திங்கள், 10 செப்டம்பர், 2018

மேன்மக்கள்

பழனி என்ற பதினாறு வயதுப் பையன் தலைகுனிந்து நின்றிருந்தான். அவன் கண்களில் கண்ணீர் எப்போது கொட்டட்டும் என்பதுபோல் நின்றிருந்தது.அவன் எதிரே அவனைப் பெற்ற  தாய் கீழே அமர்ந்துகொண்டு கீரையை ஆய்ந்து கொண்டு இருந்தாள்  அவள் கண்களிலும் கண்ணீர் உதிரத்  தயாராக இருந்தது.என்ன செய்வது ஏதேனும் பலம் இருக்கவேண்டும் பேசவேண்டும். பணபலம் மனிதர் பலம் இரண்டுமே இல்லாதிருக்கும் போது  எதைச் சொல்லித் தேற்றுவது என்று புரியாமல் தான் அவள் அமைதியாக இருந்தாள்  மகனுடன் சேர்ந்து கண்ணீர் வடிப்பதைத் தவிர அவளுக்கு வேறு ஒன்றும் தெரியவில்லை.
சற்றுநேரத்தில் மனம் தெளிவடைந்தவளாய் மகனிடம் கூறினாள் 
"பழனி மனதைத் தேத்திக்கோ.இந்த இஞ்சினீர் படிப்புப் போனால் என்ன? வேறே படிப்பு இல்லையா என்ன?எதைப் படிச்சாலும் ஒண்ணுதான்.ஆண்டவன் அருளும் நல்ல உழைப்பும் இருந்தா வாழ்க்கையிலே எப்படியும் முன்னேறலாம்.கண்ணைத் தொடச்சிக்கோ . அடுத்து ஆக வேண்டியதைப் பாரு."
பழனியும் தெளிவடைந்தான்.சற்றே புன்னகைத்தான்.அவன் அம்மாவும் மகன் தெளிவடைந்ததை எண்ணி சற்றே நிம்மதிப் பெருமூச்செறிந்தாள்.
"ஆனாலும் அந்த வீட்டு அய்யாவுக்கு நன்றி கொஞ்சம் கூட இல்லை அம்மா.அதை நெனச்சாதான் எனக்கு கொஞ்சம் கோபம் வருதும்மா."முகம் சிவக்க பழனி கூறியதைக் கேட்ட அவன் தாய் அஞ்சலையும் அதை ஆமோதித்தாள் "என்ன செய்யறதுப்பா. நாம் ஏழையாயிட்டோம்.நம்ம உழைப்பும் உண்மையும் தவிர நம்ம கிட்டே எந்த  செல்வமும் இல்லையே தம்பி. அதை வச்சுக்கிட்டு பெரிய படிப்பெல்லாம் படிக்க முடியுமா. ஆனாஒண்ணு  வாழ்க்கையிலே முன்னுக்கு வர இது இரண்டும் இருந்தாபோதும் பழனி."
அம்மாவை ஆமோதித்தான் பழனி.
கிட்டத்தட்ட பத்து வருஷமாக ஆடிட்டர் சக்திவேல் வீட்டில் சமையல் வேலை செயது ஒரே மகன் பழனியை தன எஜமானின் மகன் படிக்கும் உயர்ந்த பள்ளியிலேயே படிக்கவைத்தாள்.பத்தாம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்வானபொழுதே பழனியின்மேல் சக்திவேலுக்கும் அவர் மகன் ராஜவேலுக்கும் மனதில் பொறாமை ஏற்படத் தொடங்கியது .

அஞ்சலியிடம் அவர் ஒருநாள் கேட்டார்."ஏம்மா, உன் மகனை ஏன்  கஷ்டப் பட்டுப் படிக்கவைக்கறே?என் ஆபீஸிலேயே ஒரு வேலை போட்டுத் தரேன்.படிப்பை விட்டுட்டு வேலைக்குப் போனால் உனக்கும் வசதியாய் இருக்குமில்லையா?எத்தனை நாள்தான் நீயே கஷ்டப்படுவே?
நல்ல சம்பளம் போட்டுத் தரேன். என்ன சொல்றே?"
"யோசிச்சுச் சொல்றேன் .என் மகனைக் கேக்கணும்."
"அவனை என்கிட்டே வரச்  சொல்லு. நான் பேசறேன்."
அப்போதே அவர் மனம் புரிந்து விட்டது அஞ்சலைக்கு.
அவர் எதிர்ப்பினூடே எப்படியோ பனிரெண்டாம் வகுப்பிலும் முதன்மை மாணவனாகத் தேர்ச்சிபெற்றான் பழனி.
ஆனால் ராஜவேலுவோ எல்லாப் பாடங்களிலும் குறைந்த மதிப்பெண் பெற்றே தேர்ச்சி பெற்றிருந்தான்.
பழனி ராஜவேலு இருவருமே இன்ஜினீயருக்குப்  படிக்க விரும்பினர்.தன மகன் படிப்பில் பின்தங்கியிருப்பதும் தன்னிடம் வேலை அதுவும் சமையல் வேலை செய்யும் ஒரு பெண்ணின் வளர்ப்பில் ஒருபையன் முதல் மதிப்பெண் பெறுவதும் அவரால் தாங்கிக்  கொள்ள முடியவில்லை.
அவரிடம் தன் மகனின் படிப்பிற்கு உதவி கேட்டபோது மீண்டும் முதலில் சொன்ன அதே செயதியையே கூறினார்.எப்படியேனும் அவன் படிப்பை நிறுத்தி தன னிடமே தன அடிமையாக வைத்துக் கொள்ள விரும்பினார். தன் மகனும்சமையல்காரி மகனும்சரிநிகர் சமமாகப் படிப்பில் விளங்குவது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனாலேயே கல்விக்காக உதவி செய்யாமல் தவிர்த்தார்.
இதைத்தான் தாயும் மகனும் ஆரம்பத்தில் பேசிக்கொண்டனர்.
மகனின் ரோஷத்தை அஞ்சலை மதித்தாள்.மறுநாளிலிருந்து அஞ்சலை வேலைக்குப் போகாமல் நிறுத்திக் கொண்டாள்.சக்திவேல் ஆளனுப்பியபோது அஞ்சலையும் பழனியும் வீட்டைக் காலிசெய்துவிட்டு ஊரைவிட்டே போய் விட்டதாகச் சொன்னான் வேலையாள் .
          ஆண்டுகள் உருண்டன.இப்போது ராஜவேல் ஒரு இஞ்சினீயர்.சென்னையில் கடந்த ஓராண்டாக வேலைதேடி அலையும் ஒரு பொறியியல் பட்டதாரி.எங்கு சென்றாலும் இவனைவிட மதிப்பெண் பெற்றவர்களாக நேர்முகத் தேர்வுக்கு வந்ததினால் இவனுக்கு வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது.
          அன்றும் ஒரு நேர்முகத் தேர்வுக்குத்தான் காத்திருந்தான்.ஒவ்வொருவராக எம்.டி யின் அறைக்குள் சென்று வந்தனர். நேரம் செல்லச் செல்ல ராஜவேலுவின் படபடப்பு அதிகமாகியது.இந்தவேலையாவது கிடைக்க வேண்டும். கடவுளை வேண்டிக்கொண்டான்.அவன் கண்கள் அங்கிருந்த பெயர்ப்பலகையை நோக்கின. பழனிவேல் முருகன் என்ற பெயரைப் பார்த்ததும் அவனுக்குத் தன பழைய நண்பன் பழனியின் நினைவு வந்தது.சொல்லாமல் ஊரைவிட்டுக்காலி செய்ததும் அவன் படிப்பைத் தொடர்ந்தானா இல்லையா இப்போது எங்கிருக்கிறானோ என்ற நினைவும் அவனைச் சுற்றி படர்ந்தன. நினைவை எங்கோ செலுத்தியிருந்தவனை உதவியாளர் ராஜவேல் என்று பெயர் சொல்லி அழைத்ததும் நினைவு வந்து வேகமாகத் தன உடையைச் சரி செயது கொண்டு எம்.டி என்ற கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான்.தனக்குப் பின் வந்தவர்களை அழைத்துவிட்டுத் தன்னைக் கடைசியாக அழைத்ததை எண்ணி சற்றே கடுப்பில் இருந்தான் ராஜவேல். இருந்தாலும் முகத்தில் பொய்ச்சிரிப்பைத் தாங்கிக்  கொண்டு "வணக்கம் சார்." என்றான் 
அடுத்தகணம் அமர்ந்திருந்த எம்.டி. எழுந்து நின்றார்.
ராஜவேல் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்."பின்னாலே யாருமில்லை ராஜவேல். உனக்காகத்தான் எழுந்து நின்றேன்."
குரலையும் உருவத்தையும் பார்த்த ராஜவேல் திகைத்தான்.

"நீ...நீங்க...பழனி ..."
கலகலவென்று பெரிதாக நகைத்த பழனி,"பழனியேதான்.உன் பழைய நண்பன்தான்.வா, வீட்டுக்குப் போகலாம்.உன்னைப் பார்த்தால் எங்கம்மா ரொம்ப சந்தோஷப்  படுவாங்க."என்றபடி அவன் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான் தன காரை நோக்கி.
அப்போதுதான் தன்னை ஏன் கடைசியாக அழைத்தான் என்பதைப் புரிந்து கொண்டான் ராஜவேல்.
அஞ்சலை இருவரையும் பார்த்து மிகவும் சந்தோஷப பட்டாள்  தந்தை செய்த தவறுக்கு மகனைத் தண்டிக்காமல் அவனது நட்புக்கு மதிப்புக் கொடுத்த தன மகனின் பண்பைக் கண்டு மிகவும் மகிழ்ந்தாள் 
ஆறாண்டுக் கதையை இருவரும் சாப்பிட்டுக் கொண்டே பேசினார்.
அஞ்சலைதான் பேசினாள் "ராஜா, ஊரை விட்டு நாங்கள் வந்ததும் இந்த ஊரில் ஒரு ஸ்கூட்டர் மோட்டார் பைக் தயாரிப்பாளரிடம் வேலைக்குச் சேர்ந்தான்.அங்கே என்ன உதிரி பாகங்கள் அதிக மாகத் தேவைப் படுகிறதோ அந்த பொருளை வங்கியில் கடன் வாங்கி தயாரிக்க ஆரம்பித்தான் இரண்டே வருடங்களில் பெரிய தொழிற் சாலைகட்டிவிடடான்.இப்போது அங்கே முப்பது பேர் வேலை செயகிறார்கள்.அவனுடன் துணையாக இன்னொருவரும்தேவை என்றுதான் வேலைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தான். சரியாக நீ வந்து சேர்ந்தாய்.உன் விண்ணப்பப் படிவத்தைப் பார்த்தே தெரிந்து கொண்டோம். இன்று உன்னை அழைத்து வருவதாகத்தான் சொல்லியிருந்தான்.அதுதான் ஸ்பெஷல் சமையல்."என்றபடியே புன்னகைத்தாள் 
அவர்கள் அன்பைப் பார்த்துக் கண்கள் குளமாக அவர்களைப்  பார்த்தான் ராஜவேல்.
"உங்களுக்குச்  செய்த பாவம்தான் அப்பா சென்ற ஆண்டே காலமாகிவிட்டார். உங்களைப் பற்றி கடைசி காலத்தில் கேட்டுக் கொண்டேயிருந்தார்.
அண்டியிருந்தவர்களை உதவிசெய்யாமல் கைவிட்டு விட்டேன் என்று ரொம்பவும் வருந்திப் பேசினார்."
என்றபோது அஞ்சலை,"அதனால் என்ன, என் மகன் நல்ல நிலைக்கு வர அதுவே காரணமாகிவிட்டதே, அவர் நல்லதுதான் செய்திருக்கிறார்."
என்றபோது மன நிறைவுடன் சிரித்தான் ராஜவேல்.அவன் கையைப் பற்றி அழுத்தி தன நட்பை உறுதிப் படுத்தினான் பழனி.அவர்கள் இருவரையும் பார்த்து மனது திருப்தியுடன் புன்னகை செய்தாள்  அஞ்சலை.அவர்களின் உயர்ந்த உள்ளத்தைப் பார்த்து நன்றியுடன் மனம் நெகிழ்ந்து நின்றிருந்தான் ராஜவேல்.அவன் மனம் கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்று பழைய பாட்டை நினைவு கூர்ந்தது.

                                                                  
 
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com