செவ்வாய், 14 ஜூன், 2016

குறள்நெறிக் கதைகள். மனமே மருந்து.

                    மனமே மருந்து 

"இலக்கம் உடம்பிடும்பைக்  கென்று கலக்கத்தைக் 
 கையாறாக் கொள்ளாதாம் மேல்."

         பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நல்ல பையனாக வீட்டுப் பாடங்களை எழுதி முடித்துவிட்டு அப்பாவின் வருகைக்காகக்  காத்திருந்தான் சுந்தரம். சுமார் அரைமணி நேரம் கழித்து சுந்தரத்தின் அப்பா கதிரேசன் உள்ளே நுழைந்தார். அவர் உள்ளே வரும்போதே உஸ்... அப்பாடா என்று சொல்லிக் கொண்டே வந்தவர் மின்விசிறியைப் போட்டுவிட்டு அதன் அடியில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு  உட்கார்ந்தார்.
           அப்போதுதான் வந்திருக்கும் அப்பாவைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று அம்மாவின் எச்சரிக்கையை நினைத்தவனாய் அவர் சற்று சிரம பரிஹாரம் செய்து கொள்ளும் வரை 
காத்திருந்தான்.அரைமணி நேரம் கழிந்ததும் மெதுவாக அவர் அருகில் வந்தான்.
"அப்பா"
"என்னடா?"
எரிச்சலுடன் கேட்கவே மேலே பேச முடியாமல் தயங்கிநின்றான் சுந்தரம்.சற்று நேரம் அவன் அமைதியாக நின்றான்

அதைப் பார்த்த கதிர்வேலுவுக்கு தன மகன் மேல் சற்றே அன்பு தோன்றவே புன்னகையுடன் சுந்தரத்தை அருகே அழைத்தார் . அவன் இடுப்பைப் பற்றி அணைத்தவாறே "என்ன விஷயம் சொல்லு."என்றார்.  

சுந்தரம் மிகவும் குஷியாகிவிட்டான்."அப்பா எங்க பள்ளிக்கூடத்தில் ஒரு கட்டுரைப் போட்டி நடக்குது. எந்த  இ.டத்திக்கேனும் நேரிலே போய் அதைப் பற்றி விமரிசித்து ஒரு கட்டுரை எழுதணும். நான் போட்டியிலே சேர்ந்திருக்கேன் அதனாலே ஏதாவது ஒரு எடத்துக்கு என்னை ஒரு ரெண்டு நாள் அழைச்சுக்கிட்டுப் போங்கப்பா"

அவனைப் புன்னகையுடன் பார்த்த கதிர்" சரி யோசிச்சு வை.பார்ப்போம்"என்றபடியே உடைமாற்ற உள்ளே சென்றார். சுந்தரமும் மகிழ்ச்சியுடன் தன நண்பனிடம் ஆலோசனை கேட்க வெளியே ஓடினான்.

          மறுநாள் வரை எதையும் பேசாத சுந்தரம் மீண்டும் மாலையில் அப்பாவின் முன் வந்து நின்றான்.அவனை நிமிர்ந்து பார்த்த கதிர்
"என்ன சுந்தரம், எங்க போகணும்னு முடிவு பண்ணிட்டியா?" என்றார் அன்போடு.
"அப்பா, என் நண்பன் அவங்க சொந்த ஊர் கோவிலுக்குப் போகிறார்களாம்.நான் ஊட்டியைப்பார்த்ததில்லையப்பா.அங்கே போகலாம்னு நினைக்கிறேன்.கூட்டிட்டுப் போகிறீர்களாப்பா?"என்றான் ஆவலோடு.

   "நீ கட்டுரை எழுத எனக்கு செலவு வைக்கிறியா?எனக்கு லீவெல்லாம் கிடைக்காதுடா, ஏதேனும் கிட்ட இருக்கிற இடமா சொல்லு."
கொஞ்சம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டவன் மெதுவாக" எங்கேயானும் கூட்டிட்டுப் போங்கப்பா."என்றான்.
"சரி சரி செலவில்லாத இடமா கூட்டிட்டுப் போறேன்.இப்போ என்னை விடு. போய்  வீட்டுப் பாடம் செய்."
சற்றே கோபமாக முணுமுணுத்தவாறே உள்ளே சென்றான் சுந்தரம்.

         அன்று சனிக்கிழமை.மாலை நான்கு மணிக்கு அப்பாவை அழைத்தான் சுந்தரம்.'"அப்பா, எங்கேயாவது போகணுமேப்பா? கட்டுரை எழுதணுமே?" நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தவர் நினைவு வந்தவராய் எழுந்தார்.சட்டையை மாட்டிக் கொண்டு "வாடா போகலாம்"என்றவாறு புறப்பட்டவுடன் மகிழ்ச்சியானான்.அப்பாவுடன் குஷியுடன் கிளம்பினான்

இரண்டு பேரும் ஆட்டோ பிடித்து மெரீனா கடற்கரையை அடைந்தனர்.கடலைப் பார்த்ததும் சுந்தரம் குஷியாகிவிட்டான். மகிழ்ச்சியுடன் அங்கு ஓடி கடல் ஓரமாக நின்று அலையுடன் விளையாட ஆரம்பித்தான்.அவனை விளையாடவிட்டு விட்டு மணலில் அமர்ந்து கொண்டார்.
                 அதே சமயம் "ஐயா, சுண்டல் வேணுங்களா? வீட்டிலே பக்குவமா செஞ்சதுங்க" என்றபடி பரிதாபமாகப் பார்த்தபடி நின்றிருந்தார் ஒரு பெரியவர்.

அவரைப் பார்த்த கதிருக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது".சரி இரண்டு பொட்டலம் கொடு'' என்றபடியே காசை எடுத்தார்.அந்தக் காசைப் பெற்றுக் கொண்டவர் உற்சாகமாகப் புறப்பட்டார்.அவரிடம் சற்றுநேரம் பேசிக் கொண்டு இருந்தால் பொழுது போகும் என்று  கதிரேசன்   நினைத்தார்.அதனால் அவரிடம் "ஐயா, சற்றுநேரம் இங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கலாமே. உட்கார்ந்தபடியே வியாபாரம் செய்யலாமே."என்றார்.
அவரும் மகிழ்ச்சியுடன் அமர்ந்தார்.தன சுண்டல் கூடையை நான்கு பேருக்குத் தெரியுமாறு முன்னால் வைத்துக் கொண்டு சௌகரியமாகக் கால்களை சப்பளமிட்டு அமர்ந்தார்.
ஒருமுறை தன் மகன் சுந்தரம் எங்கே விளையாடுகிறான் என்று பார்த்துக் கொண்ட கதிர் 
சுண்டல்காரரைப் புன்னகையுடன் பார்த்தார். 
"ஐயா, இந்த சுண்டல் வித்தா உங்களுக்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும்?"
"என்னங்க கிடைக்கும்? செலவு போக ஒரு ஏழெட்டு ரூபா தேறும். அன்னாடம் சாப்பாட்டுக்கு அதுதாங்க கைகொடுக்குது."
"ரெண்டு பேருக்கு இதுபோதும்னுதான் நீங்க சந்தோஷமாக இருக்கிறீங்க அப்படித்தானே?"
"என்னது? ரெண்டு பேரா?நல்லாச் சொன்னீங்க.எனக்கு மூணு குழந்தைங்க ஒருத்தனுக்கு கால் விளங்காது.ரெண்டு பேர் ஸ்கூல்ல படிக்கிறாங்க.எங்கம்மா இருக்காங்க. அவங்களுக்கும் கண்ணு தெரியாது.என்பெண்ஜாதிக்கு ரத்தக் கொதிப்புன்னு சொல்லி என்னென்ன மாத்திரையோ  குடுத்திருக்காங்க. அதுவே அவளுக்கு சாப்பாடா இருக்கு." 
"அத்தோட போச்சா? என் தம்பி ஒருத்தன் குடிகாரப்பய. எப்பவும் குடிச்சுட்டு ஊரைச் சுத்திட்டு நேரத்துக்கு தவறாம சாப்பாட்டுக்கு வந்திடுவான். சாப்பாடு இல்லையின்னா ஒரே ரகளைதான்.அவ்வளவு பேருக்கும் நான் சம்பாரிச்சு சோறு போட்டாகணுமே.நான் செய்யற வாட்ச்மேன் உத்தியோகம் பத்தாது . அதனால சாயங்காலமா பீச்சுல சுண்டல் வித்து என் தேவையை சமாளிக்கிறேன்."
இயந்திரமாக சொல்லி முடித்தார் அந்தப் பெரியவர். 
அப்படியே  திகைத்துப் போய் அமர்ந்துவிட்டார் கதிரேசன்.
"ஐயா, என்ன சோல்றீங்க ? இத்தனை கஷ்டத்திலையும் நீங்க சந்தோஷமா இருக்குறீங்களே?அதாலதான் கேட்டேன்.நீங்க ரெண்டே பேர்தானான்னு."
அப்போது இரண்டு பேர் பெரியவரிடம் வந்து சுண்டல்  வாங்கிக் கொண்டு சென்றனர்.தன் வியாபாரத்தைக் கவனித்து விட்டு அவருக்குப் பதில் சொல்லத் தயாரானார் சுண்டல்காரர். அப்போது "அப்பா, ரொம்ப குஷியா இருந்துச்சுப்பா தண்ணீல நின்னது என்றபடி ஓடிவந்த சுந்தரம் அவர் அருகே வந்து அமர்ந்தான். தன கால்களில் உள்ள மண்ணைத் தட்டியவாறே அப்பாவின் கையிலிருந்த சுண்டல் பொட்டலத்தை வாங்கிக் கொண்டு சுவைக்க ஆரம்பித்தான்.
"ஆமாங்கைய்யா. வாழ்கைன்னு இருந்தா கஷ்டமில்லாம இருக்குமா. அதானுங்க வாழ்க்கை.அது என்னங்க  அதுபாட்டுக்கு வந்துட்டுப் போகட்டுங்க.நம்ம மனசையும் உடம்பையும் நல்லா வச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்துட்டா அதுதானுங்க மனுஷனுக்கு அழகு.சரிங்கய்யா. நானு வரேனுங்க. என் பெண்டாட்டிக்கு மருந்து குடுக்கணும் அதுக்கு ஒண்ணுமே தெரியாதுங்க.நல்லா சமைக்கத்தான் தெரியும்."என்றபடியே ஒரு நிறைந்த புன்னகையை வீசிவிட்டு நடந்தார் அந்தப் பெரியவர்.
அவர் சென்ற திசையை நோக்கி வணங்கினார் கதிரேசன்.
"என்னப்பா?"
"ஒண்ணுமில்லே சுந்தரம்.நீ சாயங்காலம் படிச்சியே ஒரு குறள்  ஞாபகம் இருக்கா?"
"ஓ ..இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் 
         கையாறாக் கொள்ளாதாம் மேல்." இதுதானப்பா நான் சாயந்திரம் படிச்சது."
"சுந்தரம் அதுக்குப் பொருள்தான் அந்தப் பெரியவர்."
"என்னப்பா சொல்றீங்க? ஒண்ணும் புரியலையேப்பா."
"சரி ,அந்தக் குறளுக்கு ம். என்ன பொருள்?சொல்லு ."
"ம் ..ம்  வந்து..என்று சிந்தித்தவன்'உடனே சொல்லத் தொடங்கினான்.
 "துன்பம் என்பது உடலுக்கு இயல்பானதே என்று உணர்ந்து கொண்ட பெரியோர் அந்தத் துன்பத்தைப் பெரிதாகப் பாராட்டமாட்டார்கள்."
"சரியாச் சொன்னே. அப்படிப்பட்ட பெரியவர்தான் அந்தசுண்டல் விற்றுக் கொண்டிருப்பவர்."
எப்படிப்பா என்று புரியாமல் விழித்த மகனை அருகே அமர்த்திக் கொண்டார் தந்தை.
"அந்தப் பெரியவருக்கு இரவுக் காவலாளி வேலை. சொற்ப சம்பளம்.வீட்டில் நோயாளி மனைவி, கண்ணில்லாத அம்மா, கால் முடமான ஒரு மகன் பள்ளி செல்லும் இரண்டு பிள்ளைகள் ஊதாரியான உருப்படாத தம்பி.இத்தனை பேரையும்  இவர்தான்  காப்பாத்தணும். அதனால மாலை நேரத்தில் சுண்டல் வியாபாரம்  செய்கிறார். ஆனாலும் ரொம்ப மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே மன நிறைவாக வாழ்கிறார்.நீ இப்போ சொன்னியே திருக்குறள் அந்தக் குறளுக்கு ஒப்பானவராகவே இருக்கிறார்.எந்தத் துன்பத்தையும் பாராட்டாமல் பேசினார்."
"அப்படியாப்பா"
"ஏன் சுந்தரம் இதையே நீ உன் கட்டுரைத் தலைப்பா வச்சு எழுதேன்.மனமே மருந்து அப்படீன்னு தலைப்புக் கொடுத்து எழுது.அதோடு இதை உன் வாழ்க்கைப் பாடமாகவும் எடுத்துக் கொண்டு வாழவும் பழகணும்."
கட்டுரைக்கு நல்ல தலைப்பும் செய்தியும் கிடைத்த மகிழ்ச்சியுடன் சுந்தரம் தூங்கப் போனான்.
நாமேல்லாருமே அந்தப் பெரியவரைப் போல துன்பத்தைக்  கண்டு துவண்டு விடாமல் வாழப் பழகவேண்டும்.வள்ளுவர் வாய்மொழியும் அதுதானே?

 ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com