வியாழன், 2 ஜனவரி, 2014

115.நாய் வாலை ....

குமாரபுரம் என்று ஒரு சிறு கிராமம் இருந்தது.அது மிகவும் அழகான கிராமம்.அந்த ஊரின் புறத்தே அழகிய காடு ஒன்று இருந்தது. அழகு மிகுந்த அந்தக்  காடு குமாரபுரிக்கே ஒரு அரணாகவும் அழகு தருவதாகவும் இருந்தது.
                        ஆனால் அந்தக் காட்டுக்குச் செல்லவோ அதன் அழகை அனுபவிக்கவோ முடியாதபடி அந்தக் காட்டில் ஒரு  பிரம்ம ராக்ஷசன்இருந்து கொண்டு  தடுத்து வந்தான்.யாராவது தெரியாதவர்கள் அங்கு போய்விட்டால் அவர்களை விழுங்கிவிடுவான் அந்த அரக்கன். இதனால் மக்கள் மிகவும் பயத்துடனும் கவலையுடனும் வாழ்ந்து வந்தனர்.
                           அந்த அரக்கனை எப்படியாவது அழித்துவிடவேண்டும் என்று பலரும் முயற்சி செய்தும் பயனேதும் உண்டாகவில்லை.
"அப்படி ஒன்றும் அந்த அரக்கன் நியாயமில்லாமல் மனிதர்களைக் கொல்ல வில்லை அவன் என்ன கேட்கிறான், எனக்கு ஏதேனும் வேலை கொடுங்கள் வேலையில்லாமல் நான் இருக்கமாட்டேன் என்றுதானே கேட்கிறான். இதைச் செய்ய நமக்கு என்ன கஷ்டம்?"என்று கிராமத் தலைவரும் கூறி வந்தார்.
                       அழகிய இயற்கைச் சூழ்நிலை இருந்தாலும்  அங்கு சென்று அதை  அனுபவிக்க யாரும் துணியவில்லை. அதற்கு அந்த அரக்கன்தான் காரணம்.அவன் அந்தக் காட்டில் அட்டகாசம் செய்து கொண்டிருந்தான்.அவனை வென்று வருவதாகச் சொல்லிச் சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பவில்லை.அந்த அரக்கனுக்கு உணவாகிப் போனதுதான் மிச்சம்.இந்த நிலையில் அந்த ஊருக்கு ஒரு நாள் ஒரு ஏழை அந்தணன் பிழைப்பைத் தேடி வந்தான்.ராமசர்மா என்பது அவனது பெயர்.
வறுமையால் வாடிய அவனை  ஒருநாள் அந்த ஊர் தலைவர் அழைத்தார்."இதோபார் ராமசர்மா, உன் வறுமை நீங்க ஒரு வழி சொல்கிறேன்.ஊர் எல்லையில் உள்ள காட்டில் ஒரு அரக்கன் இருந்துகொண்டு இந்த ஊரை அச்சப் படுத்திக் கொண்டிருக்கிறான் 
அவனை நீ வென்றுவிட்டால் உனக்கு வேண்டிய பணம் கொடுப்போம்.' என்று ஆசை காட்டினார்.ராமசர்மாவும் உடனே சம்மதித்தான்.
ஒருநாள் கிராமமக்கள் வழியனுப்பிவைக்க ராமன் காட்டை நோக்கிப் புறப்பட்டான்.நடுக்காட்டை  அடைந்தான்.சற்று சிந்தித்தான். சற்று நேரம் அந்தக் காட்டின் அழகை ரசித்துக் கொண்டு நின்றான்.காட்டின் நடு நடுவே அழகிய மரங்கள் முறிந்தும் நசுங்கியும் இருப்பதைப் பார்த்தான்.அதெல்லாம் அந்த அரக்கனின் வேலை என்பதைப் புரிந்து கொண்டான்.
                திடீரென்று பெருங்குரல் கேட்டது. இடியிடிப்பது போன்ற குரல் கேட்டு ராமன் சற்று நடுங்கியபடி மரத்தின் மறைவில் சென்று மறைந்து நின்று கொண்டான்.பெரும் உறுமலுடன் சத்தத்துடன் அட்டகாசமாக அந்த அரக்கன் வந்து கொண்டிருந்தான்.
இங்குமங்கும் பார்த்தான். "யாரது என்னிருப்பிடம் வந்துள்ளது?"
என்று உறுமினான்.சற்று நேரத்தில் சற்றே நடுங்கிய உடலுடன் ராமசர்மா அவன் முன் நின்றான்.
"யார்நீ?எனக்கு வேலை கொடுக்க உன்னால் முடியுமா?சீக்கிரம் வேலை கொடு. இல்லையேல் உன்னை விழுங்கிவிடுவேன்"என்றபடியே ராமசர்மாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் அரக்கன்.
ராமசர்மாவின் அறிவு விழித்துக் கொண்டது.தன குரலைக் கனைத்துக் கொண்டான்."உடனே இங்கே ஒரு அழகிய அரண்மனை கட்டு" என்றான்.உடனே ஒரு எஜமானிடம் காட்டும் மரியாதையைக் காட்டி நின்ற அரக்கன் உடனே அங்கே ஒரு அழகிய அரண்மனையைக் கட்டிமுடித்தான்.அடுத்தநொடி எனக்கு அடுத்த வேலை கொடு என்று நின்றான்.
"இங்கு ஒரு அழகிய தோட்டம் அமைத்துக் கொடு" என்றான்.அதுவும் அடுத்த நொடியில் நடந்து முடிந்தது.செல்வமும் பணியாட்களும் நிறைந்தனர். அந்தக் காடே ஒரு நகரமாயிற்று.ஆனாலும் வேலையில் அரக்கன் சலிப்புக் காட்டவில்லை. ராமசர்மா சிந்தித்தான் இனியும் என்ன வேலை கொடுப்பது என்று தெரியவில்ல. திடீரென்று அவன் முன் ஒரு நாய் ஓடிற்று.அதைப் பார்த்ததும் ராமசர்மா, 
"ஏ அரக்கனே, இந்த நாயின் வால்  வளைந்துள்ளது அதை நிமிர்த்திவிட்டு வா."
என்று சொல்ல அந்த அரக்கனும் நாயின் பின்னே ஓடினான்.நாயின் வாலை  நிமிர்த்தவே முடியவில்லை.அரக்கன்  ஓடியே சென்று விட்டான். அந்த இடத்துக்குவந்த கிராம மக்கள் அவனை அந்த இடத்துக்கே  அரசனாக முடிசூட்டினர்.ராமசர்மா வெகுகாலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தான்.
எவ்வளவோ செயல்களைச் செய்து முடித்த அரக்கனாலேயே நாயின்வாலை நிமிர்த்த முடியாமல்போனது.இதுபோல சிலரை நம்மால் மாற்றவே முடியாது. இதைப் புரிந்து கொண்டு வாழவேண்டும்.

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com