வெள்ளி, 22 மார்ச், 2013

என் பேத்தியின் திருமணம்

 என் பேத்தியின் திருமணம் பற்றிய விமரிசனம்.
கடந்த பிப்ரவரி மாதம் 9--ஆம் தேதி அமெரிக்க மாப்பிள்ளையும் அவரது பெற்றோர் நண்பர்கள் என எட்டுபேர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினர். அவர்களை ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்துவிட்டு இல்லம் திரும்பினோம். 12---ஆம் தேதி காலை எட்டு மணிக்கு அனைவரும் திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.அவர்களை மாலை மரியாதையுடன் வரவேற்றனர் பெண்வீட்டார்.அவர்களை கவனித்துக் கொள்ள பெண்ணின் சித்தப்பா கூடவே இருந்தார்.அவரும் சிகாகோவில் வசிப்பவர். அமெரிக்க பழக்கங்கள் அறிந்தவர்.
                              எட்டு மணிக்கு எங்கள் குல முறைப்படி (மாத்வா )  ஆச்சாரியார் மந்திரங்கள் ஓதி நாந்தி தேவுரு சமாராதனை பாதபூஜை என்று அனைத்தையும் மிகவும் அக்கறையோடு மாப்பிள்ளை வீட்டார் கவனித்தனர்.பனிரெண்டு மணிக்கு சுமங்கலி பிரார்த்தனையின்போது மாப்பிள்ளையின் தாயார் திருமதி மார்த்தா ரே உடன் இருந்து எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
                              மாலையில் மூன்று மணிக்கு முன்பாகவே ஜானவாசம் தொடங்கியது. பெண்பார்க்கும் வைபவத்தில் வைக்கப் பட்டிருந்த பொருட்களை ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பொங்கப் பார்த்தனர்.அவர்கள் அனைவரும் நமது நாட்டுப் பட்டுப் புடவை உடுத்தி தலையில் மல்லிகை சூடியிருந்தது மிகவும் அழகாக உள்ளது என்று அனைவரும் பாராட்டியபோது மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு புன்னகைத்தனர்.
                              திருமதி மார்த்தாவும் திரு ரே அவர்களும் மிகவும் கஷ்டப்பட்டு கீழே அமர்ந்து மிகவும் அக்கறையுடன் ஆச்சாரியார் சொன்னபடி செய்து கொண்டு வந்தனர்.பெண்ணுக்குப் பொட்டு வைத்து பூமுடித்து புடவை கொடுத்து பின் அவர்கள் வாங்கி வந்த நகையை அணிவித்தனர்.
அதேபோல் மாப்பிள்ளையை அமரவைத்து அவருக்கும் பாண்ட்டு ஷர்ட் கொடுத்து செயின் மோதிரம் போட்டபின் விளையாடல் சாமான்கள் ஒவ்வொன்றாகக் கொடுக்க அவர்கள் வாங்கி வைத்தனர்.அதன்பின் அனைவரும் டிபன் சாப்பிட்டபின் அலங்காரம் செய்துகொண்டு வரவேற்புக்குத் தயாரானார்கள்.
                             திருமண வரவேற்புக்கு உறவினர்களும் நண்பர்களும் வந்திருநதனர்.இரவு விருந்து  கேண்டில் லைட் டின்னர் என்று சொன்னார்கள்.வட்ட மேஜையில் நடுவே அலங்கார மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் குடும்பமாக அமர்ந்து விருந்து உண்டார்கள். பார்க்க அழகாக இருந்தது.அனைவரும் விரைவாகவே தூங்கப் போய்விட்டார்கள். அதற்குமேல் ஐந்து சுமங்கலிகள் அமர்ந்து கருகமணியும் தாலிப் பொட்டும் கோர்த்து மங்கல நாண்  கொர்த்துவைத்தனர்.
                              மறுநாள் காலை நான்கு மணிக்கே பெண்ணை அமரவைத்து மங்கள ஸ்நானம் செய்வித்து கௌரி பூஜையில் அமரவைத்த்னர்  
சரியாக ஆறுமணிக்கு மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்திற்குள் நுழைந்தனர்.மாப்பிள்ளைக்கு காசியாத்திரை அலங்காரம் செய்தனர்.காசியாத்திரை செல்லவேண்டும் எனக் கூறியபோது நான் திருமணத்திற்கல்லவா வந்துள்ளேன் என்னை ஏன் காசியாத்திரை அனுப்புகிறீர்கள் எனக் கேட்டபோது அனைவரும் சிரித்தபின் ஆச்சாரியார் விளக்கினார்.
                               பெண்ணின் தாயார் மாப்பிள்ளைக்கு குங்குமம் வைத்து கண்மை இட்டு அலங்கரித்தபின் கையில் விசிறியும் தோளில் பையுமாக 
காசியாத்திரை சென்று வந்தார்.ஆரத்தி எடுத்தபின் நேராக மாப்பிள்ளை மணமேடைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.அந்தரபட்டா  என்று சொல்லப்பட்ட திரை விரிக்கப்பட்டது. கௌரி பூஜையில் இருந்த மணப்பெண்ணை மாலையிட்டு கைபிடித்து அவளின் தாய்மாமன் மணமேடைக்கு அழைத்து வந்தார். மங்களாஷ்டகம் சொல்லி முடித்தபின் சீரகமும் வெல்லமும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் தூவினார்கள்.பின்னர் கன்னிகாதானம், அரிசி போடுதல், மாலை மாற்றுதல் எல்லாம் முடிந்தது. முஹூர்த்தப் புடவை மேல் தேங்காய் மஞ்சள் குங்குமம் அதன்மீது திருமாங்கல்யம் வைத்து அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வந்தனர்.பின்னர் ஆச்சாரியார் மாங்கல்யம்......தந்துனானேனா   என்று மந்திரம் ஒத மாப்பிள்ளை ஜேசன் மணமகள் சினேகாவின் கழுத்தில் மங்கல நாண்  பூட்டினான். அனைவரும் மலரும் அட்சதையும் தூவி ஆசி வழங்கினர்.
இவ்வாறாக சினேகா ஜேசன் திருமணம் இனிதே நடந்தது.அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் இந்தியாவுக்கு வந்து இந்திய முறைப்படி தன மகனுக்கு திருமணம் செய்து கொண்ட ரே, மார்த்தா தம்பதிகளை அனைவரும் பாராட்டினர்.அவர்களும் நம் கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியதோடு அதை அந்த இரண்டு நாட்களும் கடைப் பிடித்த அந்த நாகரீகத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பின் வரும் புகைப் படங்கள் மூலம் திருமணம் எப்படி நடந்துள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.
என் பேத்திக்கு அனைவரும்  நல்லாசி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Photo
Like ·  ·  · Tuesday at 6:00pm · 
--






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வியாழன், 21 மார்ச், 2013

மகளிர் தினம்.

மகளிர் தினம்.

கடந்த 16-ம் தேதி அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரால் மகளிர் தின விழா சந்திரசேகர் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.அவ்வமயம சிறப்பான மகளிரைப்  (நீலாம்பிகை, ருக்மணி அருண்டேல், தில்லையாடி வள்ளியம்மை, வை.மு.கோதைநாயகி முதலியோர்) பற்றி திருமதிகள் சாரதா நம்பியாரூரான், பர்வீன் சுல்தானா ஹேமா சந்தானராமன் உள்ளிட்ட  ஆறு மகளிர் பேசினார்கள்.இந்த மேடையில்  அடியேனும்  75 அகவை கண்ட மூத்த எழுத்தாளர் என்று .மதுரை நகர நீதிபதியாக விளங்கும் திருமதி வாசுகி அம்மையாரின் பொற்கரங்களால் பொன்னாடை போர்த்தப் பட்டு கௌரவப் படுத்தப் பட்டேன். எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு விக்ரமன் அய்யா அவர்களுக்கும், செயலாளர் அன்புச் சகோதரி திருமதி வாசுகி கண்ணப்பன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com