வெள்ளி, 15 ஜூலை, 2016

குறள் நெறிக் கதைகள் - பொய்யும் மெய்யாகும்.

          தாயம்மா எழுபது வயதான பாட்டி.சென்னையில் நடுநாயகமாக உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருந்தார்.அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இரண்டு பேரும் வெளிநாடுகளில் இருந்தனர். அதனால் தங்கள் சொந்த கிராமத்திலிருந்து ஒரு சிறுமியை அந்தத் தாய்க்குத் துணையாக அமர்த்தினர். வாரம் தவறாமல் இருவரும் தாயின் நலம் பற்றி விசாரித்து அரைமணிக்கு மேல் பேசுவார்கள். அதனால் அந்தப் பாட்டியின் மனமும் உடலும் மிகவும் ஆரோக்யமாக இருந்தது என்றே சொல்லலாம்.
         அவருடன்  வசித்த  அஞ்சலை என்ற பெண் அவருக்குப் பெருந்  துணையாக இருந்தது         மகிழ்ச்சியாக அவர் இருக்க முக்கிய  காரணம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஞ்சலை அவருக்கு  உதவியாக இருந்தாள்  என்றே சொல்ல வேண்டும்.வீட்டு வேலைகளை அஞ்சலை சரியாகச் செய்யாவிட்டாலும் கவலைப்பட மாட்டார்  தாயம்மா.அடிக்கடி அவருடன் அமர்ந்து வம்பு பேசவேண்டும் அதுதான் அவருக்கு ஒரே பொழுது போக்கு.அத்துடன் அஞ்சலையும் சரியான வாயாடி. ஊர்வம்புகளை சிரிக்கச் சிரிக்கச் சொல்வாள்.அத்துடன் அஞ்சலை மிகவும் ஆசையுடன் தாயம்மாவிடம் கதை கேட்பாள்.அதுவும் அரிச்சந்திரன் கதையை மீண்டும் மீண்டும் கேட்பதில் மிகவும் பிரியம்.அடிக்கடி அந்தக் கதையைக் கூறும்படி தாயம்மாவைக் கேட்டு நச்சரிப்பாள் அஞ்சலை.அவள் விருப்பத்துடன்  கேட்பதால் தாயம்மாவும் சலிக்காமல் கதை சொல்வாள்.
               ஒருநாள் அஞ்சலையைக் கூப்பிட்ட தாயம்மா "பக்கத்துவீட்டுக்குப் போய் ராமாயண புத்தகம் இருக்கும். வாங்கிட்டு வா. அந்த கதையைப் படிச்சு உனக்கு இன்னிக்கு கதை சொல்றேன்."என்றதும் துள்ளி அருகே ஓடிவந்தாள் அஞ்சலை.
       "ஏம்மா, அந்தப் புஸ்தகத்துல அரிச்சந்திரன் கதையும் இருக்குமில்லே.''
புன்னகை புரிந்த தாயம்மா "உனக்குச் சரியான அரிச்சந்திரன் பயித்தியமடி.அதைப் போல இன்னும் சூப்ப ரான விஷயமெல்லாம் இந்தக் கதையிலேயும் இருக்கும். "என்றபோது மிகவும் மகிழ்ச்சியாக ஓடினாள் அஞ்சலை.
அவள் புத்தகத்தோடு வந்ததும் அவளையும் உட்காரச் சொல்லி புத்தகத்தைப் பிரித்துப் படிக்கத்  தொடங்கினார். மிகவும் சுவாரசியமாக அமர்ந்து கதையைக் கேட்டுக் கொண்டிருந்தாள் அஞ்சலை.அப்போது மிக வேகமாக அங்கே வந்த பக்கத்து வீட்டு அம்மாள் கோபமாக முன்னால் நின்றாள்.
         அவளைப்  பார்த்த தாயம்மா "வாம்மா கோமதி நீ குடுத்த பொஸ்தகத்தைத்தான் படிச்சுக்கிட்டு இருக்கேன்"என்றார் புன்சிரிப்புடன்.
"என்ன படிச்சு என்ன பிரயோசனம்?யாருமில்லையின்னா பொருளைத்  திருடச் சொல்லுதோ உன் படிப்பு" என்று அஞ்சலையைப் பார்த்துக் கத்தினாள் கோமதி.
அஞ்சலை ஒன்றும் புரியாதவள் போல்  விழித்தாள்.
அவள் தலையில் இடித்த கோமதி"எங்கவீட்டு மேசையிலதான அந்தப் புஸ்தகம் இருந்துது. அதை எடுக்கும்போது பக்கத்துல இருந்த என் கைக்கடிகாரத்தையும் திருடிக்கிட்டு வந்துட்டியா?"என்றாள் கோபமாக.
தாயம்மாவால் தங்க முடியவில்லை.எவ்வளவு உத்தமமான பெண் இந்த அஞ்சலை.இவள் அருமை தெரியாமல் வீண் பழி போடுகிறாள் என்று கோபமாக எழுந்தார்.
"அவசரப்பட்டுப் பேசாதே கோமதி.அப்படி செய்ற பொண்ணு இல்லை இவள்.நான் தீர விசாரித்துச் சொல்றேன்.அவள் எடுத்திருக்க மாட்டாள்."
 "இவள் எடுக்காமல் வேறே யாரு?வேறே யாருமே அங்கே வரலையே.இவை வந்து போனப்புறம்தான் கடியாரத்தைக் காணோம்.சொல்லுடி வேறே யாராச்சும் வந்தார்களா?"
சற்றே யோசித்த அஞ்சலை யாரும் வரவில்லையெனத் தலையசைத்தாள்.                                     "இருக்கட்டும். உன்கிட்டே இருந்து எப்படி வாங்கணுங்கறது எனக்குத் தெரியும்."என்று கத்திவிட்டுப் போனாள்  கோமதி. 
தலை குனிந்து அமர்ந்திருந்த அஞ்சலையை "ஏய், நீயேண்டி தலை குனியணும் அவ எங்கயாச்சும் மறந்து வச்சிருப்பா.நீ கவலைப் படாதே.வந்து உட்காரு."என்றபடியே படிக்கத்  தொடங்கினார்.
அஞ்சலையின் கவனம் கதையில் இல்லை என்பதை அவளை பார்த்த தாயம்மாவிற்குப் புரிந்தது."அஞ்சலை, என்ன விஷயம் ?உன் மனசு இங்கே இல்லை போலிருக்கே."
கண்களில் நீருடன் "ஆமாம்மா, நான் பொய் சொல்லிட்டேன்.அரிச்சந்திரனை மனசுல  என் குருவா நெனச்சிருந்த நான் பொய் சொல்லிட்டேன்.''என்றபோது திடுக்கிட்டார் தாயம்மா."என்னம்மா சொல்றே நீ. ஒரு வாச்சுக்கு ஆசைப்படற பொண்ணா நீ? நான் நம்பமாட்டேன்."
"உண்மதாம்மா.நா ஆசைப்படல.கோமதியக்கா வீட்டுல வேலை செய்யுற பட்டக்காவோட மவன்தான் உள்ளேருந்து வந்தான் எதையோ மறைச்சுகிட்டுப் போரதப் பார்த்தேன்.புஸ்தகத்தை எடுத்துக்கிட்டு அவன் பின்னால போயி அதட்டுனேன். அழுதுகிட்டே குடுத்துட்டு இனிமே இப்படி செய்ய மாட்டேன்.இதை அந்த அக்கா கிட்டே குடுத்துடுன்னு சொல்லிட்டு என் கையில வச்சுட்டு ஓடிட்டான்.நான் மறுபடி அந்த அக்காவீட்டுக்குள்ளே போயி இருந்த எடத்துல வேக்கப் போனேன் ஆனா அந்த கோமதியக்கா வந்துட்டாங்க.அதால அப்புறமா வச்சிடலாம்னு வந்துட்டேம்மா."
"சரி இப்போ வந்தாளே  உண்மையைச் சொல்லி வாட்சைக் குடுத்துடறதுதானே?"
"அய்யோ பாவம்மா அந்தப் பட்டக்கா.தெரியாம சின்னப்பய செஞ்சதுக்கு அந்தக்காவுக்கு வேலை போயிட்டா என்ன பண்ணுவாங்க.அதால சும்மா கம்முனு இருந்திட்டேன்."
"சரி வாட்சை குடுக்கறதுதானே?"
"அது எப்படிம்மா ?நான்தான் திருடிட்டேன்னு நெனைக்க மாட்டாங்களா.அதனாலதான் மனசு கொஞ்சம் கஷ்டமா இருக்கும்மா."
"சரி,அதைக் குடு எங்க வீட்டிலே நேத்தே வச்சுட்டுப் போயிட்டேன்னு நானே சொல்லி குடுத்திடறேன்."
"ஆனாலும் பொய் சொல்லிட்டமேன்னு ரொம்பக் கஷ்டமாயிருக்கம்மா "
அவளை புன்னகையுடன் பார்த்த தாயம்மா,
"அஞ்சலை ஒரு நல்ல காரியம் செய்யறதா இருந்தா பொய் சொல்லலாம்னு பெரியவர் ஒருத்தர் திருவள்ளுவர்னு பேரு அவரு சொல்லியிருக்காரு."
சற்றே நிம்மதியுடனும் ஆர்வத்துடனும் "அதாரும்மா, பொய் சொல்லலாம்னு சொல்ற பெரியவரு அப்படிச்சொன்னா அது பாவமில்லையா?""என்றாள்  அஞ்சலை.
"இல்லவேயில்லை. குத்தமில்லாத ஒரு நல்லது நடக்குமுன்னா அப்போ அங்க பொய் சொல்றதும் உண்மை சொன்ன மாதிரிதான்னு சொல்றாரு."
"இந்த ராமாயண பொஸ்தகத்தில போட்டிருக்குதாம்மா?"
"இது திருக்குறள் அப்படிங்கற புஸ்தகம். அதை அப்புறமாய் படிக்கலாம். அவரு என்ன சொல்றாரு கேளு 
"பொய்ம்மையும்  வாய்மை  யிடத்த  புரைதீர்ந்த 
நன்மை  பயக்கும் எனின் "அப்படீங்கறாரு.
"அப்போ நான் சொன்னது நன்மையைத் தானே செய்யும். இதுவும் உண்மை மாதிரிதானாம்மா?"
"ஆமாம்.நீ செஞ்சது தப்புமில்லே பொய்யும் இல்லே.சந்தோஷமா கதையைக் கேளு. என்று ராமாயணத்தை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார் தாயம்மா.மகிழ்ச்சியுடன் கேட்கத்  தொடங்கினாள் அஞ்சலை.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com