ஞாயிறு, 16 ஜூன், 2019

பாட்டி சொன்ன கதை.கெட்டிக்காரப் பசு

                  ஒரு ஊரில் ஒரு குடியானவன் இருந்தான். அவனிடம் நிறைய பசுக்களும் காளைகளும் இருந்தன.அந்தக் குடியானவன் தினமும் அதிகாலையில் மாடுகளையும் பசுக்களையும் வெளியே வயலில் மேய விடுவான்.எல்லா மாடுகளும் வெகுதொலைவு சென்று புல்  மேயும் மாலையில் தாமாகவே வீட்டுக்கு வந்து சேரும்.
                 ஒருநாள் குடியானவன் வழக்கம்போல் மாடுகன்றுகளை மேய வெளியே அவிழ்த்து விட்டான்.எல்லா பசுக்களும் வழக்கம்போல் காட்டுக்குள் புல்  மேய்ச சென்றன.அந்த ஊரின் எல்லையில் ஒரு காடு இருந்தது.அந்தக் காட்டில் சிங்கம் நரி புலி போன்ற மிருகங்கள் வாழ்ந்து வந்தன.அந்தக் காட்டில் இருந்த ஒரு நரிக்கு பசுவை உணவாகக் கொள்ள வேண்டும் என்று ஆசை.
அதனால் நரி யோசித்தது.பசுவை நம்மால் கொல்ல முடியாது.ஆனால் சிங்கத்தால் முடியும் என எண்ணி திட்டமிட்டது.சிங்கத்தை நாடிச் சென்றது.அதன் முன்னால் மண்டியிட்டு மிகவும் பணிவுடன் கூறியது.
"சிங்கராஜா நம் காட்டுக்குள் சில பசுக்கள் மேய வருகின்றன.அவை மிகவும் கொழுத்து இருக்கின்றன.தங்களுக்கு சிறந்த உணவாக அவை இருக்கும் என்று  கூறுகிறேன்."
அதைக் கேட்ட சிங்கம் "அப்படியா,எங்கே அந்தப் பசு ?"என்று உடலை சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றது 
"சிங்கராஜா, அவை கூட்டமாக இருக்கும்போது கொல்ல முடியாது என்று தங்களுக்கே தெரியும் "என்று நான்கு மாடுகளிடம் சிங்கம் சிக்கிக் கொண்ட கதையை நினைவு படுத்தவே, சிங்கம் ம்..,ம்.. என்று உறுமியவாறு மீண்டும் அமர்ந்து கொண்டது.
"நீ சென்று ஒரு பசு தனியாக இருக்கும்போது வந்து சொல் "
            நரியும் துள்ளிக் கொண்டு மகிழ்ச்சியுடன் ஓடியது அன்று முதல் பசுக்களின் பின்னாலேயே சென்று மறைவாகக் கண்காணித்தது 
           ஒரு நாள் வழக்கம்போல பசுக்கள் காட்டின் அருகே வந்து மேயத்  தொடங்கின. மாலைநேரமாகிவிட்டதால் குடியானவன் பசுக்களைத் தெடிக் காட்டுக்குள் வந்து எல்லாப் பசுக்களையும் வீட்டுக்கு விரட்டிச் சென்றான்.ஒரு பசு மட்டும் நரியின் தந்திரத்தால் ஒரு குகைக்குள் மாட்டிக் கொண்டது.பசு குகைக்குள் பதுங்கி இருப்பதைக்  கண்ட நரிக்கு வாயில் எச்சில் ஊறியது.சிங்கம் பசுவைக் கொன்று தின்றுவிட்டு மீதியைப் போட்டுவிட்டுப் போகும்.அதை நாமும் ஆசைதீரத் தின்னலாம் என்று கனவு கண்டபடியே சிங்கத்திடம் சென்றது.
"சிங்கராஜா, ஒரு பசு மாட்டிக் கொண்டது.வாருங்கள் உங்களுக்கு நல்ல உணவு கிடைத்து விட்டது.இன்று விருந்துதான் வாருங்கள் வாருங்கள்."
என்று மகிழ்ச்சியுடன் கூவி அழைத்தது.
பெரும் சத்தத்துடன் சிங்கம் ஆர்ப்பரித்து வந்தது.நரி சிங்கத்தை பசு ஒளிந்திருக்கும் குகைக்கு அழைத்து வந்தது.
குகைவாயிலுக்கு வந்ததும் நரி சிங்கத்திடம் 
"சிங்கராஜா, இந்தக் குகைக்குள்தான் அந்தப் பசு உள்ளது.உள்ளே சென்று பாருங்கள்"என்றது.
குகைக்குள் இருந்த பசு இதைக் கேட்டது.பயத்தில் நடுங்கியது.என்னசெய்வது என்று சிந்தித்தது.நடுங்கியபடியே "அம்மா, அம்மாஆ ..ஆ...என்று பெரிய குரல் கொடுத்தது.அந்தக் குரலைக்கேட்டு சிங்கமும் சற்றுத் தயங்கி நின்றது.
 பசுவுக்கு ஒரு யோசனை தோன்றியது.தன குரலை இன்னும் பெரிதாக்கிக் கொண்டு அது கூறியது."ஏ , நரிப்பயலே.என் பசிக்கு இரண்டு சிங்கத்தைக் கொண்டு வா என்றால் ஒரு சிங்கத்தை மட்டும்  அதுவும் நோஞ்சான் போல் இருக்கும் சிங்கத்தைக் கொண்டு வந்திருக்கிறாயே உன்னையும்சேர்த்துத் தின்று விடுகிறேன் பார்." என்று பெரிதாக முழங்கியதும் சிங்கம் இது நரியின் தந்திரம் தன்னை உணவாக்கவே இது அழைத்து வந்துள்ளது என நினைத்தது.இது ஏதோ புதிய மிருகம் தன்னையே உணவாக்கிக் கொள்ளும் வலிமை வாய்ந்தது என்று எண்ணியது 
"ஏ நரியே என்னையே ஏமாற்றுகிறாயா?உன்னை என்ன செய்கிறேன் பார்" என்றபடியே பாய்ந்தது.ஆனால்   நரி எப்போதோ அங்கிருந்து ஓட்டமெடுத்துவிட்டது.சிங்கமும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று ஓடி மறைந்தது.
பசு மெதுவாகத் தன வீடு நோக்கி நடந்தது.திறமையும் துணிவும் இருந்தால் எந்தத் துன்பத்தையும் கடந்து விடலாமல்லவா?














--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com