புதன், 30 ஜூலை, 2014

பழமொழிக் கதைகள்.-கெடுவான் கேடு நினைப்பான்.

                                                ஆத்தூர் என்ற ஊரில் ஒரு பள்ளி இருந்தது. சிறு 

கிராமமாக இருப்பதால் அங்கு உள்ள பள்ளியில் எட்டாவது வரை 

மட்டுமே இருந்தது.அந்தப் பள்ளியில்தான் சேதுவும் தமிழும் படித்து 

வந்தனர்.தமிழ் மிகவும் பணிவும் நல்ல பண்பும் மிக்கவனாகத் 

திகழ்ந்தான்.ஆனால் சேதுவோ அவனுக்கு நேர் எதிர்  பண்புகள் 

உள்ளவனாக இருந்தான்.
                                     எப்போதும் ஆத்திரம் அவசரம் கொண்டவனாகவும் சுயநலமிக்கவனாகவும் திகழ்ந்தான்.தன சுய நலத்திற்காகயாரையும் அவன் எதிர்க்கத் தயங்கமாட்டான்.அவனைக்   கண்டால் தமிழுக்கு மட்டுமல்ல பல மாணவர்களுக்குப் பயம்.ஆனால்  தமிழைக் கண்டால் இளக்காரமாக நடத்துவார்கள். அவன் யாரையும்  கடிந்து கூடப் பேசமாட்டான். மிகவும் அன்பாகப் பேசுவான்.

                                    ஒருமுறை நாட்டின் குடியரசு தினம் வந்தது.
அந்த விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்று அவ்வூர் பெரிய மனிதர்கள் முடிவெடுத்தார்கள்.அவ்வூரின் பெரிய தனவந்தர் குடியரசு தினத்தன்று பிள்ளைகளுக்குப் பரிசு கொடுப்பதாய் அறிவித்தார்.எல்லோரும் ஒரே ஆவலாக இருந்தனர்.என்ன பரிசு கொடுப்பார்? இத்தனை பேருக்கும் அவர் என்ன  பரிசு கொடுக்க முடியும்?என்ற சந்தேகத்தோடு இதுவாக இருக்குமா,அதுவாக இருக்குமா என்றெல்லாம் பேசிக்கொண்டே ஒரு வாரத்தை ஓட்டினர்.
                                     கடைசியாக அந்தநாளும வந்தது        அதிகாலையிலேயே எழுந்து குளித்து முதல்நாள் துவைத்து வைத்த சீருடையைப் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வந்து முதலாவதாக நின்றுகொண்டான் தமிழ்.அவனுக்குப் பின்னால் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.ஒருவர்பின் ஒருவராக நிற்கத் தொடங்கினர்.
                                      தலைவர் வந்து கொடியேற்றியபின் அனைவரையும் வரிசையாக நிற்கச் சொன்னார் தலைமை ஆசிரியர்.
அனைவரும் வரிசையாக நிற்க பணியாள்  பெரிய மூட்டையைக் கொண்டுவந்து தலைவர் அருகே வைத்தான்.அப்போது எங்கிருந்தோ உள்ளேபுகுந்த சேது அதிகாரமாக முதலாவதாக நின்று கொண்டிருந்த தமிழை வரிசையை விட்டுத் தள்ளிவிட்டு தான் போய்  நின்று கொண்டான்.அடுத்தடுத்து அவனை நிற்க விடாமல் எல்லோரும் அவனைத் தள்ளி விட்டனர்.தமிழுக்கு இப்போது வரிசையின் கடைசியில்தான் இடம் கிடைத்தது.
                                                  தலைவர் இதைக் கவனித்துக் கொண்டிருந்தார்.இவர்களுக்குப் புத்தி புகட்ட ஒரு வழியைக் கண்டார்.
அவர் பேசிவிட்டு பரிசு கொடுக்க எண்ணினார்."மாணவ மணிகளே 
உங்களுக்கெல்லாம் பரிசு தரவந்துள்ளேன் எப்போதும் எல்லோரும் வரிசையாகத்தான் பரிசு கொடுப்பார்கள் நானும் வரிசையாகத்தான் பரிசளிக்கப் போகிறேன்."என்றவுடன் சேது தனக்குத் தான் முதலில் பரிசு கிடைக்கும் என்று பெருமையாக நின்றான்.தலைவர் தொடர்ந்து பேசினார்."ஆனால் நன் முதலிலிருந்து தரமாட்டேன் கடைசியிலிருந்து பரிசு தரப் போகிறேன்.கடைசிப் பையன் யாரோ வரட்டும்."
தமிழ் எதிர்பாராத அழைப்பால் திகைத்தவன் பின் அவரிடம் சென்று நன்றி ஐயா என்று சொல்லிவிட்டுப் பரிசுடன் சென்றான்.
                                    கடைசியில் கூடை காலியாகிக் கொண்டே வந்தது.சேதுவின் முறை வந்தபோது பெட்டி காலியாகிவிட்டது என்று சொல்லி பரிசு வரும் வரை சற்று நேரம் காத்திரு என்று சொல்லிச் சென்று விட்டார் தலைவர்.தன பரிசுக்காகத் தனிமையில் வெகுநேரம் காத்திருந்தான் சேது. ஒருவழியாக அந்தப் பணியாள்  ஒரு பரிசுப் பொட்டனத்தைத் தந்தான். தலைவர் கையால் வாங்காமல் பணியாள்  கையால் வாங்குகிறோமே என்று எண்ணி நொந்தபடியே சென்றான் சேது.அப்போது அவன் மனம் இடித்தது. "தமிழுக்கு நீ கெட்டது  நினைத்தாய். உனக்கே அந்தக் கேடு வந்தது.இதைத்தான் அந்தக் காலத்தில் "கெடுவான் கேடு நினைப்பான்"என்று சொல்லிவைத்தார்கள் போலும். இனியேனும் யாருக்கும் கெடுதல் செய்யாமல் இருக்கப் பழகு "என்றதை மனவருத்தத்துடன் கேட்டுக் கொண்டான் மனம் திருந்திய  சேது.

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com