வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

மந்த்ராலய மகான் --11

                           ஸ்ரீ ராகவேந்திரர் ஆதோனிக்கு வரப்போகிறார் என்ற செய்தியைக் கேட்ட வெங்கண்ணா அவரை வரவேற்க சகல ஏற்பாடுகளையும் செய்தான் நகரம் விழாக்கோலம் பூண்டது.
ராகவேந்திரருக்குப் பூர்ணகும்ப மரியாதை செய்து அவரை வரவேற்றபின்  அவர் கால்களில் பணிந்து எழுந்தான் வெங்கண்ணா.அவன் கண்களில் நீர் நிறைய 
"தெய்வமே, எத்தனை காலமாயிற்று தங்களைக் காண.என்று அவர் பாதங்களைப் பற்றிக் கொண்டான்.
"திவான் எழுந்திருங்கள்." என்று சுவாமிகள் சொல்லக் கேட்ட வெங்கண்ணா பதறினான். 
"சுவாமி என்னை வெங்கண்ணா என்றே அழையுங்கள்.  மாடு மேய்க்கும் போதுநீங்கள்  பார்த்த அதே வெங்கண்ணா தான் நான்." என்றான் பணிவோடு.
 "வெங்கண்ணா, நீயும் உன் நாட்டுமக்களும் நலமா?"எனப் புன்னகையுடன் கேட்டவாறே அரண்மனைக்கு எழுந்தருளினார் ஸ்ரீ ராகவேந்திரர்."                    
"தங்களின் ஆசியால் அனைவரும் நலமே சுவாமி" எனப் பணிவுடன் பகர்ந்தான் வெங்கண்ணா 

                      ஸ்ரீமூலராமரின் பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.அன்றைய பூஜையில் நவாப் கலந்துகொள்வதாக இருந்ததால் அரண்மனை அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.சற்று நேரத்திற்கெல்லாம் பூஜையை ஆரம்பித்தார் சுவாமிகள்.பூஜை விசேஷமாக நடந்துகொண்டிருந்தது.அப்போது நவாப் அங்கு வந்து சேர்ந்தார். அவர் பின்னே  சிப்பாய்கள் வந்தனர். ஒரு சேவகன் கையில் பெரிய வெள்ளித் தட்டு ஒன்று இருந்தது.பட்டுத்துணி ஒன்று அந்த தட்டிலிருந்த பொருளை மூடியிருந்தது.ஸ்ரீராகவேந்திரருக்கு சலாமிட்ட நவாப் ஆசனத்தில் அமர்ந்தார்.சேவகன் வெள்ளித்தட்டை  ராகவேந்திரர்முன் வைத்தான்.
"சுவாமிகளே, எங்கள் அரசரின் காணிக்கை. இதைத் தங்கள் பூஜைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும்."என்றான் பணிவோடு.
"அப்படியே ஆகட்டும்" புன்னகையுடன் கூறினார் சுவாமிகள்.
                   
                      பூஜை முடிந்து காணிக்கைப் பொருட்களை ஸ்ரீமூலராமருக்கு நிவேதனமாக அர்ப்பணிக்கும் கட்டம் வந்தது.கையிலிருந்த கமண்டல நீரை அந்த காணிக்கைப் பொருட்களின் மீது தெளித்தார் ராகவேந்திரர்.

"நவாப்ஜி, உங்கள் காணிக்கையை என் மூலராமர் ஏற்றுக் கொண்டு விட்டார்."என்றதும் பதறிவிட்டார் நவாப் அவர்கொண்டுவந்தது மாமிசமல்லவா அதையா ஏற்றுக் கொண்டார்? அபசாரம் செய்துவிட்டோமே என்று மனதுக்குள் தவித்தார் நவாப்.வாய்திறந்து எதையும் சொல்லமுடியாமல் தவித்தபடி அமர்ந்திருந்தார்.அப்போது சிஷ்யர் ஒருவர்  காணிக்கைப் பொருளை  மூடியிருந்த பட்டுத்துணியை நீக்கினார்.

"சுவாமிஜி!"என நவாப் அலறிவிட்டார்.ஆம். அவர் கொண்டுவந்திருந்த மாமிசங்கள் எல்லாம் மலர்களாகவும் பழங்களாகவும் மாறியிருந்தன.நவாப் தன கண்களையே நம்ப முடியாமல் கசக்கிக் கொண்டு பார்த்தார்.
துக்கம் தொண்டையை அடைக்க எல்லோரையும் போலவே பிரசாதம் வாங்கிக் கொண்டு அவ்விடம் விட்டு அகன்றார்.

                     நாட்கள் செல்லச் செல்ல நவாப்பின் குற்ற உணர்வு அவரை நிம்மதியில்லாமல் செய்து விட்டது.
வெங்கண்ணா சொல்வது போல் அவர் தெய்வீகப் பிறவியே. நான் செய்த தவறு தெரிந்திருந்தும் அதை வெளியே தெரியாமல் மறைத்ததும் அல்லாமல் அவருக்குத் தக்காற்போல் அதை மாற்றியும் விட்டாரே.இந்தத் தவறுக்கு நான் ஏதேனும் பிராயச்சித்தம் செய்தே ஆகவேண்டும் என முடிவு செய்தார்.
நவாப் வேங்கண்ணாவை அழைத்தார்.
"உங்கள் குரு மிகப்பெரியவர்.மகாஞானி.தெய்வப்பிறவி .அவருக்கு நாம் ஏதேனும் தானம் தர விரும்புகிறோம்."
என்று கூறியபோது மிகவும் மகிழ்ந்தார் வெங்கண்ணா. ராகவேந்திரரை சந்தித்து "எங்கள் நவாப் உங்களை சந்திக்கத் தயங்குகிறார்.அன்றைய பூஜையில் அவர் தவர் செய்து விட்டதை எண்ணி வருந்துகிறார்."என்று சொல்லி வாய்புதைத்து நின்றார்.
"அவர் மதாசாரப்படி காணிக்கை கொடுத்தார் தனக்கு ஏற்றபடி என் மூலராமர் அதை மாற்றிக் கொண்டார்.அவ்வளவுதான் "
குருவின் பேச்சைக் கேட்ட திவான் எப்பேற்பட்ட மகான் என மனதுக்குள் வியந்து வணங்கினார்.பின்னர் நவாபின் விண்ணப்பம் என்று கூறி நின்றார்.
"என்ன?"
"செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக தங்களுக்கு தானம் அளிக்க விரும்புகிறார்.தாங்கள் அருள்கூர்ந்து அதனை ஏற்க வேண்டும் "
ஸ்ரீராகவேந்திரர் ஒருகணம் கண்களை மூடி ஸ்ரீ மூலராமரை தியானித்தார்.

நவாப் அளிக்க முன்வந்த தானம் என்ன அதை சுவாமிகள் ஏற்றுக் கொண்டாரா? என்ற செய்தியை அடுத்த தொடரில் பார்ப்போம்.
                                                                ( தொடரும் )









--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com