ஞாயிறு, 2 நவம்பர், 2014

தியாகச்சுடர்--------வரலாற்றுத் தொடர்.

                                   எட்டு --இறுதிப்பகுதி 

                  கையிலிருந்த மலர்க்கொத்துகொத்துகளைப் பணிவுடன் அந்தக்  கல்லறைமீது வைத்துவிட்டு மண்டியிட்டு அமர்ந்தான் ஜஹாங்கீர்.

   "தாய்நாடு காக்க தன இன்னுயிரைத் தியாகம் செய்த வீரத் திருவிளக்கே, உன்னை அல்லாஹ் காக்கட்டும்.அவர் அருள் பெற்றநீ எங்களையும் வாழ்த்துவாயாக. உன்னை உலகம் அறியாவிட்டாலும் நான் என்றும் மறவேன் தாயே."
மனமுருகி கண்களில் நீர் திரையிட வணங்கி எழுந்தான் ஜஹாங்கீர்.

    சிறிது நேரத்தில் கையில் அனார் மலர்களுடன் அங்கு வந்த நூர்ஜஹான் பக்தியுடன் கல்லறைமேல் மலர்களை வைத்துவிட்டுப் பணிவுடன் வெகுநேரம் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தாள்.அவள் உள்ளத்தில் ஏற்பட்ட உணர்ச்சிக் குமுறல்களை யாரால் அறிய இயலும்?கல்லறை மேலிருந்த அனார்மலர்கள் காற்றில் அசைந்து அவளுக்கு ஆசி கூறின.

மாலை நேரம்.ஓவியம்ஒன்று  உயிர் பெற்றது போல் நூர்ஜஹான் அமர்ந்திருந்தாள். அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு கண்களால் அவள் அழகைப பருகியபடி அமர்ந்திருந்தான் 
ஜஹாங்கீர் 

"பிரபு, . என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் தவறு பெரிதுதான்.அதற்காக  என்னை மன்னித்து விடுங்கள் பிரபு."

"நூர்ஜஹான், ஒற்றன் கூறியதாக நீ கூறியதும் தீர விசாரிக்காமல் புறப்பட்டது என் தவறுதானே.அதற்காக ஒரு உயிர் இன்று பலியாகிவிட்டது.பாவம்..."கண்களை மூடி ஒரு கணம் அந்த அடிமையின் நினைவில் அமர்ந்திருந்தான் ஜஹாங்கீர்.

"ஜகாம்பனாஹ்! அந்தப் பெண் மட்டும் இல்லையென்றால் என்னவாகியிருக்கும்?மாற்றான் கையில் சிக்கியிருக்கும் இந்த சாம்ராஜ்யம்.ஷேர்கான் சாமானியமானவறல்ல."

"உண்மைதான்.ஷேர்கான் சுத்த வீரன்தான்.அவனுடன் போரிடுவது அத்தனை எளிதாக இல்ல"

"பழரசம் அருந்துங்கள் பிரபு!இப்போது அந்தப் பேச்சு எதற்கு?

கிண்ணத்துடன் நூர்ஜஹானின் கரம்பற்றித் தன்னருகே அமர்த்திக் கொண்டான் ஜஹாங்கீர்.

 "இந்தக் கன்னி ரசம் அருகிருக்க கனிரசம் எதற்கு கண்ணே?"

அவனது அன்பில் மயங்கிய நூர்ஜஹான் தன்னை மறந்து அவன் மார்பில் சாய்ந்தாள்.அவள் உடல் மட்டுமல்ல உள்ளமும் அவனது அன்பணைப்பில் கட்டுண்டு விட்டது இப்போது. பனித்திரை விலகிய விடிவெள்ளி போல் அவள் மனம் கள ங்கமற்றுத்.திகழ்ந்தது.

வானத்தில் பூரண சந்திரன் என்றுமில்லாத பிரகாசத்துடன் இந்தக்காதலர்களுக்கு ஆசி கூறியவாறே பவனி புறப்பட்டான்.அந்த இரவின் தனிமையில் தியாகச்சுடரின் நினைவிலே தங்களையே மறந்து அமர்ந்திருந்தனர் நூர்ஜஹானும் ஜஹாங்கீரும்.
                                          (முற்றும்)
                   


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com