திங்கள், 16 ஆகஸ்ட், 2021

 நம்பினால் நடராசன்.

      ஆண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகளெல்லாம் ஒருமாதம் விடுமுறை அறிவித்து விட்டார்கள். பல மாணவர்கள் ஊருக்குப் போவதைப் பற்றியும் அவரவர் கிராமத்தைப் பற்றியும் சொந்த ஊர் பற்றியும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டே நடந்தனர்.ரவியும் சேதுவும் அவர்கள் பேச்சை ரசித்தபடி நடந்தனர்.சேதுவும் ம் ஊரில் இருக்கும் தன மாமா பற்றியும் பாட்டி தனக்கு கதை சொல்வதைப் பற்றியும் பேசிக் கொண்டே வந்தான்.

         ரவிக்கு தான் எப்போதும் ஊருக்கே போவதில்லை. எப்போதாவது கோயில்களுக்குப் போவதோடு சரி என்பதை நினைத்து மௌனமாகவே வந்தான்.

சற்றுநேரம் கழித்தே அவனைக் கவனித்த சேது  "ஏண்டா, நீ எங்கேயும் போவதில்லையா?உனக்கு பாட்டி மாமா என்று யாரும் இல்லையா?'என்றான் சற்றே தலைகுனிந்து ரவி  வருத்தத்தோடு  தலையை அசைத்தான்.

"கவலைப்படாதேடா. இந்தமுறை என்கூட எங்க ஊருக்குப் போகலாம் நான் உங்க அப்பாகிட்ட கேட்கிறேன்."என்றான் உற்சாகத்தோடு.

அதைக் கேட்டதும் சற்றே உற்சாகமானான் ரவி.

                        சேது தன தந்தையிடம் கேட்கும் வரை ரவிக்கு இருப்பே கொள்ளவில்லை.அவ்வளவு ஆர்வமாக இருந்தான்.

சேது சொல்வதைக்கேட்ட ரவியின் தந்தை ரவியிடம்"ஏண்டா, அங்கே போய் ஒழுங்கா இருந்து நல்ல பெயர் வாங்கி வருவாயா/'என்றார்."ஓ  ஓ" என்று தலையை ஆட்டினான் ரவி.

அவர் சேதுவைப்பார்த்து "உங்கப்பாகிட்டே சொல்லிட்டியா ரவியும் வருவான்னு?என்று கேட்டார்.

"சொல்லிட்டேன் மாமா.அவரும் சரின்னு சொல்லிட்டார்."

அதன்பின் என்றைக்கு கிளம்புகிறார்கள் எத்தனை நாள் இருப்பார்கள் என்ற விவரத்தையெல்லாம் கேட்டுக் கொண்டார்.

ஆயிற்று.ரவியும் சேதுவும் புறப்பட்டார்கள்.சேதுவின் அப்பா இருவரையும் அழைத்துக் கொண்டு  பயணமானார்.இரண்டு சிறுவர்களும்  பயணத்தில் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர்.இரவு ரயிலை விட்டு இறங்கி பேருந்தில்  அவர்களின் சொந்த கிராமத்தை அடைந்தனர்.இரவு வெகுநேரம் ஆகியிருந்தது.வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் படுத்தனர்.நண்பர்கள் அருகருகே படுத்துக்க கொண்டு பேசிக்கொண்டே இருந்தனர்.திடீரென்று சற்றே அமைதியானான் ரவி. 

"டேய் என்னடா?"என்றான்சேது.

"அது என்ன சத்தம் என்னவோ ஓ  ஓ ன்னு கேக்குதே?"

அதுவா பின்னாடி ஆறு ஓடுது.

அதுவா இந்த சத்தம்?

"ஆமா. அதுல எப்பவானும் தண்ணி வரும் சுத்துப்பட்டு ஊர்கள்ல மழை வந்தால் இந்த ஆத்துல  தண்ணி வரும்.மத்தபடி அது நமக்கெல்லாம் பீச்சுதான்.'

"டேய் பசங்களா. என்னடா பேச்சு நேரமாச்சு தூங்குங்கடா"என்ற அப்பாவின் குரல் கேட்டு அமைதியானார்கள் சேதுவும் ரவியும்.

                                       ஒருவாரம் மிகவும் மகிழ்ச்சியாய் கழிந்தது.அந்த கிராமத்தில் குரங்குகள் அதிகம்.அவை செய்யும் சேட்டைகளை பார்ப்பதே மிகவும் பிடித்தமாயிருந்தது இருவருக்கும்.ஆனால் ரவி அந்தக் குரங்கைப் பார்த்தாலே கல்லெடுத்து அடிப்பான். அந்தக் குரங்கு ஈ என்று பல்லை இளித்துக் கொண்டு குரல்கொடுத்து மரத்தில் தாவுவதை ரசிப்பான். சேது "டேய் ரவி அடிக்காதடா.பாவம் "என்பான்.விலங்குகள் நண்பர்கள்னு நமக்கு ஸ்கூல்ல சொல்லியிருக்காங்கல்ல .சில சமயம் அதுங்க கூட நமக்கு உதவி செய்யும்."என்றான் சேது.

"ஆமா குரங்குதான் வந்து உதவி செய்யுதாக்கும்" என்று சிரித்தான் ரவி.


                   ஒருவாரத்தில் ஆற்றில் வெள்ளம் வடிந்து நீரே இல்லாமல் இருந்தது.. நல்ல வெய்யில் அடித்ததால் நீர் வற்றிப்போய் ஆறு காலியாக இருந்தது.மத்தியான நேரம்.எல்லோரும் சாப்பிட்டுவிட்டு படுத்திருந்தனர்.சேதுவுக்கும் தூக்கம் வந்துவிட்டது.ஆனால் ரவிக்குத் தூக்கம் வரவில்லை.அவன் மெதுவாக எழுந்து வெளியே வந்தான். தெரு வெறிச்சோடி இருந்தது.

     ரவி மெதுவாக தெருவில் நடந்தான். ஒருவார பழக்கத்தில் இடம் நன்கு தெரிந்திருந்தது. மெதுவாக ஆற்றுப் பக்கம் வந்தான்.ஆற்றில் பாதம் நனையும் அளவுக்கு நீர் ஓடிக்கொண்டிருந்தது.அதில் காலை வைத்து விளையாடிக் கொண்டே சற்று தூரம் சென்று விட்டான். அவனைத் தெடிக் கொண்டு அப்போது சேது அங்கே வந்தவன் ஆற்றில் நிற்கும் ரவியைப் பார்த்தான்.சற்று நேரத்தில் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடத தொடங்கியது. சேது அலறினான்.

" டே ரவி ஓடிவா. வெள்ளம் வர போகுது. வந்துடு" ரவியின் காதில் சேதுவின் சத்தம் விழவில்லை.வெள்ளம் வேகமாக வரவே ரவி அதில் அடித்துச் செல்லப் பட்டான்.அவனால் நிற்க முடியவில்லை வெள்ளம் இழுத்துச் சென்றது. நீரில் மூழ்கி மூழ்கி எழுந்தான். மூச்சு முட்டியது.

        அவனுக்கு பயம் வரவே தெய்வங்களையெல்லாம் துணைக்கு அழைத்தான் 

அவன் தலை மேலே எழும்பியபோது ஆற்றின் கரையிலிருந்த ஒரு பெரிய மரத்தின் கிளை தண்ணீரில் மூழிகியிருப்பதைக் கண்டான்.மனம் கடவுளை வேண்டியது."

'சாமி. அந்தக்கிளை  கீழாய் என் கைக்கு எட்டனும் என்று வேண்டிக் கொண்டான்.ஆனால் திடீரென்று அந்தக் கிளை அவன் கைக்கு எட்டாதவாறு மேலே எழும்பியது.திடுக்கிட்ட ரவி 'அய்யோ கிளை மேலே போயிட்டுதே.நான் கிட்ட வரும்போது மீண்டும் அது நீருக்குள் விழணுமே.சாமி"என்று மனம் உருக வேண்டினான்.அப்போதுதான் கிளையின் அடிபாகத்தில் ஒரு குரங்கு அமர்ந்திருப்பதையும் அது முன்னே வரும்போது கிளை நீருக்குள் விழுவதையும் குரங்கு ஆற்றில் நீர் அருந்தி செல்வதையும் பார்த்தான் கிளையில் அமர்ந்து குரங்கு மேலும் கீழும் குதித்து விளையாடுவதைப் பார்த்தான் அதற்குள் தண்ணீர் அவனை அடித்துச் செல்லவே அவன் குரங்கை வேண்டிக் கொண்டான்.

             இப்போது என்ன தோன்றிற்றோ குரங்கு கிளையின் நுனிக்கு வந்தது அதே சமயம் ரவியும் அதன் அருகே வரவே சட்டென்று கிளையைப் பிடித்துக் கொண்டு மரத்தின் கிளை வழியே ஆற்றை விட்டு கரைக்கு வந்தான். இப்போது குரங்கைப் பார்த்து இரண்டு கைகளையும் கூப்பி ஆஞ்சநேயா நன்றி.என்றான். அதே சமயம் சில ஆட்களுடன் தந்தையை அழைத்துக் கொண்டு கரையோரமாகவே சேது தேடிவந்தான். நண்பனைக் கட்டிக்க கொண்டு ஆனந்தக கண்ணீர் விட்டான்ரவி.

சேதுவின் அப்பா "ரவி இது காட்டாறுப்பா. அதிலெல்லாம் எப்போ வேணும்னாலும் தண்ணி வரும் இப்படியெல்லாம் தனியா புது இடத்தில போயி ஆபத்துல மாட்டிக்கலாமா?"

பயம் தெளியாத ரவியை அணை த்து ஆறுதல் சொன்னார் "இனி இதுபோல் மிருகங்களை துன்புறுத்த மாட்டேன் இப்போ அந்தக் குரங்குதான் என்னைக் காப்பாத்துச்சு" என்று சேதுவிடம் மெதுவாகச் சொன்னான் ரவி அவனை அணைத்தபடி வீடு வந்து சேர்ந்தான் சேது...

புதன், 30 ஜூன், 2021

 தங்களின் உடனடியான கருத்துக்கு மிக்க நன்றி.

ஞாயிறு, 27 ஜூன், 2021

dheivame thunai

தெய்வமே துணை.

சேதுவும் ரவியும் சிறந்த நண்பர்கள்.எப்போதும் இணைபிரியாமல் இருப்பார்கள்.பள்ளிக்குச் செல்லும்போதும் சரி பள்ளியிலும் சரி எப்போதும் இருவரையும் சேர்ந்தே பார்க்கலாம்.இருவரது குணமும் ஓரே மாதிரி இருந்ததால்தான் இருவருக்குள்ளும் அப்படி ஒரு நட்பு போலும்.

மிகவும் ஒற்றுமையான குணமிருந்தாலும் ஒரேயொரு குணத்தில் மட்டும் இருவரும் வேறு பட்டார்கள்.சேது இறைவனிடம் மிகவும் பக்தியுடன் இருந்தான் ஆனால் ரவி இறைவனை நம்பமாட்டான்.சேது எங்கே கோவிலைக் கண்டாலும் உள்ளே சென்று கும்பிட்டு வருவான் ஆனால் ரவி அவனுடன்  உள்ளே  போகமாட்டான்.அவனிடம் சேது இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று எவ்வளவோ சொல்லியும் ரவி கேட்காமல் சிரிப்பான்.எத்தனையோ கதைகளை அவனிடம் சொல்லிப் பார்த்தான்.

            இந்த எண்ணத்தை அவனிடமிருந்து மாற்ற எத்தனையோ முயற்சித்துப்  பார்த்தான் சேது..ஆனால் அவனால் முடியவில்லை.ஆனால் ரவியோ அவ்வப்போது சேதுவை கிண்டல் செய்வான்.சேதுவும் உனக்குப் புரியும் காலம் ஒன்று வரும்.என்று நினைத்துக் கொள்வான்.

      முழுவருடப் பரீட்சை  முடிந்து விடுமுறை தொடங்கியது.எட்டு ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை தலைநகருக்கு கல்விப்பயணம் அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தார் தலைமையாசிரியர்.ஒருவாரம் வீட்டைவிட்டு வெளியே தங்குவதற்குத் தயாராய் இருப்பவர்கள் மட்டும் பெயர் கொடுக்குமாறு சொன்னார் ஆசிரியர்.அப்படிப் பெயர் கொடுத்தவர்கள் தகப்பனாரிடமிருந்து கடிதம் கொண்டுவருமாறும் பயண ச் செலவும் கொண்டு வருமாறு பணித்திருந்தார்.

                ரவியும் சேதுவும் மகிழ்ச்சியோடு புறப்படத்  தயாரானார்கள்.சுமார் எண் பது மாணவர்களும் ஐந்து ஆசிரியர்களும் சுற்றுலா புறப்பட்டனர்.அவர்களில் ஒரு மாணவன் சிகப்புக் கலரில் குல்லாய் அணிந்திருந்தான்.சற்றே ஒல்லியாக உயரமாக இருந்தான்.சற்று அமைதியானவனாகவும் இருந்தான்.அவன் எதிரே அமர்ந்திருந்த ரவி அந்த சிறுவனை ஒரு நாள் முழுவதும் கிண்டலும் கேலியும் செய்ததோடு அவன் சிகப்புக் குல்லாயைப் பிடுங்கி வைத்து அவனைத் தவிக்க விட்டான். சேது எத்தனையோ சொல்லியும் ரவியின் குணம் குறையவே இல்லை.ரவியின்மீது அதிக அன்பு கொண்ட சேதுவுக்கே கோபம் வந்தது.

"டேய்  ரவி எதை நாம்எதை  வெறுக்கிறோமோ அதையே விரும்ப நேரும் யாரை நாம் வெறுக்கிறோமோ அவரே நமக்கு சமயத்தில் உதவுவார்.அதனால் சற்று பேசாமல் வா."சேதுவின் வார்த்தைகளைக் கேட்டு அதையே மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தான் ரவி."ஹை நல்லாருக்கே பழமொழி." என்றும் சொல்லிக் கொண்டான்.

நான்கு நாட்கள் ஓடிவிட்டன..டில்லி மாநகரில் குதுப்மினார் செங்கோட்டை பாராளுமன்றக்  கட்டிடம் முதலிய பல இடங்களையும் சுற்றி பார்த்தனர்.

             அன்றுமாலை அனைவரும் குழுக்களாகப் பிரிந்து கடைத் தெருவழியாக வேடிக்கை பார்ததபடியே நடந்தனர்.கையைப் பிடித்தபடியே வந்துகொண்டிருந்த ரவி ஒரு மிட்டாய்க் கடையைப் பார்த்து ஓடினான். அவனைப் பின் தொடர்ந்த சேது  "போகாதே போகாதே" என்று கத்தினான் ஒரே இரைச்சலும் வண்டிகளுமாக இருந்த அந்தத் தெருவில் சாலையைக் கடந்து ஓடிய ரவியைக் காண முடியவில்லை.அவனைத் தேடித் பின்னால் சென்றால் தன குழுவைப் பிரிந்து விட நேரும்.ரவியைப் பின்தொடரவும் முடியாமல் அவனும் எங்கோ மறைந்து போனான்.

   சிறிது நேரம் திகைத்தவன் தன ஆசிரியரைத் தேடி ஓடினான். இறைத்தபடியே சேது சொன்னதைக்கேட்ட  ஆசிரியர் திடுக்கிட்டார்.எல்லா மாணவர்களையும் ஒன்றாகக் கூடி ஒரே இடத்தில் சற்றே உயரமான இடத்தில் நிற்கச் சொன்னார். சேதுவை அழைத்துக் கொண்டு தெரு வழியே ரவியைத் தேடியபடியே சென்றார். அவர் மனம் இறைவனை வேண்டிக் கொண்டது வெகுநேரம் தெடிக் களைத்துப் போனவர் சேதுவிடம் சற்றே வருத்தத்துடன் பேசினார். 

"ரவி கிடைக்கலையினா நாம் ஊருக்குப் போக முடியாது. போலீசுல சொல்லித்தான் தேடச் சொல்லணும்."

சேது பயத்தில் அழ ஆரம்பித்தான்.அவனைத் தேற்றியபடி எல்லா மாணவர்களும் நிற்கும் இடத்துக்கு வந்து  சேர்ந்தார்.

அனைத்து மாணவர்களும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.அவர்களுக்கு மத்தியில் ரவியும் சிகப்புக் குல்லாய் சிறுவனும் புன்னகையுடன் நின்றிருந்தனர்.

ஆர்வத்துடன் சேது ரவியைக் கட்டிக் கொண்டான். ஆசிரியர் புன்னகையுடனும் மன நிம்மதியுடனும் அப்பாடா, வந்துட்டியா என்றார் ரவியைப் பார்த்து.ரவி ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டான். "நான் அப்படி ஓடியிருக்கக் கூடாது. அதனால் எத்தனை கஷ்டப் போட்டுட்டேன்.என்னை மன்னிச்சுடுங்க ஐயா "

அவனை அணைத்துக் கொண்ட ஆசிரியர் "அதுசரி எப்படி எல்லாரோடையும் வந்து சேர்ந்தே?"என்றார் ஆர்வத்துடன்

."ஐயா நான் மிட்டாய் வாங்கி கொண்டு திரும்பும்போது ஒரு கூட்டம் என்னைத் தள்ளிக் கொண்டு போய்விட்டது.கண் முன்னே என்னைத் தெடிக் கொண்டு போகும் சேதுவைக் கூப்பிடக் கூட முடியவில்லை.அந்தக் கூட்டத்திலிருந்து விடுபட்டு நான் வருவதற்கு வெகு நேரம் ஆகிவிட்டது. நானும் வெகு தூரம்

போ ய் விட்டேன்.ஒருமணி நேரம் எங்கெங்கோ தேடினேன்.அப்போதுதான் சிகப்புக் குல்லாய் அணிந்திருந்த நண்பனின் தலை தெரிந்தது. அவன் சற்று உயரமாயிருந்ததாலும் அவன் தலையில் சிகப்புக் குல்லாய் அணிந்திருந்ததாலும்  உடனே அடையாளம் தெரிந்தது. ஓடிவந்து சேர்ந்து கொண்டேன் நல்ல வேளையாக நீங்களும் வந்து விட்டீர்கள்".என்று சொன்ன ரவியை சேது சேர்த்துக் கட்டிக் கொண்டான் அன்புடன்.

"சேது நீ சொன்ன வார்த்தை அமுத மொழிடா.நாம் எதை வெறுக்கிறோமோ அதையே விரும்ப நேரும்.நாம் யாரை வெறுக்கிறோமோ அவரே நமக்கு உதவுவார். என்றாயே அது ரொம்ப சரி.அந்த சிகப்புக் குல்லாயை எவ்வளவு ஏளனமாய் நினைத்தேன் அதுதான் எனக்கு வழிகாட்டியாய் இருந்தது. அந்த நண்பனும் எனக்கு உற்ற நண்பனாய் இருந்து துணை புரிந்தான்.

சேது புன்னகையுடன்"இதைத் தான் தெய்வச் செயல் என்பது.தெய்வத்தின் துணையால்தான் இத்தகைய துன்பங்களிலிருந்து நாம் விடுபடுகிறோம். அதனால்தான் தெய்வமே துணை என்று பெரியவங்க சொல்வாங்க.இனிமேலாவது தெய்வத்தை நம்பு."என்றான்.

ரவி வேகமாகத் தலையை அசைத்தான் பாதி மனத்தோடு.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

----------- 





சனி, 24 ஏப்ரல், 2021

nalladhe sei

நல்லதே செய் 

குமாரசாமி ஒரு தொழிலாளி.அந்த நகரத்திலுள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தான்.அவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.சின்னவன் ராமு ஒழுங்காகப் பள்ளி சென்று படித்து வந்தான்.பெரியவன் வேலு படிப்பில் நாட்டமில்லாமல் அவ்வப்போது ஊர் சுற்றுவான். 

குமாரசாமி எவ்வளவு சொன்னாலும் அவன் திருந்தவேயில்லை. ஒருநாள் மூன்று பெரும் நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது குமாரசாமி 

மெதுவாகத் தன பெரிய மகன்மேல் கையை வைத்தான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த வேலு அவன் அப்பா அன்பொழுகப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். சற்றே புன்னகையுடன் 'என்னப்பா?' என்றான் அதே அன்புடன்.

"நான் ஒண்ணு  சொன்னால் கேட்பியா/?"

சொல்லுங்கப்பா"

"நீ பள்ளிக்கூடம் போ ய் படிக்காட்டியும் பரவாயில்லை.அறிவாளியா ஆகாட்டியும் பரவாயில்லை.எல்லாருக்கும் நல்லதே செய்வேன்னு மனசால நினைச்சுக்கோ.அந்த சந்திரன் சாட்சியா அப்பா கேக்குறேன் எல்லாருக்கும் நல்லதே செய் சரியா?"

அப்பாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் தலையைப் பலமாக ஆட்டிய வேலு "கண்டிப்பா எல்லாருக்கும் நல்லதே செய்வேம்ப்பா"என்றான். 

மறுநாள் வழக்கம்போல ஊர் சுற்றிவந்தான் வேலு.அன்று சனிக்கிழமை. பள்ளி பாதி  நாள் தான். மாணவர்கள் பேரிரைச்சலோடு வீட்டுக்கு ஓடினர்.அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஒரு மரத்தடியில் நின்றிருந்தான் வேலு.அப்போது ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன்  ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்தான்.

அவன் கால் கட்டைவிரல் பெயர்த்துக் கொண்டு ரத்தம் வடிய உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். பழைய வேலுவாக இருந்தால் நமக்கென்ன என்று போயிருப்பான். இப்போது அப்பாவிடம் சொன்னது நினைவுக்கு வந்தது.உடனே அந்தச் சிறுவனிடம் ஓடி தன்னிடம் இருந்த கைக்குட்டையைக் கட்டிவிட்டான்.அந்தச்சிறுவனைத் தன் தோளி ல் உப்புமூட்டை சுமந்தபடி அவன் வீட்டுக்குச் சென்றான்.அந்தச் சிறுவனின் அம்மா அவனைத் தூக்கிவந்த வேலுவுக்கு பலமுறை நன்றி சொன்னாள் சற்றே வெட்கப்பட்ட அவனை அமரவைத்து வடையும் காப்பியும் கொடுத்து உபசரித்தாள் 

               ஒரு சிறு உதவிக்கு இத்தனை உபசரிப்பா என ஆச்சரியப்பட்டான் வேலு.இரண்டு நாட்கள் சென்றன.வேலைமுடிந்து  தொழிலாளிகள் வந்து கொண்டிருந்தனர்.குமாரசாமியும் நண்பர்களுடன் பேசியபடி வந்து கொண்டிருந்தார்.வழியில் வேலுவை ஒரு பெரியவர் கையைப் பிடித்துக் கொண்டு திட்டிக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியைப் பார்த்த குமாரசாமி ஊர்சுற்றும் மகன் என்ன தவறு செய்தானோ என்றபடி அருகே சென்றார்.அவர் வாய் திறக்குமுன் அங்கே வந்த ஒரு அம்மாள் பெரியவரிடமிருந்து வேலுவைப்பிரித்துதான் பிடித்துக் கொண்டாள் 

."என்ன தவறு செய்தான் என்று திட்டுகிறீர்கள்?"

என் பேரனைப் போட்டு அடித்து விட்டான்"என்றார் அந்தப் பெரியவர்.குமாரசாமி பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

"அய்யா, பரோபகார சிந்தனையுள்ள இந்தப் பையனைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு. என் மகன் அடிப்பட்டபோது பள்ளியிலிருந்து உப்புமூட்டை சுமந்து வீட்டுக்கு கூட்டி வந்தவானாய்யா இவன். இவன் உங்கள் பேரனை அடித்தானா.நம்ப முடிபியலையே"என்றால் கோபமாக.பயத்துடன் நின்றிருந்த  வேலு அப்பாவைப் பார்த்ததும் அருகே வந்து நின்றான்.பெரியவர் "அவன் அடித்தானா இல்லையா கேளுங்கள்' என்றார்."நான் கையை  ஓங்கினேன்.அதற்குள் அடித்ததாகப் பொய் சொல்லி அழுதுகொண்டே ஓடிவிட்டான்.

பெரியவர் கோபமாக "பார்த்தீர்களா. பொய் பொய் சொல்கிறான்"என்றார். 

அந்த அம்மாள் வேலுவிடம்,"வேலு என்ன நடந்தது சொல்லப்பா"என்றாள் .

வேலு அப்பாவைப் பார்த்தபடி "'அப்பா, எல்லாருக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்று நீங்கள் சொன்னதை நான் மறக்கவில்லை.வழியில் ஒரு பூனை இரண்டு குட்டிகளுக்குப் பால் கொடுத்துக் கொண்டு மறைவாகப் படுத்திருந்தது. அதைக் கல்லால் அடிக்கப் போனான் ஒரு பையன் அவனை நான் அடிப்பது போல் கையைத் தூக்கிக் கொண்டு துரத்தி விட்டேன். அவன் அழுதுகொண்டே தன தாத்தாவிடம் நான் அடித்ததாகப் பொய் சொல்லி விட்டு ஓடிவிட்டான் இந்தப் பெரியவரும் என்னை எதுவும் கேட்காமல் அடிக்கப் பார்த்தார்.என்றான்.

அந்த அம்மாள். "வேலு சொல்வது   உண்மையாகத்தான் இருக்கும் மிகவும் நல்லவன் எல்லோருக்கும் நன்மையே செய்யும் பண்புள்ளவன்.பெரியவரே  இப்படி அவசர படலாமா?"என்றபோது மன்னிப்புக் கேட்டவர் அங்கிருந்து தலை குனிந்தபடி சென்றார்.அந்த அம்மாள் குமாரசாமியிடம்"உங்கள் மகனா?"என்றபோது குமாரசாமி தலையசைத்தார்.

              நல்ல பண்புள்ள பையன் நீங்கள் ரொம்ப புண்ணியம் செய்தவர்.என்றுசொன்னவள் தன மகனை வேலு தூக்கிக் கொண்டு வந்த கதையைச் சொன்னாள்.செய்த உதவியை யாரிடமும் சொல்லாமல் இருக்கும் அவன் பண்பைப் பாராட்டுவதாக அந்த அம்மாள் சொன்னபோது மிகவும் பெருமைப் பட்டார்.ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன மகனைச் சான்றோன் எனக் கேட்ட அந்த தந்தை. 

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

(thodarchi) magizhchi irukkum idam.

சிந்தனையில் ஆழ்ந்திருந்த தோழியின் தோளைத் தட்டி எழுப்பினாள்  கலா. 

"ரொம்ப யோசிக்காதே.நானே சொல்றேன்.நாம ஆசைப் பட்டதைக் கேட்கும்போது அப்பாகிட்டயோ அம்மாகிட்டயோ பணம் இல்லேன்னா அவங்க நம்ம குழந்தை கேட்டதை வாங்கி குடுக்க முடியலைன்னு நெனச்சு வருத்தப் படுவாங்க  இல்லையா?அந்த வருத்தம்தான் கோபமா நம்ம மேலயே திரும்புது நாம் பிடிவாதம் பிடிக்கும்போது இன்னும் கோபம் அதிகமாகுது. அதனால நம்ம கிட்ட இருக்கிறதையே உசத்தியா நெனச்சு திருப்தி பட்டு சந்தோஷமா இருந்தோமுன்னா அவங்களும் நிம்மதியாவும் சந்தோஷமாகவும் இருப்பாங்க இல்லையா?"

ஆமாம் என்பதைப் போல தலையசைத்தாள் சரளா.ஏதோ புரிந்ததைப் போல அவள் முகம் சற்றே புன்னகையைக் காட்டிற்று.கலா தொடர்ந்தாள் 

"இப்போ எங்க வீட்டுக்கு வந்தியே எங்கம்மா எப்படி சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க அதைப் பார்த்து நமக்கும் சந்தோஷமா இருந்ததில்லையா. என்ன காரணம் இருக்கிறதையே உசத்தியா நினைக்கிற பழக்கம்தான்.சரி வீட்டுப் பாடம் முடிச்சிட்டேன். நான் வீட்டுக்குப் போறேன்  நாளை க்குப் பார்க்கலாம்."என்றபடியே புத்தகங்களை பையில் போட்டுக் கொண்டு ஓடினாள் கலா.

அந்தப் பெண்ணின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் சரளாவின் பெற்றோர்.பெருமூச்சுடன் தன வீட்டுக்குள் ஓடினாள் சரளா."

"மெதுவா வாம்மா, பட்டுப் பாவாடை தடுக்கிடப் போகுது "என்றார் அப்பா  சிரித்தபடியே.

"ஆமாண்டி பளிங்குத்தரையில பார்த்து நட  வழுக்கி விட்டுடும் " என்றபடியே புன்னகையுடன் வந்தாள்  அம்மா. ஒரு நிமிடம் திகைத்து நின்ற சரளா மறுகணமே கலகலவென்று சிரித்தாள் அவளுடன் சேர்ந்து அவள் பெற்றோரும் சிரித்தனர். மகிழ்ச்சி இருக்கும் இடம் மனம்தான் என்பதைப் புரிந்து கொண்ட அந்த குடும்பத்தினர்  இனி என்றும்  மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா?

புதன், 3 பிப்ரவரி, 2021

magizhchchi irukkum idam.

 மகிழ்ச்சி இருக்கும் இடம்.

                  கலா ஆறாம் வகுப்பில் படிப்பவள் .அவள் தோழி சரளா வும் அவளு டன் படித்து வந்தாள் .கலா எப்போதும் சிரித்த முகத்துடன் சந்தோஷமாகப் பேசுவாள்.அதைப் பார்த்து சரளா மட்டுமல்ல மற்ற சிறுமிகளும் அவளிடம் பேசவும் பழகவும் ரொம்பவும் விரும்பினர்.

                  கலா சரளா இருவரின் வீடும் ஒரே தெருவில் இருந்ததால் பள்ளியை விட்டு சேர்ந்தே வருவார்கள்.முதலில் சரளா  வீட்டுக்குச் சென்று விடுவாள் பிறகு தெருக் கோடியில் உள்ள தன வீட்டுக்குச் செல்வாள் கலா.

                  தன வீட்டுக்குச் செல்வதையே பிடிக்காமல் எரிச்சலோடு வீட்டினுள்ளே நுழைவாள்.அவள் மனம் கலா எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள்.அவள் வீட்டில் அவளுக்கு எல்லாம் இருக்கிறது.ஆடம்பரமாக இருப்பாள். அதுதான் இப்படி குதித்துக் கொண்டே வீட்டுக்குப் போகிறாள். வீட்டில் சிற்றுண்டி தயாராக இருக்கும்.என்று முணுமுணுத்தவாறே வீட்டில் நுழைவாள் சரளா.

        அவள் நினைத்தது போலவே அவள் அப்பா கடுகடுவென்ற  முகத்துடன் பேப்பரில் முகம் புதைத்து உட்கார்ந்திருப்பார். அம்மா பாத்திரங்களை உருட்டியபடி ஏதோ புலம்பிக் கொண்டிருப்பாள்.

இதில் சிரிப்பது எங்கே? பேசாமல் கைகால் கழுவிக்கொண்டு புத்தகத்துடன் உட்கார்ந்து விடுவாள்.பாவம் சிறுமி.அம்மா அப்பாவின் கோபத்துக்கும் அவள் ஆளாவதும் உண்டு.

               ஒருநாள் கலாவும் சரளாவும் பள்ளியை விட்டு வீட்டுக்கு வழக்கம்போல வந்துகொண்டிருந்தனர்.அப்போது கலா சரளாவைத் தன வீட்டுக்கு வந்து வீட்டுப் பாடங்களை முடித்துச் செல்லலாம் என்று அழைத்தாள் . சரளாவுக்கு தன வீட்டுக்குப் போவதை விட கலாவின் வீட்டுக்குப் போய் மகிழ்ச்சியாக இருக்கலாமே என்று தோன்றியது.  பள்ளி ஒரு பீரியட் முன்னதாகவே  விட்டு விட்டதால் இருவரும் மகிழ்ச்சியுடன் கலாவின் வீட்டுக்குப் பறந்தனர்.

               கலாவின் வீட்டை கற்பனையில் பார்த்து மகிழ்ந்தாள்.அருகே போகப் போக எதையும் காணோம். சின்ன சந்து அதில் ஒரு சந்து. சுவரோடு ஒட்டிய ஒரு கதவு. அதைத் திறந்து உள்ளே போனவள் தயங்கி நின்ற சரளாவைக் கையைப் பிடித்து வா என அழைத்தா ள் "

"இவங்கதான் என் அம்மா. அம்மா இது சரளா  என் தோழி என் வகுப்பிலேயே படிக்கிறாள்."சிரித்த முகத்துடன் அந்த அம்மாள் ஒரு கைப் பிடி வேர்க்கடலையை இருவருக்கும் பகிர்ந்து கொடுத்தாள் அந்த அன்பும் அந்த பிடி வேர்க்கடலையும் அமிர்தமாக இருந்தன சரளாவிற்கு.

எத்தனை ஏழ்மையில் இருந்தாலும் மலர்ந்து முகமே வாழ்வின் மகிழ்ச்சி என்பதைக் கண்டாள் .மனநிறைவோடு தன இல்லம் வந்தா.ள் 

                   ஒருவாரம் கடந்தது.கலாவின் அம்மாவெளியே போவதாகச் சொன்னதால் கலா சரளாவின் இல்லத்திற்குச் சென்றாள் இருவரும் சேர்ந்து வீட்டின் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அன்று அதிசயமாய் சரளாவின் வீடு அமைதியாக இருந்தது. தன தோழி எதிரே எங்கே தன பெற்றோர் சண்டையிடுவார்களோ என்று அஞ்சியபடியே இருந்தவள் அவர்கள் அமைதி கண்டு நிம்மதியடைந்தாள் 

மெதுவாக சரளா உள்ளே எட்டிப் பார்த்தாள்.அப்பா ஏதோ ஆபீஸ் வேலையாக இருந்தார். அம்மா காய் நறுக்கிக் கொண்டிருந்தாலும் இருவரின் கவனமும் 

அவரவர் காரியத்திலேயே இருத்தது.

"ஏய் கலா, உன்னால எப்படி சிரிச்சுகிட்டே இருக்க முடியுது?என்னால முடியலையே"என்றாள்  மெதுவாக.

"எல்லாம் மனசுதான் காரணம் நாம சிரிச்சுகிட்டே இருந்தா நம்மைப் பார்க்கிறவங்களுக்கும் மனசு லேசாயிடும்.திட்டணும்னு நெனைச்சாக்கூட திட்டத் தோணாது."

"அப்படியா?"

"ஆமாம். நம்ம அப்பா அம்மாவுக்கு ஏன் கோபம் வருது சொல்?"

சற்றே சிந்தித்தாள் சரளா.

       (சிந்தனை தொடர்கிறது.)