செவ்வாய், 21 செப்டம்பர், 2010

48th story.நின்னினும் நல்லன்


                                                           நின்னினும் நல்லன்.
முற்காலச் சோழ மன்னர்களுள் தலைசிறந்த மன்னனாக விளங்கியவன் கரிகாற்பெருவளத்தான். இவனது இயற்பெயர் திருமாவளவன் என்பதாகும்.
இளம் வயதில் தந்தையை இழந்த இவன் பகைவர்களுக்கு அஞ்சி தாயுடன் மறைந்து வாழ்ந்தான். இவனை வளர்த்தவர் இரும்பிடர்த்தலையார் என்பவராவார். இவர் திருமாவளவனின் தாய்மாமன் ஆவார். சிறந்த தமிழ்ப் புலமை மிக்க இவர் வளவனுக்கு ஆசானாகவும் இருந்தார். இவர் பாடிய பாடல் புறநானூறு என்னும் சங்க இலக்கியத்தில் இடம்  பெற்றுள்ளது.
மறைந்து வாழ்ந்த வளவனை அவன் பகைவர் கவர்ந்து சென்று ஒரு காட்டின் நடுவே உள்ள வீட்டில் அடைத்து வைத்தனர். சோழ மன்னனின் மகனான வளவனைக் கொன்று நாட்டை அபகரிக்கவே பகைவர் சூழ்ச்சி செய்தனர். அதனால் வளவனை அடைத்திருந்த வீட்டிற்குத் தீ வைத்தனர். இந்தத் தீயில் வளவன் உயிர் நீப்பான் இனி சோழநாடு நம் வசமாவது திண்ணம் என நம்பியிருந்தனர் பகைவர். தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது. உள்ளே அடைபட்டிருந்த வளவன் "மாமா, மாமா" என அலறினான். வெகு நேரமாக வளவனைக் காணாத இரும்பிடர்த்தலையார் அவனைத் தேடி அலைந்தார். காட்டுக்குள் தேடி வரும்போது வளவனின் அலறல் சத்தம் கேட்டது பதறியபடியே குரல் வந்த திசையில் ஓடினார். எரியும் ஒரு குடிசைக்குள் இருந்து வரும் ஒலி வளவனுடையது என்று அறிந்தார். மிகவும் போராடி வளவனை மீட்டார் இரும்பிடர் தலையார். அந்த நெருப்பில் வளவனின் கால் ஒன்று கருகிப் போனது. அன்று முதல் வளவன் கரிகால்வளவன்  ஆனான். பின்னர் இரும்பிடர்தலையாரின் பெருமுயற்சியால் கரிகால்வளவன் சோழநாட்டு அரியணை ஏறினான்.சிறந்த அறிவாளியான இரும்பிடர்தலையாரின் துணையுடன் சிறப்புடன் சோழநாட்டை ஆண்டான். மக்கள் விரும்பும்  நல்லாட்சி புரிந்தான். பிற்காலச் சோழர்களில் ராஜராஜன் சிறந்த மன்னன். அதுபோல முற்காலச் சோழ மன்னர்களுள் கரிகாலன் சிறந்த மன்னனாகத் திகழ்ந்தான்.
                    இளம் வயதிலேயே அரசு கட்டிலேறிய கரிகால்பெருவளத்தான் மக்களுக்குப் பெரும் நன்மைகளைச் செய்தான். காடு திருத்தி நாடாக்கினான். காவிரிக்குக் கரை எடுத்தான்.
நீர்ப்பாசன வசதிக்காகக் "கல்லணை" என்ற பெரிய அணையைக் கட்டுவித்தான். இவனது அரும்பெரும்  செயல்களைப் பாராட்டி "பட்டினப்பாலை" என்னும் நூலை கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்பவர் இயற்றியுள்ளார்.  இப்புலவருக்கு பதினாறு லட்சம் பொற்காசுகளைப் பரிசாகத் தந்து போற்றினான் கரிகாலமன்னன்..
கரிகாலன் இளம்வயதினன்தானே என்று எண்ணி சேரமான் பெருஞ்சேரலாதன் "வெண்ணி" என்ற இடத்தில் போருக்கு வந்தான். இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. போர்க்களத்தில் கரிகாலன் எறிந்த வேல் சேரலாதனின் மார்பில் பாய்ந்தது .மார்பைப் பிளந்து முதுகு வழியே வெளியே வந்தது. இது கரிகாலனின் உடல்  வலிமையைக் 
காட்டுவதாக அமைந்திருந்தது. இப்போரைப் பார்த்த "குயத்தியார்" என்ற பெண்பாற்புலவர் கரிகாலனின் வெற்றியைப் பாராட்டி வியந்தார். அத்துடன் சேரலாதனின் மானத்தையும் பாராட்டிப் பாடியுள்ளார்.
சேரலாதன் மேல் வேகமாகப் பாய்ந்த வேல் மார்பை ஊடுருவியதால் முதுகில் புண்பட்ட சேரலாதன் புறப்புண்ணுக்கு
நாணி வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான். வடக்கிருத்தல் என்பது ஆற்றின் நடுவே உள்ள கல்லின்மேல் தருப்பைப் புல்லைப் பரப்பி அதன்மேல் வடக்கு நோக்கி அமர்ந்து மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்புலன்களையும் அடக்கி உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல் ஆகும். புறப்புண் பட்டால் அது வீரத்திற்கு இழுக்கு 
என்று நாணிய சேரலாதன் வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான். இவனது மானத்தைக் கண்ட வெண்ணிக்குயத்தியார் பெருவியப்பெய்தி கரிகால் மன்னனை விடச சேரலாதன் சிறந்தவன் என்று பாடியுள்ளார்.
வெண்ணி என்னுமிடத்தில் நடந்த போரைப் பற்றிப் பாடியதால் இப்புலவர்  வெண்ணிக் குயத்தியார் என்று அழைக்கப்பட்டார்.
"கரிகால் வளவ! வெண்ணிப் போரில் பகைவரை எதிர்த்து வெற்றி கொண்ட வீரனே! நீ குறி பார்த்து எறிந்த வேலானது 
சேரனின் மார்பில் பாய்ந்து முதுகுப் புறமாக ஊடுருவிப் புண்ணாக்கியது. இதனால் சேரன் புறப்புண்ணுக்கு நாணி 
வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான். புறப்புண் பட்டது வீரத்திற்கு இழுக்கு என்று நாணங்கொண்ட சேரன் வடக்கிருத்தலால் உலகில் பெரும்புகழ் பெற்று விட்டான். நீ வீரத்துடன் போரிட்டதால் வெற்றிப் புகழ் பெற்றாய். ஆனால் உன்னால் ஏற்பட்ட புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருத்தலால் பெரும்புகழ் பெற்றுவிட்டான் சேரன். எனவே நின்னினும் நல்லனன்றே. எனப் பாடி சேரனது மானத்தைச் சிறப்பித்துள்ளார் புலவர்.
இப்பாடல் சங்க இலக்கியமான புறநானூற்றில் இடம் பெற்று இவ்வரலாற்று உண்மையை நமக்கு எடுத்து இயம்புகின்றது.
மானம் போனபின் வாழாமை முன்னினிதே என்ற கூற்றை நிரூபித்து உயிர்கொடுத்து மானம் காத்த சேரனது புகழ் என்றும் நிலைத்திருக்கும் அன்றோ.