புதன், 19 ஜூலை, 2017

குறள்நெறிக் கதைகள்.சான்றோர் வினை

                                       சான்றோர் வினை  

           ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் முடிவுக்கு வந்ததை அறிந்த பாண்டவர்களும் திரௌபதியும் உலக வாழ்வை முடித்துக் கொள்ள முடிவு செய்தனர். அதன்படி உயிருடன் சுவர்க்கம் செல்ல எண்ணினர் . .அதன்படி அனைத்து செல்வங்களையும் துறந்தனர்.ஆசாபாசமற்றவர்களாய் அறுவரும் புறப்பட்டனர்.இமயமலையைத் தாண்டி அப்பாலுள்ள மேரு மலையை நோக்கி நடந்தனர்.அறுவரும் ஒருவர்பின் ஒருவர் தொடர்ந்து நடந்தனர்.அவர்களுடன் ஒரு நாயும் நடந்தது.
நடந்துகொண்டே இருக்கையில் திடீரென திரௌபதி கீழே விழுந்தாள். அதைக் கண்ட பீமன் தருமரிடம்  திரௌபதி உயிர்துறக்க என்ன காரணம் என்று கேட்டான்.

  •            ஐவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்தாமல் அர்ச்சுனனிடம் அதிக அன்பு செலுத்தினாள்  அதன்காரணமாகவே உயிரை இழக்கநேரிட்டது. என்றார் திரும்பாமலே.இப்போது ஐவரும் வரிசையாக நடந்தனர்.
சற்று நேரத்தில் சகாதேவன் கீழேவிழுந்தான்.திடுக்கிட்ட பீமன் அண்ணா, என்று கூவினான்.
சற்றும் பதறாத தருமர், இவனுக்குத் தான் சாஸ்த்திரத்தில் வல்லவன் என்ற கர்வம்.அதுதான் இந்த நிலைக்கு காரணம்.என்றவர் திரும்பாமலே மேலே நடந்தார்.அடுத்து சிறிது நேரத்தில் நகுலன் உயிரற்று விழுந்தான்.
வழக்கம்போல் திரும்பிப் பார்க்காத தருமர்,பீமா, இவனுக்குத் தான் மிகுந்த அழகன் என்ற கர்வம். அதனால் தான் ...என்று சொன்னபடியே வேகமாக நடந்தார்.அடுத்து அர்ச்சுனன் விழுந்ததைப் பார்த்துப் பதறிக் கதறினான் பீமன்.
"பீமா, இவனுக்குத் தான்தான் வில் வித்தையில்  உலகிலேயே சிறந்தவன் என்ற கர்வம்."என்றபடியே நிற்காமலும் திரும்பாமலும்  நடந்தார்.

         சிறிது நேரம் சென்றது.பீமனுக்கும் தலைசுற்றத் தொடங்கியது கண்கள் மங்கத தொடங்கியது. அண்ணனைத் தொடர்ந்து செல்ல இயலாமல்  உயிரற்று வீழ்ந்தான்.
'ம்...உலகிலேயே பலசாலி தான்தான் என்ற கர்வம் உனக்கு.,என்று தனக்குள் பேசியவர் திரும்பிப் பாராமலேயே நடந்தார்.
         
         வெகு தூரம் நடந்து நடந்து மேரு மலையை அடைந்தார். அவருடன் அந்த நாயும் உடன் நின்றது.அங்கு தயாராக நின்றிருந்த இந்திரன் தன புஷ்பக விமானத்தினின்றும் இறங்கி தருமர் முன் நின்றான்.'வருக வருக தர்மராஜரே வருக.தேவர்கள் அதிபதி இந்திரன் 
வணங்குகிறேன்.உங்களை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லவே வந்துள்ளேன்.புஷ்பக விமானத்தில் ஏறுங்கள்."என்றபடி வணங்கி நின்றான். 

"வணங்குகிறேன் தேவாதி தேவரே.தேவர்கள் தலைவரே.முதலில் இந்த நாய் ஏறட்டும் "என்றபடி அந்த நாய் ஏற உதவினார்.

பதறிய இந்திரன்," தர்மபுத்திரரே  தாங்கள்மட்டுமே சுவர்க்கம் வரலாம் நாய்க்கு அங்கு இடமில்லை."என்றார்.

தன காலை விமானத்தில் வைத்தவர் உடனே அதை எடுத்துவிட்ட தருமர் இந்திரனைப் பார்த்தார் 

"இதுவரை என் கூடவே பயணித்த இந்த நாயும் உடன் வர அனுமதித்தால் நான் சுவர்க்கம் வருவேன் இல்லையேல் என்னை நம்பி இதுவரை வந்த நாயை விடுத்து நான் மட்டும் வரும் நன்றி மறந்த செயலைச் செய்ய மாட்டேன். தங்களின் சுவர்க்கத்தைவிட இந்த நாயின் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பதே சிறந்தது என்று நினைக்கிறேன். நானும் இந்த நாயுடன்  இங்கேயே இருப்பேன். தாங்கள் செல்லலாம்."

இந்த சொற்களைக் கேட்ட அடுத்த கணம் அந்த நாய்நின்ற இடத்தில்  தரும தேவன்  நின்றார். இந்திரன் புன்னகையுடன் 'தருமரே  தாங்கள்  பெயருக்கேற்றபடி இருக்கிறீர்களா என்பதை சோதிக்கவே நாங்கள் இருவரும் எண்ணினோம்.தாங்கள் தருமம் தவறாதவர் 
 என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.மிக்க மகிழ்ச்சி. இனி விமானத்தில் ஏறலாமே."என்றபடி அவருடன் சுவர்க்கம் நோக்கிப் பறந்தார் இந்திரன்.
சான்றோர் என்றும் சான்றோரே உண்மை தெரிகிறதல்லவா?   

-- 
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com