வெள்ளி, 26 ஜூலை, 2013

தகப்பன் சாமி.

           ஒரு கிராமத்தில் செந்தில் என்று ஒரு விவசாயி வசித்து வந்தான்.அவனுக்கு பூவாயி என்ற மனைவி இருந்தாள்.மிகவும் கர்வத்துடன்  யாரையும் மதிக்காமலும் எவர் சொல்லையும் கேட்காமலும் இருந்தாள்
              
            செந்திலின் அம்மா அவன் கூடவே வாழ்ந்து வந்தார்.

அவருக்குபூவாயியின் செயல்பிடிக்கவில்லை.அதனால் அடிக்கடி அவளுக்கு அறிவுரை சொல்லி வந்தார். இது பூவாயிக்குப் பிடிக்கவில்லை.அதனால் எப்போதும் அவர்மீது எரிந்து விழுந்து கொண்டிருப்பாள் மனம் புண்படும்படி பேசுவாள்.

              பூவாயியின் குணம் சரியில்லையென்றாலும் செந்தில் அவளைக் கண்டிக்காமல் இருந்தான். அத்துடன் தன அம்மாவையும் பூவாயியை ஒன்றும் சொல்லாதே என்று கண்டித்தான்.அதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடந்து வந்தது.
         
                செந்திலுக்கு மணியரசு என்ற மகன் இருந்தான்.அவனுக்கு நான்கு வயதுதான் இருக்கும்.அவன் எப்போதும் பாட்டியிடம் அமர்ந்து கதை கேட்பது வழக்கம்.பூவாயிக்கு இது பிடிக்காததால் மகனைப் பாட்டியிடம் விடாமல் தடுத்தாள்.

                  அத்துடன் அந்த வயதான தாயைத் திட்டவும் அலட்சியப் படுத்துவதும் நேரத்திற்கு சாப்பாடு தராமலும் இருந்தனர்.வீட்டிலோ பாட்டி மாடுகளைக் குளிப்பாட்டுவது பாத்திரம் தேய்ப்பது வீடு பெருக்குவது என்று பலவேலைகளைச் செய்தும் செந்தில் தாயைக் கவனிப்பதே இல்லை.

                    ஒருநாள் மாட்டின் அருகே பூவாயி சென்றபோது அது மிரண்டு முட்ட வந்தது.அதைப் பார்த்து மணியரசு தன தாயிடம் கேட்டான்.
"ஏம்மா, அது உன்னை முட்ட வருது?"
"அதுக்கு உங்க பாட்டியைத்தான் பிடிக்கும்போல."என்று அலட்சியமாகச் சொல்லிச் சென்று விட்டாள் 
மணியரசு தன அப்பாவிடம் சென்றான்.செந்தில் அவனை மடியில் வைத்துக் கொண்டான்.
"அப்பா, நம்ம வீட்டு மாடு ஏம்ப்பா அம்மாவை முட்ட வருது?"
"அதுக்குப் பிடிக்காதவங்களோ, பிடிக்காகாரியத்தைசெய்தாலோ அதுக்குக் கோபம் வரும் அவங்களைக் கிட்டவே நெருங்க விடாது.

"அப்படியா அப்பா, கண்ணுக்குட்டியைத் தொட்டாககூட கோபம் வருமா அப்பா?"
"ஆமாண்டா கண்ணு.  கோபம் வரும். நாம ஏதாவது கெடுதல் பண்ணிடுவோமுன்னு அது பயந்து தன குட்டியைக் காப்பாத்த முட்டவருது."

"அப்போ உங்கம்மாதானே பாட்டி. உன்னையும் நீ சின்னவனா இருக்கும் போது இப்படித்தானே பார்த்துகிட்டிருப்பாங்க."

செந்திலால் பேச முடியவில்லை.திரும்பி அம்மாவைப் பார்த்தான்.பசி மயக்கத்துடன் மாட்டுக் கொட்டிலைப் பெருக்கிக் கொண்டிருந்தாள் அந்தத் தாய்.

நேராக அருகே சென்று அவள் கையிலிருந்த துடைப்பத்தை வீசிவிட்டு உள்ளே அழைத்து வந்தான் செந்தில்..மணியரசு மகிழ்ச்சியுடன் பாட்டியின் கையைப் பற்றிக்  கொண்டான்.

பாட்டி ஒன்றும் புரியாமல் திகைத்தாள்.அவனது அன்பைப் புரிந்து கொண்டு மகிழ்ந்தாள் .அம்மாவை அனைத்துக் கொண்ட செந்தில் தகப்பன்சாமியான தன மகனையும் அணைத்துக் கொண்டான்.இவர்களின் அன்புக்கு முன்னால்  பூவாயியால் ஒன்றும் பேசமுடியவில்லை. 


-- 
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com