செவ்வாய், 26 ஜூன், 2018

தெய்வம் உண்டென்று தானறிதல் வேண்டும்.


               ஆகாஷ் என்றொரு பையன் இருந்தான் அவன் எப்போதும் தன தாத்தாவுடன் வாதம் செய்து கொண்டே இருப்பான். தாத்தா கோவிலுக்குப் போனால் அவரிடம் ஆயிரம் கேள்விகள் கேட்பான். கோவிலுக்குப் போனதனால் என்ன பலன் கிடைத்தது சாமி நேரில் உங்களிடம் பேசினாரா? எதுவுமே பேசாதவரிடம் உங்களுக்கு என்ன வேலை/என்று ஏதேனும் கேள்வி  கேட்டு வம்புக்கு இழுப்பான்.அவர்கள் வீட்டுக்கு 
 அடுத்த வீட்டுப் பரஞ்சோதியார் மிகவும் தெய்வபக்தி உடையவர். அவர் ஆகாஷின் தாத்தாவுக்கு நெருங்கிய நண்பர். அவரிடம் தன பேரன் கேட்கும் கேள்விகளைக் கூறி அவரிடமும் சந்தேகங்களை போக்கிக் கொள்வார்
அவரும்"எல்லாம் வயதுக் கோளாறு. அனுபவம் தரும் அறிவினால் விரைவில் தெளிவு பெறுவான் நீங்கள் கவலை படாதீர்கள். "என்று ஆறுதல் சொல்வார். இருவரும் நீண்ட நேரம் இறைவனின் அருட்கதைகளையும் அவர் பற்றிய பாடல்களையும் பற்றிப் பேசி மகிழ்வர்.
சுந்தர் தாத்தா அவர்தான் ஆகாஷின் தாத்தா அடிக்கடி பரஞ்சோதியார் வீட்டுக்குப் பூஜை நேரமாகப் பார்த்துப் 
போவார்.சிலநேரங்களில் ஆகாஷைத் துணைக்கு கூட்டிப் போவார்.ஆகாஷும் பரஞ்சோதியார் பூஜை முடித்துத் தரும் பிரசாதத்துக்காகக் காத்திருப்பான்.அதனால் தாத்தாவுடன் பரஞ்சோதியார் இல்லம் செல்வான்.அவரது பூஜைவேளையில் 
 அவன் உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள் உதயமாகும்.
ஆனால் அவரிடம் எதையும் கேட்கமாட்டான். ஆனால் மாலையிலோ இரவிலோ தன தாத்தாவிடம் தவறாமல் கேள்வி கேட்டு அவரை வம்புக்கிழுப்பான்.
பரஞ்சோதியார் பெரும் செல்வந்தர். ஆனாலும் அந்த எண்ணம் துளியும் அவரிடம் கிடையாது. ஆண்டவன் முன் அனைவரும்  சமம் என்ற எண்ணம்  அவருக்கு மேலோங்கியிருந்தது.பரஞ்சோதியார் எப்போதும் எல்லாத்  துன்பங்களிலிருந்தும் நம்மை இறைவன் காப்பாற்றுவான் என்றே கூறிவந்தார். அந்த நற்பண்பு காரணமாகவே சுந்தர் அவரிடம்  அன்பும் நட்பும் பாராட்டி வந்தார். பரஞ்சோதியார் எப்போதும் வியாபார நிமித்தமாக வெளிநாடு செல்வதுண்டு.
ஒருமுறை ஒரு பொங்கல் திருநாளை ஒட்டி வெளிநாடு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.சுந்தருக்கு  பொங்கல் பண்டிகைக்கு அவர் இல்லாமல் வெளிநாடு செல்கிறாரே 
என்று வருத்தமாக இருந்தது.அவரை  பரஞ்சோதியார் "வருத்தப் படாதீர்கள் சுந்தர், ஒரு முக்கிய வியாபாரம் அதை நானேதான் நேரில் வரவேண்டுமென்று வெளிநாட்டு நண்பர் விரும்புகிறார்.இறைவன்   என்ன நினைக்கிறானோ அப்படித்தான் நடக்கும். "என்று சொல்லி விடைபெற்றார் பரஞ்சோதி

பரஞ்சோதி ஊருக்குப் புறப்பட்டு இரண்டு நாட்களாகிவிட்டன.அவரைப் பற்றிய எந்த செய்தியும் அவர் வீட்டாருக்குத் தெரியவில்லை. சுந்தர் போய்க் கேட்டபோது "உங்கள் நண்பர்   உங்களுக்கும் எந்த    செய்தியும் அனுப்பவில்லையா?.  எங்களுக்குத் தான எந்த செய்தியும் வரவில்லை.என்னவாயிற்று தெரியவில்லையே" எனக் கலங்கினர் 

சுந்தருக்கு உணவுசெல்லவில்லை, . சோர்ந்துபோய்ப் படுத்துவிட்டார்.திடீரென தொலைக்காட்சியில் வந்த செய்தி கேட்டு திடுக்கிட்டு எழுந்தார்.அவர் நண்பர் பரஞ்சோதி சென்ற விமானம் 
ஏதோ ஓர் இடத்தில் எரிந்து விழுந்து விட்டதாக வந்த செய்திதான் அது.உடனே எழுந்து ஓடினார் பரஞ்சோதி வீட்டுக்கு.ஊரே அங்கு கூடியிருந்தது.
எங்கெங்கிருந்தோ தொலைபேசி செய்திகள் யார்யாரோ பேசினார்கள் யாருக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை.விமானம் விழுந்த இடத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி மட்டும்தான் வந்தது.மேலும் இரண்டு நாட்கள் சென்றபின் ஏதோ மழைப் பிரதேசத்தில் எரிந்து போன விமான பாகங்களைக் கண்டு பிடித்து விட்டதாகவும் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்ற செய்தி கேட்டு சுந்தர் கொண்ட துக்கத்திற்கு அளவேயில்லை.

                  உயிர்நண்பரின் பிரிவு சுந்தர் தாத்தாவை மிகவும் பாதித்தது. சாப்பாடு தூக்கம் எல்லாம் ஏதோ கடமைக்காகச் செய்தார்.உடல் இளைத்துப் பாதி உடம்பாகிவிட்டார்.ஆகாஷும் முன்போல தாத்தாவிடம் வம்பு செய்வதில்லை. அவர் மனநிலையை தெரிந்து சற்று அமைதியாகவே இருந்தான்.

                  பத்துநாட்கள் ஓடிவிட்டன.அன்று திடீரென்று காவல்துறையிலிருந்து இரண்டு மூன்று பேர் பரஞ்சோதி வீட்டுக்கு வந்து பரஞ்சோதி ஒரு ஏரியிலிருந்து காப்பாற்றப்பட்டு மருத்துவ மனையில் இருக்கிறார் அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறி அவர் மனைவி மைத்துனர் சகோதரர் ஆகியோரை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.
                  இந்த செய்தி ஊர் முழுவதும் பரவி சுந்தருக்கு தெரிய மகிழ்ச்சியில் குலுங்கி குலுங்கி அழுதார் தன பேரனைக் கட்டிக்கொண்டார். ஆகாஷும் "எப்படி தாத்தா நூற்றி இருபதுபேரும்   இருந்திருப்பார்கள் என்று சொன்னார்களே.  அங்கிள் மட்டும் எப்படிப் பிழைத்தார்?"என்றான் ஆச்சரியத்துடன்.
"அதுதான் ஆச்சரியம். இறைவன் திருவருள் அவருக்கு கை கொடுத்திருக்கு.எப்படி என்ன நேர்ந்தது அப்படிங்கறது அவர் வந்து சொன்னாத்தான் தெரியும்."
ஒருவாரம் சென்றது. பரஞ்சோதி வந்துவிட்டார் எனது தெரிந்து வேகமாக அவரின் இல்லத்துக்குச் சென்றார் சுந்தர்.ஆகாஷும் அவருடன் சென்றான்.
ஓய்வாகப் படுத்திருந்த பரஞ்சோதியைக் கண்டதும் மகிழ்ச்சியில் அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுது விட்டார் சுந்தர்.
மெல்லிய குரலில் பேசினார் பரஞ்சோதி."அழாதீர்கள் ஐயா எனக்கென்று நேரம் இப்போது இல்லைனு தெரிஞ்சு போச்சு.அவன் நான் இன்னும் இந்த உலகத்திலே இருக்கணும்னு முடிவு பண்ணிட்டான். அதனாலே போடா வீட்டுக்குன்னு அனுப்பிச்சிட்டான்."என்று கூறிப் புன்னகைத்தார்.
"என்ன நடந்தது எப்படி நீங்க பிழைச்சீங்க.?"
"இருபதாயிரம் அடி  போகும்போதே விமானத்தில் நெருப்புன்னு சொல்லி எல்லாரும் குதிக்கத் தயார் பண்ணிக்கிட்டிருந்தாங்க . விமானமும் கொஞ்சங்கொஞ்சமா கீழ் நோக்கி  இரங்கத் தொடங்கிச்சு. கொஞ்சம் தாழ்வாய் பறக்கும்போது  நான் குதிச்சிட்டேன்.எங்கே விழுந்தெண்ணெ தெரியலே.ஆஸ்பத்திரியில் கண்ணு முழிச்சேன். அப்போதான் நான் ஒரு ஏரியில் விழுந்தேன்னு தெரிஞ்சுது. அங்கே மீன் பிடிச்சிட்டிருந்தவங்க என்னைக் காப்பாத்திஇருக்காங்க.ரெண்டு நாள் கழிச்சுத்தான் கண்ணு முழிச்சிதான் விவரம் சொல்ல முடிஞ்சுது. எல்லாம் கடவுள் செயல்."என்றபோது பொருள் பொதிந்த பார்வையை ஆகாஷின்மேல் பதித்தார் சுந்தர் தாத்தா.
ஆகாஷும் தெய்வம் உண்டென்று தானறிதல் வேண்டும் அப்படீன்னு பாரதியின் பாட்டை  மனசுக்குள் சொல்லிக் கொண்டான்.

 ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com