அவர் செய்யும் தொழிலுக்கு ஏற்றபடி செல்வத்தைக் கிள்ளிக் கொடுத்தார்களே அன்றி அள்ளிக் கொடுக்கவில்லை.அதனால் நிறைந்த செல்வத்தை அவரால் சேர்க்க இயலவில்லை.
அவரது மனைவியும் இவரை கையாலாகாதவர் என ஏளனமாகப் பேசி வந்தாள்.
அதே ஊரில் தனபாலன் என்ற ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் பெயருக்கு ஏற்றசெல்வ வளம் மிக்கவராகத் திகழ்ந்தார்.அவரது நிலையைச் சொல்லிக் காட்டி சாம்பசிவத்தின் மனைவி செல்வத்தைச் சேர்க்கும் வழியைப் பின்பற்றும்படி கூறிவந்தாள்.
அதனால் சாம்பசிவம் அடுத்த ஊருக்குச் சென்று பணம் சம்பாதித்து வருவதாகக் கூறிப் புறப்பட்டார்.
அதேநாளில் தனபாலனும் தன் வியாபாரத்தின் நிமித்தமாகத் தன் வண்டியில் ஏறிக்கொண்டு அடுத்த ஊருக்குப் புறப்பட்டார்.இருவரும் ஒரே பாதையில் போய்க்கொண்டு இருந்தனர்.
தனபாலனின் வில் வண்டி ஜல்ஜல் என்று ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் சாம்பசிவமோ வேர்க்கவிறு விறுக்க நடந்து போய்க்கொண்டு இருந்தார்.
இந்த இருவரின் நிலையையும் வைகுண்டத்திலிருந்த மகாலட்சுமி தாயார் பார்த்தாள். பின்அருகே சயனத்திலிருந்த வைகுண்ட நாயகனான நாராயணனைப் பார்த்தாள்.
கண்களை மூடிப் படுத்திருந்த அந்த மாயக் கண்ணன் புன்னகை புரிந்தார்.
அவரது புன்னகையைக் கண்டு பொறுக்காத லக்ஷ்மி "சுவாமி, இது என்ன அநீதி. சதா வேதம் ஓதிக்கொண்டு உங்களையே ஸ்மரித்துக் கொண்டு இருக்கும் இந்த அந்தணருக்கு ஏன் இந்த நிலை?அவருக்கு செல்வ வளத்தைத் தரக்கூடாதா?"என்றாள் சற்றே கோபத்துடன்.
அதே புன்னகையுடன் நாராயணர்"என்ன லக்ஷ்மி நீதானே தனத்துக்கு அதிபதி?செல்வத்தை அள்ளிக் கொடுக்கவேண்டியதுதானே?" என்றார் கள்ளச் சிரிப்போடு.
"நானே கொடுக்கிறேன் சுவாமி" என்றவளைத் தடுத்தார் நாராயணர்.
"லக்ஷ்மி, அவனுக்கு இந்த ஜன்மாவில் செல்வத்தை அனுபவிக்கும் பேறு இல்லை.நீ கொடுத்தாலும் அதை அவன் அனுபவிக்க மாட்டான்."
"கொடுப்பவள் தனலட்சுமி சுவாமி.அவனுக்கு செல்வம் எப்படி சேருகிறது என்று பாருங்கள்."என்றவளைப் பார்த்துப் புன்னகைத்த நாராயணர்,
"சரி. உன் விருப்பப் படியே அவனுக்கு செல்வம் கொடு. ஆனால் இரண்டு முறைதான் கொடுக்கவேண்டும்." என்று அனுமதியளித்தார்.
மகாலக்ஷ்மியும் மிகவும் மகிழ்ச்சியுடன் தன் கையிலிருந்து ஒரு பொன் மூட்டையை அந்த அந்தணர் சாம்பசிவம் நடக்கும் வழியில் போட்டாள். எப்படிப்பணம் சம்பாதிப்பது என்ற எண்ணத்துடன் போய்க் கொண்டிருந்த சாம்பசிவத்துக்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.நமது ஐம்புலன்களும் நன்றாக இருக்கும் போதே நம்மால் விரைவாக நடக்க இயலவில்லையே கண்ணில்லாதவர்கள் எப்படி நடப்பார்கள்? நாமும் கண்ணில்லாமல் நடந்து பார்ப்போம் என்ற எண்ணத்துடன் தன் இரு கண்களையும் மூடிக்கொண்டு நடந்தான் சாம்பசிவம்.
அதே சமயம் தன் கையிலிருந்த பொன் மூட்டையை அவன் முன் போட்டாள் மகாலட்சுமி.கண்களை மூடிக்கொண்டு நடந்த சாம்பசிவம் அந்த மூட்டையைத் தாண்டிச் சென்று தன் கண்களைத் திறந்தான். "அப்பாடா, கண்ணில்லாமல்நடப்பது ரொம்ப கஷ்டம்தான். ஆண்டவா எனக்கு நல்லபடியாகக் கண் கொடுத்திருக்கும் உனக்கு கோடானு கோடி நன்றிப்பா" என்று இரு கை கூப்பி வணங்கிவிட்டு நடந்தான்.
வைகுண்ட நாராயணன் சிரித்தார்."என்ன தேவி, உன் பக்தன் நீ கொடுத்த தனத்தை ஏற்கவில்லை போலிருக்கிறதே."
"சுவாமி, இன்னொருமுறை முயற்சித்துப் பார்க்கிறேன்."
"சரி.உன் விருப்பம்."என்று அனுமதி அளித்தார் இறைவன்.
இம்முறை அவன் கண்களில் படும்படி அந்த திரவிய மூட்டையை அவன் நடக்கும் பாதையில் போட்டாள் தேவி.
தன் முன் கிடக்கும் அந்த மூட்டையைக் கையில் எடுத்தான் அந்த ஏழை பிராம்மணன்.மகாலட்சுமி மனம் மகிழ்ந்தாள்.
நாராயணனை சற்றே கர்வத்துடன் பார்த்தாள்.இப்போதும் இறைவன் புன்னகைத்தார்.
"லக்ஷ்மி என்ன நடக்கிறது என்று பார்.உன் விருப்பம் நிறைவேறினால் எனக்கும் மகிழ்ச்சியே.என்ன செய்வது.அவன் கர்மபலனை அவன்தான் அனுபவிக்க வேண்டும்."என்றார் பெருமூச்சுடன்.அதேசமயம் கையில் எடுத்த செல்வத்தைப்
பிரித்துப் பார்த்த சாம்பசிவம் அச்சமும் ஆச்சரியமும் கொண்டான். மக்கள் அதிகம் நடமாடாதஅந்தப் பாதையில் யார் இந்த மூட்டையைப் போட்டிருப்பார்?யாரேனும் தேடிவருவார்களா என்று அங்கேயே காத்திருந்தான்.
அப்போது சாம்பசிவத்துக்கு முன்னாலேயே அடுத்த ஊர் சென்று அடைந்த தனபாலன் தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டு இருந்தான்.அங்கே அமர்ந்திருந்த சாம்பசிவனைப் பார்த்துஏன் இங்கேயே தங்கிவிட்டாய்? என்று விசாரிப்பதற்காக வண்டியை மெதுவாக விடச் சொன்னான்.தான் தவறவிட்ட திரவியத்தைப் பற்றிக் கேட்கத்தான் வந்துள்ளான் என நினைத்த சாம்பசிவம் தன்னிடமிருந்த மூட்டையைக் கொடுத்து ஐயா, தாங்கள் தவறவிட்ட மூட்டை இதுதானா?நீங்கள் வருவீர்கள் என்றுதான் காத்திருந்தேன். இந்தாருங்கள் உங்கள் செல்வம்" என்று அந்த மூட்டையை தனபாலனிடம் கொடுத்தான். தனபாலனும் அதைப் பெற்றுக் கொண்டு விரைந்து ஊர் வந்து சேர்ந்தான்.மிகுந்த நல்ல காரியம் செய்து விட்டது போல் சாம்பசிவனும் மகிழ்ச்சியுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
நாராயணன் "பார்த்தாயா தேவி தனலக்ஷ்மியே கொடுத்தாலும் அந்தசெல்வம் அவனைச் சேரவில்லை பார்.இது அவனது பூர்வ ஜன்மவினை."என்றார் அதே புன்னகையோடு.
இப்போது மகாலட்சுமி நாராயணனைப் பார்த்து "நானே நினைத்தாலும் ஒருவனைச் செல்வந்தனாக ஆக்க முடியாது அவரவர் செய்த புண்ணியங்களும் பாவங்களுமே அவர்களின் சுக துக்கங்களை முடிவு செய்கின்றன என்பதைப் புரிந்து கொண்டேன் சுவாமி."என்று கூறித தலைவணங்கி நின்றாள்.
நாமும் எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனை பிறவிகளிலும் நன்மையே நினைப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு வாழவேண்டும்.
--
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshayee.blogspot.com
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshayee.blogspot.com