வியாழன், 13 ஜனவரி, 2011

57th story .உயர்ந்த வாழ்வு.

" பாட்டி சொல்லும் கதைகளைப் படிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்.பொங்கட்டும் பொங்கல் இல்லம்தோறும்.பூக்கட்டும் மகிழ்ச்சி உள்ளம் தோறும்".

                                                     உயர்ந்த வாழ்வு..

சுவர்க்கத்தின் வாயிலில் ஜெயா விஜயர்கள் காவலிருந்தனர். அவர்களின் அருகே பரமாத்மாவான நாராயணரின் பாதரட்சைகள் இரண்டும் சாதுவாகக் கிடந்தன.

உள்ளே அனந்த சயனத்தில் இருந்தார் பெருமான். அவரது இரண்டு கைகளில் சங்கமும் சக்கரமும் பெருமையுடன் வீற்றிருந்தன.பெருமானான நாராயணன் யோக நித்திரையில் இருந்தார்.

அப்போது இறைவனின் இடது கையிலிருந்த சங்கு வாயிலில் இருந்த பாதுகையைப் பார்த்து நகைத்தது. வலது கையிலிருந்த சக்கரம் "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டது.

"வாசலில் கிடக்கும் பாதுகைகளைப் பார்த்தேன் பாவமாக இருந்தது.
அதுதான்  சிரித்தேன்." என்றது சங்கு கர்வத்துடன்.

சக்கரமும் அதைக்கேட்டபின் பாதுகையைப்  பார்த்து நகைத்தது. "ஏ பாதரட்சையே! உன் நிலையைப் பார்த்தாயா? வாசலிலேயே கிடந்து காவல் காத்துக் கொண்டிருக்கிறாய். நாங்கள் உன்னை விட உயர்ந்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்."

"நாங்கள் பகவானின் கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறோம். நீயோ வாசலிலேயே கிடக்கிறாய். உன் மதிப்பு அவ்வளவுதான்." என்றது சங்கு.

பாதரட்சை நிமிர்ந்து அவர்களைப் பார்த்தது. சற்றே துணிவை வரவழைத்துக் கொண்டது."நீங்கள் பகவானின் கையில் இருந்தாலும் நான்தான் பகவானைத் தாங்கிக் கொள்கிறேன். என்மீது நின்று கொண்டுதான் பகவான் திரிலோகமும் சஞ்சாரம் செய்கிறார்."

"உன்மீது நின்று கொண்டிருப்பதால்தான் நீ வேலைக்காரன். ஏனெனில் உன்னை வாசலிலேயே கழற்றி வைக்கிறாரே. நாங்கள் அவரது பிள்ளைகளைப் போன்றவர்கள். எங்களைக் கையிலேயே வைத்துப் பாதுகாக்கிறாரே."

இதைக்கேட்ட பாதரட்சை மனவருத்தத்துடன் தலைகுனிந்து நின்றிருந்தது. இந்த உரையாடலை பகவானும் ஆதிசேஷனும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஆதிசேஷன் சிரித்தார். நாராயணரோ "ஏ பாதுகையே! வருந்தாதே. உனக்கும் ஒரு காலம் வரும்.உன்னையும் இவர்கள் வணங்கும் காலம் வரும்." என்றார் ஆறுதலளிக்கும்படியாக.

பகவானின் சொற்களைக் கேட்டு பாதரட்சை சமாதானமடைந்தது. இதன் நிலை கண்டு இரக்கப் பட்ட ஜெய விஜயர்கள் ஆறுதலாகப் பேசினார்கள்.

"ஏ, பாதரட்சையே பகவானின் பாதகமலங்களைப் பற்றி எத்தனை அடியார்கள் பாடல் பாடியுள்ளனர்!.
அதையெல்லாம் சொன்னால் இந்த ஜன்மம் போதாது. இப்படிப்பட்ட திருவடி நிழலுக்காகத்தான் பூமியில் பிறவியெடுத்த அடியார்கள் எல்லாம் பக்திமூலமாக அதனை அடைய முயன்றனர். அத்தகைய பாதங்களைத்தான் நீ தாங்கிக் கொண்டு உலவுகிறாய். எனவே நீயும் பெருமைப் படத்தக்கவன்தான்."

"அத்துடன் இந்த அகிலங்களை எல்லாம் தாங்கியுள்ளவன் பரமாத்மா. அவனையே நீ தாங்கி நிற்கிறாய்.. உன் புகழ் அகிலம் முழுவதும் பரவும்." என்றான் ஜெயன்.

இச்சொற்களைக் கேட்ட பாதுகை ஒருவாறு சமாதானமடைந்தது.

கிருதயுகம் முடிந்து த்ரேதாயுகம் தொடங்கியது. ஸ்ரீ நாராயணன் ஸ்ரீராமனாக அவதரித்தான். தசரதனின் மகனாகத் தோன்றி வளர்ந்தான். விசுவாமித்திரருடன் வனம் சென்று அரக்கரை அழித்து அகலிகைக்கு சாப விமோசனம் அளித்தான். மிதிலை சென்று வில்லை முறித்து சீதையை மணந்தான். பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்தான் தசரதன். ஆனால் கைகேயி கேட்ட இரு வரத்தினால் ராமன் வனம் செல்ல நேர்ந்தது.

கைகேயியின் மகன் பரதனைப் பட்டமேற்கச் சொன்னபோது அவன் மறுத்து அண்ணனுடன் தானும் வனவாசம் செய்வதாகச் சொல்லி சத்ருக்னன் பின்தொடர வனம் வந்தான்.ராமனைத் தொழுது மீண்டும் அயோத்தி வந்து முடிசூட்டிக் கொள்ளும்படி வேண்டினான்.

ஆனால் அன்னையின் ஆசையையும் தந்தையின் ஆணையையும் நிறைவேற்றுவதே தன் கடமை என்று மறுத்தான் ராமன்.

 பரதனோ அயோத்தி நகருக்குள்  மீண்டும்  அண்ணன் ஸ்ரீ ராமனுடன்தான் நுழைவேன் என்று கூறிவிட்டான்.
அயோத்தியின் எல்லையிலுள்ள நந்திகிராமத்திலேயே ஆசிரமம் அமைத்து அங்கேயே துறவிபோல வாழப் போவதாகச் சொன்னான் பரதன்.

அயோத்தி மக்களின் கதியைப் பற்றிக் கேட்டபோது ராமனின் பிரதிநிதியாக அவன் பாதுகைகளைப் பெற்று  நந்திகிராமத்தில் இருந்தபடியே நாட்டை ஆள்வதாகக் கூறினான்.அதற்காக ராமனின் பாதுகைகளைப் பெற்றுக் கொண்ட பரதன்  அதைத் தன் தலைமீது தூக்கிக் கொள்ள சத்ருக்கனன் தொழுதபடி பின்தொடர்ந்தான்.
.
இப்போது  ராமனின் பாதுகைகள் மனமகிழ்வுடன் ராமனை வணங்கின. என்னை இகழ்ந்த சங்கு சக்கரம் இரண்டும் பரத சத்ருக்கனராக அவதரித்து என்னைத் தன் தலைமேல் தூக்கிச் செல்லும் நிலையை ஏற்படுத்திக் கொடுத்த அவதார புருஷன் ராமனை நன்றியுடன் வணங்கிச் சென்றன.

நந்திகிராமத்தை அடைந்த பரதன் பாதுகைகளை பொன் சிம்மாசனத்தில் வைத்து ஒரு அரசனுக்குரிய மரியாதையுடன் தினமும் வணங்கி அயோத்தியை ஆண்டு வந்தான்.

ஒருநாள் தன்னை ஏளனமாக இகழ்ந்ததற்காக பதினான்கு ஆண்டுகள் தன்முன் சிரம் தாழ்த்தி வணங்கும்படி இந்த சங்கு சக்கரத்திற்கு நாராயணர் தண்டனை அளித்ததை எண்ணி மனம் ஆறுதல் அடைந்தது.. அத்துடன் எளியாரை இகழ்தல் எப்போதும் இறைவனுக்குப் பிடிக்காத செயல் என்பதையும் புரிந்து கொண்டது  அப்பாதுகை.

தன்னினும் எளியாரை இகழ்தல் தகாது என்ற உண்மையையும் "எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்" என்ற உண்மையையும்  நாம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
.
இத்தகு உயர்ந்த உண்மைகளையும் நன்நெறிகளையும் புதைத்து வைத்துள்ள நமது இதிகாசங்களை ஆழ்ந்து படித்து அறிந்துகொண்டு அதனைப் பின்பற்றி வாழ்வது உயர்ந்த வாழ்வாகும் அன்றோ?  ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com