வியாழன், 21 ஜூலை, 2016

வேடிக்கைக் கதைகள்.-ஏழைக்குதவிய பீர்பால்.

            டில்லிக்கு பாதுஷாவாக இருந்த  அக்பர் மிகவும் புகழ் மிக்க மன்னனாக விளங்கினார்.
அவரது சபையில் ராஜபுத்திர வீரர்களும் பெரிய பதவிகளில் அமர்த்தப் பட்டிருந்தனர்.அக்பரது ஜாதிபேதமற்ற பண்பினால் மக்கள் அவரை மிகவும் நேசித்தனர்.பரந்த சாம்ராஜ்யத்தை ஆண்டுவந்த அக்பர் மஹா அக்பர் என வரலாற்றில் புகழைப் பட்டார்.அத்தகைய சிறந்த மன்னனாக இருந்தபோதும் சில சமயங்களில் அவரும் சில தவறுகளைச் செய்து  விடுவதுண்டு.அத்தகு ஒரு நிகழ்ச்சியைத் தான் இங்கு காணப் போகிறோம்.
                ஒருநாள் முழுநிலவு நேரம்.அக்பர் உப்பரிகையில் நின்று வெண்ணிலாவின் ஒளியில் யமுனைநதியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்.அப்போது நல்ல குளிர் காலமாகையால் வெகுநேரம் உப்பரிகையில் நிற்க முடியாமல் உள்ளே சென்று விட்டார்.அவர் மனதில் ஒரு சந்தேகம் துளிர்விட்டது.
                மறுநாள் அரசவையில் அந்த சந்தேகத்தை வெளியிட்டார்.
 "கடும் குளிரில் இரவு முழுவதும் யமுனைநதியில் இடுப்பளவு நீரில் நிற்க முடியுமா?யாராலும் முடியாது என்பதுதான் என் அபிப்ராயம்.யாருக்காவது இதில் மாற்றக் கருத்துண்டா?"
சற்று நேரம் சபையில் அமைதி நிலவியது.ஆனால் பீர்பால் மட்டும் மெதுவாக எழுந்தார்.
"ஜஹாம்பனா, அவசியம் ஏற்பட்டால் நிற்க முடியும்."
"அப்படியானால் அத்தகையவர் யாரெனக் கண்டு இங்கு அழைத்து வாருங்கள் இரவு முழுதும் நின்றால் அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என அறிவித்து விடுங்கள்."
             பறையறையப்பட்ட செய்தி கேட்டு அவ்வூரில் வாழ்ந்த ஒரு பரம ஏழை தன் மகளின் திருமணத்தை முடிக்க பொருள் தேடும் நிலையில் இருந்தவன் சபைக்கு வந்து தான் அவ்வாறு நிற்பதாகக் கூறவே அக்பரும் சம்மதித்தார்.அன்று இரவு சாளரத்தின் எதிரே தெரிந்த யமுனை நதியில் மேலாடையின்றி இடுப்பளவு நீரில் நடுங்கியபடி நின்றிருந்தான் அந்த ஏழை.அதை சாளரத்திலிருந்தும் பார்த்தார் அக்பர்.இரண்டு காவலர்கள் உடலைப் போர்த்திக் கொண்டு அவனுக்கு காவலாக நின்றிருந்தனர்.
 பொழுது விடிந்தது.ஈர ஆடையுடனேயே அக்பரைப் பார்க்க வந்தான் அந்த ஏழை.காவலரிடம் அக்பர் விசாரித்தார்."இவன் நிற்கும்பொழுது எங்கிருந்தேனும் வெளிச்சம் வந்ததா?"
"ஆம் பிரபு.தங்கள் உப்பரிகையின்  வெளிச்சம் இவர்மீது விழுந்து கொண்டிருந்தது.வேறு வெளிச்சம் அங்கில்லை."
"அப்படியானால் அந்த வெளிச்சத்தில் இவன் குளிர் காய்ந்துகொண்டு நின்றிருக்கிறான்.ஏமாற்றியவனுக்குப் பரிசு கிடையாது "
இந்த வார்த்தையைக் கேட்ட அந்த ஏழை குளிரில் நடுங்கியதையும் துன்பப்  பட்டதையும் விட மன்னரின் இந்த வார்த்தையைக் கேட்டு அதிக துயரப்பட்டான். தான் விதியை நொந்து கொண்டே தலைகுனிந்து திரும்பினான்.ஆனாலும் மன்னர் செய்தது அநியாயம் என்று பட்டது. இதற்கு தீர்வு சொல்பவர் அரசரின் நெருங்கிய நண்பராக விளங்கும் பீர்பால்தான் என்று எண்ணி அவரிடம் தன் துன்பக் கதையைக் கூறினார்.
             அவரை சமாதானப் படுத்திய பீர்பால் கவலையின்றி இருக்குமாறு கூறி அனுப்பினார்.
இரண்டு நாட்களில் அக்பரை அழைத்துக் கொண்டு வேட்டைக்குச் சென்றார் பீர்பால். இருவரும் வெகு தொலைவு சென்றபின் களைப்படைத்த அக்பர் ஒரு மரத்தடியில் அமர்ந்து விட்டார்.
"பீர்பால் எனக்கு பசி அதிகமாகிவிட்டது. ஆகாரம் உண்டபின்தான் நகர முடியும்.ஏற்பாடு செய் "

"இதோ ஐந்து நிமிடத்தில் உணவு தயாராகிவிடும்."என்றபீர்பால் தானியத்தை ஒரு பாத்திரத்திலிட்டு நீர் ஊற்றியபின் அதை ஒரு மரக்கிளையில் கட்டினார்.அதன் கீழே நேராக நெருப்பை மூட்டி விட்டு அமர்ந்தார்.சற்று நேரம் இதைக் கவனித்த அக்பர் "பீர்பால் என்ன செய்கிறாய்?இவ்வளவு உயரத்தில் பாத்திரம் இருந்தால் எப்படி வேகும்?நெருப்புப் படவேண்டாமா?"என்றார் கோபமாக.
பீர்பால் பணிவாக நிதானமாகக் கூறினார்." ஆலம்பனா அவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.
தங்கள் ஆட்சியில் சாளரத்தின் வெளிச்சத்தில் குளிர் காய முடியுமென்றால் அந்த வெளிச்சத்தில் இரவு முழுதும் நதியில் குளிரில்லாமல் நிற்க முடியுமென்றால் இந்த சூட்டில் தானியம் வேகாதா? சற்றுப் பொறுமையாக இருங்கள்."
அக்பருக்கு அப்போதுதான் தன்னைப் பழி வாங்குகிறார் பீர்பால் என்று புரிந்தது.அத்துடன் அவரது புத்திசாலித்தனமும் தெரிகிறது  என்று புன்னகை புரிந்து, "பீர்பால், உங்கள் எண்ணம் புரிந்து விட்டது நாளையே அந்த ஏழைக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் மகிழ்ச்சியா.இப்போதேனும் எனக்கு உணவு சீக்கிரம் தாருங்கள்" என்றவருக்கு தலை சாய்த்து நன்றி கூறிய பீர்பால் தனியாக வைத்திருந்த பழங்களைக் கொடுத்து அவரின் பசியாற்றினார்.
இருவரும் அரண்மனை திரும்பியதும் அந்த ஏழையை அழைத்து அவருக்கு ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்தார் அக்பர்.பீர்பாலுக்கு நன்றி தெரிவித்தான் மன்னருக்கு வணக்கம் தெரிவித்தான் அந்த ஏழை மனிதன்.


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com