சனி, 5 ஜனவரி, 2019

அனைவருக்கும் இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்.

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

பாட்டி சொன்ன கதைகள் -நரியும் கொக்கும்

              ஒரு காட்டில் ஒரு பெரிய குளம் இருந்தது.அந்தக் காட்டில் நிறைய விலங்குகள் இருந்தன. எல்லா விலங்குகளும் அந்தக
 குளத்திற்கு  தண்ணீர் குடிக்க வந்து போகும்.அந்தக் குளத்தில் நிறைய மீன்கள் இருந்ததால் பறவைகளும் நிறைய வந்து மீனைக் கொத்திச் செல்லும்.
           அந்தக் காட்டுக்கு ஒரு பெரிய கொக்கு வந்து ஒரு காலில் நின்று மீனுக்காகக் காத்திருந்தது.நிறைய சின்ன மீன்களைப் போக விட்டு விட்டுப் பெரியமீனுக்காகக் காத்திருந்தது.அந்த சமயம் ஒரு நரி தண்ணீர் குடிப்பதற்காக அந்தக் குளத்தருகே வந்தது .தண்ணீர் குடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தது அங்கு ஒரு பாறையின் மேல் கொக்கு கண்களைமூடித்  தவம் செய்வது போல் நின்றிருந்தது.
           அதைப் பார்த்த நரிக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.
அது கொக்கைப் பார்த்துக் கேட்டது.
"கொக்காரே, உம்மைப்பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது.என் வீட்டில் உமக்கு விருந்து வைக்க எண்ணுகிறேன்.
தவறாமல்  வாருங்கள்."
சற்றே கண்ணைத் திறந்து பார்த்த கொக்கு,,"உமது நல்ல குணத்துக்கு மிகவும் மகிழ்ச்சி.கட்டாயம் வருகிறேன்"என்றது. ஆனால் மனதுக்குள் இந்த நரி எல்லாரையும் ஏமாற்றுகிறதே.இதை நாம் பழிவாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டது.
"நாளைக்கே என் வீட்டுக்கு வாருங்கள் கொக்காரே."என்றது நரி 
"முதலில் என் வீட்டுக்கு வாருங்கள் நரியாரே,. அடுத்த நாள் உங்கள் வீட்டுக்கு நான் வருகிறேன்."
"ஆஹா, அப்படியே நாளைக்கே வருகிறேன்"நரி மகிழ்ச்சியோடு சென்றது 
                  மறுநாள் சொன்னபடியே  நரி அந்தக் குளத்தின் கரையில் காத்திருந்தது.நீண்ட கால்களை வீசிப் போட்டு அங்கே வந்தது.கொக்கு 
"வாருங்கள் நரியாரே போகலாம்"என்று தன இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றது அங்கே போனபின்னர் நரிக்குத்  திகைப்பு ஏற்பட்டது . இரண்டு நீண்ட மூக்கு ஜாடியில் பாயசம் இருந்தது. கொக்கு தன மூக்கை உள்ளே விட்டு பாயாசத்தைக் குடித்தது.நரி குடிக்க முடியாமல் திகைத்ததைப் பார்த்து மகிழ்ச்சியுடன் நகைத்தது. நரியாரும் அமைதியாக "கொக்காரே, நீங்கள் நாளைக்கே என் வீட்டுக்கு விருந்துக்கு வரவேண்டும். என்றதும் கொக்கு மகிழ்ச்சியுடன் சரி வருகிறேன் என்றதுடன்,
நரியாரே  பாயசம் எப்படியிருக்கிறது பார்த்தீர்களா? என்றது கிண்டலாக.
"ஆமாம், ஆமாமரொம்ப ஜோராக இருக்கிறது."என்றபடியே விடை பெற்றது நரி. 
நரியை ஏமாற்றியதை எல்லாவிலங்குகளிடமும் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டது கொக்கு.

               மறுநாள் கொக்கு மிகவும் ஆவலுடன் நரியின் இருப்பிடம் சென்றது." வாருங்கள் கொக்காரே,என்று வரவேற்றதுடன் அங்கே இருந்த விருந்தைக் காட்டி பாருங்கள் உங்களுக்காக நானே இனிப்பான பாயசம் தயாரித்துள்ளேன் எனக்கு நாக்கில் நீர் ஊறுகிறது.சாப்பிடலாம்."என்று முன்னே தட்டில் இருந்து பாயசத்தை நக்கி நக்கிக் குடிக்க ஆரம்பித்தது.
              பெரிய தட்டில் இருந்த பாயாசத்தைக் குடிக்க முடியாமல் கொக்கு திகைத்து நின்றது.ஆனால் நரியோ வேகவேகமாக தட்டில் இருந்த பாயசத்தை  குடிக்க அதைப் பரிதாபமாகப் பார்த்தபடியே தலை குனிந்து நின்றது கொக்கு.

தான் நரியை ஏமாற்றியதாக எண்ணிப் பெருமைப் பட்டுக் கொண்டதை எண்ணி இப்போது  வருத்தப் பட்டது கொக்கு 
அப்போது நரி "கொக்காரே, என்னை விருந்துக்கு அழைத்து நீர் அவமானப் படுத்தினீர் அதற்காகவே நானும் இப்படி செய்தேன்.
வருத்தப் படாதீர்கள். செய்த தவறை எண்ணி வருந்துகிறீர்கள் என்று தெரிகிறது.இந்தாருங்கள் சாப்பிடுங்கள்"என்றபடியே மறைவிலிருந்து ஒரு நீண்ட மூக்கு ஜாடியைக் கொடுத்தது. அதில் இருந்த பாயசத்தை கொக்கு அருந்தி மகிழ்ந்தது." நரியாரே , நீர் மிகவும் நல்லவர். தெரியாமல் நான் செய்த தவறை மன்னியுங்கள் இனி நாம்  நண்பர்கள்."
நரியாரும் மிகவும் சந்தோஷம் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்பியது.பாயசம் குடித்த மகிழ்ச்சியில் நீண்ட தன காலை வீசிப் போட்டு குளத்தை நோக்கி நடந்தது கொக்கு.
-----------------------------------------------------------------------------------------------------------------------










--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com