புதன், 30 ஜூன், 2021

 தங்களின் உடனடியான கருத்துக்கு மிக்க நன்றி.

ஞாயிறு, 27 ஜூன், 2021

dheivame thunai

தெய்வமே துணை.

சேதுவும் ரவியும் சிறந்த நண்பர்கள்.எப்போதும் இணைபிரியாமல் இருப்பார்கள்.பள்ளிக்குச் செல்லும்போதும் சரி பள்ளியிலும் சரி எப்போதும் இருவரையும் சேர்ந்தே பார்க்கலாம்.இருவரது குணமும் ஓரே மாதிரி இருந்ததால்தான் இருவருக்குள்ளும் அப்படி ஒரு நட்பு போலும்.

மிகவும் ஒற்றுமையான குணமிருந்தாலும் ஒரேயொரு குணத்தில் மட்டும் இருவரும் வேறு பட்டார்கள்.சேது இறைவனிடம் மிகவும் பக்தியுடன் இருந்தான் ஆனால் ரவி இறைவனை நம்பமாட்டான்.சேது எங்கே கோவிலைக் கண்டாலும் உள்ளே சென்று கும்பிட்டு வருவான் ஆனால் ரவி அவனுடன்  உள்ளே  போகமாட்டான்.அவனிடம் சேது இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று எவ்வளவோ சொல்லியும் ரவி கேட்காமல் சிரிப்பான்.எத்தனையோ கதைகளை அவனிடம் சொல்லிப் பார்த்தான்.

            இந்த எண்ணத்தை அவனிடமிருந்து மாற்ற எத்தனையோ முயற்சித்துப்  பார்த்தான் சேது..ஆனால் அவனால் முடியவில்லை.ஆனால் ரவியோ அவ்வப்போது சேதுவை கிண்டல் செய்வான்.சேதுவும் உனக்குப் புரியும் காலம் ஒன்று வரும்.என்று நினைத்துக் கொள்வான்.

      முழுவருடப் பரீட்சை  முடிந்து விடுமுறை தொடங்கியது.எட்டு ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை தலைநகருக்கு கல்விப்பயணம் அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தார் தலைமையாசிரியர்.ஒருவாரம் வீட்டைவிட்டு வெளியே தங்குவதற்குத் தயாராய் இருப்பவர்கள் மட்டும் பெயர் கொடுக்குமாறு சொன்னார் ஆசிரியர்.அப்படிப் பெயர் கொடுத்தவர்கள் தகப்பனாரிடமிருந்து கடிதம் கொண்டுவருமாறும் பயண ச் செலவும் கொண்டு வருமாறு பணித்திருந்தார்.

                ரவியும் சேதுவும் மகிழ்ச்சியோடு புறப்படத்  தயாரானார்கள்.சுமார் எண் பது மாணவர்களும் ஐந்து ஆசிரியர்களும் சுற்றுலா புறப்பட்டனர்.அவர்களில் ஒரு மாணவன் சிகப்புக் கலரில் குல்லாய் அணிந்திருந்தான்.சற்றே ஒல்லியாக உயரமாக இருந்தான்.சற்று அமைதியானவனாகவும் இருந்தான்.அவன் எதிரே அமர்ந்திருந்த ரவி அந்த சிறுவனை ஒரு நாள் முழுவதும் கிண்டலும் கேலியும் செய்ததோடு அவன் சிகப்புக் குல்லாயைப் பிடுங்கி வைத்து அவனைத் தவிக்க விட்டான். சேது எத்தனையோ சொல்லியும் ரவியின் குணம் குறையவே இல்லை.ரவியின்மீது அதிக அன்பு கொண்ட சேதுவுக்கே கோபம் வந்தது.

"டேய்  ரவி எதை நாம்எதை  வெறுக்கிறோமோ அதையே விரும்ப நேரும் யாரை நாம் வெறுக்கிறோமோ அவரே நமக்கு சமயத்தில் உதவுவார்.அதனால் சற்று பேசாமல் வா."சேதுவின் வார்த்தைகளைக் கேட்டு அதையே மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தான் ரவி."ஹை நல்லாருக்கே பழமொழி." என்றும் சொல்லிக் கொண்டான்.

நான்கு நாட்கள் ஓடிவிட்டன..டில்லி மாநகரில் குதுப்மினார் செங்கோட்டை பாராளுமன்றக்  கட்டிடம் முதலிய பல இடங்களையும் சுற்றி பார்த்தனர்.

             அன்றுமாலை அனைவரும் குழுக்களாகப் பிரிந்து கடைத் தெருவழியாக வேடிக்கை பார்ததபடியே நடந்தனர்.கையைப் பிடித்தபடியே வந்துகொண்டிருந்த ரவி ஒரு மிட்டாய்க் கடையைப் பார்த்து ஓடினான். அவனைப் பின் தொடர்ந்த சேது  "போகாதே போகாதே" என்று கத்தினான் ஒரே இரைச்சலும் வண்டிகளுமாக இருந்த அந்தத் தெருவில் சாலையைக் கடந்து ஓடிய ரவியைக் காண முடியவில்லை.அவனைத் தேடித் பின்னால் சென்றால் தன குழுவைப் பிரிந்து விட நேரும்.ரவியைப் பின்தொடரவும் முடியாமல் அவனும் எங்கோ மறைந்து போனான்.

   சிறிது நேரம் திகைத்தவன் தன ஆசிரியரைத் தேடி ஓடினான். இறைத்தபடியே சேது சொன்னதைக்கேட்ட  ஆசிரியர் திடுக்கிட்டார்.எல்லா மாணவர்களையும் ஒன்றாகக் கூடி ஒரே இடத்தில் சற்றே உயரமான இடத்தில் நிற்கச் சொன்னார். சேதுவை அழைத்துக் கொண்டு தெரு வழியே ரவியைத் தேடியபடியே சென்றார். அவர் மனம் இறைவனை வேண்டிக் கொண்டது வெகுநேரம் தெடிக் களைத்துப் போனவர் சேதுவிடம் சற்றே வருத்தத்துடன் பேசினார். 

"ரவி கிடைக்கலையினா நாம் ஊருக்குப் போக முடியாது. போலீசுல சொல்லித்தான் தேடச் சொல்லணும்."

சேது பயத்தில் அழ ஆரம்பித்தான்.அவனைத் தேற்றியபடி எல்லா மாணவர்களும் நிற்கும் இடத்துக்கு வந்து  சேர்ந்தார்.

அனைத்து மாணவர்களும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.அவர்களுக்கு மத்தியில் ரவியும் சிகப்புக் குல்லாய் சிறுவனும் புன்னகையுடன் நின்றிருந்தனர்.

ஆர்வத்துடன் சேது ரவியைக் கட்டிக் கொண்டான். ஆசிரியர் புன்னகையுடனும் மன நிம்மதியுடனும் அப்பாடா, வந்துட்டியா என்றார் ரவியைப் பார்த்து.ரவி ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டான். "நான் அப்படி ஓடியிருக்கக் கூடாது. அதனால் எத்தனை கஷ்டப் போட்டுட்டேன்.என்னை மன்னிச்சுடுங்க ஐயா "

அவனை அணைத்துக் கொண்ட ஆசிரியர் "அதுசரி எப்படி எல்லாரோடையும் வந்து சேர்ந்தே?"என்றார் ஆர்வத்துடன்

."ஐயா நான் மிட்டாய் வாங்கி கொண்டு திரும்பும்போது ஒரு கூட்டம் என்னைத் தள்ளிக் கொண்டு போய்விட்டது.கண் முன்னே என்னைத் தெடிக் கொண்டு போகும் சேதுவைக் கூப்பிடக் கூட முடியவில்லை.அந்தக் கூட்டத்திலிருந்து விடுபட்டு நான் வருவதற்கு வெகு நேரம் ஆகிவிட்டது. நானும் வெகு தூரம்

போ ய் விட்டேன்.ஒருமணி நேரம் எங்கெங்கோ தேடினேன்.அப்போதுதான் சிகப்புக் குல்லாய் அணிந்திருந்த நண்பனின் தலை தெரிந்தது. அவன் சற்று உயரமாயிருந்ததாலும் அவன் தலையில் சிகப்புக் குல்லாய் அணிந்திருந்ததாலும்  உடனே அடையாளம் தெரிந்தது. ஓடிவந்து சேர்ந்து கொண்டேன் நல்ல வேளையாக நீங்களும் வந்து விட்டீர்கள்".என்று சொன்ன ரவியை சேது சேர்த்துக் கட்டிக் கொண்டான் அன்புடன்.

"சேது நீ சொன்ன வார்த்தை அமுத மொழிடா.நாம் எதை வெறுக்கிறோமோ அதையே விரும்ப நேரும்.நாம் யாரை வெறுக்கிறோமோ அவரே நமக்கு உதவுவார். என்றாயே அது ரொம்ப சரி.அந்த சிகப்புக் குல்லாயை எவ்வளவு ஏளனமாய் நினைத்தேன் அதுதான் எனக்கு வழிகாட்டியாய் இருந்தது. அந்த நண்பனும் எனக்கு உற்ற நண்பனாய் இருந்து துணை புரிந்தான்.

சேது புன்னகையுடன்"இதைத் தான் தெய்வச் செயல் என்பது.தெய்வத்தின் துணையால்தான் இத்தகைய துன்பங்களிலிருந்து நாம் விடுபடுகிறோம். அதனால்தான் தெய்வமே துணை என்று பெரியவங்க சொல்வாங்க.இனிமேலாவது தெய்வத்தை நம்பு."என்றான்.

ரவி வேகமாகத் தலையை அசைத்தான் பாதி மனத்தோடு.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

-----------