.
--
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
எனது முதல் வரலாற்றுச் சிறுகதையை உங்கள் முன் வைக்கிறேன். 1961-ம் ஆண்டு கலைமகளில் வெளிவந்தது.உண்மைச் சம்பவமும் கற்பனையும் கலந்த இந்தக் கதை நான்கு தொடராக வெளிவரும். இது சிறுவர் கதையல்ல.இதுவரை எழுதிவந்த கதைகளிலிருந்து மாறுபட்டது.படித்து தங்களின் மேலான கருத்துகளை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புச் சகோதரி ருக்மணி சேஷசாயி.
.
தியாகச் சுடர்.
1-ஒன்று.
எண்ணெய் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது.இரண்டொரு சுடர்கள் தெரித்துக் கீழே விழுந்தன.சிறிது சிறிதாக ஒளி மங்கிக் கொண்டே வந்தது. ஒளி மங்குவது தெரியாமல் ஆகாயத்தை வெறித்துப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள் அந்தப் பெண்.அவள் தலைமேல் போட்டிருந்த சல்லாத்துணி இளம் தென்றலைக் கூடத் தாங்காமல் படபடத்தது. நழுவிக் கீழே விழுந்த துணியைக் கூடத் தூக்கி மேலே போட்டுக் கொள்ளாமல் உலகையே மறந்து அமர்ந்திருந்தாள் அவள் .ஒளி ஒடுங்கிக் கொண்டே வந்தது.
"நாதிரா! உனக்கு என்ன வந்துவிட்டது? பேதைப்பெண்ணே, இடிந்து போய் உட்கார்ந்திருக்கிறாயே. உன்னைப் பெற்ற என் வயிறு என்ன பாடு படுகிறது என்று தெரியுமா உனக்கு?"
"அம்மா! என்னை ஏனம்மா விடுவித்து அழைத்து வந்தாய்? விரக வேதனைப் பட்டு அணுஅணுவாகச் சாவதைவிட ஒரேயடியாய்க் கல்லறைக்குள் புதைந்து விடுவது எவ்வளவோ மேல்"
"பைத்தியக்காரி, எனக்கு மகளாக நீ இருக்கவேண்டுமென்று அக்பர் பாதுஷாவிடம் மன்றாடி உன்னை மீட்டு வந்துள்ளேன்.அதுமட்டுமல்ல அவர் விதித்த நிபந்தனைகளுக்கெல்லாம் கட்டுப்பட்டுத்தான் உன்னை விடுவித்தேன்."
மகளின் முகத்தைக் கண்ணில் நீருடன் பார்த்தாள் அந்தத் தாய். மகளிடம் கெஞ்சுவதுபோல் பேசினாள்.
"இத்தனையும் எதற்காகத் தெரியுமா?...ம் .....நீயும் ஒரு தாயாக இருந்திருந்தால் என் உணர்ச்சிகளின் தன்மை உனக்குப் புரிந்திருக்கும். நாதிரா! என் கண்ணே! நீ எப்போதும்போல் ஆடிப்பாடி மகிழ்ந்து என்னையும் மகிழ்விக்க வேண்டும்.அதற்குத்தான் இத்தனை பாடுபட்டேன்.மறைந்துவிட்ட உன் அழகு மீண்டும் துளிர்விட வேண்டும், உன் மந்தகாசப் புன்னகை மீண்டும் உலகை மயக்கவேண்டும்.குயிலைப் பழிக்கும் உன் குரல் மீண்டும் கானம் இசைக்க வேண்டும்.உன் பழைய வாழ்க்கை நினைவுகளை விட்டுப் புதிய வாழ்க்கையைப் புத்துணர்ச்சியோடு தொடங்கவேண்டும்.அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும். நாதிரா! இந்த ஏழைத் தாயின் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பாயா மகளே!"
வயதான காரணத்தால் கரகரப்பாகிவிட்ட .அவள் குரல் துக்கத்தினால் மேலும் கரகரப்பானது. தளர்ந்துபோன தன கரங்களினால் தன மகளின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் .தாயின் மனக் கொதிப்பைக் கண்டும்.கற்சிலையாய் அமர்ந்திருந்தாள் நாதிரா.
மகளின் நிலையைக் .கண்ட அந்த மூதாட்டி திகைத்தவாரே அருகே அமர்ந்தாள்.அவளிடமிருந்து ஏதும் பேச்சு வராததைக் கண்ட நாதிரா, "அம்மா," என்றவாறே அவள் மடியில் தலைவைத்துக் கொண்டாள். மகளின் முகத்தை வருடிய தாயின் கரங்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள் நாதிரா.
"அம்மா என் உள்ளத்தில் உள்ள ஒரே ஒரு ஆசையை மட்டும் பூர்த்தி செய்துவிட்டால் பிறகு நீ என்ன சொன்னாலும் செய்கிறேன் அம்மா!"
"மகளே, நீ கேட்பது எனக்குத் தெரியும்.பல மாதங்களாகப் பிரிந்திருக்கும் சலீமைக் காண உன் மனம் விரும்புவதும் எனக்குத் தெரியும்.பிரிவின் வேதனையை உணராதவளல்ல நான்.ஆனால் அக்பர் பாதுஷாவிற்கு வாக்குக் கொடுத்துள்ளேன் நான்.அந்த வாக்குறுதியை மீற அனுமதிக்கமாட்டேன் " அவள் குரலில் உறுதி தொனித்தது.
"அம்மா, உன் வாக்குறுதிக்கு ஒரு இடையூறும் நேராது. நான் யாரென்பதை சலீமுக்குத் தெரிவிக்காமலேயே வந்து விடுகிறேன்.எட்டி நின்று அவரை ஒரே ஒருமுறை தரிசித்துவிட்டு வந்துவிடுகிறேன்.அம்மா என்னை நம்பு. அவருக்கு இந்த ஏழையின் நினைவு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு வந்து விடுகிறேன்.அப்போதுதான் என் மனம் சாந்தியடையும்."
"உனக்குச் சரியான பைத்தியந்தான் பிடித்திருக்கிறது.அரசபோகத்தில் மிதந்து கொண்டிருக்கும் சலீமுக்கு எத்தனையோ அழகிகள் பணிப்பெண்களாக இருப்பார்கள்.அவர்களையெல்லாம் விட்டு இறந்து விட்டதாக உலகம் நம்பும் உன்னையா அவன் நினைத்துக் கொண்டிருக்கப் போகிறான்? அவனை மறந்துவிட்டு உன் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள் நாதிரா."
"அம்மா, எந்த முடிவையும் சலீமை நான் பார்த்து விட்டு வந்த பிறகுதான் சொல்ல முடியும். என்னைப் போக விடு அம்மா."
"மகளே, அக்பர்பாதுஷா உன்னைக் கல்லறையிலிருந்து மீட்டு அனுப்பியபோது இனி மொகலாய சாம்ராஜ்ய எல்லையை மிதிப்பதில்லை தவறிக்கூட சலீமின் கண்களில் படமாட்டோம். மாறு வேஷத்தையும் கலைக்கமாட்டோம் என்று உறுதி கூறி உன்னை அழைத்துவந்தேன்.
அந்த வாக்குறுதியை மீறி உன்னை எப்படி அனுப்புவேன் மகளே?"
"அம்மா, அக்பருக்கு என்றோ அளித்த வாக்குறுதியை எண்ணி வாடும் என் உள்ளத்தைப் பார்க்க மறுக்கிறாயே அம்மா.ஒருமுறை சலீமை நான் பார்த்தால்தான் என் இந்த உயிர் ஒரு நிலைக்கு வரும். இன்னும் சிலகாலம் நான் உயிரோடிருக்கநீ விரும்பினால் என்னைப் போகவிடு.இல்லையேல் அது இப்போதே பிரிந்துவிடும் அம்மா பிரிந்து விடும்."
தாபம் தாங்காமல் அருகே இருந்த மரத்தில் முட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள் நாதிரா.
(அடுத்தபகுதி நாளை)
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com