மிருகண்டு என்ற முனிவர் மருத்துவதி என்ற பெண்ணை மணந்து இல்லறம் நடத்தி வந்தார். நல்லறம் நன்மக்கட்பேறு அன்றோ. ஆனால் மிருகண்டுவிற்கு பல ஆண்டுகளாக மக்கட்பேறு வாய்க்கவில்லை.கணவனும் மனைவியுமாக காசி மாநகர் சென்று ஓராண்டு கடும் தவம் செய்தனர். இவர்களின் தவத்திற்கு மெச்சிய பரமேஸ்வரன் அவர்களின் முன் தோன்றியருளினார்.
"அன்பனே! உனக்கு என்ன வேண்டும்?"என்றார்.
"சுவாமி! எனக்குச் சந்தான பாக்யத்தைத் தந்தருள வேண்டும்." என்றார் மிருகண்டு.
"அப்படியா! கல்வி ,ஞானம், அன்பு பக்தி அடக்கம் முதலிய குணங்களுடன் பிறக்கும் பதினாறு ஆண்டுகளே ஆயுள் உள்ள மகன் வேண்டுமா? கோபம், சூது,கொலை அடங்காமை வஞ்சனை என்ற துர்குணங்கள் கொண்ட நூறு ஆண்டுகள் ஆயுள் உள்ள மகன் வேண்டுமா?கேள்."
மிருகண்டு சிந்தித்தார்."சுவாமி! பதினாறு ஆண்டுகளே வாழ்ந்தாலும் சத்புத்திரனாகவே இருக்கவேண்டும். அருள் புரியுங்கள்" என்றார்.
"நன்று. விரைவிலேயே உங்களுக்கு சத்புத்திரன் பிறப்பான்." என்று வரமளித்து மறைந்தார் பரமேஸ்வரன்.
ஆண்டவன் வரத்தின்படியே அடுத்த ஆண்டே மருத்துவதி ஒரு ஆண்மகவைப் பெற்றெடுத்தாள்.குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டுச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர் பெற்றோர்.
குழந்தை மார்க்கண்டேயனுக்கு ஐந்து வயதாகியது. ஒளிவிடும் கண்களும் செந்தாமரை போன்ற முகமுமாக அழகின் சிகரமாகத் திகழ்ந்தான் மார்க்கண்டேயன். அத்துடன் வேதங்கள் புராணங்கள் சாஸ்த்திரங்கள் என்று அனைத்திலும் சிறந்து விளங்கினான்.இறை பக்தியிலும் சிறந்தவனாக பூஜை ஜபம் முதலியன செய்து வந்தான். பெற்றோரை தெய்வமாக மதித்துப் போற்றிவந்தான். இவனது அறிவையும் அழகையும் கண்டு பெற்றோர் பூரிப்புடன் மனவேதனையும் கொண்டனர்.மார்க்கண்டேயன் வளர வளர அவர்களின் துயரமும் வளர்ந்துகொண்டே போனது. காலம் நிற்குமா?
அது ஓடிக்கொண்டே இருந்தது. மார்கண்டேயனுக்குப் பதினைந்து வயது முடிந்து பதினாறாவது வயது தொடங்கியது.
தாய் மருத்துவதி எப்போதும் அழுது கொண்டே இருக்கத் தொடங்கினாள்.தந்தையும் துயரத்தில் மூழ்கினார்.அடுத்த பிறந்தநாளில் தங்கள் மகன் தங்களை விட்டுப் பிரிந்து விடுவானே.நாம் இருக்கையில் தங்கள் மகன் தங்களை விட்டுப் பிரிவதா என எண்ணி எண்ணி அழுதனர்.
இவர்களின் துயரம்கண்டு மார்க்கண்டேயன் காரணம் கேட்டான். காரணம் சொல்லாமல் மறைக்க முயன்ற மிருகண்டு கடைசியில் துயரத்துடன் கூறினார்.
"மகனே! இன்னும் ஓராண்டுதான் நீ எங்களுடன் இருப்பாய். பிறகு...பிறகு.." துக்கம் தொண்டையை அடைக்கப பேச முடியாமல் கண்ணீர் சிந்தினார் மிருகண்டு முனிவர்.
தந்தையின் துயர் கண்டு துடித்தான் மார்க்கண்டேயன்.அவன் தாய் மருத்துவதி அழுது கொண்டே கூறினாள்.
"என் கண்ணே, உனக்கு ஆயுள் இன்னும் ஓராண்டுதானப்பா.பதினாறு வயதானபின் நீ எமனுலகு சென்று விடுவாய்
என்பது சிவபெருமான் எங்களுக்குத் தந்த வரம்"
மார்க்கண்டேயன் புன்னகை புரிந்தான்."தாயே, இதை இத்தனை நாட்களாகக் கூறாமல் மறைத்து வைத்ததோடு நீங்களும் துயரப்பட்டீர்களே.என் விதியை நான் மாற்றிக் காட்டுகிறேன்.கவலையை விடுங்கள். வெற்றியுடன் வருகிறேன். எனக்கு ஆசிகூறி அனுப்புங்கள்." என்றபடி பெற்றோரைப் பணிந்து நின்றான்.
பெற்றோரின் ஆசியோடு புறப்பட்டான். சிவபெருமான் கோயில் கொண்டுள்ள சிவாலயங்கள் பலவற்றையும் தரிசித்து அங்கெல்லாம் பூஜை செய்து வழிபட்டான்.ஓராண்டு முடியும் சமயம் திருக்கடவூர் என்னும் சிவத்தலம் வந்து சேர்ந்தான்.அங்கு தன்னை மறந்த நிலையில் இறைவனைப் பூஜித்து வந்தான். உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகி இறைவனை வேண்டினான்."இறைவா, நான் வாழ ஆசைப்படவில்லை. ஆனால் என் பிரிவினால் என்னைப் பெற்ற தெய்வங்களான என் பெற்றோர் பெரும் துயரத்துக்கு ஆளாவார்கள் என்பதைத்தான் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு மகன் இருந்தும் அவன் காரணமாக பெற்றோர் துயரப்படுவதா?அதனால்தான் என் ஆயுளை மாற்றி என் பெற்றவரை மனம் மகிழச் செய்." மனம் கசிந்து உருகி வேண்டினான்.
நாளாக நாளாக அவனது பக்தி தீவிரமடைந்தது.அன்ன ஆகாரமின்றி இறைவனின் நாமத்தைக் கூறிக்கொண்டு வேறு எந்த கவனமும் இன்றி ஒரே குறிக்கோளோடு வேண்டிக்கொண்டிருந்தான். அந்தநாளும் வந்தது.
அன்றோடு மார்க்கண்டேயனுக்குப் பதினாறு வயது முடிந்தது. எமதருமன் சபையில் மார்க்கண்டேயனின் ஆயுள் முடிந்த செய்தி அறிவிக்கப்பட்டது. எமனும் தன் தூதர்களை அனுப்பினான்.
அவர்களும் திருக்கடவூர் கோயிலுக்கு வந்து மார்க்கண்டேயன் அருகே வந்து நின்றனர். ஆனால் அவர்களால் மார்க்கண்டேயனை நெருங்க முடியவில்லை. மீண்டும் எமலோகம் சென்று எமன் முன் தலை குனிந்து நின்றனர்.இவர்கள் கூறியதைக் கெட்ட எமன் கோபத்துடன் கர்ஜித்தான். "ஒரு சிறுவனின் உயிரைக் கொண்டுவர உங்களால் முடியவில்லையா?அப்படி என்ன சிறப்பு அவனிடம் நானே சென்று அவன் உயிரைக் கவர்ந்து வருகிறேன்."என்று கூறிய எமன் தன் வாகனமான எருமைக்கடாவின் மீது ஏறி திருக்கடவூர் வந்து சேர்ந்தான்.
இறைவன் முன் அமர்ந்து வேண்டிக் கொண்டிருக்கும் மார்க்கண்டேயனைக் கண்டான்.
"சிறுவனே, உன் ஆயுள் முடிந்து விட்டது.என்னுடன் புறப்பட்டு வா."
கண் திறந்து பார்த்த மார்க்கண்டேயன் எமனைப் பார்த்துப் புரிந்து கொண்டான்.உடனே "இறைவா, அபயம், அபயம்,
உன்னையே நம்பியுள்ளேன் என்னைக் கை விடாதே." என்று அலறியபடியே இறைவனின் திருமேனியை இறுகக் கட்டிக் கொண்டான். அவனது இச்செயலால் கோபமடைந்த எமன் தன் கையிலிருந்த பாசக்கயிற்றை அவன் மீது வீசினான்.அக்கயிறு சிவலிங்கத்தின் மேலும் பட்டது. கோபாவேசமாக லிங்கத்தினின்றும் சிவன் வெளிவந்தார்.
"எமதர்மா, என்னகாரியம் செய்தாய். என் பக்தன் மீது பாசக்கயிற்றை வீச உனக்கு என்ன தைரியம் " என்றபடியே
இடது காலால் காலனை எட்டி உதைத்தார்.எமன் அவர் பாதத்தைப் பற்றிக்கொண்டு மன்னிப்புக் கேட்டான்.
அவனுக்குக் கருணை புரிந்த பெருமான் பரிவுடன் மார்க்கண்டேயனை நோக்கினார்.
"மைந்தனே, உனது தீவிரமான பக்தியினால் என் மனம் மகிழ்ந்தது. நீவிரும்பியபடியே முடிவில்லாத ஆயுளைப் பெறுவாய். என்றும் பதினாறாகவே இருப்பாயாக.".
இறைவனின் கருணையைப் பூரணமாகப் பெற்ற மார்க்கண்டேயன் விரைந்து தாய் தந்தையரைக் கண்டு அவர்களின் பாதங்களில் மலர்களைச் சொரிந்து வணங்கி நின்றான். நடந்த நிகழ்ச்சிகளைக் கேட்டறிந்த பெற்றோர் இழந்த கண்களை மீண்டும் பெற்றவர் போல் மகிழ்ந்தனர். மார்க்கண்டேயன் தன் பெற்றோருக்குப் பலகாலம் தொண்டு செய்து என்றும் பதினாறாகவே வாழ்ந்திருந்தான்.
விதியே என்று வீணாய் இருக்காமல் தன் மதியாலும் முயற்சியாலும் விதியை மாற்றிக்கொண்ட
மார்க்கண்டேயனின் வாழ்க்கைநமக்கெல்லாம் ஒரு பாடமாகும்.