங்கள் கீழே இறங்கினோம். இடது பக்கம் படிகள் போலப் பாதை சென்றது.அங்கிருந்து ஒரு கிலோமீட்டர்  தூரத்தில் ஜ்வாலா நரசிம்மர் குடிகொண்டுள்ளதாகக் கூறினார்கள்.அங்குதான் ஜடபரத ரிஷி தவம் செய்த இடம் என்று கூறினார்கள்.ஆனால் அங்குசெல்ல இயலாதபடி பனி கொட்ட ஆரம்பித்தது. 


விரைவில் கீழே இறங்குங்கள் இல்லையேல் உங்களால் இறங்க இயலாது என்றதால் விரைவாகக் கீழே இறங்கி பைக்கிலும் ஜீப்பிலும் பயணித்து பேருந்தை அடைந்தோம்.ஓம் ஹோமை அடைந்து சூடாகத் தேநீர் குடித்தபோதும் குளிர் விடவில்லை சுமார் இரண்டு மணிநேரத்திற்குப் பிறகே உடல் ஒரு நிலையை அடைந்தது.

மறுநாள் விமானம் செல்லுமோ செல்லாதோ என்று சந்தேகமாகவே இருந்தது.பனிப் பொழிவும் மேகக் கூட்டமும் அதிகமானால் விமான சேவை நிறுத்தப் படும். நல்லவேளையாக முதல் விமானத்திலேயே  புறப்பட்டு போக்ரா வந்து சேர்ந்தோம்.  விமானத்திலிருந்து   கீழே  பார்த்த பொழுது   போக்ரா  ஒரு  பெரிய  நகரம்  என்று  தெரிந்தது .


பத்து   மணிக்கு  போக்ராவில்  ஹோட்டல் திபெத் ஹோமில் ஓய்வு.மாலையில் கடைவீதிக்குச் சென்றோம்.மறுநாள் போக்ராவிலிருந்து காட்மண்டுவிற்குப் புறப்பட்டோம். சுமார் நாலேகால் மணிக்கு மனகாம்னா தேவி என்ற கோவிலைப் பார்க்க பேருந்து நின்றது.அங்கிருந்து நூறு படிகளில் இறங்கி விஞ்ச் புறப்படும் இடம் வந்தோம்.வரிசையில் நின்று ஆறு ஆறு பேராக விஞ்சில் ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்குப் பறந்தோம்.

போக்ரா நகரைச் சுற்றியுள்ள மலைகளில் ஒரு மலை மீதுதான் இந்தக் கோவில் உள்ளது.
மனகாமனாதேவி  கோவில் கொண்டுள்ள இடம் சுமார் நான்காயிரம் அடி உயரே உள்ள ஒரு மலைப் பகுதி. இந்த மலையைச் சுற்றிக் கொண்டு திரிசூலி என்ற நதி ஓடுகிறது.கோவிலிலும் நல்ல கூட்டம் வரிசையில் நின்று தரிசித்தோம்.அங்கே இன்னும் ஆடு கோழி பலி நடக்கிறது.எங்கள் கண் எதிரேயே பல ஆடுகள் பலியாயின.சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின் மீண்டும்வின்ச்சில்  ஏறிமலையைக் கடந்து வந்தோம்.பின்  எங்கள் பேருந்தில் பயணத்தைத் தொடர்ந்தோம். 






இரவு பனிரெண்டரை மணிக்குக் காத்மாண்டுவை அடைந்தோம். மகாராஜா ஹோட்டலில் இரவு ஓய்வெடுத்தோம். மறுநாள் காலை காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலுக்குச் சென்றோம்.இது பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று.இந்த இடத்தில்தான் அர்ஜுனன் தவம் செய்து பாசுபதாஸ்த்திரத்தை அடைந்ததாக வரலாறு.



ஒரு பசு லிங்கம் ஒன்றின் மீது பால சொரிய அந்த லிங்கத்தை எடுத்து எரிய அடிப்பாகம் கேதார்நாத்திலும் மேல்பகுதி பசுபதினாத்திலும் விழுந்ததாகக் கூறினார்கள். அகோரம் வாமதேவம் முதலான பஞ்ச முகங்களைக் கொண்ட சிவனைத் தரிசித்தோம்.கோவிலின் பின் பகுதியில் காலபைரவர் பெரிய உருவமாகக் காட்சியளித்ததைத் தரிசித்தோம்.நாகர், விநாயகர் என்ற பல சந்நிதிகள் உள்ளன கோவிலின் முன்னால் பாக்மதி என்ற நதி ஓடுகிறத

சற்றுத் தொலைவில் குப்தேச்வரிஎன்ற தேவியை பத்து படிகளுக்குக் கீழே நீருள் படுத்த நிலையில் உள்ள தேவியை தரிசித்தோம்.இது தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த இடம். இந்த வயிற்றுப்  பகுதியில் தீர்த்தம் வந்துகொண்டே இருக்கிறது.இது ஒரு சக்தி  பீடம் எனக் கூறினர்.
உணவு நேரத்திற்குப் பின் மாலை நான்கு மணிக்கு நீருள் படுத்திருக்கும் ஜல நாராயணர்  தரிசித்தோம்.இவருக்கு புடா நீலகண்டன் என்று பெயர். ஒரு விவசாயி நீலகண்டன் என்ற பெயருடையவன் தன் நிலத்திலிருந்து இச் சிலையை எடுத்ததால் அவன் பெயரால் இவர் பெரிய நீலகண்டன் என்று அழைக்கப் படுகிறார்.

மாலை ஐந்து மணிக்குப் புறப்பட்டு இரவு ஒரு மணிக்கு நாராயணா  காட்   
அடைந்தோம்.


இந்த இடம் சாளிக்ராமக்ஷேத்ரம் என்று அழைக்கப் படுகிறது.இங்கு கண்டகி,நாராயணி, அந்தர்வாகினி என்னும் மூன்று நதிகள் இணைந்து ஓடுகின்றன. இங்கு தீர்த்த ஸ்ரார்த்தம் செய்கிறார்கள்.காசியில் செய்வதுபோல் இங்கும் நடத்தப் படுகிறது.இங்கு உள்ள கண்டகி நதி ஸ்நானம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.ஏராளமான சாலிக்ராம கற்களைப் போலவே தோற்றம் கொண்ட கற்கள் நதிக் கரையில் பரவிக் கிடந்தன.சிலவற்றைப் பொறுக்கிக் கொண்டோம்.



அங்கிருந்து புறப்பட்டு ஜனகபுரியை இரவு ஒரு மணிக்கு வந்து சேர்ந்தோம்.இங்கு "மானக்கி"என்ற ஹோட்டலில் தங்கினோம்.அதிகாலையில் புறப்பட்டு ஜனகரின் அரண்மனை, கனகபவன் என்று அழைக்கப்படும் ஜானகியின் அந்தப்புரம்,சீதாகல்யாண மண்டபம், சீதை கிடைத்த இடம், வில் விழுந்த இடம் முதலிய இடங்களைப் பார்த்தோம்.ராமர் வில் ஒடித்த இடம்,இங்குதான் ஐயாயிரம் ரிஷிகள் ஒரு காலத்தில் யாகம் செய்தனர். அந்த ஊரில் எல்லாதைவங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரிய சிவன் கோவிலையும் பார்த்தோம்.



அந்த கோவில் வளாகத்திலேயே எங்கள் உணவை முடித்துக் கொண்டு புறப்பட்டோம்.இரவு பதினொரு மணிக்கு பைரவா என்ற நேப்பால எல்லையிலுள்ள ஊரில் அதே ஹோட்டலில் தங்கினோம்.அதிகாலை ஏழு மணிக்கு சோனாலி என்ற இந்திய எல்லைக்குள் நுழைந்தோம். ஏனோ மனம் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெற்றது.

இரவு ஏழு மணிக்கு உ.பி.டூரிஸ்ட் பங்களா வந்து சேர்ந்தோம்.காலையில் வாரணாசியில் படகில் ஏறி பஞ்சகாட் சென்றோம்.அங்கு கங்கையில் ஸ்நானம் தர்ப்பணம் முடிந்ததும் சுமார் நூறு படிகளில் ஏறி பிந்து மாதவனைத் தரிசித்தோம்.

பின்னர் காசி விஸ்வநாதர், அன்னபூரணி,  விசாலாக்ஷி தரிசனம் செய்தோம்.இரவு எட்டு மணிக்குப் புறப்பட்டு மொகல்சராய் என்ற இடத்தில் ரயிலில் ஏறினோம். பத்தாம் தேதி இரவு முதல் பனிரெண்டாம் தேதி பிற்பகல் இரண்டு மணிவரை ரயில் பயணம் முடித்து சென்னை வந்து சேர்ந்தோம்.

பதினான்கு நாட்கள் நாங்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தோம். இந்த நல்ல யாத்திரையை செய்யும் சக்தியையும் சந்தர்ப்பத்தையும் அளித்த முக்தி நாதனுக்கும் மற்றுமுள்ள புண்ணிய தலங்களில் கோவில் கொண்டிருக்கும்  எல்லா தெய்வங்களுக்கும்  ஆயிரம் நமஸ்காரங்களைக் கூறிக்கொள்கிறேன்.

















                                             ஸ்ரீதேவி பூதேவி சஹித ஸ்ரீ முக்தி நாதர்.




ருக்மணி சேஷசாயி