சனி, 7 ஆகஸ்ட், 2010

42nd story.myththunanai viduviththa kadhai.

                                               மைத்துனனை விடுவித்த கதை.
கிருஷ்ண தேவ ராயருக்கு பழங்கள் என்றால் மிகுந்த விருப்பம். ஒரு பெரிய பழத்தொட்டத்தையே பராமரித்து வந்தார். அந்தத் தோட்டத்துப் பழங்களை மிகவும் விரும்பிச் சாப்பிட்டு வந்தார். அந்தத் தோட்டத்தைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தார் .மாம்பழம், அன்னாசி, பப்பாளி,கொய்யா எனப் பலவகைப் பழ மரங்களை  அந்தத் தோட்டத்தில் வளர்த்து வந்தார் .எப்போதும் அத்தோட்டத்தில் பழங்கள் பழுத்துத் தொங்கிக்கொண்டே இருக்கும்.ஒரு நாள் தோட்டக்காரன் தோட்டத்தில் பழுத்த பழங்களைக் கொண்டு வந்து ராயர் முன் வைத்தான். அப்போது தெனாலிராமன் மன்னருடன்உரையாடிக்கொண்டு இருந்தான். எனவே அப்பழங்களில் சிலவற்றை மன்னர் ராமனுக்கும் கொடுத்தார். அவற்றை ராமன் தன் வீட்டுக்கு எடுத்து வந்து தன் மனைவியிடம் கொடுத்தான். அந்த சமயம் ராமனின் மைத்துனன் ஊரிலிருந்து வந்திருந்தான். அவனுக்கும் சில பழங்களை ராமன் சாப்பிடக் கொடுத்தான்.
ராமனின் மைத்துனன் பெயர் மல்லையா. அவன் ராமன் கொடுத்த பழங்களைச் சாப்பிட்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தான்.
ராமனிடம் அவன் "அத்தான், இதுபோன்ற ருசி மிகுந்த பழங்களை நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை. ஏது இந்தப் பழங்கள்?" என்று விசாரித்தான்.
"இது நமது அரசருக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்து பறித்த பழங்கள். மன்னர் இவற்றை மிகவும் கவனமாகப் பாதுகாக்கிறார்.  இன்று நீ செய்த அதிருஷ்டம் எனக்குக் கிடைத்த பழங்களை உண்ணும் பேறு பெற்றாய்."என்று பதிலளித்தான் ராமன்.
"அத்தான், ஊரில் அப்பா,அம்மா, இன்னும் மற்றவர்களுக்கும் இதைக் கொண்டு போய்க் கொடுத்தால் மிகவும் மகிழ்வார்கள். இன்று இரவு யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் பழங்களைப் பறித்துச் செல்கிறேன்." 
ராமன் பதறினான்."அடப்பாவி! கெடுத்தியே குடியை. அப்படியேதும் செய்து விடாதே. மாட்டிக்கொண்டால் மரண தண்டனை நிச்சயம். பிறகு உன்னை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. நல்லபடியாய் ஊர் போய்ச் சேர்." என்று எச்சரித்தான்.
ஆசை வெட்கமறியாது பயமும் அறியாது என்பதற்கிணங்க மல்லைய்யாவை ஆசை பிடித்துத் தள்ளியது.  இரவு நேரம். அனைவரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். மல்லையா மெதுவாக எழுந்தான். யாரும் அறியா வண்ணம் அரசரின் பழத் தோட்டத்திற்குள் நுழைந்தான். பழங்களைப் பறித்து மூட்டையாகக் கட்டி கொண்டு மெதுவாக நடந்தான். ஆனால் இலைகளின் ஓசையால் காவலர் விழித்துக் கொண்டு மல்லைய்யாவைப  பிடித்துக்  கொண்டு போய் மன்னர் முன் நிறுத்தினர். கையும்  களவுமாகப் பிடிபட்ட மல்லையாவுக்கு மன்னர் மரண தண்டனை விதித்தார். இதையறிந்த ராமனும் அவன் மனைவியும் ஓடிவந்தனர்.
இவர்களைப் பார்த்தவுடன் கிருஷ்ண தேவராயர் "ராமா! நீ உன் மைத்துனனைக் காப்பாற்ற வந்துள்ளாய். ஆனால் நீ சொன்னபடி நான் சத்தியமாகச் செய்யப் போவது இல்லை."என்றார்.
ஒரு நிமிடன் சிந்தித்த ராமன் "தங்கள் சத்தியத்தை கண்டிப்பாகக் காப்பாற்றுவீர்களா அரசே?" என்றான்.
"சத்தியமாக. உன் சொல்படி நான் செய்யவே மாட்டேன்."
"அப்படியானால் என் மைத்துனனை கொன்று விடுங்கள் அரசே!"
கிருஷ்ண தேவராயர் திகைத்தார். ராமன் சொல்வது போல் செய்வது இல்லை என வாக்களித்து  விட்டாரே!  எனவே மல்லைய்யாவை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை மன்னருக்கு. மல்லைய்யாவை விடுதலை செய்தார். தன் சொல்லையே தனக்கு சாதகமாகப பயன்படுத்திக் கொண்ட ராமனின் திறமையைப்  பாராட்டினார் மன்னர்.
ஒருநன்மை ஏற்படுமானால் எந்த ஒரு  சொல்லையோ செயலையோ நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதே உண்மையான அறிவு என்பதை இந்தக் கதையிலிருந்து அறியலாம்.
திங்கள், 2 ஆகஸ்ட், 2010

41st story.

                              அரங்கன் அழைத்த அன்பன்.
வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற தலைநகரம் உறையூர்.சோழ சாம்ராஜ்யத்தின் சிறப்புமிக்க நகரமாகத் திகழ்ந்தது இந்நகரம். இங்கு வாழும் மக்களின் முக்கிய தொழில் விவசாயமே. சோழநாடு சோறுடைத்து என்னும் வாக்கிற்கிணங்க நெல்லும் கரும்பும் ஏராளமாக விளையும் நாடு சோழநாடு. அந்நகரில் ஒருநாள் சூரியன் உதிக்கும் போதே மிகப் பிரகாசமாக உதித்தான். பறவைகள் எல்லாம் உற்சாகமாகப்  பாடின. நன்னிமித்தங்கள் தோன்றின.
அந்நகரில் வாழ்ந்த பாணர் குலத்தில் பிறந்த ஒரு பாணன் நெல் வயலின் பக்கமாக நடந்து சென்றான். திடீரென்று ஒரு குழந்தை அழுகுரல் கேட்டது. நெற்பயிரை விலக்கிப் பார்க்க அங்கே பயிரின் ஊடே ஒரு அழகிய ஆண்  குழந்தை கிடக்கக் கண்டு அதை எடுத்து உச்சி மோந்தான். பிள்ளையில்லாத தனக்கு ஆண்டவனே அளித்த பரிசு என மிக மகிழ்ந்தான். அவன் மனைவியும் தனக்கு அமுதமே கிடைத்தது போல மகிழ்ந்தாள். திருமால் அருளால்கிடைத்த குழந்தை என மிகவும் சீராட்டிப்   பாராட்டி வளர்த்தனர். இவரும் தாம் புகுந்த குலத்துக்கு ஏற்ற யாழ் பாடலில் சிறப்புற்று விளங்கினார். எனவே பாணர் குலத்தார் யாவரும் இவரை பாணர் குலத் தலைவர் என ஏற்றுக் கொண்டனர். இவரின் சிறப்புக் கருதி இவரை திருப்பாணர் என அழைத்தனர்.
திருப்பாணர் திருவரங்கத்துத் திருமாலான திருவரங்கன் மீது மாறாத அன்பு பூண்டிருந்தார். அவர் மீது பாக்கள் பாடவேண்டும் என்ற எண்ணத்தினால் திருவரங்கம் வந்து சேர்ந்தார். இவர் தன்னைத் தாழ்ந்த குலத்தினன் என்று எண்ணிய காரணத்தால் திருவரங்கத்திற்குள் அடியிடாமல் காவிரியாற்றின் தெற்குக் கரையிலேயே நின்று அரங்கனின் திருக்கோயிலின் கோபுரத்தை தரிசித்து வந்தார். 
சிலநாட்கள் கழிந்தன. தினமும் வைகறையில்காவிரிக் கரையில் நின்று "ரங்கா, ரங்கா," என்றழைத்ததோடு கேட்பவர் உள்ளம் குளிரவு ம் இறைவன் மனம் மகிழவும் பக்தியால் உள்ளம் பரவசமடையப் பாடினார். இவ்வாறு தினமும் இவரது சேவை தொடர்ந்து நடந்தது.
ஒருநாள் வைகறை நேரம் திருப்பாணர் கையில் யாழ்மீட்டிக்கொண்டு இறைவனைக் குறித்துப் பாடிக் கொண்டு இருந்தார். அப்போது உலோகசாரங்க முனிவர் காவிரியில் நீராடித் திருமண் அணிந்து துளசி மாலையும் தாமரைமணி மாலையும் அணிந்து கொண்டு கையில் பொற்குடத்தை ஏந்திக் கொண்டு அங்கு வந்தார். திருவரங்கன் திருவாராதனம் செய்யும் பொருட்டு காவிரியில் நீர் கொண்டு போக அவ்விடம் வந்தவர் திருப்பாணர் தன்னை மறந்து பாடிக்கொண்டு இருப்பதைப் பார்த்து அவரை "ஏய்! தூர விலகிப் போ" என்று கூக்குரலிட்டார். உலகையே மறந்து இறைவனைப் பற்றிப் பாடிக்கொண்டிருந்த திருப்பாணனின்  காதில் இவரது கூக்குரல் விழவில்லை. அதனால் இவரைத் தூர விலக்குவதற்காக உலோகசாரங்கர் ஒரு சிறு கல்லை எடுத்து இவர் மீது வீசினார். அது பாணரின் நெற்றியில் பட்டது. தெளிவு பெற்ற பாணர் தன் எதிரே முனிவர் நிற்பதைப் பார்த்து உடல் நடுங்க கரம் குவித்து அவ்விடம் விட்டகன்றார்.
பின்னர் முனிவர் பொற்குடத்தில் நீர் முகந்து கொண்டு கோவிலுக்கு வந்தார். அரங்கனுக்கு அந்நீரை அபிஷேகம் செய்யும் பொருட்டு அருகில் சென்றார். அருகே சென்றவர் திடுக்கிட்டார். அரங்கநாதனின் நெற்றியிலிருந்து ரத்தம் பெருகி வந்துகொண்டிருந்தது. இச்செய்தி மன்னருக்கும் தெரிவிக்கப் பட்டது. உடனே மன்னன் மந்திரி பிரபுக்கள் புடைசூழ அங்குவந்து  சேர்ந்தான். இறைவனின் நெற்றியிலிருந்து குருதி பெருகக் காரணம் அறியாது அதைப் போக்கவும் வழியறியாது அனைவரும் திகைத்தனர்.
மன்னனோ "இறைவா! அரங்கப் பெருமானே அடியேனோ என்நாட்டு மக்களோ அறியாது ஏதேனும் பிழை செய்திருந்தால் பொறுத்து அருளவேண்டுகிறேன்.இக்குறை தீர வழிஎதேனும் காட்டியருள வேண்டும்" என்று வேண்டிக் கொண்டான்..
அனைவரும் கவலையுடன் சென்றனர்.
இறைவன் திருப்பாணருக்கு அருள் செய்ய எண்ணம் கொண்டான் . அத்துடன் அவரது அன்பையும் பெருமையையும் உலகுக்கு உணர்த்த வும் முடிவு செய்தான். இறைவனின் திருவருள் பெற அன்பே முதன்மையானது என்பதை உலகத்தார் அறியச் செய்ய வேண்டும் என்று திருவுளம் கொண்டான்.
அன்று இரவு உலோகசாரங்க முனிவரின் கனவில் தோன்றிய இறைவன் "எனது அன்பனாகிய திருப்பாணனை அவன் இழிந்தவன் என எண்ணாமல் அவனை உன் தோள் மீது தூக்கி எம்முன் கொணர்க" எனக் கட்டளையிட்டான்.
இக்கனவை எண்ணி வியப்படைந்த உலோகசாரங்க முனிவர் இறைவன் கட்டளைப் படியே திருப்பாணனின் இருப்பிடம் சென்றார். பல அன்பர்கள் புடைசூழ முனிவர் வருவதைக் கண்டு திகைத்தான் பாணன். அவரை நெருங்கிய முனிவர் தன் தலைமேல் கரங்குவித்துஅவரை வணங்கி  இறைவனின் கட்டளையைக் கூறித் தன் தோள் மீது அமருமாறு வேண்டிக்கொண்டார்.ஆனால் பாணன் மறுத்தான். இழிந்த குலத்தவன் இறைவனின் கோயிலின் உள்ளே வருவது தகாது. அத்துடன் உம்மைத் தீண்டுவதும் தகாது. உம தோள் மீது ஏறுவதா! அபசாரம் என்று மறுத்தான்.ஆனால் முனிவர் அரங்கனின் கட்டளைக்குக் கீழ்ப் படிதலே அடியார்க்குக் கடன் என்பதை எடுத்துக் கூறி திருப்பாணனை சம்மதிக்கவைத்தார்.
உலோகசாரங்க முனிவர் பாணரைத் தன் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு இறைவன் முன் நிறுத்தினார். திருவரங்கன் சன்னதியில் நின்ற திருப் பாணன் அவனது அழகிய கோலத்தைப் பாடல்களாகப் புனைந்தான். மக்கள் அனைவரும் திருப்பாணாழ்வார் வாழ்க என்று வாழ்த்தினர்.
மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே இறைவனின் திருவடியை  வணங்கி அதிலேயே மறைந்து பேரின்ப நிலையை அடைந்தார்.
திருப்பாணாழ்வார்.
உலோகசாரங்க முனிவர் மனதுக்குள் அழுதார். வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கு சேவை செய்து வந்த தனக்கு நற்கதி கிட்டவில்லையே என ஏங்கினார்." உயர்ந்த குலத்தொன் என்ற எண்ணம் சிறிதும் இன்றிதிருப்பாணரைத தூக்கிக் கொண்டு வந்தமையால் உன் அன்பு உள்ளம் புரிகிறது. அதனால் உன்னையும் ஆட்கொண்டோம்" என்று அவருக்கும் பேரின்ப நிலையை அருளினார் இறைவன்.
இறைவன் அன்புருவானவன் அன்பு எங்கிருக்கிறதோ அங்கு இறைவன் இருப்பான். உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பது இறைவன் முன் கிடையாது.
அன்பே சிவம். அன்பே ஹரி. அன்பே சக்தி.என்ற உண்மையை வளரும் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.
திருப்பாணாழ்வார் வரலாற்றிலிருந்து இந்த உண்மை நமக்குப் புரிகிறதன்றோ!