ஒருநாள் இருட்டும் நேரம் இரண்டு பூனைகள் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று தேடிக்கொண்டே அலைந்தன.யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து ஒரு பூனை ஒரு வீட்டுக்குள் நுழைந்தது.அது வீட்டுக்குள் நுழைவதை மற்றொரு பூனை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தது.
இரவுநேரம் எல்லாரும் தூங்கப் போய்விட்டனர்.வீடு அமைதியாக இருந்தது.பெரிய பூனை மெதுவாக நடந்து சமையல் அறைக்குள் நுழைந்தது.அங்கே நல்ல மணம் வீசிக் கொண்டிருந்தது.அந்த வீட்டு அம்மாள் மாலையில்தான் நெய் அப்பம் செய்திருந்தார்.அந்த வாசனைதான் வந்து கொண்டிருந்தது.பூனை மெதுவாக எல்லாப் பாத்திரங்களையும் சத்தமில்லாமல் முகர்ந்து பார்த்தது.எங்கும் அப்பம் தென்படவில்லை. பாத்திரம் தேய்க்கும் இடத்தில் தட்டில் ஒரே ஒரு அப்பம் இருப்பதைப் பார்த்தது.அதை வாயில் கவ்விக் கொண்டு வெளியே ஓடிவந்தது.அதற்குள் பொழுது லேசாக விடியாத தொடங்கியது.
ஓடி வந்த இரண்டு பூனைகளும் ஒரு பெரிய மரத்தின் அடியில் நின்று சுற்றிலும் பார்த்தன.பெரிய பூனையின் வாயில் நெய் அப்பம் இருந்தது.சிறிய பூனை "இந்த அப்பத்தை சரிபாதியாகப் பங்கு போட்டுத் தா" என்று நச்சரித்துக் கொண்டே
உடன் வந்து கொண்டிருந்தது.அப்போது மரத்தின் மேல் குரங்குகள் ஒலி எழுப்பிக் கொண்டே கிளைக்கு கிளை தாவிக் கொண்டிருந்தன.
அதைப் பார்த்த பூனை ஒரு பெரிய குரங்கிடம் "குரங்காரே இந்த அப்பத்தை சரி பாதியாகப் பங்கு போட்டு எங்களிடம் தாருங்கள் குரங்காரே" என்று கேட்டுக் கொண்டது.குரங்கும் பெருந்தன்மையுடன் சம்மதித்தது.உடனே அருகில் இருந்த ஒரு பழக்காரனிடமிருந்து தராசைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்தது.
பூனைகள் இரண்டும் அப்பத்தைக் குரங்கிடம் கொடுத்துவிட்டு எதிரே அமர்ந்து கொண்டன.
குரங்கு தராசை சரிபார்த்துக் கொண்டது."சரியாக இருக்கிறதா ?பார்த்துக் கொள்ளுங்கள்"என்று சொல்லி தராஸைக் காட்டியது.பூனைகள் மகிழ்ச்சியுடனும் குரங்கின்மேல் மிகுந்த நம்பிக்கையுடனும் தலையை அசைத்தன.குரங்கும் அப்பத்தைக் கையில் தூக்கி எடை பார்ப்பதுபோல் வாசனை பார்த்தது. அதன் வாயில் எச்சில் சுரந்தது.
எப்படி இந்த அப்பத்தை எடை போடுவது என்பதுபோல் சிந்தித்தது.
அப்பத்தை இரண்டு பகுதியாகப் பிய்த்துக் கொண்டது.இரண்டு பக்கத்திலும் தராசில் வைத்து எடைபோட்டது.ஒரு பக்கத்தைப் பெரிதாகப் பிய்த்ததால் அந்தப் பக்கம் தராசு தாழ்ந்தது.அந்தப் பகுதியப்பத்தில் ஒரு வாய் கடித்துத் தின்றது இப்போது மறுபக்கம் பெரிதாக இருக்கவே அந்தப் பக்கம் தாழ்ந்தது. இப்போது அந்தப் பக்கத்தை ஒரு கடி கடித்துத் தின்றது. இப்போது மறுபக்கம் தாழ்ந்தது. இப்படியே மூன்று நான்கு முறை செய்யவே அப்பத்தில் ஒரு சிறு பகுதியே மீதம் இருந்தது.
"குரங்காரே இந்தச் சிறு பகுதியையாவது எங்களுக்குத் தாருங்கள்
நாங்களே எங்களுக்குள் பங்கிட்டுக் கொள்கிறோம்"என்று கெஞ்சியது பெரிய பூனை
குரங்கு உர்ரென உறுமியது."இவ்வளவு நேரம் உங்களுக்கு அப்பத்தைப் பங்கிட்ட எனக்குக் கூலி வேண்டாமா அதற்கு இந்த மிகுதி அப்பம்தான் எனக்கு கூலி".என்று சொல்லி மிகுதியாக இருந்த சிறு பகுதி அப்பத்தையும் வாயில் போட்டுக் கொண்டு மரத்தின்மீது தாவி ஏறி மறைந்தது குரங்கு.
ஏமாந்து போன பூனைகள் இரண்டும் "நமக்குள் நாமே பங்குபோட்டு சாப்பிடாமல் மூன்றாவதாக ஒருவரை அழைத்ததால் நமக்கு எதுவும் மிஞ்சவில்லை.இது நமக்கு ஒரு பாடம்"என்று சொல்லிக் கொண்டே வேறு எங்காவது திருடமுடியுமா என்று தேடிக் கொண்டே ஓடின.
----------------------------------------------------------------------------------------------------------