வியாழன், 23 அக்டோபர், 2014

தியாகச்சுடர். --- வரலாற்றுத்தொடர்.


                                                                        மூன்று                .
         
 அந்தப்புரம் முழுமையும் செய்யப்பட்டிருந்த அலங்காரம் கண்களைப் பறித்தது.எங்கே பார்த்தாலும் அழகிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. 

அதைப்பார்த்த அனாரின் ரத்தம் கொதித்தது.சலீம் சரச சல்லாபமாக வாழ்க்கை நடத்துகிறான் .என் காலடியே சொர்க்கம் என்று இருந்தவன்  இன்று 

அந்தப்புரத்தையே சொர்க்கமாக்கிக் கொண்டிருக்கிறான் .என் வாழ்க்கையைக் கல்லறைக்குள் மூடிவிட்டு அதன்மேல் இன்பமாளிகையைக் கட்டிக் கொண்டிருக்கிறான்.


  பற்களைக் கடித்து எச்சிலைக் கூட்டி விழுங்கித் தன ஆத்திரத்தை அடக்கிக் கொண்டாள் அனார்க்கலி. அவள் அங்கு வந்ததையோ மற்றசேடியருடன்  நிற்பதையோ யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை.ஒரு காலத்தில் தெருவில் சென்றாலே அதோ அக்பரின் அன்புக்குப் பாத்திரமான ராஜநர்த்தகி அனார்க்கலி இசைக்குயில் நடனமயில் என்று சுட்டிக்காட்டி அவளைக் காண்பதற்குப் போட்டியிட்டுக்கொண்டு வந்தவர்கள் கூட அவள் இன்று தம்மிடையே இருப்பது தெரியாமல் கருமமே கண்ணாக இருந்தனர்.
"வா வா ,சீக்கிரம் வா " என்ற பணிப்பெண்ணின் குரல் கேட்டு கனவுலகிலிருந்து விழித்தாள்  அனார்க்கலி. சேடியைத் தொடர்ந்து பிரம்மாண்டமான ஓர் அறைக்குள் நுழைந்தாள்.
அந்த அறை! , அறையா அது? அழகின் பிறப்பிடம் தேவேந்திரன் மாளிகை என்றுகூடச் சொல்லலாம் அத்தனை அழகு மிகுந்ததாக இருந்தது.அந்த அறையைச் சுற்றி ஒரு பார்வை பார்த்தவளின் கண்கள் ஒரு காட்சியைப் பார்த்து இமைக்க மறந்தன.ஆம்.அந்த அறையின் நடுநாயகமாக இருந்த தந்தக் கட்டிலின்மேல் தங்கச் சிலையொன்று சயனித்திருநதது. 
      சத்தம் கேட்டு மெதுவாகத் திரும்பிப் பார்த்த அந்த முகத்தைக் கண்டு திகைத்தாள் அனார்.பெண்களில் இத்தகைய அழகிகள் கூட உண்டா?   இவள் பெண்தானா அல்லது உலகத்தின் ஜோதி அனைத்தும் ஒன்று திரண்டு பெண்ணுருவாய் வந்து அமர்ந்துள்ளதா?திகைத்து நின்றஅனார்க்கலி  அந்தப் பெண் "என்ன வேண்டும்?" என்று கேட்டபிறகே திகைப்பினின்றும் மீண்டாள் .
வாய் மூடியபடியே தான் தொடர்ந்து வந்த சேடியைத் திரும்பிப் பார்த்தாள் ,
"மகாராணி, தங்களுக்கு அலங்காரம் செய்ய வந்துள்ளோம்.தயவு செய்து அனுமதிக்கவேண்டும் " என்று பணிவுடன் கூறி நின்றாள்  அந்த சேடி. 
அலங்காரமா? ..ம்..சீக்கிரம் சித்தப்படுத்துங்கள்.என்றாள் புன்னகையுடன். புன்னகையா அது!அதனுள் எத்தனை எத்தனையோ பொருள் புதைந்து கிடந்தன.அனாரின் கண்கள் அதைக் கவனிக்கத் தவறவில்லை.
"அந்தத் தைலத்தை எடு, இந்த முத்தாரத்தைப் பிடி,அந்த மலர்களைத் தொடுத்து வா."என்ற செடியின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தாள் 
அனார்க்கலி. 
"நன்றி மகாராணி, இன்னும் சற்றுநேரத்தில் பாதுஷா இங்கு விஜயம் செய்யப் போகிறார்."
என்று கூறிவிட்டுப் பணிந்து எழுந்தவாறே நகர்ந்தாள்  சேடி .
               அனார்க்கலி கற்சிலை என நின்றிருந்தாள். அவள் கண்களில் நீர் சொரிவதை நூர்ஜஹான் கவனிக்கவேயில்லை.சாளரத்தின் வழியே பார்த்தவாறு நின்றிருந்தாள் அழகுத் திருவுருவமாகத் திகழ்ந்த நூர்ஜஹான்.அவளைப் பார்த்தவாறே நின்றிருந்தாள்  அனார். எத்தனைநேரம் இருவரும் அப்படியே நின்றிருந்தனரோ.வெளியே ஆரவாரம் கேட்டபோதுதான் தம் நிலைக்கு வந்தனர்.
"பாரா உஷார்! பாதுஷா ஜஹாங்கீர் வந்துகொண்டிருக்கிறார் ."என்ற சிப்பாயின் அறிவிப்பைக் கேட்டு உணர்வு பெற்ற அனார்க்கலி சட்டென்று திரைமறைவில் நின்று தன்னை மறைத்துக் கொண்டாள்.
              நூர்ஜஹான் சாதாரணமாகத் திரும்பிப் பார்த்தாள்.ஜஹாங்கீர் என்று பட்டம் சூட்டிக் கொண்ட சலீம் வேகமாக அந்த அறைக்குள் நுழைந்தான்.தான் வேட்டையாடி ஜெயித்த பொருளைப் பார்க்கும் ஆவல் அவன் கண்களில் தெறித்தது.
அவனைப் பார்த்ததும் மெதுவாக அன்னமென நடந்து வந்து அவன் முன் சலாமிட்டு அவனை வரவேற்றாள் நூர்.   ஜஹாங்கீர் பரவசத்துடன் அவளது இரு கரங்களைப் பற்றிக்கொண்டு மஞ்சத்தில் அமர்ந்தான்.வெகுநேரம் அவளையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.காதலின் சக்தி முழுவதையும் தன கண்களில் தேக்கிக் கொண்டு அவளைப் பார்த்தான் ஜஹாங்கீர்.
நூர்ஜஹானால் அதற்குமேல் மெளனமாக இருக்க இயலவில்லை.
"அன்பே! தங்கள் அன்புக்குப் பாத்திரமான நான் எத்தனை பாக்கியசாலி! தங்களின் அடிமையாக வாழ்வதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  அன்புக்குப் பாத்திரமாக வாழ்வதற்கு ......!"பேசிக்கொண்டே போனாள்  நூர் .
அவளுடைய மாதுளை உதடுகளைத் தன் கரத்தால் மூடினான் ஜஹாங்கீர். 
"இல்லை நூர்! நான் எதிர்பார்த்த இன்பம் என்னைத் தேடி வந்துவிட்டது.நான் எந்தப் பொருளுக்காகப் போராடினேனோ அந்தப் பொருள் எனக்குக் கிடைத்து விட்டது.நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி நூர் ! உலகத்தின் ஜோதிஎல்லாம் உன் உருவாய் மாறி என் முன் நிற்கிறது.எங்கே உன்னைக் கவர்ந்து வந்ததற்காக என்னை வெறுத்துவிடுவாயோ என்று தவித்துக் கொண்டிருந்தேன்.என்னை நீ ஏற்றுக் கொண்டதனால் நான் தான் பாக்யசாலி நூர்ஜஹான்."
அதற்குமேல் அனார்க்கலியால் பொறுக்க முடியவில்லை.  திரை மறைவிலிருந்து வெளிப்பட்டு அனார்மலர்க் கொத்து ஒன்றை 
அவன் முன் நீட்டினாள். அப்பொழுதேனும் அன்றைய அனாரின் நினைவு அவனுக்கு வருமா என்ற நப்பாசையோ என்னவோ பாவம் 
நினைப்பதேல்லாம்தான் நடப்பதில்லையே.அவள் முகத்தைக்கூட ஏறிட்டுப் பார்க்காமல் மலரைஉ மட்டும் பெற்றுக் கொண்டு 
"இந்த மலர் என் நூர்ஜஹானின் கூந்தலில் அமர்ந்தால் பிறப்பின் பயனை அடைந்து விடும்.இம்மலர் உண்மையில் பாக்கியம் செய்த மலர்."
என்று கூறியவண்ணம் நூரின் தலை முக்காட்டை விலக்கி அவள் தலையில் அந்த மலரைச் செருகினான் ஜஹாங்கீர்.
அனாரின் இதயத்தில் வேல் செருகியது போன்ற வேதனை உண்டாயிற்று. 

           அவள்   கண்களில் நீர் திரையிட்டது.அந்தத் திரையினூடே பழைய காட்சி பளிச்சிட்டது. தோட்டத்தின் நடுவே அனார்க்கலி அழகு பிம்பமாக அமர்ந்திருந்தாள்.அவளை அணைத்துப் பிடித்தவாறே அனார்மலர்க்கொத்தை தலையில் செருகிய சலீம் இதே வார்த்தைகளைக் கூறியது காதுகளில் ஒலித்தது பசுமையாக.
"அனார், என் அன்பே, என் அந்தப்புரத்தில் அமர்ந்து கொண்டு உன் தலையில் உரிமையுடன் மலர் சூடும் நாள் விரைவில்
வந்து சேரும் " என்று கூறிய வாய் இன்று நூர்ஜஹானின் அழகைப் புகழ்ந்து கொண்டிருக்கிறது.அனார்க்கலியின் உள்ளம் தூள்தூளாகச் சிதறியது.அதற்குமேல் அந்த இடத்தில் இருந்து சலீமின் சல்லாபத்தைக் காணப் பிடிக்கவில்லை அனாருக்கு.
துக்கம் தாங்காமல் அரண்மனையை விட்டு வேகமாக வெளியேறினாள்.

                                                                           (அடுத்த பகுதி நாளை)



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 22 அக்டோபர், 2014

தீபாவளி நல்வாழ்த்துகள்.

அன்பு நெஞ்சங்கள் அத்துணை பேருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளும் நல்லாசிகளும்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

தியாகச்சுடர். வரலாற்றுத் தொடர்.

                              இரண்டு 

   "நாதிரா, மகளே,"என்றவாறு அவள் அருகே ஓடிச்சென்றாள்  அவள் தாய். 

 "உன் விருப்பம்போல் செய். ஆனால் நீ யாரென்பதை சலீம் புரிந்து கொண்டதாகத் தெரிந்த அக்கணமே என் உயிர் பிரிந்து விடும்.அதை நினைவில் வைத்துக் கொள்.பத்திரமாகப் போய்வா மகளே"

"அம்மா" ஆனந்த மேலீட்டால் தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டு முத்தமழை பொழிந்தாள் நாதிரா.அவளது மகிழ்ச்சியைக் கண்ட அந்தத் தாயின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

         *  *  *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *
                        வழி நீண்டது. புறப்பட்ட வேகத்தில் நாதிராவின் உள்ளம் எப்பொழுதோ ஜஹாங்கீரிடம் சென்று சேர்ந்து விட்டது.காதலனைக் காணப் போகிறோம் என்ற களிப்பில் காரிகை கடுகி நடந்தாள் .மகிழ்ச்சி நெஞ்சை நனைத்திருந்தது.பசி, தாகம் களைப்பு சோர்வு எதுவுமே அந்த நங்கையை அண்டவில்லை.எல்லாவற்றையும் கடந்த நிலையில் இருந்தாள்  நாதிரா.

வழியெங்கும் நிறைந்து மலர்ந்திருந்தன அனார் மலர்கள்.அவள் மகிழ்ச்சியைக்.கண்டு .காற்றில்அசைநது தங்கள் ஆசியைத்
தெரிவித்தன அனார் மலர்கள். நாதிராவின் இதழோரத்தில் புன்னகை அரும்பியது.அனார் மலர்களினூடே சலீமின் உருவம் தோன்றித் தோன்றி மறைந்தது.வா வா என்று அழைப்பது போல் இருந்ததோ என்னவோ கைகளை விரித்துக் கொண்டு வேகமாக ஓடினாள் நாதிரா.

      அக்பர் பாதுஷாவிடம் அனார்மலரைப் பரிசாகப் பெற்றதும் அனார்க்கலி என்ற பெயரையும் ராஜநர்த்தகி என்ற பதவியை ஏற்றதும் அவள் நினைவில் சுழன்றன.மொகலாய சாம்ராஜ்ய எல்லைக்குள் நுழைந்ததும் புதிய பலமும் உற்சாகமும் தோன்றிவிட்டன அனாருக்கு.வெகு நாட்கள் பிரிந்திருந்த தாயைக் கண்டதுபோல் மகிழ்ச்சியில் திளைத்தது அவள் மனம்.உள்ளம் கட்டுக்கு அடங்காமல் துள்ளியது.நாட்கள் ஓடின.

அரண்மனை வாயிலை அடைந்தபோதுதான் என்ன செய்வது என்று தோன்றாமல் நின்றாள்  அந்தப்பேதை. அவள் நிற்பதை யாரும் கவனிக்கவேயில்லை.தன்னை யாரும் தெரிந்துகொள்ளவில்லை என்பதை அறிந்து அவள் உள்ளம் நிம்மதியடைந்தது. அதேசமயம் 'சலீமுக்கும் தன்னை யாரென்று தெரியாமல் போய்விட்டால் ....ஒருவேளை சலீம் என்னை மறந்திருந்தால்......' தலையைக் குலுக்கிவிட்டுக் கொண்டாள்  ஒருமுறை.

"அப்படியெல்லாம் இருக்காது.அரும்பாடுபட்டு அகதிபோல் வந்திருக்கும் என்னை அல்லாஹ் ஒருபோதும் ஏமாற்ற மாட்டார்."என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டாள் பேதை அனார்க்கலி.

   நேரம் கடந்தது.அன்று அரண்மனையில் ஏதோ விழா போலத் தோன்றியது. உள்ளே நுழையத் தயங்கியவாறு நின்றிருந்தாள்  அவள். 'சலீம் என்னையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.என் நினைவிலேயே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.சுகமும் இன்பமும் அவர் விரும்பாதவையாக இருக்கவேண்டும்.அவர் இருக்கும் இடமே ஒரு சோகத்திரை போர்த்தது போல இருக்கவேண்டும்.'

என்று அனார்க்கலி யின் உள்மனம் விரும்பியது.
மற்றொரு மனமோ 'சேச்சே, நான் தான் வாழ்விழந்து தவிக்கிறேன். அவராவது சுகமாக வாழட்டும் ' என்று வேண்டியது.ஆனால் உண்மையில் அவள் மனம் அங்கு நடக்கும் கோலாகலத்தைக் கண்டு பொருமியது என்றுதான் சொல்லவேண்டும்.       
 .
       பணிப்பெண் ஒருத்தி அலங்காரப் பொருட்களைச் சுமந்துகொண்டு செல்வதைக் கண்ட அவளின் சிந்தனை தடைப் பட்டது.பணிப்பெண்ணின் கையிலிருந்த தட்டுகளில் ஒன்று நழுவிக் கீழே விழுவது போலத் தோன்றவே மறைவாக நின்றிருந்த அனார்க்கலி தாவிச்சென்று அதைப் பற்றிக் கொண்டாள்."நன்றி"என்று கூறிய பணிப்பெண் அவளையும் உடன் வரும்படி ஜாடை காட்டிவிட்டு முன்னே நடந்தாள்.
புஷ்பத்தட்டை ஏந்தியவண்ணம் எல்லாவற்றையும் திகைப்புடன் பார்த்தவாறே உடன் நடந்தாள் அனார்க்கலி.

.                                    (அடுத்த பகுதி நாளை)



-- 
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com