திங்கள், 4 ஜூன், 2012

87-சிறந்த நீதிபதி

ஒரு காலத்தில் நம் நாட்டில் விக்ரமாதித்தன் என்னும் அரசன் உஜ்ஜயினி என்னும் நாட்டை ஆண்டு வந்தான். அவன் காலத்தில் அந்நாட்டில் கலைஞர்களும் கவிஞர்களும்  நிறைந்திருந்தனர். அரசன் குடிமக்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தான்.நீதிநெறி தவறாது ஆட்சி செய்தான்.
மன்னன் விக்ரமாதித்தன் குற்றவாளியைக் கண்ணால் பார்த்தே அவன் குற்றவாளியா நிரபராதியா என அறிந்து கொள்வான்.அத்தகு திறமை படைத்திருந்தான்.அத்தகைய அரசனின் காலம் முடிந்து நகரமும் அழிந்து போயிற்று.அந்த உஜ்ஜயினி நகரமே மண் மேடாகக் காட்சியளித்தது.அந்த நகரம் இருந்த இடத்தில் ஒரு காடும் சிறு கிராமமும் தோன்றியிருந்தது.அந்த கிராமத்தில் வாழும் சிறுவர்கள் மாடு மேய்க்கும் தொழிலைச் செய்து வந்தனர்.
ஒருநாள் அந்தச் சிறுவர்கள் மாடுகளை மேயவிட்டுவிட்டு விளையாடத் தொடங்கினார்கள்.ஒரு சிறுவன் தான்தான் அரசன் என்று கூறிக் கொண்டு அங்கு சற்று உயரமாக இருந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு மற்ற சிறுவர்களை மிகுந்த அதிகாரம் செய்யத் தொடங்கினான்.அவன் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசத் தோன்றாத சிறுவர்களும் அவன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர்.
மேடைமேல் அமர்ந்த சிறுவன் சிறந்த நீதிபதி போல் பேசத் தொடங்கினான்.மற்றவர்கள்  வழக்கைக் கூறுவதும் சிறுவன் தீர்ப்புக் கூறுவதுமாக விளையாட்டு தொடர்ந்தது.
தினமும் அவர்கள் அங்கே வந்து விளையாடத் தொடங்கினர்.நீதிபதி விளையாட்டு அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.இந்தச் செய்தி ஊருக்குள் பரவ உண்மையான வழக்குகளும் அந்தச் சிறுவனிடம் வரத் தொடங்கின..மேடை மீது அமர்ந்தவுடன் இந்தச் சிறுவனின் நடை பார்வை பேச்சு எல்லாம் மாறிவிடுவதை ஆச்சரியத்துடன் மக்கள் மன்னனிடம் தெரிவித்தனர்.
இதைக் கேள்விப்பட்ட மன்னன் அந்தச் சிறுவனைக் காணவும் அவன்
தீர்ப்பு சொல்வதைப் பார்க்கவும் மாறுவேடத்தில் நேரில் வந்து கவனித்தான்.அப்போது அந்தச் சிறுவன் முன் வந்த வழக்கை அவன் தீர்த்துவைத்த விதமும் அவனது பேச்சும் ஒரு சிறந்த அரசனுக்குரிய
சிறப்புடன் இருப்பதைக் கவனித்தான். அரண்மனைக்குச் சென்ற மன்னன் அந்த சிறுவனைப் பற்றியும் ஊரைப் பற்றியும் விசாரிக்குமாறு கூறினான்.அப்போதுதான் அந்தக் காடு இருந்த இடத்தில்தான் உஜ்ஜயினி  நகர மன்னர் விக்ரமாதித்தன் வசித்த அரண்மனை இருந்தது என்ற விவரம் தெரிந்தது. உடனே மன்னன் அந்த இடத்தில் ஏதேனும் சிறப்பு இருக்கக்கூடும் என்று எண்ணி அந்த காட்டுக்கு மந்திரி பிரதானிகளுடன் சென்றான்.அங்கு பூமியைத் தொண்டி சோதனை செய்யப் பணித்தான்.அங்கு ஆழத்தில் ஒரு நகரம் இருந்த  அடையாளங்களான கட்டடங்களின் இடிபாடுகள் தெரிந்தன.சிறுவன் அமர்ந்து தீர்ப்புக் கூறிய இடத்தைத் தோண்டியபோது அங்கே ஆழத்தில் ஒரு கல்லாலான பலகை தெரிந்தது.அதைக் கவனமாக வெளியே எடுத்தபோது அதை இருபத்தைந்து பதுமைகள் தாங்கியிருப்பது போல் இருந்ததைக் கண்டு வியந்தான்.
அந்த ஆசனத்தை தன் அரண்மனைக்கு கொண்டு சென்று நல்ல நாளில் சிறப்புப் பூஜைகள் செய்து அந்த ஆசனத்தில் அமரச் சென்றான்.
திடீரென்று அந்த ஆசனத்தில் இருந்த ஒரு பதுமை பேசத் தொடங்கிற்று.
"மன்னா, நீ எந்த ஆசையும் இல்லாமல் இருக்கிறாயா?ஆசையை விட்டவருக்குத்தான் இந்த ஆசனத்தில் அமரும் தகுதி இருக்கிறது."
இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் தயங்கி நின்றான்.
"எனக்குத்தான் இன்னும் பல நாடுகளைப் பிடிக்கவேண்டும் என்னும் ஆசை இருக்கிறதே "என்று நினைக்கும் போதே அந்தப் பதுமை மறைந்தது.மன்னன் மீண்டும் தன் மனத்தின் ஆசையை ஒழித்துவிட்டு
மீண்டும் பூஜைகள் செய்து அந்த ஆசனத்தில் அமரவந்தான்.அப்போதும் இரண்டாவது பதுமை பேசியது."
"மன்னா,நீ பொறாமையில்லாமல் இருக்கிறாயா?"
 இப்போதும் மன்னன் தயங்கினான்."மன்னனாகிய என்னைவிட அறிவிலும் மதிநுட்பத்திலும் சிறந்தவர்களைப் பார்க்கும்போது என் மனத்தே பொறாமை தோன்றுகிறதே."இவ்வாறு நினைத்த உடனே அடுத்த பதுமையும் மறைந்தது.சற்றும் சலிக்காத மன்னன் மீண்டும் தன் உள்ளத்தைப் பண்படுத்திக் கொண்டான்.ஒருமாதம் கழித்து மீண்டும் சிறப்புப் பூஜைகள் செய்து ஆசனத்தில் அமர வந்தான்.
இப்போது மூன்றாவது பதுமை பேசியது."மன்னா, நீ பொய் பேச எண்ணியதுண்டா?நீதிபதியாய் இருந்து நீ வழங்கிய தீர்ப்பு எல்லாம் சரியானது என்று நினைக்கிறாயா?"
மன்னன் தயங்கினான்.அரசாங்கத்துக்கு கேடு வருமானால் அதை சில பொய்கள் பேசித்தானே  விலக்க வேண்டியுள்ளது.என எண்ணியவன் தான் சொன்ன தீர்ப்பு எல்லாம் சரியாக இருக்குமா என்றும் எண்ணியஉடனே  அந்தப் பதுமையும் மறைந்தது.இப்படியே இருபத்துநான்கு பதுமைகளும் மறைந்தன.
கடைசி நாள் ஒரே ஒரு பதுமை அந்த ஆசனத்தைத் தாங்கி நின்றிருந்தது. இனியாவது இந்த ஆசனத்தில் அமர இயலுமா என்ற ஆசையுடன் மன்னன் அதில் அமரவந்தான்.அப்போது பதுமை பேசிற்று.
"மன்னா, இப்போதும் நீ பொறாமை ஆசை பொய், வஞ்சம் சூது போன்ற தீய குணங்களை விட்டு விட்டு அந்தச் சிறுவனைப் போல களங்கமில்லாமல் இருக்கிறாயா?"
ஆம் என்று துணிச்சலாகக் கூற மன்னனால் இயலவில்லை.ஒரு சிறுவனுக்குள்ள களங்கமற்ற மனம் தன்னிடம் உள்ளதா என எண்ணிப் பார்த்தான்.
அப்போது பதுமை,"மன்னா இந்த ஆசனத்தில் அமரவேண்டும்  என்னும் ஆசையை நீ என்னும் விடவில்லையே. நீ எப்படி களங்கமில்லா மனமுள்ளவன் என நினைக்க முடியும்?"என்று கேட்டவுடன் அந்தப் பதுமை தான் தாங்கியிருந்த ஆசனத்தொடு விண்ணில் பறந்து மறைந்தது.
விக்ரமாதித்தனைப்போல் அவன் அமர்ந்து நீதி சொன்ன ஆசனத்தில் அமர்வதற்கு ஒரு தகுதி வேண்டும்.
"சமன்செய்து சீர்தூக்கும் கொல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி." அன்றோ.
இவ்வாறு எண்ணிய மன்னன் அன்றே தன் தகுதியை உயர்த்திக் கொள்ளும் முயற்சியைத் தொடங்கினான்.
ஒரு நீதிபதி எத்தகு தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதை
நாமும்  தெரிந்து கொண்டோமல்லவா.






























ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com