புதன், 13 ஆகஸ்ட், 2014

121. தந்தை சொன்ன சொல்

     ஒரு ஊரில் கோவிந்தன் என்ற குடியானவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். தினமும் காலையிலேயே எழுந்து இறைவனைத் துதித்துவிட்டு வெகுதொலைவு சென்று மண் அள்ளி வருவான்.வீடு திரும்பி அந்தமன்னைப் பிசைந்து பானைகள் செய்து அவற்றை விற்றுப் பிழைத்து வந்தான். அவனுக்கு ஒரே மகன் மணிவண்ணன்.அவனோ எந்த வேலையோ அப்பாவுக்கு உதவியோ எதுவும் செய்யாது ஊரைச் சுற்றி வந்தான்.அதுமட்டுமல்லாமல் எது சொன்னாலும் அதற்கு எதிர்மறையான சொல்லையே சொல்வான் செய்யவும் செய்வான்.

       இவனைப் பற்றிய கவலையில் எப்போதும் வருத்தத்தோடு இருந்தான் கோவிந்தன்.ஒருநாள் மழைவரும்போல இருந்ததால் தன மகனை அழைத்தான்.
"மணிவண்ணா, இந்த மண்ணைக் காலால் மிதித்து பிசைந்து வைய்யடா."
"என்னால் முடியாது"
"குடியானவக் குடும்பத்திலே பிறந்தவனுக்கு இது கூடவா தெரியாது?"
"இல்லை. தெரியாது"
"எண்டா இப்படி எது சொன்னாலும் தெரியாது என்கிறாய்.தெரியும் என்று சொன்னால்தான் உன் வாழ்ககை சிறப்பாக இருக்குமே!அதையாவது செய்"
மணிவண்ணன் சிந்தித்தான்.அப்பாவுக்குத் திருப்தியைக் கொடுப்போமே என்று தோன்றிற்றோ என்னவோ "சரி அப்பா, இனி எல்லாம் தெரியும் என்றே சொல்கிறேன்"
அப்பாவுடன் சேர்ந்து உணவு உண்டுவிட்டு வழக்கம்போல ஊர்சுற்றக் கிளம்பினான் மணிவண்ணன்.
அவனைப் போல் இன்னும் இரண்டு நண்பர்கள் அவனுடன் காட்டுவெளியில் அமர்ந்தனர்.
                   சற்று நேரத்தில் அரசாங்க காவலர்கள் இரண்டு திருடர்களைத் துரத்திப் பிடித்தனர்.அவர்களோடு மனிவண்ணனையும் சேர்த்துப் பிடித்துச் சென்றனர்.மன்னன் முன் நிறுத்தினர்.
"அரசே, இவர்கள் திருடுவதற்குத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். நாங்கள் சந்தேகப் பட்டுத் திருடர்களைப் பிடித்து வந்துள்ளோம்.அவர்களுக்குப் பின்னாலிருந்த புதர்நிழலில் இவர் அமர்ந்திருந்தார் இவர்தான் சரியான சாட்சி " என்று மணிவண்ணனைக் கை காட்டினர் சேவகர்.
அரசர் மந்திரியிடம் விசாரிக்கச் சொன்னார்.
ஏனோ கலவரமடைந்திருந்த மந்திரி "உண்மையைச் சொல் இவர்கள் திட்டமிட்டது உனக்குத் தெரியுமா?"
மணிவண்ணன் தன அப்பாவின் முன் தான் செய்த முடிவு அவனுக்கு நினைவு வந்தது.சட்டென "எல்லாம் தெரியும்" என்றான்.
மந்திரி மேலும் கலவரமடைந்தார்.
"இவர்களின் முழுத் திட்டமும் தெரியுமா?"
"எல்லாம் தெரியும் "
"இவர்களைத் தூண்டியது யாரென  உனக்குத் தெரியுமா?"
"எல்லாம் தெரியும்"
உடனே அந்தத் திருடர்கள் தங்களின் ரகசியமெல்லாம் தெரிந்தவர் மன்னனிடம் உண்மையை கூறினால் தலை போய்  விடும் எனத் தெரிந்துகொண்டு தாங்களாகவே உண்மையை  ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டுவிட முடிவு செய்தனர்.
"மகாராஜா, அரண்மனை பொக்கிஷ அறையில் உள்ள பொக்கிஷத்தைக் கொள்ளையடித்து வரும்படி மந்திரி அவர்கள்தான் திட்டம் தீட்டி எங்களுக்குக் கட்டளையும் இட்டார். மந்திரியே துணை யிருக்கிறாரே எங்களுக்கு எந்த அச்சமும் இல்லையென்றுதான் நாங்களும் அரண்மனையில் திருட சம்மதித்தோம். நாங்கள் பேசிக் கொண்டதை மறைவில் இருந்து இவர் கேட்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை. எங்களை மன்னித்து விடுங்கள் மகாராஜா"
மன்னர் கோபத்தின் உச்சத்தில் இருந்தார்.
"யாரங்கே? இந்த மந்திரியைப் பிடித்து விலங்கிடுங்கள்."என்று கட்டளையிட்டவர் மணிவண்ணனைப் பார்த்து "இளைஞனே! இன்னும் இவர்களின் சதியைப் பற்றிய உண்மைகள் தெரியுமா ?' என்று கேட்டார்.
அப்போதும் எதுவும் புரியாத நிலையிலும் புன்னகையுடன் "எல்லாம் தெரியும்" என்று பதில் அளித்தான் மணிவண்ணன்.
உடனே கையில் விலங்குடன் நின்றிருந்த மந்திரி மன்னனின் காலில் விழுந்தார்.
"அரசே, என்னை மன்னித்துவிடுங்கள் அயல்நாட்டானின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகி அவன் சொற்படி தங்களைக் கொலை செய்யவும் திட்டமிட்டேன்.என்னை மன்னியுங்கள் என்று கதறினார்."
மன்னர் அந்தத் திருடர்களையும் மந்திரியையும் சிறையில் அடைத்தார். மணிவண்ணனை நோக்கி
"இப்போதாவது உன் பெயர் என்ன, நீ யார்? என்பதை கூறு"என்றார்.
மணிவண்ணன் அப்போதுதான் தன்னைப் பற்றிய உணர்வு பெற்றான். திகைத்து நின்றிருந்த தன நண்பர்களிடம் என்ன ஆயிற்று என்றான் மெதுவாக.
"நன்றாக மாட்டிக் கொண்டோம்"என்றான் அந்த நண்பன் நடுங்கியபடியே
மணிவண்ணனோ சமாளித்து மன்னர் கேட்ட கேள்விக்கு பதில் கூறி பணிவுடன் நின்றான்.
"மணிவண்ணா, சரியான சமயத்தில் எனக்கு உதவி செய்தாய்.சூழ்ச்சியைத் தெரிந்துகொண்டு எம்மைக் காப்பாற்றி இந்த நாட்டுக்குப் பெரிதும் உதவி செய்துள்ளாய்.அதற்காக உனக்கு பதவி தரப் போகிறேன்.உனக்கு அரசியல் சட்டங்கள் போர்முறை முதலியன தெரியுமல்லவா?"
வழக்கம்போல தெரியுமா என்றால் தெரியும் என்று சொல்வதாய் முடிவு செய்து கொண்டவனல்லவா?எனவே எல்லாம் தெரியும் என்று வழக்கமான பதிலையே கூறினான்.
 மன்னர் மனம் மகிழ்ந்து "மணிவண்ணா, இனி இந்த நாட்டின் மந்திரி நீதான். எனக்கும் இந்த நாட்டுக்கும் நீதான் இனி துணையாக இருக்க வேண்டும்."என்றவர் மந்திரிக்கான தலைப்பாகையைத் தலையில் சூட்டினார்.
சபை கலைந்தது.
மணிவண்ணன் ஓடிவந்தான் குடிசைக்கு.தந்தையின் காலில் பணிந்தான் அனைத்தையும் அறிந்த கோவிந்தன் மிகவும் மகிழ்ந்தான்.இனி மகன் பொறுப்பானவனாகிவிடுவான் என்பதே அந்த மகிழ்ச்சிக்குக் காரணம். மணிவண்ணன் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை உணர்ந்து கொண்டான்.
       அன்று முதலே தன பதவிக்கேற்ற்படி தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள அனைத்தையும் கற்கத் தொடங்கினான்.சிறந்த மந்திரி எனவும் சிறந்த மகன் எனவும் புகழோடு வாழ்ந்தான்.ருக்மணி சேஷசாயி 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com