வெள்ளி, 20 நவம்பர், 2015

மந்த்ராலய மகான்

            பரிமளாச்சார் ;                                                                                            தொடர்ச்சி.
       மேலும் பயிலவேண்டும் என்னும் எண்ணத்திலிருந்த வேங்கடநாதன் கும்பகோணம் வந்து சேர்ந்தார்.அங்கு மடத்தில் ஸ்ரீ விஜயேந்திரருடன்  ஸ்ரீ சுதீந்திரரும் தங்கியிருந்தார். இவர்கள் முன் சென்று பணிந்து நின்றார் வேங்கடநாதன். இவர் சாதாரண பிறப்பல்ல என்பதை அறிந்து இருவரும்  பரவசப்பட்டனர். இவரது பிறவி மக்களின் நன்மைக்காகவும் அவர்களின் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதற்காகவும் ஏற்பட்டுள்ளது என்பதைப்  புரிந்துகொண்ட இருவரும் வேங்கடநாதனை ஆசீர்வதித்தனர்.
     
         மேலும் சாஸ்த்திர ஞானம் ஏற்படவேண்டும் என்னும் பேரவாவினால் சுதீந்திரரிடம் சிஷ்யனாக வேண்டும் என அவர்முன் நமஸ்கரித்து நின்றார் வேங்கடநாதன்.மிக்க மகிழ்ச்சியுடன் இவரைச் சீடனாக ஏற்றுக்கொண்டு பல சாஸ்திர விஷயங்களைக் கற்பித்து வந்தார்  சுதீந்திரர்.
           
        ஒருநாள்  குரு பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே இன்று பாடம் போதும் என்று சொல்லி எழுந்து விட்டார்.அனைவரும் படுக்கச் சென்று விட்டனர். ஆனால் வேங்கடநாதனோ தனிமையில் அமர்ந்து கொண்டு குரு சொன்னவற்றையே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அன்றைய பாடம்  ஸ்ரீமத்வரின் பிரம்மசூத்திர பாஷ்யத்திற்கு  ஸ்ரீ ஜெயதீர்த்தர் கொடுத்துள்ள உரைநூல்' நியாயசுதா' என்ற நூலுக்கு விளக்கத்தைக் கூறிக் கொண்டிருந்தார். திடீரென்று விளக்கம் சொல்ல இயலாமல்  பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.அதையே நினைத்துக் கொண்டிருந்த வேங்கடநாதன் அப்படியே பனியில்படுத்து  உறங்கிவிட்டார். 
      நடுஇரவு. குரு சுதீந்திரர் சிஷ்யர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வெளியில் வந்தபோது அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க அங்கு வேங்கடநாதனை மட்டும் காணாததால் தேடிக் கொண்டே சென்றார்.கொட்டும் பனியில் பல ஓலைச்சுவடிகளுக்கு நடுவே குளிரில் நடுங்கியவாறே உறங்கிக் கொண்டிருந்த வேங்கடநாதனைக் கண்டார். அவரருகே கிடந்த ஓலைச்சுவடிகளை எடுத்துப் பார்த்த சுதீந்திரர் திடுக்கிட்டார்.தான் சொல்ல இயலாமல் விட்ட நியாயசுதாவிற்கு எளிமையான உரையை எழுதியிருந்ததைக் கண்டு உள்ளம் உருகிய குரு சுதீந்திரர் தன மேல்  அங்கவஸ்த்திரத்தை அவருக்குப் போர்த்திவிட்டு வந்துவிட்டார்.
         அதிகாலை கண்விழித்த வேங்கடநாதன் பதறிப்போனான். குருவின் மேலாடை தன்மீது எப்படிவந்தது என அறியாமல் அதை மரியாதையுடன் கைகளில் ஏந்திக் கொண்டு குருவின் முன் நின்றார்.புன்னகையுடன் அவரை வரவேற்ற சுதீந்திரர் அன்புடன் பார்த்து,
"வேங்கடநாதா,அரிய நூலுக்கு மிகச் சிறப்பாக விளக்க உரை  எழுதியுள்ளாய். இந்த உரைநூலுக்கு "சுதா பரிமளா"என்று பெயர் சூட்டுகிறேன்.
அரியநூல் எழுதிய உனக்கு "பரிமளாச்சாரியார்" என்ற பட்டத்தைச் சூட்டுகிறேன்."என்று அகமகிழ்ந்து கூறி அவருக்கு மந்த்ராக்ஷதை கொடுத்து ஆசீர்வதித்தார் குரு சுதீந்திரர்.கூடியிருந்தவர்கள் பரிமளாச்சாரியார் வாழ்க என ஒலிஎழுப்ப குருவையும் பெரியோரையும் பணிந்து நின்றார் வேங்கடநாதனான பரிமளாச்சாரியார்.
                                                                              (தொடரும்)
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com